Friday, January 21, 2011

பனித்துளிப்படுக்கை

நாளை உணவுக்கான
கவலை ஏதுமில்லாமல்
மனசெல்லாம்
மகிழ்ச்சியில் கனத்தது


பனித்துளிகளைக் கோர்த்து நெய்த
படுக்கை விரிப்பில்
படுத்துப்புரள்கிற சிலிர்ப்பு

மயிலிறகு கொண்டு விசிறினால்
வலித்திடுமே என
வருடிவிடும் பரவசம்

ரோஜா இதழ்களை
சேர்த்துக்கட்டி
ஒத்தடமாய் இதயம் தொட்டு
அழுத்திக் கிடக்கும் ஆனந்தம்

குருதிச் சோதனைக்கு
கொசுக்கள் போட்டியிட
பூட்டியிருந்த விழிக்கதவு
விரியத் திறந்தது

நெஞ்சில் முகம் புதைத்து –தன்
பிஞ்சுக்கரங்களால்
என் முகம் தடவ
உறக்கத்தில் என் மகள்
ஆடைகள் ஈரமாய்...

No comments:

Post a Comment