Sunday, October 30, 2011

அவர்களைத்தெரியும்


தெரியும்
அவர்களுக்கு எங்களையும்
எங்களுக்கு அவர்களையும்
நன்றாகவே தெரியும்

எங்களின் தேவைகளை
அவர்களின் குரல்களே
உரத்துப் பேசியது.

வேதனைகளை வெளிப்படுத்தி
எங்கள் முனங்கள்களை
முழக்க மாக்கியவர்கள்

அவர் விழிகள் தந்த
வெளிச்சத்தில் தான் எங்கள்
வழியினை கண்டுணர்ந்தோம்

எங்கள் வலிகண்டு
துடித்தவர்கள்
துவழும் பொழுதுகளில்
தோள் தந்தவர்கள்


எல்லாம் தெரியும்
நன்றாகவே தெரியும்

அதிகாரம் பிடிக்கும்
அவசரத்தேவைக்காய்
அருகில் வந்து போகும்.
இவர்களையும் தெரியும்

வறுமைச் சாபம் தந்து
வசதி வரம் பெற்றவர்கள்
இவர்களின் முக விலாசம்
முழுவதுமாய் தெரியும்

ஜாமினுக்கும் சம்மனுக்கும்
கோர்ட்டில் கிடப்போர்க்கு
ஓட்டுப்போட்டது ஒவ்வாதென
உறுதியாய் தெரியும்
வறுமை….
அகழி வீழ்ந்த எங்கள்
வாழ்க்கை மீட்கும் போரில்
செலாவணி ஆயுதத்தின்
தாக்குதலால் தடுமாறி
ஒவ்வொரு முறையும்
தோற்றுப்போகிறோம்

அடுத்தமுறை
வெல்வோம் எனும்
நம்பிக்கையோடு…..

மரணத்தின் - காயங்கள்


அந்த கொடூரம் நடந்து  இரண்டு  மாதம் நிறைவடையப்போகிறது. அதிர்ச்சியில் உறைந்திருந்த இராமநாதபுரம் மாவட்டம் அன்றாட வாழ்க்கைக்கு திரும்பி விட்டது.  ஆறுதல் சொல்வதற்கென அடுத்து அடுத்து வந்த அரசியல் வாதிகளின் வாகனச் சத்தம் நின்று  போய்விட்டது. கூடி நின்று அழத  ஊரும் கூலி வேலை தேடிச்செல்லத் துவங்கிவிட்டது. ஆனால் கணவர்களை பறிகொடுத்த மனைவிகளும் பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோரும் உயிரோடு இருக்கிறார்கள்  என்பதையே உறுகி வழியும் கண்ணீரே உறுதி செய்கிறது. இதுவெல்லாம் சரி..  இந்த கொடூரத்தை நிகழ்த்திய அரசு என்ன செய்கிறது.? ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்.? ஆறு குடும்பங்களின் சந்தோசங்களுக்கு கொள்ளி வைத்த காவல்துறை  அரசுத்துறைகளில் ஒன்று என்ற வகையில் ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாய் உதவியாய்  பாதுகாப்பாய் இருக்க வேண்டாமா? இந்த திசையையே  மறந்து விட்டார்கள். சாதிச்சாயம் தடவிய  பொய் வார்த்தைகளை சட்ட சபையிலேயே  கொட்டிய  முதல்வரின் செயலை அவரது மனச்சாட்சியே சுட்டதனாலோ  என்னவோ. குண்டூசியை இலவசமாய் கொடுத்தாலே  கும்பலாய் நின்று குரூப் போட்டோ எடுத்து விளம்பரப்படுத்தி குதூகளிக்கும் ஆட்சியாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தொகையைக்கூட அதிகாரிகளை அனுப்பியே கொடுக்க வைத்ததார்கள் .
    அதன்பிறகு அடுத்த வேலைக்குப் போய்விட்டார்கள்  அரசியல் , சமூக அமைப்புகள் முன்வைத்த, நிவாரண நிதியை உயர்த்த வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி தர வேண்டும்.  துப்பாக்கிச்சூட்டை நடத்திய அதிகாரிகள் உடனடியாய் இடை நீக்கம்  செய்யப்படவேண்டும் . போன்ற கோரிக்கைகள் கண்டு கொள்ளப்படவே இல்லை.
    இந்த நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் சூடு பிடிக்கத் துவங்கியது. ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் வாக்கு வணிக சந்தையில் ஏலம் எடுக்கும் முயற்ச்சியில் கிராமங்களில் உறவுகளை இரண்டாய் கூறுபோடும் பணிகளில் தீவிரமாய் இருந்தார்கள். வெற்றிகளை விலைக்கு  வாங்கி தமிழக மக்கள் தங்கள் பக்கம் என பெருமைபேசிக்கொள்வதற்காய் வீதியெங்கும் பிராந்தி வாசம் , வீடு தோறும் கரன்சி வாசம் என அல்லோகலப்படுத்தினார்கள்.
    இந்த சமயத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ்  படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களை மீண்டும் ஒருமுறை சந்திப்போமே  என தகவல் தந்துவிட்டு வந்து சேர்ந்தார் .  மூன்றுமுறை சென்று வந்த அந்த ஊர்களுக்கு மறுமுறையும் சென்றோம். நாங்கள் முதலில் சந்தித்தது மஞ்சூர் ஜெயபாலின் மனைவி காயத்திரியை.
மருத்துவ மனையில் இருந்த அவர் பிறந்து ஐந்து நாட்களே ஆன மகனை மடியில்  வைத்தபடி , ஆறுதல்  சொல்ல வந்திருந்த சிலரோடு நடந்த கொடூரத்தை ஆயிரத்து ஓராவது முறையாக  சொல்லிக்கொண்டிருந்தார். நெஞ்சே வெடித்திடும் அளவுக்கு சேர்ந்திருந்த துயரத்தை கண்ணீராய் கரைத்துக் கொண்டிருந்தார்.
    “நான் புள்ளமார் சாதிங்க எம் புருஷன்  எஸ்.சி-ங்க நாங்க ரெண்டுபெரும் விரும்பினோம். முதல்ல எதிர்த்த எங்க அம்மாவும் , அப்பாவும் என்னோட உறுதியால புள்ளை வாழ்க்கைதானே முக்கியம்  ஊறுக்கு நாம ஏன் பயப்படனும் , அவ ஆசைப்பட்ட வாழ்க்கையை நாம ஏன் தடுக்கனும்னு எங்க அம்மா அப்பாகிட்டே பேசி சம்மதிக்க வச்சு எங்க கல்யாணத்தை நடத்தி வச்சாங்க.  நாங்களும் சந்தோசமா வாழ்ந்தோம். எனக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடிதான் வலைகாப்பு  சிறப்பா நடந்துச்சு. அந்த சாந்தோஷத்தை முழுசா அனுபவிக்கிரத்துக்குள்ள என் தாலிய அறுத்துட்டாங்களையா… என கதறினார் காயத்திரி.
    பலமுறை கேட்டிருந்தாலும் ஒரு வருடம் கூட  நீடிக்காதபடி  தன் காதல் வாழ்க்கையை ஒரு துப்பாக்கித் தோட்டாவுக்கு பறிகொடுத்த  19 வயது இளம் பெண்ணின் துயரம் அவள் வார்த்தைகளில் வெளிவரும்போது  மனதை பிழிந்தது.
        காதல் என்றால,; அதிலும் வேறு சாதியைச் சேர்ந்தவரோடு என்றால், அதையெல்லாம் விட தலித்துடன் காதல்-கல்யாணம்  என்றால் , சாதிப் பெருமையே சரிந்து விட்டதாய் அதிர்ந்து போகிற சமூகம்  இந்திய சாதிச் சமூகம் இங்கே ஒவ்வொரு மனிதனும் தனது சாதியை தூக்கி சுமந்து திரிகிறார்கள். தனது சாதிப்பெருமைகளை அணிகலனாய் அணிந்து அலைகிறார்கள். எனவே இப்படியொரு காதல் மணம் என்றால் கொலை அயுதம் தூக்கத் தயங்குவதில்லை. சாதிப் புனிதம் காக்க நடந்த காதலர்களின் கொலைப் பட்டியல் எண்ணிலடங்காதவை. அந்த கொலைகளை சாதிவெறியால் நடத்தப்பட்டது என்று கூட சொல்லத் தயங்குவார்கள். கௌரவக் கொலைகள் என்றுதான் கதைப்பார்கள். ஆட்சியாளர்கள்  தந்த இந்த அடைமொழித் தைரியத்தில்தான் சாதி வெறியர்கள் தங்கள் சாதிப்புனிதத்தை சமாதிகளின் மேல் நிறுவுவதை தொடர்கிறார்கள் .
        ஆனால் காயத்திரி விசயத்தில் நடந்தது வேறு. காயத்திரி-ஜெயபால் காதலை ஊறும், உறவும் சாதிவெறியும் அனுமதித்தது. அல்லது கண்டுகொள்ளாத நிலையில் தமிழக காவல்துறை ஒரு துப்பாக்கித்தோட்டாவால் பலி கொண்டது. அதிகாரம் பூண்ட சாதி வெறியின் உச்சம்.
        நாட்டின் பல தலைமுறைத் தலைவர்களால் சடங்காய் முழங்கப்பட்டு வரும் சாதி ஒழிப்பு எனும் வார்த்தையை தன் வாழ்க்கையை தந்து செயல்வடிவம் கொடுத்தவர் காயத்திரி.  இந்தியச் சமூகத்தின் இழிவான சாதி அமைப்பின் மீது காறித் துப்பிவிட்டு சென்ற  கம்பீரமான இளம்பெண் காயத்திரிக்கு பாரதிக்கு விழா எடுக்கும் பெரியாரின் வாரிசுகளின் ஆட்சி தந்த பரிசு விதவை எனும் வேதனை வாழ்க்கை.
        மனசை பிசைந்த துயரங்களும் எங்களுடன் ஒட்டிக்கொண்டு உடன் வர அடுத்து சடையனேரி முத்துக்குமாரின் விட்டிற்குச் சென்றோம். இழப்பின் சுவடுகளுடன் இருந்த அந்த வீட்டில் இருண்டுபோன முகத்துடன் அவரின் 22-வயது மனைவி பாண்டீஸ்வரி. தந்தையின் இழப்பை உணர முடியாத பருவத்திலிருந்த இரண்டு குழந்தைகளும்  தாயின் அழுகைக்கு காரணம் தெரியாது பாண்டீஸ்வரியின் முகத்தை பார்த்தபடி இருபக்கமும் அமர்ந்திருந்தனர். வழக்கமான விசாரிப்புகளுடன் அவருக்கு ஆறுதல் சொல்லத் துவங்கினோம். முத்துக்குமார்  கொலை செய்யப்பட்டு  இரண்டுமாதம் முடியப்போகும் நிலையிலும் இன்று தான் அந்த துயரம் நிகழ்ந்தது போல கதறி அழுதது கணவரை இழந்த துயரத்துடன் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் வெளிப்படுத்தியது.
    “இந்த பச்சைப்புள்ளைகளை வச்சுக்கிட்டு நான் எப்படி பொழைக்கப்போறேன். இந்தப் புள்ளைகளை எப்படி வளத்து ஆளாக்குவேன் என்னைய தனிமரமா  ஆக்கிட்டாங்களைய்யா..? இனி நான் என்ன செய்வேன் என கூடி நின்றவர்கள் தேற்ற முடியாதபடி கதறினார்.
    போலிசால் கொலை செய்யப்பட்ட அனைவரின் வீடுகளிலும் இந்த சோகம் , அழுகை, கோபம் , ஆற்றாமை இன்னும் வெளியேறவில்லை. கடைசிவரை  நம் கண்களின் ஈரமும் காயவே இல்லை,
    ஆறு தலித் ஏழைகளைக் கொன்று அவர்களின் குடும்பங்களை சீர்குலைத்த கொடுமை எதற்காக  நடத்தப்பட்டது .? தமிழகத்திலுள்ள எந்த சாதித் தலைவருக்கு விழா எடுக்கவில்லை?  தலித் சமூகத் தலைவருக்கு விழா என்றால் பிற சமூகத்தவரைவிட போலிசுக்கு ஏன் இத்தனை வன்மம்?  தொடர்ந்து நடத்தப்படும் இந்த மரண வெறித்தாக்குதல்கள் தலித்துகள்,மலைவாழ் மக்கள் மீது மட்டும்  குறி வைத்து நடத்தப்படுகிறதே ஏன்..?  துப்பாக்கிக்சூடு நடத்தியவர்கள் மீது சிறு நடவடிக்கை கூட எடுக்காததுடன் பாதித்த மக்களின் பக்கம் நிற்க வேண்டிய அரசு அவர்களை திரும்பிப் பார்க்கக்கூட  தீண்டாமையையே கடைப்பிடிப்பது ஏன்..? இப்படி மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில். பாதிக்கப்பட்டவாகள் ஏழைகள், தலித்துக்கள் . இவர்கள் கதறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற சாதி மேலாதிக்க உணர்வு. ஆட்சி, அதிகாரம் அனைத்திலும் ஊடுருவி  நிற்பது தான். ஏன்ற முடிவுக்கே வரமுடிகிறது. எது எப்படியானாலும் அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பினை எவரும் ஈடு செய்யமுடியாது.   என நினைத்தபடி இராமநாதபுரம் நோக்கி புறப்பட்டோம் எங்கள் நினைவுப்பரப்பில் காயத்pரி, பாண்டீஸ்வரியின் துயரம் தோய்ந்த முகங்களும் , அந்த சின்னஞ்சிறு குழந்தைகளின் முகங்களும் அழுந்தப் பதிந்து கிடந்த அவஸ்தையில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளாமலேயே…….
   


Saturday, October 29, 2011

சர்க்காரின் சாதித்திட்டம்

மீண்டும்  ஒரு முறை 
பரமக்குடியிலும் 
எம்மக்களின் 
குருதி  நக்கி குடித்தது 
அதிகார  அரிதாரம்  பூசிய 
சாதி வெறி 
புதையுண்டவர்களின் 
அடையாளம்  விளக்கி 
அதிகாரம்  பரித்தவர்கள் 


அடிமை  சாதிக்கு 
அடையாளம்  எதற்கென 
ஆத்திரம்  கொட்டினார்கள்


ஆள்வோரும் - அரசும் 
மநுவின் ஆலிங்கனத்தில் 
மயங்கி கிடப்பதால் 
சாதி வெறிக்கொம்பு வளர்த்த 
சர்க்கார்  மாடுகள் ... 

ஐந்தாம் வருணமாய்
அடக்கி  வைத்தோரை
 குத்தி  குதறி  உயிர்
  உருவி  எறிந்தது

 ஐந்து முனை சந்திப்பில் 
கொட்டிக்  கிடந்த
இரத்தக் குட்டையில்
உங்கள்  சமத்துவ  முக  மூடி 
கிழிந்து  மிதக்கிறது 

கூட நின்று  கொள்ளி வைத்து
கூடி  நின்று  அழுதால்  
அமைதி  கெடுமென  அலறி
காட்டுக்குள்  விரட்டி  
காவு  கொடுத்தீர்கள் 

உயர்  சாதி  ஆதிக்கம் 
நிலைத்திருக்க  - எங்கள் 
உயிர்  உறிஞ்சிக்  குடித்தே 
உறுதி  செய்கிறார்  என்றால் ....

சாதி ஒழிப்பு  ஒரு 
சாதியையே  ஒழிப்பதென
சர்க்காரும் சேர்ந்திருந்து 
சாதித் திட்டமிடுகிறதோ 

கொடியங்குளம் - வாச்சாத்தி 
தாமிரபரணி  என - உங்கள் 
அதிகார  வெறியாட்டம்  
நீண்டு  வளர்ந்தாலும் 
அழுது ஓய்கிறோம் என
அகந்தை  சுமக்காதீர் 

அழுகை  ... 
ஆத்திரத்தின்  உச்சம்
அழுகைகள்  இணைந்து 
ஆவேசமானால்

உங்களின்  ..... 
எவ்வகை  ஆயுதங்களாலும் 
எதிர்கொள்ள  முடியாது .