Saturday, January 22, 2011

சேதுத் திட்டத்தை செயல்படுத்திட திரளுவோம்!


சேது சமுத்திரத்திட்டம் தமிழக அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள் அரசியல் தலைவர்களின் பேட்டி‍ பொதுக்கூட்ட பேச்சுக்கள் ஆகியற்றில் தவறாது இடம்பெற்ற திட்டமாகும். 1860‍ல் துவங்கி 2004 வரை ஆய்வு செய்வதை மட்டுமே செய்து பல கோடிகளை செலவு செய்து வந்தார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வந்ததும் சேதுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையும் ஆசையும் துளிர்விட்டது.
     அதேபோல் 2005 ஜூலை 2 மதுரையில் திட்டத்திற்கென 2470.40 கோடையை அறிவித்து துவக்க விழா நடைபெற்றது. திட்டப்பணிகள் துவங்கி 600 கோடிக்கு மேல் செலவான பிறகு சேது சமுத்திரத் திட்டமத்தினை 6 வது வழித்தடத்தில் நிறிவேற்றக்கூடாது. ஏனெனில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலம் உடைபடும் என தனது ஆட்சிக் காலத்தில் இந்த வழித்தடத்தை தேர்வு செய்த பி.ஜே.பியே பிரச்னையை கிளப்பி விட்டது. சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றம் போனார். நீதிமன்றம் மாற்றுவழி குறித்து மத்திய அரசு யோசித்தால் என்ன என்று யோசனை கூறியதும், திட்டம் பழையபடி துவங்கிய இடத்திற்கே வந்து கே.பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வுக்கென அமைக்கப்பட்டது.


ராமர் போட்ட பாலம்தான் என பி.ஜே.பி நாசா படத்தை ஆதாரமாகக் காட்டியது. நாசாவும் அதை நாங்கள் ராமர் பாலம் என்றெல்லாம் பெயரிடவில்லையே என மறுத்தது. ஆனால் பிஜே.பி ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதை விடுவதாய் இல்லை. ராமாயணத்தில் உள்ளபடி தனுஷ்கோடியிலிருந்து பாலம் போட்டார் என வாதிட்டு சேதுத்திட்டத்தை முடக்கி விட்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் காதில் விழவில்லை.
                           வால்மீகியின் ராமாயண அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலைகளுக்கிடையே உள்ள நீர் சூழ்ந்த மலைதான் 'லங்கா' என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். வால்மீகியின்  ராமாயணக்கதையில் லங்காவுக்குஅருகே 'சுவேலா' என்ற சிறு குன்று இருந்ததாய் வர்ணித்துள்ளனர். அதனடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் அது மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் அருகில் உள்ளதென்றும் ஆராய்ந்து உறிதி செய்துள்ளார்கள். தற்போதுள்ள இலங்கை சிங்களம் என்றே அழைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 200 கி.மீ வரையறைக்குள் நடந்த ராமாயணக்கதையை 1500 கி.மீ மைல்கள தூரம் கடந்து தமிழகத்தின் அருகே உள்ள இலங்கையோடு இணைத்த வேலையை கி.பி 1000 மாவது ஆண்டு காலத்தில் ராஜேந்திர சோழனின் இலங்கை மீதான போரை நியாயப்படுத்த  சோழர்களின் அரசைப் புலவர்களே செய்துள்ளார்கள் என வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்தாலும் சங்பரிவார் போன்ற அமைப்புகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி.. ராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டாலும் அது ராமாயணத்தில்  உள்ளது என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். நீங்கள் சொல்லும் ராமாயணம் வரலாறல்ல! அது கற்பனையால் புனையப்பட்ட கதை‍..காப்பியம். அதை எப்படி ஏற்பது? 
உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலத்தை விபீஷணன் வேண்டுகோளை ஏற்று ராமபிரானே இடித்து விட்டார். எனக்கூறி இருந்தது.இதைக் கண்டதும் பதறிப்போன சங்பரிவார், 'மத்திய அரசு இப்படிஒ செய்திருக்கக் கூடாது..'என்றதுடன் ராமாயணம் கற்பனைக் கதை என்றதும் எங்கள் நம்பிக்கையைக் கேலி செய்கிறார்கள் என்ற சங்பரிவார் அமைப்புகள், கம்பர் தனது ராமாயனத்தை மெருகூட்டுவதாக கற்பனை கலந்து எழுதினார். அதன் ஒரு பகுதிதான் பாலத்தை உடைத்துவிட்டார் என்பதும் ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள். அனைத்து அறிவியல் வரலாற்று விளக்கங்களையும் இந்து மக்களின் நம்பிக்கை எனச் சொல்லியே முறியடிக்க முயல்கிறார்கள்.

         சிலரது தனிப்பட்ட நம்பிக்கை தேசத்தின் நம்பிக்கையாகாது. எனவே சிலரது நம்பிக்கையைக் காரணம் காட்டி நாட்டிற்கே பயன் தரும் திட்டங்களை  தடுக்கக்கூடாது. நம்பிக்கை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்று இருக்கிறது. ஒருவரே பல நம்பிக்கைகளை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்பரிவார் அமைப்புகளின் நம்பிக்கைகள் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறாக இருக்கிறது.  ராமேஸ்வரம் பகுதியிலேயே நாமர் பாலம் கட்டியதாக இரண்டு இடங்களைக் காட்டுகிறார்கள். ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து என்றும் இன்னொன்று திருப்புல்லாணியிலிருந்தும் அமைத்தார் என்கிறார்கள் திருப்புல்லாணி திருத்தல புராணத்தில் தனது மனைவியை மீட்க வானரப் படையினருடன் திருப்புல்லாணி வந்த ராமன் கடலில் பாதை அமைக்க தடையாக அலைகள் அதிகமாக இருந்ததால் கடல் அலைகளின் வேகம் குறியும் வரை ஓய்வெடுக்கிறான். ( திருப்புல்லாணி திருத்தலத்தில் மட்டுமே சயனித்திருக்கும் கோலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது)அலையின் வேகம் குறையாத கோபத்தில் அலைகளை நோக்கி அம்பை எய்திட முயல்கிறான். உடனே பதறி ஓடிவந்த சமுத்திர ராஜன், 'எனக்கிட்ட க்டமையை நான் செய்கிறேன்..என் மீது கோபம் ஏன்?' என சாந்தப்படுத்தி 'கடலில் பாலம் அமைக்க இயலாது' என உபாயமும் சொல்கிறான். உனது படைவீரர்களில் மகாவிஸ்வ கர்மாவின் மகன் நளன் இருக்கிறான். அவன் தண்ணீரில் எதைப்போட்டாலும் அது மிதக்கும் எனவே அவனை வைத்துத்தான் பாதை அமைக்க முடியும் என்கிறான். ராமனும் அதை ஏற்ரு புல்லால் பாதை அமைத்ததாகவும் அதனால் திரு+புல்+அணை =திருப்புல்லணை யானது என்கிறார்கள்.
   இதைப்போல கண்டேன் தேவியை என்ற இடம் கண்ட தேவி என்றும் ஜடாயுவின் இறகு சிதறிய இடம் இறவுச்சேரியானதுமாய் தென்னகம் எங்கும் புனைவுகளுக்கேற்ப ஊர்ப்பெயர்களும் ஏராளமாய் உள்ளது. எனவே இதையெல்லாம் வைத்து 'கண்டதேவி' தேவக் கோட்டை பகுதிதான் ஆரண்யக் காண்டப் பகுதி என சொல்ல முடியுமா? நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. ராமர் எனும் தங்கள் கடவுள் கட்டிய பாலம் குறித்த தங்கள் நம்பிக்கையையே விட்டுத் தர முடியாத சங்பரிவார் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்படி இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களின்  நம்பிக்கைக்குரிய ஆலயங்களை மசூதியை மாதா சிலைகளை உடைக்க முடிகிறது. பிறர் நம்பிக்கையை மதிக்காத இவர்களின் நம்பிக்கையை மட்டும் நாடு மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது. சிலரின் நம்பிக்கையைவிட நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் முக்கியமானது.
              பாக் ஜலசந்திக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக உள்ள ஆதம்ஸ் பாலம் என்ற மணல் மேடுகளின் குறுக்கே 89 கி.மீ தூரத்திற்கு 82.5 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தூர்வாரி 300 மீட்டர் அளவுக்கு  ஆழப்படுத்தி கப்பல் செல்ல இருவழிப்பாதை அமைப்பதே சேது வமுத்திர திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்து மகா சமுத்திரமும் வங்காள விரிகுடாவும் இணைந்து இலங்கையைச் சுற்றி அலையாமல் நமது நாட்டு கடல் வழிப்போக்குவரத்தை உள்நாட்டு கடல் எல்லைக்குள்ளே செயல்படுத்திட முடியும். இதன்மூலம் பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். (ஆண்டுக்கு 130 கோடி) அன்னியச் செலவாணி கையிருப்பு வளரும். இருக்கும் துறைமுகங்கள் மேம்படும்..புதிய துணைத் துறைமுகங்கள் உருவாகும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். தென் மாவட்டங்களின் முகத் தோற்ற‌ம் மாறும்.  இன்றில்லாவிட்டாலும் நாளை சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய புதிய துறைமுகங்கள் ராமேஸ்வரத்தை சுற்றிலும் உருவாகும். அப்படி நடக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளம் பெருகும் சூழல் உருவாகும். இன்று பிழைப்புத் தேடி நாடுவிட்டு நாடு ஓடும் இளைஞர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிட்டும்.
         இதையெல்லாம்விட நமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்தத் திட்டம் பயந்தரும். இப்படிப்பட்ட 150 ஆண்டு கால கனவைத்தான் சங்பரிவார் போன்ற அமைப்புகள் சிதைத்து விட்டனர். சேது சமுத்திரத்திட்டம் அமுலானதும் எங்களால்தான் வந்தது என மார்தட்டியவர்கள் எல்லாம் வாயடைத்துப்போனார்கள்.
 


    

No comments:

Post a Comment