Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Monday, February 27, 2012

தருதலைகளுக்கும் தாலியறுக்க ஒரு மனைவி

  முகநூல் நண்பர்களுடன் எனது துயரத்தையும்  ஒரு ஆலோசனையையும்  பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். எனது அண்ணன் மகள் வனிதாவுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவளின் கணவர் இறந்து விட்டார் எனும் செய்தி இடியாய் இரங்க அனைவரும் ஓடினோம்.
    உடைந்து நொருங்கிப்போன அண்ணன் , ஆத்திர அவதாரத்துடன் தம்பி அவர்களது குடும்பம் அவர்களுடன் என்ன செய்வது என்றே இலக்கறியாமல் நானும் உடன் சென்றேன். எங்கள் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லிடமுடியாது தவித்தோம்.
    காரணம் மருத்துவமனையில் இறந்ததாக தகவல் வந்ததால் அவருக்கு எதற்காக வைத்தியம் பார்த்தார்கள் எனத்தெரியாததால் வந்தது இந்த தவிப்பு.
    எங்கள் அண்ணன் மகளை அழைத்து துயரங்களுக்கிடையே காரணம் அறிய முயன்றோம்.  அவளும் தனக்குத் தெரியாது என கை விரித்ததுடன் 'என்னை அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வா' என ஊருக்கு அனுப்பிவிட்டு வைத்தியம் பார்க்கப் போனார்கள் என்றும் ஒரு தகவலைச் சொன்னாள்
    எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்கே தெரியாமல் கணவனுக்குவைத்தியம் நடந்தது என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. குழப்பம் வந்து குவிந்தது. முட்டாளாக்கப்பட்டு விட்டோமோ என்ற அதிர்வில் என்மீது எனக்கே அருவருப்பாய் இருந்தது.
    ஆண்கள் போதை அதிகமானால் உண்மையை உளறிவிடுவார்கள் பெண்கள் சோகத்தை வெளியிட்டு அழும்போது உண்மையை வெளியிட்டு விடுவார்கள் என்பதை என்மனைவி வந்து சொன்ன செய்தி உறுதி செய்தது.
    வுனிதாவின் கணவரின் உறவுப் பெண்கள் வைத்த ஒப்பாரி அழுகைக்கிடையில் அவருக்கு மது-கஞ்சா அடிமை என்பதும் அவனுக்கு டி.பி இருந்ததும் வெளிப்பட்டதுடன் அவனுக்கு பேரு சொல்லா நோய் இருந்ததாகவும்  சந்தேகம் இருந்ததாக அண்டை வீட்டாரும் ஆறுதல் சொன்னார்கள்.
    ஊரும் , உறவும் உதிரியாய் சொன்ன தகவல்களில் உண்மையை உரித்தெடுப்பதற்காக தோழர்கள் உதவியுடன் அவனுக்கான மருத்துவ விபரங்களை சேகரித்தேன்.
    உண்மை என் முகத்தில் காரித்துப்பியது. நீண்டகால நோயாளியான தன் மகனை காப்பாற்றிட முடியாது எனத் தெரிந்தும் கள்ளியும் கற்றாளையும் போட்டு என் மகைனை புதைக்கக் கூடாது என (திருமணமாகாமல் இறந்தால்  சடங்கு ஏதுமின்றி கள்ளி கத்தாளை போட்டுத்தான் புதைப்பார்களாம் ) நோயை மறைத்து  அவசரமாய் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
        எனது அண்ணனும் மகளுக்கு 22 வயதாகி விட்டது எப்பத்தான் கல்யாணம் பன்றது  வர்ர மாப்பிள்ளைளை எல்லாம் நொட்டை சொல்லாதீங்க-டான்னு என்னையும் , தம்பியையும் அடக்கிவிட்டு  அவர்களின் அவசரத்திற்கு  இவரும் உதவி செய்தார்.
        மணப்பந்தலிலேயே பைக் வைக்கவில்லை என்றும் மகளுக்கான நகையில் 2 பவுன் நகை குறைந்ததற்கும் எனது அண்ணன் பட்ட அவமானம்  இதுவரை நாங்கள் சந்திக்காதது.
    மகளின் வாழ்க்கையாயிற்றே  என்று எங்கள் வீட்டு மனையிடத்தில் ஒரு பகுதியை விற்று சமீபத்தில்தான் பைக் வாங்கிக்கொடுத்த கடனையும் நகையையும் சமாளித்தோம்.
    அவமான  நெருப்புகளை அள்ளிக் கொட்டியபோதும் மகளின் வாழ்க்கை என வலி சகித்து புன்னகைத்தோம்.
    ஆனால் 7மாதம் முடியவில்லை அவளின் மண வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.
    என் மனைவி தொடர்ந்து வற்புறுத்தியும் எங்கள் மகளை நான் இப்போதுவரை நேரில் சந்திக்கவில்லை. அந்த தைரியம் எனக்கு வரவில்லை.
    வீடே துயர அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் எங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளோம்.
    இNது போல ஏராளமான துயரங்கள் நடந்துள்ளது. ஆனால் யாரும் திருந்தவில்லை. ஒரு பெண்ணெனில் அவளுக்கு வாழ்க்கையில் இறுதி இலக்கே திருமணம் தான் எனும் கருத்தை  சமூகம் பெற்றவர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
    எனவே தான் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து வைத்து தங்கள் கடமையை முடித்து விடவேண்டும்  என துடிக்கிறார்கள். அந்த அவசரம் அவர்களின் அறிவைத் தின்று விடுகிறது.
       திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது , ஆயிரங்காலத்துப் பயிர் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட திருமணம்  இன்று பகிரங்கமாய் கொள்ளையடிக்கும் திருட்டுத்தனத்தை அங்கீகரிக்கும் அனுமதிச் சீட்டாய் மாறிவிட்டது.
    நமது முன்னோர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் சில நடைமுறைகளை சம்பிரதாயமாய் சடங்காய் உருவாக்கியிருந்தனர்.
    திருவிழாக்களில், விசேச வீடுகளில் ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண் பிடித்துவிட்டால் , அந்த பெண் குறித்து விசாரித்து , அந்த ஊருக்கு அருகிலுள்ள தங்கள் உறவுகள் நண்பர்கள்மூலம்  விசாரித்து,  பெண்ணுக்கு திருமணம்  செய்யும்  முடிவில் இருக்கிறார்களா? என அறிந்து கொண்டு பிறகு மாப்பிள்ளையின் நெருங்கிய  உறவினர்கள் நேரில் சென்று கலந்து பேசி பிறகு முறைப்படி பெண்பார்க்கும் சம்பிரதாயம் அரங்கேறும்.
    பெண் வீட்டார்களும் தங்கள் பங்கிற்க்கு மாப்பிள்ளை  விபரங்களை விசாரிப்பார்கள். வீடுபார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, தேதி குறிப்பது எனும் தனிச்சம்பிரதாயங்களே.  மாப்பி;ள்ளை  அவரது பெற்றோர் குறித்து  விபரம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் தான். ஆனால் இந்த நிகழ்வுகள் குறித்த புரிதல்களற்று போனதால் இது விருந்து வைபவங்களாய் மாறிவிட்டது.
    மாப்பிள்ளையின் வீடு பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்களிடம்  மாப்பிள்ளை அவர்கள் பெற்றோர் குறித்து விசாரித்தால்  நல்ல கவனிப்பு, நல்ல விருந்து, வசதியான வீடு எனவே சிலாகிக்கிறார்கள்.
    இதனிடையே திருமண ஏற்பாடுகளும் இன்று தனியார்மயமாகிவிட்டது. கொடுக்கும் கமிசனுக்கு ஏற்ப மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பெருமைகள் போலியாக கட்டமைக்கப்படுகிறது. நுகர்வு தாக்கங்கள் நிறைந்து போட்டி உலகமாக மாறிப்போன நிலையில் பொருள் சேர்ப்பதிலேயே நேரம் கடந்து விடுவதால்  திருமண தகவல் மையங்கள் , கமிசன் தரகர்களையே  பிள்ளைகளை பெற்றவர்கள் சார்ந்து நிற்க்க துவங்கினார்கதள். இதற்கு பிறகு தான் ஏமாற்று திருமணங்கள் , போலி திருமணங்கள் , நோய் மறைத்து நடக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளது.; இதனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இது மாற வேண்டும்.

பெண்களும் தங்கள் புகுந்த வீட்டில் நடப்பதை மறைந்து விடுகிறார்கள். குhரணம் கடன்வாங்கி  கஷ்டப்பட்டு பெற்றோர் செய்து வைத்த திருமணம் மகள் நல்லமுறையில் வாழ்கிறாள் என சந்தோசப்படட்டும் அதை கெடுக்கக் கூடாது என நினைத்து மறைத்து விடுகிறார்கள்.
    அதன் விளைவாய் நிகழும் துயரங்களில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததும்  இது தொடரக்கூடாது.
    குடிப்பதையே அடிப்படை உரிமையாய் புரிந்து கொண்டுள்ளவர்க்ள அதிகரித்து போதைச் சமூகமாய் மாறிவரும் சூழலில் தனது பெண்ணை கொடுப்பது என முடிவெடுக்குமுன் தீர்க்கமாக விசாரியுங்கள்.
மருத்துவச் சான்றிதழ் திருமண உறுதிக்கு முன் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.
      இடைத்தரகர்கள் கட்டமைக்கும் பெருமை புதைகுழியில் சிக்காமல் நண்பர்கள் உறவுகள் மூலம் விசாரித்து உறுதி செய்திடல் வேண்டும்.
பெண்களும் சமூகமும் வரதட்சனை கேட்க்கும் மாப்பிள்ளையை போதை அடிமைகளை இழிவு செய்து புறக்கணிப்பதுடன் தங்களை வரதட்சணை மூலம் மதிப்பிள்ளா பண்டமாய் மாற்றுவோரை ஒதுக்கித் தள்ள  வேண்டும் .
     புகுந்த வீட்டில் உறவுகள் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம்  பெண்கள் பேசவேண்டும்.  தனக்கு எதிரான தவறான எதையும் பொருத்துக் கொள்ளும் பேதமை ஒழிய வேண்டும்.
    அப்போதுதான் தறுதலையை பெற்றிருந்தாலும் தாலியறுக்க பெண் தேடும் இரக்கமற்ற நாய்களை அழிக்க முடியும்.

Saturday, January 22, 2011

சேதுத் திட்டத்தை செயல்படுத்திட திரளுவோம்!


சேது சமுத்திரத்திட்டம் தமிழக அரசியல் கட்சிகளின் தீர்மானங்கள் அரசியல் தலைவர்களின் பேட்டி‍ பொதுக்கூட்ட பேச்சுக்கள் ஆகியற்றில் தவறாது இடம்பெற்ற திட்டமாகும். 1860‍ல் துவங்கி 2004 வரை ஆய்வு செய்வதை மட்டுமே செய்து பல கோடிகளை செலவு செய்து வந்தார்கள். 2004 பாராளுமன்ற தேர்தலில் இடது சாரிகள் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வந்ததும் சேதுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையும் ஆசையும் துளிர்விட்டது.
     அதேபோல் 2005 ஜூலை 2 மதுரையில் திட்டத்திற்கென 2470.40 கோடையை அறிவித்து துவக்க விழா நடைபெற்றது. திட்டப்பணிகள் துவங்கி 600 கோடிக்கு மேல் செலவான பிறகு சேது சமுத்திரத் திட்டமத்தினை 6 வது வழித்தடத்தில் நிறிவேற்றக்கூடாது. ஏனெனில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலம் உடைபடும் என தனது ஆட்சிக் காலத்தில் இந்த வழித்தடத்தை தேர்வு செய்த பி.ஜே.பியே பிரச்னையை கிளப்பி விட்டது. சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றம் போனார். நீதிமன்றம் மாற்றுவழி குறித்து மத்திய அரசு யோசித்தால் என்ன என்று யோசனை கூறியதும், திட்டம் பழையபடி துவங்கிய இடத்திற்கே வந்து கே.பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வுக்கென அமைக்கப்பட்டது.


ராமர் போட்ட பாலம்தான் என பி.ஜே.பி நாசா படத்தை ஆதாரமாகக் காட்டியது. நாசாவும் அதை நாங்கள் ராமர் பாலம் என்றெல்லாம் பெயரிடவில்லையே என மறுத்தது. ஆனால் பிஜே.பி ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதை விடுவதாய் இல்லை. ராமாயணத்தில் உள்ளபடி தனுஷ்கோடியிலிருந்து பாலம் போட்டார் என வாதிட்டு சேதுத்திட்டத்தை முடக்கி விட்டனர். வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரங்களை அடுக்கினாலும் இவர்கள் காதில் விழவில்லை.
                           வால்மீகியின் ராமாயண அடிப்படையில் மத்திய பிரதேசத்தில் உள்ள விந்திய மலைகளுக்கிடையே உள்ள நீர் சூழ்ந்த மலைதான் 'லங்கா' என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். வால்மீகியின்  ராமாயணக்கதையில் லங்காவுக்குஅருகே 'சுவேலா' என்ற சிறு குன்று இருந்ததாய் வர்ணித்துள்ளனர். அதனடிப்படையில் ஆய்வு செய்த அறிஞர்கள் அது மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூர் அருகில் உள்ளதென்றும் ஆராய்ந்து உறிதி செய்துள்ளார்கள். தற்போதுள்ள இலங்கை சிங்களம் என்றே அழைக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 200 கி.மீ வரையறைக்குள் நடந்த ராமாயணக்கதையை 1500 கி.மீ மைல்கள தூரம் கடந்து தமிழகத்தின் அருகே உள்ள இலங்கையோடு இணைத்த வேலையை கி.பி 1000 மாவது ஆண்டு காலத்தில் ராஜேந்திர சோழனின் இலங்கை மீதான போரை நியாயப்படுத்த  சோழர்களின் அரசைப் புலவர்களே செய்துள்ளார்கள் என வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்தாலும் சங்பரிவார் போன்ற அமைப்புகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சரி.. ராமர் பாலம் கட்டியதற்கு ஆதாரம் உண்டா என்று கேட்டாலும் அது ராமாயணத்தில்  உள்ளது என சப்பைக்கட்டு கட்டுகின்றனர். நீங்கள் சொல்லும் ராமாயணம் வரலாறல்ல! அது கற்பனையால் புனையப்பட்ட கதை‍..காப்பியம். அதை எப்படி ஏற்பது? 
உச்சநீதிமன்றத்தில்  மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் ராமபிரானால் கட்டப்பட்ட பாலத்தை விபீஷணன் வேண்டுகோளை ஏற்று ராமபிரானே இடித்து விட்டார். எனக்கூறி இருந்தது.இதைக் கண்டதும் பதறிப்போன சங்பரிவார், 'மத்திய அரசு இப்படிஒ செய்திருக்கக் கூடாது..'என்றதுடன் ராமாயணம் கற்பனைக் கதை என்றதும் எங்கள் நம்பிக்கையைக் கேலி செய்கிறார்கள் என்ற சங்பரிவார் அமைப்புகள், கம்பர் தனது ராமாயனத்தை மெருகூட்டுவதாக கற்பனை கலந்து எழுதினார். அதன் ஒரு பகுதிதான் பாலத்தை உடைத்துவிட்டார் என்பதும் ஆனால் அது உண்மையில்லை என்கிறார்கள். அனைத்து அறிவியல் வரலாற்று விளக்கங்களையும் இந்து மக்களின் நம்பிக்கை எனச் சொல்லியே முறியடிக்க முயல்கிறார்கள்.

         சிலரது தனிப்பட்ட நம்பிக்கை தேசத்தின் நம்பிக்கையாகாது. எனவே சிலரது நம்பிக்கையைக் காரணம் காட்டி நாட்டிற்கே பயன் தரும் திட்டங்களை  தடுக்கக்கூடாது. நம்பிக்கை என்பது ஒவ்வொரு பகுதிக்கும் ஒன்று இருக்கிறது. ஒருவரே பல நம்பிக்கைகளை வைத்திருப்பார்கள். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. சங்பரிவார் அமைப்புகளின் நம்பிக்கைகள் ஒவ்வொரு சமயத்திலும் வெவ்வேறாக இருக்கிறது.  ராமேஸ்வரம் பகுதியிலேயே நாமர் பாலம் கட்டியதாக இரண்டு இடங்களைக் காட்டுகிறார்கள். ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து என்றும் இன்னொன்று திருப்புல்லாணியிலிருந்தும் அமைத்தார் என்கிறார்கள் திருப்புல்லாணி திருத்தல புராணத்தில் தனது மனைவியை மீட்க வானரப் படையினருடன் திருப்புல்லாணி வந்த ராமன் கடலில் பாதை அமைக்க தடையாக அலைகள் அதிகமாக இருந்ததால் கடல் அலைகளின் வேகம் குறியும் வரை ஓய்வெடுக்கிறான். ( திருப்புல்லாணி திருத்தலத்தில் மட்டுமே சயனித்திருக்கும் கோலத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது)அலையின் வேகம் குறையாத கோபத்தில் அலைகளை நோக்கி அம்பை எய்திட முயல்கிறான். உடனே பதறி ஓடிவந்த சமுத்திர ராஜன், 'எனக்கிட்ட க்டமையை நான் செய்கிறேன்..என் மீது கோபம் ஏன்?' என சாந்தப்படுத்தி 'கடலில் பாலம் அமைக்க இயலாது' என உபாயமும் சொல்கிறான். உனது படைவீரர்களில் மகாவிஸ்வ கர்மாவின் மகன் நளன் இருக்கிறான். அவன் தண்ணீரில் எதைப்போட்டாலும் அது மிதக்கும் எனவே அவனை வைத்துத்தான் பாதை அமைக்க முடியும் என்கிறான். ராமனும் அதை ஏற்ரு புல்லால் பாதை அமைத்ததாகவும் அதனால் திரு+புல்+அணை =திருப்புல்லணை யானது என்கிறார்கள்.
   இதைப்போல கண்டேன் தேவியை என்ற இடம் கண்ட தேவி என்றும் ஜடாயுவின் இறகு சிதறிய இடம் இறவுச்சேரியானதுமாய் தென்னகம் எங்கும் புனைவுகளுக்கேற்ப ஊர்ப்பெயர்களும் ஏராளமாய் உள்ளது. எனவே இதையெல்லாம் வைத்து 'கண்டதேவி' தேவக் கோட்டை பகுதிதான் ஆரண்யக் காண்டப் பகுதி என சொல்ல முடியுமா? நம்பிக்கை என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு எந்த முடிவுக்கும் வர முடியாது. ராமர் எனும் தங்கள் கடவுள் கட்டிய பாலம் குறித்த தங்கள் நம்பிக்கையையே விட்டுத் தர முடியாத சங்பரிவார் போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எப்படி இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவர்களின்  நம்பிக்கைக்குரிய ஆலயங்களை மசூதியை மாதா சிலைகளை உடைக்க முடிகிறது. பிறர் நம்பிக்கையை மதிக்காத இவர்களின் நம்பிக்கையை மட்டும் நாடு மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது. சிலரின் நம்பிக்கையைவிட நாட்டின் வளர்ச்சியும் பாதுகாப்பும் முக்கியமானது.
              பாக் ஜலசந்திக்கும் மன்னார் வளைகுடாவிற்கும் இடையில் தொடர்ச்சியாக உள்ள ஆதம்ஸ் பாலம் என்ற மணல் மேடுகளின் குறுக்கே 89 கி.மீ தூரத்திற்கு 82.5 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவு தூர்வாரி 300 மீட்டர் அளவுக்கு  ஆழப்படுத்தி கப்பல் செல்ல இருவழிப்பாதை அமைப்பதே சேது வமுத்திர திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் இந்து மகா சமுத்திரமும் வங்காள விரிகுடாவும் இணைந்து இலங்கையைச் சுற்றி அலையாமல் நமது நாட்டு கடல் வழிப்போக்குவரத்தை உள்நாட்டு கடல் எல்லைக்குள்ளே செயல்படுத்திட முடியும். இதன்மூலம் பயண நேரம் குறையும். எரிபொருள் மிச்சமாகும். (ஆண்டுக்கு 130 கோடி) அன்னியச் செலவாணி கையிருப்பு வளரும். இருக்கும் துறைமுகங்கள் மேம்படும்..புதிய துணைத் துறைமுகங்கள் உருவாகும். இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். தென் மாவட்டங்களின் முகத் தோற்ற‌ம் மாறும்.  இன்றில்லாவிட்டாலும் நாளை சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய புதிய துறைமுகங்கள் ராமேஸ்வரத்தை சுற்றிலும் உருவாகும். அப்படி நடக்கும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தொழில் வளம் பெருகும் சூழல் உருவாகும். இன்று பிழைப்புத் தேடி நாடுவிட்டு நாடு ஓடும் இளைஞர்களுக்கு சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகள் கிட்டும்.
         இதையெல்லாம்விட நமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்தத் திட்டம் பயந்தரும். இப்படிப்பட்ட 150 ஆண்டு கால கனவைத்தான் சங்பரிவார் போன்ற அமைப்புகள் சிதைத்து விட்டனர். சேது சமுத்திரத்திட்டம் அமுலானதும் எங்களால்தான் வந்தது என மார்தட்டியவர்கள் எல்லாம் வாயடைத்துப்போனார்கள்.
 


    

தமிழ்ப் புத்தாண்டு பொழிவு பெற...

தமிழ் புத்தாண்டு என்பது இனி தை முதல் நாளிலிருந்து துவங்கும் என தமிழக அரசின் அறிவிப்புப்படி தமிழ் புத்தாண்டு துவங்கி தன் பயணத்தை துவங்கி விட்டது. இந்த அரசு அறிவிப்பை சிலர் எதிர்த்தாலும் நீண்ட காலமாக தை மாதமே தமிழ் ஆண்டின் துவக்கமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த தமிழார்வ அமைப்புகள் தமிழ் அறிஞர்கள் இதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள். இதனால் கடந்த காலத்திலிருந்து தொடர்ந்து வந்த சில கால முறை பழக்கங்கள் சிறிது தடுமாறினாலும் சரிசெய்யப்பட்டு புதிய காலமுறை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு சரி செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த அறிவிப்பும் தை முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டு துவக்கிவிட்டது என்பதும் தமிழக மக்கள் மத்தியில் எந்த அளவு கொண்டு செல்லப்பட்டது என்பது விவாதத்துக்குறியதாகும்.

                  புத்தாண்டு என்றாலே படித்த நகரத்தில் உள்ள மக்களுக்கு ஜனவரி முதல் தேதிதான் என்றாகிவிட்டது. எனவேதான் ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலேயே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி விடுகிறார்கள். 'வே இஸ் த பார்ட்டி..' எனத் தேடி ஏதாவது ஒரு பார்ட்டியில் கலந்து கொள்கிறார்கள். தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் அச்சு ஊடகங்களில் சிறப்பு வெளியீடுகள் வாழ்த்து அட்டை எஸ்.எம்.எஸ் பரிமாற்றங்கள் டிசம்பர் இறுதி நாளில் நள்ளிரவு 12 மணிக்கு காதுகளை செவிடாக்கும் வெடியோசைகளோடு 'ஹேப்பி நியூ இயர்' எனும் உற்சாக கதறல்கள் என ஆங்கிலப் புத்தாண்டு ஆடம்பரமாக வரவேற்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் தமிழ்ப் புத்தாண்டு? நமது மாநிலத்தில் தமிழுக்கு தரப்படும் மரியாதையைப் போலவே நீண்ட காலமாகவே சித்திரை வருடப்பிறப்பும் எந்த முக்கியத்துவம் இன்றியே வந்து போனது.

                        அனாதையாய் வந்து செல்லும்   தமிழ்ப்புத்தாண்டிற்கு கிராமத்து மக்கள்தான் ஆறுதல் தந்தார்கள். தங்களது காரியங்களை தமிழ்தேதி குறித்தே திட்டமிட்டார்கள். சித்திரை முதல் தேதி வீடுகளை சுத்தம் செய்து கோலம் இட்டு பலகாரங்கள் செய்து உற்சாகமாய் தமிழ்ப் புத்தாண்டை வரவேற்று வழியனுப்புவார்கள். பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என சித்திரை மகள் மகிழ்ச்சியில் திணறும் அளவு கொண்டாடி மகிழ்வது கிராமத்து மக்கள்தான். அந்த மக்களுக்கு தை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்கிற தகவல் இன்னும் சென்றடையவில்லை.

                                      அப்படியே ஊடகத்தொடர்புள்ள கிராமங்களுக்குத் தெரிந்தாலும் உழவர் திருநாள் உற்சாகத்தில் கதாநாயகனுடன் வரும் காமெடி நடிகனாக தமிழ்ப்புத்தாண்டு வந்து செல்வது வேதனையான உண்மை. தமிழ்ப்புத்தாண்டின் துவக்கத்தை மாதம் மாற்றி அறிவித்தவர்கள்கூட வாழ்த்து அறிக்கையோடு முடித்துக் கொள்கிறார்கள்.

                             தைமாதம் தமிழ்ப்புத்தாண்டு துவங்குகிறது என்கிற செய்தியை தமிழ் மக்கள் அனைவருக்கும் கொன்டுசேர்க்கும் கடமையினை நிறைவேற்றாததால் கணிசனமான மக்களுக்கு இந்த மாற்றம் தெரிவதே இல்லை. இதனால் இந்தப் புதிய புத்தாண்டு தனது பயணத்தை அரசு முறை‌ பயணம் போல ரகசியமாக துவங்கி முடிந்தது.

                               தமிழ்ப்புத்தாண்டை வசந்தகால குதூகலத்துடன் துவங்கிட வேண்டும் என தமிழறிஞர்கள் முடிவு செய்தது சரியானதுதான் என ஏற்கப்பட்டுவிட்ட நிலையில் அதை சிறப்பாக துவங்கிடவும் வழியினை கண்டுபிடித்திட வேண்டும். காலம்காலமாய் கிராம விவசாய மக்களில் விழாவாக நிலைபெற்றுவிட்ட உழவர் திருநாள் அன்று புத்தாண்டும் துவங்குவதால் உழவர் திருநாளே முன்னிற்கிறது. தமிழ்ப் புத்தாண்டுக்கு தனிச்சிறப்பின்றி போய்விடுகிறது. எனவே தமிழ்ப்புத்தாண்டை தனித்தன்மையுடன் தமிழர்கள் கொண்டாடிட வழி காண வேண்டும்.

                                 புத்தாண்டு துவங்கி முடிந்த பிறகு அடுத்த புத்தாண்டையாவது வாண வேடிக்கைகளோடு கொண்டாடுங்கள் என அறிவிப்பு செய்வதால் எந்த மாற்றமும் வந்து விடாது. தமிழ்ப் புத்தாண்டினை வரவேற்கும் தினம் ஒன்றினை  அறிவிக்கலாமா? என சிந்திக்க வேண்டும். உழவர் திருநாள் என்பது போகிப்பண்டிகை.. பொங்கல்.. மாட்டுப்பொங்கல்.. காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் முதல்நாள் கொண்டாடப்பட்டும் போகி என்பது பழையன கழிதல் என்கிற அர்த்த செறிவை கொண்டுள்ளது. இந்த நாளில் தமிழ்ப்புத்தாண்டை வரவேற்கும் நாளாக அறிவித்து அரசும் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் பிர‌திநிதிகள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் விழாவாக கொண்டாடி துவக்கி வைக்கலாம். அது மக்களிடம் ஒரு விழா தன்மை உணர்வை உருவாக்கும்.

                                   பழைய ஆண்டின் கடைசி நாளை வழியனுப்புவதும் புதிய ஆண்டை வரவேற்கவுமான நாளாக இந்த போகி நாள் பொறுத்தமாக இருக்கும் என்பது இந்த கிராமத்தானின் ஆலோசனை! இல்லையெனில் அரசு தமிழறிஞர்களுடன் ஆலோசித்து ஒரு மாற்று வழி காணலாம். இவை இல்லையெனில் அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் உணரப்படாமலேயே தமிழர்களின் நீதி நிர்வாகத்தில் தமிழ் என்கிற கனவு போலவே இந்த தேதி மாற்றமும் ஆகி விடக்கூடும்! ஆள்வோரும் அறிஞர்களும் கவனத்தில் கொள்வார்களா?