Sunday, January 30, 2011

நினைவு படிமத்தில்

மேகக்கரை  இல்லா
தூய  வெளிர்  நிறத்தில்
விரிந்த வானமாய்
பரந்து கிடக்கும்
எங்க  ஊரு  கண்மாய்

விடா மழைக்காய்  வீட்டில்
சிறை  இருக்கும்  போதும்
ஆவலில்  மனது
அசைபோடுவது
கண்மாய்  நீரின்
கணம்  பற்றித்தான்

குட்டி  கடலாய்
கொட்டிகிடக்கும்
கண்மாயை  கடந்திட
பயணித்த பறவைகள்
சுவர் மோதிய  பந்தாய்
புறப்பட்ட  இடம்  திரும்பும்

மைய  கண்மாயில்  கால்பதித்து
மூழ்கி  மண்  எடுக்க
ஆம்சட்ரன்கால்      கூட
ஆகதென்பது
அசையா நம்பிக்கை

பிரிந்திட  மனதின்றி
கொக்கும்  நாரையும்
ஒற்றைக்காலில்  நின்று
அலகுகளை  அலசி
நீர் கண்ணாடியில் 
அழகு  பார்த்து
பெருமை கொள்ளும்

காதல்  சோடிக்கு பரிசு தந்து    
போதை பார்வை பெற
நீர்த்திரை  கிழித்து
மீன்க்கொத்தி  பறவை
சாகசம்  செய்யும்

எதிர்  கரை  தொட்டு
இமயம்  தொட்ட  வீரனாய்
தாவணிப் பெண்களின்
கனவுகளை  களவாட
குற்றாலீஸ்வரன்  முயற்சியில்
அரும்பு  மீசைகள்
அணி வகுக்கும்

அரசமரக்  குடை  நிழலில்
காவலுக்காய்   கணபதியும்
காற்றுக்காய்  பெருசுகளும்
கிராமத்து  கடற்க்கரையாய்
கண் மாயே   கலகலக்கும்

பட்ட மரக்கட்டையில்
படகு பயணம்  செய்து
நாயடி  பட்ட தின்னும்
நினைவு படிமத்தில்
நிலைத்திருக்கிறது

பள்ளி  குழந்தைகளின்
உற்சாகதுள்ளளோடு
மடை திறக்க  ஓடி வரும்
தண்ணீரின்  ஓசை
கிராம மனிதர்களின்
நள்ளிரவு  தாலாட்டாய்
தன் நிலை தவற  வைக்கும்

வான்முகம்  விட்டு
சிதறிய  வியர்வை
துளிகளை  சேர்த்து
தண்ணீராய்  தரம்  மாற்றி
தானியம்   விளைந்திட
தந்திரம்  செய்யும்

அறிவியல்  அறிவு  கலந்த
அறிய  திட்டம்  இது  என
ஆர்வம்  மேலிட  வனத்துறை
பூமி  பெண்ணுக்கு
பசுமை  ஆடை  நெய்ய
நீர் வளர்த்த  கண்மாய்குள்
இன்று  காடு  வளர்க்கிறது . 




Monday, January 24, 2011

நெடுங்கனவு

காணிநில கனவை
பாரதியை  தொடர்ந்து
பாட்டனும் கண்டதாய்
பரம்பரை  வரலாறு
பதிந்து வைத்துள்ளது

முற்காலம்  துவங்கி
தற்காலம்  வரை
கற்கால வாழ்க்கை  நடத்தி
வீடு  பேரின்றியே
வீடு  பேரடைந்தனர்  

வியர்வையாய்  கரையும்
உடலின்  சக்தியை
உயிர்பிட்க  மட்டுமே
உதவிய  உதியத்தால்
உறைவிட  ஆசை 
உருப்பெறவில்லை

தொட்டு க்கடந்த 
தேர்தல்  களங்களில்
வீட்டுக்கனவை  எமக்குள்
விதைத்து  வென்றவர்கள்
வீதிக்கொரு  மாளிகை என
சேமித்து கொண்டார்கள் 

நெடுங்கனவை  நிஜமாக்க
உழைப்பை  அடகு  வைத்து
களித்துப்போட்ட  ஓலைகளால்
கட்டி  வாழ்ந்த  குடிசையை
முட்டி சாய்த்தது  அரசு  இயந்திரம்

கண்மாய்ககுள்ளிருந்து
என்  நிலை யறியாமல்
கண்கள் மறைக்கப்பட்ட
 நீதி தேவதையும்
கரையோரம்  விட்டு வெளியேற
கட்டளையிட்டால்

நதிக்கரை தங்கி
நாகரீகம்  தந்தவர்கள்
கம்மாகரையிளிருந்தால்
புதிய  நாகரீகம்
புறப்பட்டு வரும்
தடையினை  விலக்குங்கள்

நாட்டுரிமை  இழந்த 
பாண்டவராய் 
வீட்டுரிமை  கேட்டு
விண்ணப்பம்  செய்கிறோம்
மறு பாரதபோருக்கு
மனு போடாதீர்        

ஏனெனில்
போரின் முடிவு
வேராய்  இருக்காது
உங்களுக்கு 
வேரே      இருக்காது   
     

மாறாதநிலை





நம்ம கிராமங்களில் ஊடக

பாம்பாய் நெளிந்து கிடந்த
செம்மண் வழித் தடங்கள்
தாத்தனின்  முதுகுபோல்
கருன்சளைகளாய்  பளபளக்கிறது

காலிநிற கூரைகள் மாறி
பலநிற  உடையோடு
அணிவகுத்து  வீடுகள்

ஆத்தா சொன்ன
பேய்களின் உருவமாய்
பனைமரத்தை கேலி செய்து
உயரமாய்  செல் டவர்கள்

வீட்டின் தலைமரைக்க
தகுதியற்ற  குடைகலாய்
டி டி எச்  கல்

நடுவாக்கில்  சம்மணமிட்டு
வீட்டாரின் பேச்சை
நிறுத்திவிட்ட கர்வத்துடன்
டி வி க்கள்

பார்வை  படருமிடம்மெல்லாம்
பால்யத்தை துறக்காமல்
சாட்ஸ்  சில் தாத்தாக்கள்

நம்ம  ஊர்  பாட்டிகளின்
காதுகளில்  தண்டட்டியாய்
செல்போன்கள்

வெள்ளைக்காரன்  துப்பி சென்ற
பாசையை  விழுங்கச் செல்லும்
டை கட்டிய  குழந்தைகள்

பாப்பாக்களின் உடைகளில்
பாந்தமாய் எதிர்படும்
குமரி பொண்ணுக

இந்த  நாகரீக  மினுமினுப்பு
வெளிச்சத்தின் ஊடே
ஈய  குவளையில்  டீ குடித்தபடி
ஓரமாய் முனியன்

வெறுமையாய்
டீ  கடை பெஞ்சுகள் 









 









 






Saturday, January 22, 2011

சேதுத் திட்டத்தை செயல்படுத்திட திரளுவோம்!


சேது சமுத்திரத்திட்டம் தமிழக அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள் அரசியல் தலைவர்களின் பேட்டி‍ பொதுக்கூட்ட பேச்சுக்கள் ஆகியற்றில் தவறாது இடம்பெற்ற திட்டமாகும். 1860‍ல் துவங்கி 2004 வரை ஆய்வு செய்வதை மட்டுமே செய்து பல கோடிகளை செலவு செய்து வந்தார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வந்ததும் சேதுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையும் ஆசையும் துளிர்விட்டது.
     அதேபோல் 2005 ஜூலை 2 மதுரையில் திட்டத்திற்கென 2470.40 கோடையை அறிவித்து துவக்க விழா நடைபெற்றது. திட்டப்பணிகள் துவங்கி 600 கோடிக்கு மேல் செலவான பிறகு சேது சமுத்திரத் திட்டமத்தினை 6 வது வழித்தடத்தில் நிறிவேற்றக்கூடாது. ஏனெனில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலம் உடைபடும் என தனது ஆட்சிக் காலத்தில் இந்த வழித்தடத்தை தேர்வு செய்த பி.ஜே.பியே பிரச்னையை கிளப்பி விட்டது. சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றம் போனார். நீதிமன்றம் மாற்றுவழி குறித்து மத்திய அரசு யோசித்தால் என்ன என்று யோசனை கூறியதும், திட்டம் பழையபடி துவங்கிய இடத்திற்கே வந்து கே.பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வுக்கென அமைக்கப்பட்டது.


ராமர் போட்ட பாலம்தான் என பி.ஜே.பி நாசா படத்தை ஆதாரமாகக் காட்டியது. நாசாவும் அதை நாங்கள் ராமர் பாலம் என்றெல்லாம் பெயரிடவில்லையே என மறுத்தது. ஆனால் பிஜே.பி ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதை விடுவதாய் இல்லை. ராமாயணத்தில் உள்ளபடி தனுஷ்கோடியிலிருந்து பாலம் போட்டார் என வாதிட்டு சேதுத்திட்டத்தை முடக்கி விட்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் காதில் விழவில்லை.
                           வால்மீகியின் ராமாயண அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலைகளுக்கிடையே உள்ள நீர் சூழ்ந்த மலைதான் 'லங்கா' என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். வால்மீகியின்  ராமாயணக்கதையில் லங்காவுக்குஅருகே 'சுவேலா' என்ற சிறு குன்று இருந்ததாய் வர்ணித்துள்ளனர். அதனடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் அது மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் அருகில் உள்ளதென்றும் ஆராய்ந்து உறிதி செய்துள்ளார்கள். தற்போதுள்ள இலங்கை சிங்களம் என்றே அழைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 200 கி.மீ வரையறைக்குள் நடந்த ராமாயணக்கதையை 1500 கி.மீ மைல்கள தூரம் கடந்து தமிழகத்தின் அருகே உள்ள இலங்கையோடு இணைத்த வேலையை கி.பி 1000 மாவது ஆண்டு காலத்தில் ராஜேந்திர சோழனின் இலங்கை மீதான போரை நியாயப்படுத்த  சோழர்களின் அரசைப் புலவர்களே செய்துள்ளார்கள் என வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்தாலும் சங்பரிவார் போன்ற அமைப்புகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி.. ராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டாலும் அது ராமாயணத்தில்  உள்ளது என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். நீங்கள் சொல்லும் ராமாயணம் வரலாறல்ல! அது கற்பனையால் புனையப்பட்ட கதை‍..காப்பியம். அதை எப்படி ஏற்பது? 
உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலத்தை விபீஷணன் வேண்டுகோளை ஏற்று ராமபிரானே இடித்து விட்டார். எனக்கூறி இருந்தது.இதைக் கண்டதும் பதறிப்போன சங்பரிவார், 'மத்திய அரசு இப்படிஒ செய்திருக்கக் கூடாது..'என்றதுடன் ராமாயணம் கற்பனைக் கதை என்றதும் எங்கள் நம்பிக்கையைக் கேலி செய்கிறார்கள் என்ற சங்பரிவார் அமைப்புகள், கம்பர் தனது ராமாயனத்தை மெருகூட்டுவதாக கற்பனை கலந்து எழுதினார். அதன் ஒரு பகுதிதான் பாலத்தை உடைத்துவிட்டார் என்பதும் ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள். அனைத்து அறிவியல் வரலாற்று விளக்கங்களையும் இந்து மக்களின் நம்பிக்கை எனச் சொல்லியே முறியடிக்க முயல்கிறார்கள்.

         சிலரது தனிப்பட்ட நம்பிக்கை தேசத்தின் நம்பிக்கையாகாது. எனவே சிலரது நம்பிக்கையைக் காரணம் காட்டி நாட்டிற்கே பயன் தரும் திட்டங்களை  தடுக்கக்கூடாது. நம்பிக்கை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்று இருக்கிறது. ஒருவரே பல நம்பிக்கைகளை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்பரிவார் அமைப்புகளின் நம்பிக்கைகள் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறாக இருக்கிறது.  ராமேஸ்வரம் பகுதியிலேயே நாமர் பாலம் கட்டியதாக இரண்டு இடங்களைக் காட்டுகிறார்கள். ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து என்றும் இன்னொன்று திருப்புல்லாணியிலிருந்தும் அமைத்தார் என்கிறார்கள் திருப்புல்லாணி திருத்தல புராணத்தில் தனது மனைவியை மீட்க வானரப் படையினருடன் திருப்புல்லாணி வந்த ராமன் கடலில் பாதை அமைக்க தடையாக அலைகள் அதிகமாக இருந்ததால் கடல் அலைகளின் வேகம் குறியும் வரை ஓய்வெடுக்கிறான். ( திருப்புல்லாணி திருத்தலத்தில் மட்டுமே சயனித்திருக்கும் கோலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது)அலையின் வேகம் குறையாத கோபத்தில் அலைகளை நோக்கி அம்பை எய்திட முயல்கிறான். உடனே பதறி ஓடிவந்த சமுத்திர ராஜன், 'எனக்கிட்ட க்டமையை நான் செய்கிறேன்..என் மீது கோபம் ஏன்?' என சாந்தப்படுத்தி 'கடலில் பாலம் அமைக்க இயலாது' என உபாயமும் சொல்கிறான். உனது படைவீரர்களில் மகாவிஸ்வ கர்மாவின் மகன் நளன் இருக்கிறான். அவன் தண்ணீரில் எதைப்போட்டாலும் அது மிதக்கும் எனவே அவனை வைத்துத்தான் பாதை அமைக்க முடியும் என்கிறான். ராமனும் அதை ஏற்ரு புல்லால் பாதை அமைத்ததாகவும் அதனால் திரு+புல்+அணை =திருப்புல்லணை யானது என்கிறார்கள்.
   இதைப்போல கண்டேன் தேவியை என்ற இடம் கண்ட தேவி என்றும் ஜடாயுவின் இறகு சிதறிய இடம் இறவுச்சேரியானதுமாய் தென்னகம் எங்கும் புனைவுகளுக்கேற்ப ஊர்ப்பெயர்களும் ஏராளமாய் உள்ளது. எனவே இதையெல்லாம் வைத்து 'கண்டதேவி' தேவக் கோட்டை பகுதிதான் ஆரண்யக் காண்டப் பகுதி என சொல்ல முடியுமா? நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. ராமர் எனும் தங்கள் கடவுள் கட்டிய பாலம் குறித்த தங்கள் நம்பிக்கையையே விட்டுத் தர முடியாத சங்பரிவார் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்படி இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களின்  நம்பிக்கைக்குரிய ஆலயங்களை மசூதியை மாதா சிலைகளை உடைக்க முடிகிறது. பிறர் நம்பிக்கையை மதிக்காத இவர்களின் நம்பிக்கையை மட்டும் நாடு மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது. சிலரின் நம்பிக்கையைவிட நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் முக்கியமானது.
              பாக் ஜலசந்திக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக உள்ள ஆதம்ஸ் பாலம் என்ற மணல் மேடுகளின் குறுக்கே 89 கி.மீ தூரத்திற்கு 82.5 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தூர்வாரி 300 மீட்டர் அளவுக்கு  ஆழப்படுத்தி கப்பல் செல்ல இருவழிப்பாதை அமைப்பதே சேது வமுத்திர திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்து மகா சமுத்திரமும் வங்காள விரிகுடாவும் இணைந்து இலங்கையைச் சுற்றி அலையாமல் நமது நாட்டு கடல் வழிப்போக்குவரத்தை உள்நாட்டு கடல் எல்லைக்குள்ளே செயல்படுத்திட முடியும். இதன்மூலம் பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். (ஆண்டுக்கு 130 கோடி) அன்னியச் செலவாணி கையிருப்பு வளரும். இருக்கும் துறைமுகங்கள் மேம்படும்..புதிய துணைத் துறைமுகங்கள் உருவாகும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். தென் மாவட்டங்களின் முகத் தோற்ற‌ம் மாறும்.  இன்றில்லாவிட்டாலும் நாளை சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய புதிய துறைமுகங்கள் ராமேஸ்வரத்தை சுற்றிலும் உருவாகும். அப்படி நடக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளம் பெருகும் சூழல் உருவாகும். இன்று பிழைப்புத் தேடி நாடுவிட்டு நாடு ஓடும் இளைஞர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிட்டும்.
         இதையெல்லாம்விட நமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்தத் திட்டம் பயந்தரும். இப்படிப்பட்ட 150 ஆண்டு கால கனவைத்தான் சங்பரிவார் போன்ற அமைப்புகள் சிதைத்து விட்டனர். சேது சமுத்திரத்திட்டம் அமுலானதும் எங்களால்தான் வந்தது என மார்தட்டியவர்கள் எல்லாம் வாயடைத்துப்போனார்கள்.
 


    

தமிழ்ப் புத்தாண்டு பொழிவு பெற...

தமிழ் புத்தாண்டு என்பது இனி தை முதல் நாளிலிருந்து துவங்கும் என தமிழக அரசின் அறிவிப்புப்படி தமிழ் புத்தாண்டு துவங்கி தன் பயணத்தை துவங்கி விட்டது. இந்த அரசு அறிவிப்பை சிலர் எதிர்த்தாலும் நீண்ட காலமாக தை மாதமே தமிழ் ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழார்வ அமைப்புகள் தமிழ் அறிஞர்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். இதனால் கடந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த சில கால முறை பழக்கங்கள் சிறிது தடுமாறினாலும் சரிசெய்யப்பட்டு புதிய காலமுறை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு சரி செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அறிவிப்பும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு துவக்கிவிட்டது என்பதும் தமிழக மக்கள் மத்தியில் எந்த அளவு கொண்டு செல்லப்பட்டது என்பது விவாதத்துக்குறியதாகும்.

                  புத்தாண்டு என்றாலே படித்த நகரத்தில் உள்ள மக்களுக்கு ஜனவரி முதல் தேதிதான் என்றாகிவிட்டது. எனவேதான் ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி விடுகிறார்கள். 'வே இஸ் த பார்ட்டி..' எனத் தேடி ஏதாவது ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சு ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் வாழ்த்து அட்டை எஸ்.எம்.எஸ் பரிமாற்றங்கள் டிசம்பர் இறுதி நாளில் நள்ளிரவு 12 மணிக்கு காதுகளை செவிடாக்கும் வெடியோசைகளோடு 'ஹேப்பி நியூ இயர்' எனும் உற்சாக கதறல்கள் என ஆங்கிலப் புத்தாண்டு ஆடம்பரமாக வரவேற்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு? நமது மாநிலத்தில் தமிழுக்கு தரப்படும் மரியாதையைப் போலவே நீண்ட காலமாகவே சித்திரை வருடப்பிறப்பும் எந்த முக்கியத்துவம் இன்றியே வந்து போனது.

                        அனாதையாய் வந்து செல்லும்   தமிழ்ப்புத்தாண்டிற்கு கிராமத்து மக்கள்தான் ஆறுதல் தந்தார்கள். தங்களது காரியங்களை தமிழ்தேதி குறித்தே திட்டமிட்டார்கள். சித்திரை முதல் தேதி வீடுகளை சுத்தம் செய்து கோலம் இட்டு பலகாரங்கள் செய்து உற்சாகமாய் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழியனுப்புவார்கள். பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என சித்திரை மகள் மகிழ்ச்சியில் திணறும் அளவு கொண்டாடி மகிழ்வது கிராமத்து மக்கள்தான். அந்த மக்களுக்கு தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற தகவல் இன்னும் சென்றடையவில்லை.

                                      அப்படியே ஊடகத்தொடர்புள்ள கிராமங்களுக்குத் தெரிந்தாலும் உழவர் திருநாள் உற்சாகத்தில் கதாநாயகனுடன் வரும் காமெடி நடிகனாக தமிழ்ப்புத்தாண்டு வந்து செல்வது வேதனையான உண்மை. தமிழ்ப்புத்தாண்டின் துவக்கத்தை மாதம் மாற்றி அறிவித்தவர்கள்கூட வாழ்த்து அறிக்கையோடு முடித்துக் கொள்கிறார்கள்.

                             தைமாதம் தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது என்கிற செய்தியை தமிழ் மக்கள் அனைவருக்கும் கொன்டுசேர்க்கும் கடமையினை நிறைவேற்றாததால் கணிசனமான மக்களுக்கு இந்த மாற்றம் தெரிவதே இல்லை. இதனால் இந்தப் புதிய புத்தாண்டு தனது பயணத்தை அரசு முறை‌ பயணம் போல ரகசியமாக துவங்கி முடிந்தது.

                               தமிழ்ப்புத்தாண்டை வசந்தகால குதூகலத்துடன் துவங்கிட வேண்டும் என தமிழறிஞர்கள் முடிவு செய்தது சரியானதுதான் என ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் அதை சிறப்பாக துவங்கிடவும் வழியினை கண்டுபிடித்திட வேண்டும். காலம்காலமாய் கிராம விவசாய மக்களில் விழாவாக நிலைபெற்றுவிட்ட உழவர் திருநாள் அன்று புத்தாண்டும் துவங்குவதால் உழவர் திருநாளே முன்னிற்கிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு தனிச்சிறப்பின்றி போய்விடுகிறது. எனவே தமிழ்ப்புத்தாண்டை தனித்தன்மையுடன் தமிழர்கள் கொண்டாடிட வழி காண வேண்டும்.

                                 புத்தாண்டு துவங்கி முடிந்த பிறகு அடுத்த புத்தாண்டையாவது வாண வேடிக்கைகளோடு கொண்டாடுங்கள் என அறிவிப்பு செய்வதால் எந்த மாற்றமும் வந்து விடாது. தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் தினம் ஒன்றினை  அறிவிக்கலாமா? என சிந்திக்க வேண்டும். உழவர் திருநாள் என்பது போகிப்பண்டிகை.. பொங்கல்.. மாட்டுப்பொங்கல்.. காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்நாள் கொண்டாடப்பட்டும் போகி என்பது பழையன கழிதல் என்கிற அர்த்த செறிவை கொண்டுள்ளது. இந்த நாளில் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் நாளாக அறிவித்து அரசும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் பிர‌திநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் விழாவாக கொண்டாடி துவக்கி வைக்கலாம். அது மக்களிடம் ஒரு விழா தன்மை உணர்வை உருவாக்கும்.

                                   பழைய ஆண்டின் கடைசி நாளை வழியனுப்புவதும் புதிய ஆண்டை வரவேற்கவுமான நாளாக இந்த போகி நாள் பொறுத்தமாக இருக்கும் என்பது இந்த கிராமத்தானின் ஆலோசனை! இல்லையெனில் அரசு தமிழறிஞர்களுடன் ஆலோசித்து ஒரு மாற்று வழி காணலாம். இவை இல்லையெனில் அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் உணரப்படாமலேயே தமிழர்களின் நீதி நிர்வாகத்தில் தமிழ் என்கிற கனவு போலவே இந்த தேதி மாற்றமும் ஆகி விடக்கூடும்! ஆள்வோரும் அறிஞர்களும் கவனத்தில் கொள்வார்களா?     

அழகு அழகாய்


எங்கள் பிதாக்களும்
பரம பிதாவைப் போலவே
பாட்டன் பாட்டிகளால்
பண்ணைத் தொழுவத்தில்
படைத்தருளப்பட்டனர்

பண்ணை அடிமையெனும்
பாரம் சுமக்க மறுத்து
திமிறி எழுந்ததால்
கூலி என்னுமொரு
புதுப்பெயர் சுமந்து
உயிர்த்தெழுந்தனர்

அழைக்கும் பெயரில்
மாற்றங்கள் வந்தது
இளைப்பாற
இருப்பிடம்தான் இல்லை

இருந்து குடிக்க
விரைவாய்
இடவசதி செய்கிறார்
குடிபுக இடம் கேட்டால்
சிறையறை காட்டி
 சினங் கொள்கிறார்

மறைமுக வரிப்பணம்
காரியக்காரர் கஜானாவுக்கு
தலைமறைவாய் பயணிக்க
திட்டங்களே வழியானதால்

அமரர்களுக்குக்கூட இன்று
அழகழகு பூங்காக்கள்
பாமரர் மட்டும் -என்றும்
பாதையோரங்களில்!


துரோகம்


எதிர்படுபவரிடமெல்லாம்
ஏராளமாய் விபரம் பெற்று
எத்திசையும் தப்பிடாமல்
சிறகு விரித்து தேடினேன்

சில கால செலவிற்கு பிறகு
நினைத்த தகுதிகள்
நிறைந்திருந்ததால்
தேர்வு செய்தேன் உன்னை

ஊரும் உறவும் கூடி
பேசிப்பேசி வியந்தது
உன் அழகு-திரண்பற்றி

விட்டு விட்டு வெகுதூரம்
வீட்டை விட்டு வந்தாலும்
தொட்டுத் தொடர்ந்ததுன்
துணையின் பெருமிதம்

கவர்மெண்டையும்
கடவுளையும் விட
கணக்கற்ற நம்பிக்கை
வைத்தேன் உன்மீது

என் நம்பிக்கை உதிர்த்தாய்
மாற்றான் தொடுதலில்
மனம் நெகிழ்ந்து
உறுதி துறந்தாய்

பறி கொடுத்து
பரிதவிப்போரின்
நீண்ட பட்டியலில்
என்னையும் இணைத்தாய்

வியர்வை விற்று
வைத்திருந்த சேமிப்பு
வேட்டையாடப்பட்டு
வீதியில் நிற்கிறேன்

துரோகம்  இதை
துடைத்தெறிய
அதிர்வெதற்கும்
இசைந்திடாதபடி

பூட்டுகளுக்கொரு
பூட்டுப்போட
புதிய வழி தேடவேண்டும்...!

Friday, January 21, 2011

பனித்துளிப்படுக்கை

நாளை உணவுக்கான
கவலை ஏதுமில்லாமல்
மனசெல்லாம்
மகிழ்ச்சியில் கனத்தது


பனித்துளிகளைக் கோர்த்து நெய்த
படுக்கை விரிப்பில்
படுத்துப்புரள்கிற சிலிர்ப்பு

மயிலிறகு கொண்டு விசிறினால்
வலித்திடுமே என
வருடிவிடும் பரவசம்

ரோஜா இதழ்களை
சேர்த்துக்கட்டி
ஒத்தடமாய் இதயம் தொட்டு
அழுத்திக் கிடக்கும் ஆனந்தம்

குருதிச் சோதனைக்கு
கொசுக்கள் போட்டியிட
பூட்டியிருந்த விழிக்கதவு
விரியத் திறந்தது

நெஞ்சில் முகம் புதைத்து –தன்
பிஞ்சுக்கரங்களால்
என் முகம் தடவ
உறக்கத்தில் என் மகள்
ஆடைகள் ஈரமாய்...

Thursday, January 20, 2011

சாதனையாய் ஒரு சதி...

சுதந்திரப் பெருவெளிச்சம்
திரும்பவே இல்லை
எங்கள் திசைப்பக்கம்

வறுமை இருளுக்குள்
வாழ்க்கையை கண்டறிய
பார்வை தருவதாய்
பலர் வந்து பறையடித்தார்கள்.




ஒளி தருவார் என்று
வலிபொறுத்தோம்
வயதாகிப்போனது
காலத்திற்கும்
எங்களுக்கும்.

மனுக்களைச் சுமந்து கொண்டு
உதவி கேட்டுப் போனவர்களை
உடல்கிழித்து புதைத்தனர்
கழிவுக்கூடையில்

ஆற்றாமை அலறல்களின்
அதிர்வுகளால்
ஆண்டுகள் அறுபதை
தீண்டிடும் தருணம்
ஆள்வோர் அனுப்பி
ஆய்வு செய்தார்கள்

உடைந்த மண்சுவரும்
ஓலைக்குடிசையும்
ஒட்டிய வயிறுமாய்
உழல்வதை உறுதிசெய்து
ஏதுமற்ற தகுதி எமக்கு
ஏராளம் உள்ளதென்றார்

தேசத்தின் பலகோடுகளில்
வறுமை கோட்டிற்கு
கீழ்புறம் உள்ளதால்
எதிர்வரும் காலம்
எங்களுக்கே என்றனர்

காத்திருப்பில் கதவுக்கும்
கால்வலித்தது
உழைத்துப் பிழைக்க
அழைத்து உதவிட
அரசரவம் ஏதுமில்லை.

கலர் டிவி கேஸ் அடுப்பு
கான்கிரீட் வீடென
கேளாமல் வந்தடைந்தது
பெரும்பாடாய் போனது
பயன்படுத்தி பராமரிக்க‌

அரசு தூதர்கள் ஒருநாள்
அவசரமாய் வந்து
அளவீடு செய்து
வறுமைக்கோடு தாண்டி
வளமை பெற்றதாய்
வகைப்படுத்தினார்கள்

வேலைக்கும் கூலிக்கும்
வேள்வி நடக்கையில்
எப்படி நடந்தது இந்த அதிசயம்?

வறுமை பெருங்கோட்டை
வகைமாற்றம் செய்யாமல்
எலிகளை எருதாய்க் காட்டும்
மதிநுட்ப சதி
சத்தமே இல்லாமல்
அரங்கேறுகிறது.

அள்ளித்தந்த
இலவசங்களையே
அளவீடாய்க் கொண்டு!







Saturday, January 15, 2011

அறிமுகம்

ஒரு கிராமத்தானின் வாசிப்பு அனுபவத்தில் கிடைத்த விபரங்களும் விவாதங்களும் விமர்சனங்களும் ரசித்தவைகளும் இந்த வலைப்பூவுக்குள் மலர்ந்திருக்கிறது. படிங்க! படிச்சு உங்க படிப்பு அனுபவங்களையும் இதுல பதிஞ்சு வையுங்க! இந்த அனுபவங்கள் எல்லாம் பிறருக்கும் பயன்படட்டுமே...
சரி...பயணிப்போமா?