Thursday, January 20, 2011

சாதனையாய் ஒரு சதி...

சுதந்திரப் பெருவெளிச்சம்
திரும்பவே இல்லை
எங்கள் திசைப்பக்கம்

வறுமை இருளுக்குள்
வாழ்க்கையை கண்டறிய
பார்வை தருவதாய்
பலர் வந்து பறையடித்தார்கள்.




ஒளி தருவார் என்று
வலிபொறுத்தோம்
வயதாகிப்போனது
காலத்திற்கும்
எங்களுக்கும்.

மனுக்களைச் சுமந்து கொண்டு
உதவி கேட்டுப் போனவர்களை
உடல்கிழித்து புதைத்தனர்
கழிவுக்கூடையில்

ஆற்றாமை அலறல்களின்
அதிர்வுகளால்
ஆண்டுகள் அறுபதை
தீண்டிடும் தருணம்
ஆள்வோர் அனுப்பி
ஆய்வு செய்தார்கள்

உடைந்த மண்சுவரும்
ஓலைக்குடிசையும்
ஒட்டிய வயிறுமாய்
உழல்வதை உறுதிசெய்து
ஏதுமற்ற தகுதி எமக்கு
ஏராளம் உள்ளதென்றார்

தேசத்தின் பலகோடுகளில்
வறுமை கோட்டிற்கு
கீழ்புறம் உள்ளதால்
எதிர்வரும் காலம்
எங்களுக்கே என்றனர்

காத்திருப்பில் கதவுக்கும்
கால்வலித்தது
உழைத்துப் பிழைக்க
அழைத்து உதவிட
அரசரவம் ஏதுமில்லை.

கலர் டிவி கேஸ் அடுப்பு
கான்கிரீட் வீடென
கேளாமல் வந்தடைந்தது
பெரும்பாடாய் போனது
பயன்படுத்தி பராமரிக்க‌

அரசு தூதர்கள் ஒருநாள்
அவசரமாய் வந்து
அளவீடு செய்து
வறுமைக்கோடு தாண்டி
வளமை பெற்றதாய்
வகைப்படுத்தினார்கள்

வேலைக்கும் கூலிக்கும்
வேள்வி நடக்கையில்
எப்படி நடந்தது இந்த அதிசயம்?

வறுமை பெருங்கோட்டை
வகைமாற்றம் செய்யாமல்
எலிகளை எருதாய்க் காட்டும்
மதிநுட்ப சதி
சத்தமே இல்லாமல்
அரங்கேறுகிறது.

அள்ளித்தந்த
இலவசங்களையே
அளவீடாய்க் கொண்டு!







No comments:

Post a Comment