Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Saturday, October 29, 2011

சர்க்காரின் சாதித்திட்டம்

மீண்டும்  ஒரு முறை 
பரமக்குடியிலும் 
எம்மக்களின் 
குருதி  நக்கி குடித்தது 
அதிகார  அரிதாரம்  பூசிய 
சாதி வெறி 
புதையுண்டவர்களின் 
அடையாளம்  விளக்கி 
அதிகாரம்  பரித்தவர்கள் 


அடிமை  சாதிக்கு 
அடையாளம்  எதற்கென 
ஆத்திரம்  கொட்டினார்கள்


ஆள்வோரும் - அரசும் 
மநுவின் ஆலிங்கனத்தில் 
மயங்கி கிடப்பதால் 
சாதி வெறிக்கொம்பு வளர்த்த 
சர்க்கார்  மாடுகள் ... 

ஐந்தாம் வருணமாய்
அடக்கி  வைத்தோரை
 குத்தி  குதறி  உயிர்
  உருவி  எறிந்தது

 ஐந்து முனை சந்திப்பில் 
கொட்டிக்  கிடந்த
இரத்தக் குட்டையில்
உங்கள்  சமத்துவ  முக  மூடி 
கிழிந்து  மிதக்கிறது 

கூட நின்று  கொள்ளி வைத்து
கூடி  நின்று  அழுதால்  
அமைதி  கெடுமென  அலறி
காட்டுக்குள்  விரட்டி  
காவு  கொடுத்தீர்கள் 

உயர்  சாதி  ஆதிக்கம் 
நிலைத்திருக்க  - எங்கள் 
உயிர்  உறிஞ்சிக்  குடித்தே 
உறுதி  செய்கிறார்  என்றால் ....

சாதி ஒழிப்பு  ஒரு 
சாதியையே  ஒழிப்பதென
சர்க்காரும் சேர்ந்திருந்து 
சாதித் திட்டமிடுகிறதோ 

கொடியங்குளம் - வாச்சாத்தி 
தாமிரபரணி  என - உங்கள் 
அதிகார  வெறியாட்டம்  
நீண்டு  வளர்ந்தாலும் 
அழுது ஓய்கிறோம் என
அகந்தை  சுமக்காதீர் 

அழுகை  ... 
ஆத்திரத்தின்  உச்சம்
அழுகைகள்  இணைந்து 
ஆவேசமானால்

உங்களின்  ..... 
எவ்வகை  ஆயுதங்களாலும் 
எதிர்கொள்ள  முடியாது . 

Tuesday, February 1, 2011

என்னை தெரிந்தது

பிறை கூட
பௌர்ணமியாய்  தெரிந்தது
என் விழி  சிறைக்குள்
வந்தாள் அவள்

என் வீட்டு  கண்ணாடி
முதல் முறையாய்
மனம் கவரும் அழகு  நீ
என்பதாய் தெரிந்தது

எங்கள் சந்திப்பினை
தரிசித்த கருவை காடெல்லாம்
நந்தவன  பூச்செடியாய்
நிறம் மாறி  தெரிந்தது

வடுக்களை  சுமந்து  நின்ற
கருக்கொள்ளா  வயலில்  கூட
வானவில் தெரிந்தது

மதிய வெயில்  வேர்கள்
என்மீது மட்டும் மழையாய்
இறங்குவதாய்  தெரிந்தது

சாலை இட  வைத்திருந்த
சரளையில்  நடந்த  போதும்
மலர் பாதை  போல்
மிருதுவாய்  தெரிந்தது

அடையாளம்  தெரியாத
அந்நிய முகங்கள்  எல்லாம்
உறவுகளாய்  தெரிந்தன

அடுக்குமோ  நமக்கிதென்ற
அன்னையின்  கடும்  வார்த்தை
தாலாட்டாய்  தெரிந்தது

அன்றாடம்  நாங்கள்  பார்த்ததை
அவள் தந்தை  பார்த்த பிறகுதான்
மனு செய்த  சதி  தெரிந்தது
எனக்கே  தெரிந்தது  நான் யாரென

                   












நான் யார் உனக்கு

மரபணு  தொடர்பற்ற  
நமக்கு  நடுவே  
உறவு  துளிர்  விட்டது  

 கீதை  வழி நின்று  
பலன்  எதிர்பாராதுன்  
குடும்பம்  சுற்றி  வந்தேன் 

 உறவுமுன்  பெருமை  காட்ட  
கையாளிட்ட  வேலையை 
வாயால்  செய்து  வந்தேன் 
கெட்டிக்காரன்  என்றாய்  

கொழுப்பை  குறைக்க  நீ 
ஊரை  சுற்றி  வந்த   போது
உடன் நடந்து களைத்தேன்
பாசக்காரன்  என்றாய் 


இரவு  பகலின்றி  
பனிமலை  வெயிலில்  
வாசலில்  தங்கி 
வீட்டையே  காத்தேன் 
விசுவாசி  என்றாய்  


கண்ணயர்ந்த  வேளையில்
கன்னமிட  வந்தவரை 
சத்தமிட்டு  கதறி 
இரத்தம்  தந்து  தடுத்தேன் 
நன்றி  எனில்  நான் என்றாய் 


ரணம் தந்த  விசனத்தில் 
துடித்துப்போன  எனக்கு 
காயம் உலர்த்தாமல் 
கழற்றிவிட  துணிந்தாய்


எதையும்  தாங்கிட  
மனிதனா.....?  நான் 
பாய்ந்தேன்  உன்  மீதே 
இப்போது  என்னை 
வெறி நாய்  என்கிறாய்  ..




 




அளவீட்டுப் பிழை

கன்னி  களிப்பெனும்  பெயரில் 
என்னை  கழிப்பதற்கு 
உன்னை  முன் காட்டி
ஆயுள்  ஒப்பந்தத்துடன்  
அனுப்பி  வைத்தார்கள் 

அறிமுக நொடிகளில் 
நிறமும்  உருவமும் 
தரமறியும்  தருனமாய் இல்லை 
உடன்  இருந்த  நாளில் 
முரண்  மனிதன்  நீ  என 
புரிதல்  உருவானது  

மனம் புரின்தொன்றாவது 
மனம்  புரிதல்  என்பது 
மனதில் மனம் வைக்காமல் 
தினவெடுக்கும்  உன்  வயதுக்கு 
தீனியாய்  பார்க்கிறாய் 


உறவு  நெறியுனராமல்
உடல்களின்  உராய்வையே 
பேராய்வு செய்து 
பீதி  கொள்கிறாய் 


ஆண்  அடையாளம்முள்ள
யாரோடு  பேசினாலும்  
அகல  கண் விரித்து 
அதிர்வடைகிறாய்  


கைகோர்த்து  தோள்  உரசி 
கடை  வீதி நடந்ததும்  
பேருந்தில்  இடம்   பிடித்து 
அருகமர்ந்து கொண்டதும் 

காய்  கறி  வாங்க  வந்து 
பை  சுமந்து  வந்ததும் 
கழிவறை  கதவு வரை 
உடன் வந்து  போவதும்  

அன்பின்  அறுவடைக்கென 
அகம்  சிலிர்த்தேன்  - நீ  என் 
அவயங்களை  அடை காக்க 
அகழியாய் இருந்திருக்கிறாய்  

தடையும்   கண்காணிப்பும்  
சுயத்தை  தூண்டிவிடும்  
விட்டுவிடு   கணவனே  


அநாகரீக  உன்  அளவீடுகள்  
அண்டை  வீட்டானை  
அழகனாக்கிட  போகிறது  










Sunday, January 30, 2011

நினைவு படிமத்தில்

மேகக்கரை  இல்லா
தூய  வெளிர்  நிறத்தில்
விரிந்த வானமாய்
பரந்து கிடக்கும்
எங்க  ஊரு  கண்மாய்

விடா மழைக்காய்  வீட்டில்
சிறை  இருக்கும்  போதும்
ஆவலில்  மனது
அசைபோடுவது
கண்மாய்  நீரின்
கணம்  பற்றித்தான்

குட்டி  கடலாய்
கொட்டிகிடக்கும்
கண்மாயை  கடந்திட
பயணித்த பறவைகள்
சுவர் மோதிய  பந்தாய்
புறப்பட்ட  இடம்  திரும்பும்

மைய  கண்மாயில்  கால்பதித்து
மூழ்கி  மண்  எடுக்க
ஆம்சட்ரன்கால்      கூட
ஆகதென்பது
அசையா நம்பிக்கை

பிரிந்திட  மனதின்றி
கொக்கும்  நாரையும்
ஒற்றைக்காலில்  நின்று
அலகுகளை  அலசி
நீர் கண்ணாடியில் 
அழகு  பார்த்து
பெருமை கொள்ளும்

காதல்  சோடிக்கு பரிசு தந்து    
போதை பார்வை பெற
நீர்த்திரை  கிழித்து
மீன்க்கொத்தி  பறவை
சாகசம்  செய்யும்

எதிர்  கரை  தொட்டு
இமயம்  தொட்ட  வீரனாய்
தாவணிப் பெண்களின்
கனவுகளை  களவாட
குற்றாலீஸ்வரன்  முயற்சியில்
அரும்பு  மீசைகள்
அணி வகுக்கும்

அரசமரக்  குடை  நிழலில்
காவலுக்காய்   கணபதியும்
காற்றுக்காய்  பெருசுகளும்
கிராமத்து  கடற்க்கரையாய்
கண் மாயே   கலகலக்கும்

பட்ட மரக்கட்டையில்
படகு பயணம்  செய்து
நாயடி  பட்ட தின்னும்
நினைவு படிமத்தில்
நிலைத்திருக்கிறது

பள்ளி  குழந்தைகளின்
உற்சாகதுள்ளளோடு
மடை திறக்க  ஓடி வரும்
தண்ணீரின்  ஓசை
கிராம மனிதர்களின்
நள்ளிரவு  தாலாட்டாய்
தன் நிலை தவற  வைக்கும்

வான்முகம்  விட்டு
சிதறிய  வியர்வை
துளிகளை  சேர்த்து
தண்ணீராய்  தரம்  மாற்றி
தானியம்   விளைந்திட
தந்திரம்  செய்யும்

அறிவியல்  அறிவு  கலந்த
அறிய  திட்டம்  இது  என
ஆர்வம்  மேலிட  வனத்துறை
பூமி  பெண்ணுக்கு
பசுமை  ஆடை  நெய்ய
நீர் வளர்த்த  கண்மாய்குள்
இன்று  காடு  வளர்க்கிறது .