Saturday, January 22, 2011

தமிழ்ப் புத்தாண்டு பொழிவு பெற...

தமிழ் புத்தாண்டு என்பது இனி தை முதல் நாளிலிருந்து துவங்கும் என தமிழக அரசின் அறிவிப்புப்படி தமிழ் புத்தாண்டு துவங்கி தன் பயணத்தை துவங்கி விட்டது. இந்த அரசு அறிவிப்பை சிலர் எதிர்த்தாலும் நீண்ட காலமாக தை மாதமே தமிழ் ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழார்வ அமைப்புகள் தமிழ் அறிஞர்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். இதனால் கடந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த சில கால முறை பழக்கங்கள் சிறிது தடுமாறினாலும் சரிசெய்யப்பட்டு புதிய காலமுறை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு சரி செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அறிவிப்பும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு துவக்கிவிட்டது என்பதும் தமிழக மக்கள் மத்தியில் எந்த அளவு கொண்டு செல்லப்பட்டது என்பது விவாதத்துக்குறியதாகும்.

                  புத்தாண்டு என்றாலே படித்த நகரத்தில் உள்ள மக்களுக்கு ஜனவரி முதல் தேதிதான் என்றாகிவிட்டது. எனவேதான் ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி விடுகிறார்கள். 'வே இஸ் த பார்ட்டி..' எனத் தேடி ஏதாவது ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சு ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் வாழ்த்து அட்டை எஸ்.எம்.எஸ் பரிமாற்றங்கள் டிசம்பர் இறுதி நாளில் நள்ளிரவு 12 மணிக்கு காதுகளை செவிடாக்கும் வெடியோசைகளோடு 'ஹேப்பி நியூ இயர்' எனும் உற்சாக கதறல்கள் என ஆங்கிலப் புத்தாண்டு ஆடம்பரமாக வரவேற்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு? நமது மாநிலத்தில் தமிழுக்கு தரப்படும் மரியாதையைப் போலவே நீண்ட காலமாகவே சித்திரை வருடப்பிறப்பும் எந்த முக்கியத்துவம் இன்றியே வந்து போனது.

                        அனாதையாய் வந்து செல்லும்   தமிழ்ப்புத்தாண்டிற்கு கிராமத்து மக்கள்தான் ஆறுதல் தந்தார்கள். தங்களது காரியங்களை தமிழ்தேதி குறித்தே திட்டமிட்டார்கள். சித்திரை முதல் தேதி வீடுகளை சுத்தம் செய்து கோலம் இட்டு பலகாரங்கள் செய்து உற்சாகமாய் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழியனுப்புவார்கள். பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என சித்திரை மகள் மகிழ்ச்சியில் திணறும் அளவு கொண்டாடி மகிழ்வது கிராமத்து மக்கள்தான். அந்த மக்களுக்கு தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற தகவல் இன்னும் சென்றடையவில்லை.

                                      அப்படியே ஊடகத்தொடர்புள்ள கிராமங்களுக்குத் தெரிந்தாலும் உழவர் திருநாள் உற்சாகத்தில் கதாநாயகனுடன் வரும் காமெடி நடிகனாக தமிழ்ப்புத்தாண்டு வந்து செல்வது வேதனையான உண்மை. தமிழ்ப்புத்தாண்டின் துவக்கத்தை மாதம் மாற்றி அறிவித்தவர்கள்கூட வாழ்த்து அறிக்கையோடு முடித்துக் கொள்கிறார்கள்.

                             தைமாதம் தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது என்கிற செய்தியை தமிழ் மக்கள் அனைவருக்கும் கொன்டுசேர்க்கும் கடமையினை நிறைவேற்றாததால் கணிசனமான மக்களுக்கு இந்த மாற்றம் தெரிவதே இல்லை. இதனால் இந்தப் புதிய புத்தாண்டு தனது பயணத்தை அரசு முறை‌ பயணம் போல ரகசியமாக துவங்கி முடிந்தது.

                               தமிழ்ப்புத்தாண்டை வசந்தகால குதூகலத்துடன் துவங்கிட வேண்டும் என தமிழறிஞர்கள் முடிவு செய்தது சரியானதுதான் என ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் அதை சிறப்பாக துவங்கிடவும் வழியினை கண்டுபிடித்திட வேண்டும். காலம்காலமாய் கிராம விவசாய மக்களில் விழாவாக நிலைபெற்றுவிட்ட உழவர் திருநாள் அன்று புத்தாண்டும் துவங்குவதால் உழவர் திருநாளே முன்னிற்கிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு தனிச்சிறப்பின்றி போய்விடுகிறது. எனவே தமிழ்ப்புத்தாண்டை தனித்தன்மையுடன் தமிழர்கள் கொண்டாடிட வழி காண வேண்டும்.

                                 புத்தாண்டு துவங்கி முடிந்த பிறகு அடுத்த புத்தாண்டையாவது வாண வேடிக்கைகளோடு கொண்டாடுங்கள் என அறிவிப்பு செய்வதால் எந்த மாற்றமும் வந்து விடாது. தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் தினம் ஒன்றினை  அறிவிக்கலாமா? என சிந்திக்க வேண்டும். உழவர் திருநாள் என்பது போகிப்பண்டிகை.. பொங்கல்.. மாட்டுப்பொங்கல்.. காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்நாள் கொண்டாடப்பட்டும் போகி என்பது பழையன கழிதல் என்கிற அர்த்த செறிவை கொண்டுள்ளது. இந்த நாளில் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் நாளாக அறிவித்து அரசும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் பிர‌திநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் விழாவாக கொண்டாடி துவக்கி வைக்கலாம். அது மக்களிடம் ஒரு விழா தன்மை உணர்வை உருவாக்கும்.

                                   பழைய ஆண்டின் கடைசி நாளை வழியனுப்புவதும் புதிய ஆண்டை வரவேற்கவுமான நாளாக இந்த போகி நாள் பொறுத்தமாக இருக்கும் என்பது இந்த கிராமத்தானின் ஆலோசனை! இல்லையெனில் அரசு தமிழறிஞர்களுடன் ஆலோசித்து ஒரு மாற்று வழி காணலாம். இவை இல்லையெனில் அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் உணரப்படாமலேயே தமிழர்களின் நீதி நிர்வாகத்தில் தமிழ் என்கிற கனவு போலவே இந்த தேதி மாற்றமும் ஆகி விடக்கூடும்! ஆள்வோரும் அறிஞர்களும் கவனத்தில் கொள்வார்களா?     

No comments:

Post a Comment