Tuesday, February 1, 2011

என்னை தெரிந்தது

பிறை கூட
பௌர்ணமியாய்  தெரிந்தது
என் விழி  சிறைக்குள்
வந்தாள் அவள்

என் வீட்டு  கண்ணாடி
முதல் முறையாய்
மனம் கவரும் அழகு  நீ
என்பதாய் தெரிந்தது

எங்கள் சந்திப்பினை
தரிசித்த கருவை காடெல்லாம்
நந்தவன  பூச்செடியாய்
நிறம் மாறி  தெரிந்தது

வடுக்களை  சுமந்து  நின்ற
கருக்கொள்ளா  வயலில்  கூட
வானவில் தெரிந்தது

மதிய வெயில்  வேர்கள்
என்மீது மட்டும் மழையாய்
இறங்குவதாய்  தெரிந்தது

சாலை இட  வைத்திருந்த
சரளையில்  நடந்த  போதும்
மலர் பாதை  போல்
மிருதுவாய்  தெரிந்தது

அடையாளம்  தெரியாத
அந்நிய முகங்கள்  எல்லாம்
உறவுகளாய்  தெரிந்தன

அடுக்குமோ  நமக்கிதென்ற
அன்னையின்  கடும்  வார்த்தை
தாலாட்டாய்  தெரிந்தது

அன்றாடம்  நாங்கள்  பார்த்ததை
அவள் தந்தை  பார்த்த பிறகுதான்
மனு செய்த  சதி  தெரிந்தது
எனக்கே  தெரிந்தது  நான் யாரென

                   












நான் யார் உனக்கு

மரபணு  தொடர்பற்ற  
நமக்கு  நடுவே  
உறவு  துளிர்  விட்டது  

 கீதை  வழி நின்று  
பலன்  எதிர்பாராதுன்  
குடும்பம்  சுற்றி  வந்தேன் 

 உறவுமுன்  பெருமை  காட்ட  
கையாளிட்ட  வேலையை 
வாயால்  செய்து  வந்தேன் 
கெட்டிக்காரன்  என்றாய்  

கொழுப்பை  குறைக்க  நீ 
ஊரை  சுற்றி  வந்த   போது
உடன் நடந்து களைத்தேன்
பாசக்காரன்  என்றாய் 


இரவு  பகலின்றி  
பனிமலை  வெயிலில்  
வாசலில்  தங்கி 
வீட்டையே  காத்தேன் 
விசுவாசி  என்றாய்  


கண்ணயர்ந்த  வேளையில்
கன்னமிட  வந்தவரை 
சத்தமிட்டு  கதறி 
இரத்தம்  தந்து  தடுத்தேன் 
நன்றி  எனில்  நான் என்றாய் 


ரணம் தந்த  விசனத்தில் 
துடித்துப்போன  எனக்கு 
காயம் உலர்த்தாமல் 
கழற்றிவிட  துணிந்தாய்


எதையும்  தாங்கிட  
மனிதனா.....?  நான் 
பாய்ந்தேன்  உன்  மீதே 
இப்போது  என்னை 
வெறி நாய்  என்கிறாய்  ..




 




அளவீட்டுப் பிழை

கன்னி  களிப்பெனும்  பெயரில் 
என்னை  கழிப்பதற்கு 
உன்னை  முன் காட்டி
ஆயுள்  ஒப்பந்தத்துடன்  
அனுப்பி  வைத்தார்கள் 

அறிமுக நொடிகளில் 
நிறமும்  உருவமும் 
தரமறியும்  தருனமாய் இல்லை 
உடன்  இருந்த  நாளில் 
முரண்  மனிதன்  நீ  என 
புரிதல்  உருவானது  

மனம் புரின்தொன்றாவது 
மனம்  புரிதல்  என்பது 
மனதில் மனம் வைக்காமல் 
தினவெடுக்கும்  உன்  வயதுக்கு 
தீனியாய்  பார்க்கிறாய் 


உறவு  நெறியுனராமல்
உடல்களின்  உராய்வையே 
பேராய்வு செய்து 
பீதி  கொள்கிறாய் 


ஆண்  அடையாளம்முள்ள
யாரோடு  பேசினாலும்  
அகல  கண் விரித்து 
அதிர்வடைகிறாய்  


கைகோர்த்து  தோள்  உரசி 
கடை  வீதி நடந்ததும்  
பேருந்தில்  இடம்   பிடித்து 
அருகமர்ந்து கொண்டதும் 

காய்  கறி  வாங்க  வந்து 
பை  சுமந்து  வந்ததும் 
கழிவறை  கதவு வரை 
உடன் வந்து  போவதும்  

அன்பின்  அறுவடைக்கென 
அகம்  சிலிர்த்தேன்  - நீ  என் 
அவயங்களை  அடை காக்க 
அகழியாய் இருந்திருக்கிறாய்  

தடையும்   கண்காணிப்பும்  
சுயத்தை  தூண்டிவிடும்  
விட்டுவிடு   கணவனே  


அநாகரீக  உன்  அளவீடுகள்  
அண்டை  வீட்டானை  
அழகனாக்கிட  போகிறது