Sunday, February 4, 2024

தரிசனம் (சிறுகதை)

 தரிசனம்.    (சிறுகதை,)


பெருவாக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரே அந்த வீடு இருந்தது  மண் சுவர் வைத்த ஓட்டு வீடாக இருந்தாலும் திண்ணை வைத்து கட்டப்பட்டிருந்த அந்த வீடு அழகாகவே இருந்தது வாசலில் இருந்த வேப்பமரம்   வாசலில் பந்தல் போடப்பட்டது போல எப்போதும் நிழலாகவே வைத்திருந்தது அந்த பிற்பகல் நேரத்தில் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினார் கண்ணப்பன் வேப்பமரத்து நிழலில் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்தபடி "ஆத்தா அலமேலு" என்று வீட்டிற்கு உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் மாலை நேர வெயில் ஆனாலும் சட்டையை ஊடுருவி உடலை எரிச்சல் அடைய வைத்த நிலையில் வேப்ப மரக் காற்றும் நிழலும் இதமாக இருந்தது கண்ணப்பனின் குரலை  கேட்டு வெளியே வந்த அலமேலு முகம் நிறைந்த மகிழ்வோடு "வாங்கண்ணே நல்ல நேரத்தில தான் வந்து இருக்கீங்க ஏட்டி... தமிழு... யார் வந்திருக்கான்னு பாரு அந்த பத்திரிகையை எடுத்துட்டு வா" என்றபடி முந்தானையால் கைகளை துடைத்த படி அவர் எதிரேவந்து அமர்ந்தாள் "பத்திரிக்கை எல்லாம் வந்திருச்சா நல்லது" ... என்று கண்ணப்பன் சொல்லிக் கொண்டிருந்த போது"வாங்க மாமா அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா" என்று விசாரித்தபடி பத்திரிகையை நீட்டினாள் "எல்லாரும் நல்லா இருக்காங்க டா" என்றபடி சிரித்துக் கொண்டே  பத்திரிக்கையை வாங்கி படித்தார் படித்து முடித்ததும் அலமேலுவை பார்த்து "ஏத்தா ராத்திரி சடங்கு காலையில கல்யாணம்னு சொன்னே.. இப்ப பத்திரிகையில் கல்யாணம்னு மட்டும் தான் போட்டு இருக்கே ஏன்பா சடங்கு வைக்கலையா" என்றதும் அலமேலு கண்கள் கலங்குவதை பார்த்து பதறிய கண்ணப்பன்" ஆத்தா ஆத்தா சங்கடம் ஏதும் இல்லைன்னா சொல்லு இல்லன்னா விடு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று ஆறுதலாகச் சொன்னார் "இதுல சங்கடப்பட என்னென்னே இருக்கு நான் ஒத்த தானே எங்க அம்மா சொன்ன மாதிரி நான் பொறக்கும் போதே அவ வயித்தையும் சுத்தமாக கழுவிட்டு தானே பொறந்தேன்.. ஒத்த கம்ப வச்சு பந்த போட முடியுமா விடுங்க.. சடங்கு வைக்க வாய்ப்பில்லே சீக்கா சடங்கா சுத்தி சடங்க கழிச்சு கல்யாணத்தை முடிச்சிருவோம்"என்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள் "விடுத்தா.. இப்போ என்ன பத்திரிகையில போட்டாத்தானா" என்ற கண்ணப்பன் தமிழ்செல்வியை பார்த்து "என்னடா நம்ம சீக்கா சடங்க   சடங்கா மாத்திடுவோமா" என்று சிரித்தார் தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்  அலமேலு நினைவு வந்தவளாக "தமிழ்.. மாமாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு வா" என்றாள் கண்ணப்பனும் "வேணா.. தாயி நான் இப்பதான் சாப்பிட்டேன்" என்று மறுத்தார் "பரவாயில்லைன்னே கொஞ்சமா சாப்பிடுங்க "என்று சொல்லிக் கொண்டிருந்த போது தமிழ்ச்செல்வி  சாப்பாட்டோடு வந்தால் கையை கழுவி சாப்பிட தட்டை தொட்டவர் "சிக்கனா.. என இழுத்தார் "ஆமாண்ணே பத்திரிக்கை அடிச்சு வந்துருச்சுன்னு சொன்னதும் மாப்பிள்ளையோட அம்மாவும் அக்காவும் பத்திரிக்கையை பார்க்கணும்னு வந்தாங்க அவங்களுக்காக சமைச்சதுண்ணே" என்று சிரித்தாள் "ஓ சம்பந்தி விருந்தா" என சப்தமாக சிரித்தபடி சாப்பிட்ட ஆரம்பித்தார் கண்ணப்பன்


 

அலமேலுவுக்கும் கண்ணப்பனுக்கும் உறவோ சொந்தமோ.. இல்ல

கண்ணப்பன் தனது சைக்கிளில் குறுக்காக கம்புகளை வைத்து கட்டி காலி எண்ணெய் டின்களை கேரியரில் அடுக்கி அதில் பன்னு. ரஸ்க்ரொட்டி என குழந்தைகளுக்கான தின்பண்டங்களை டின்களில் நிரப்பி தேவகோட்டையில் இருந்து ஓரியூர் வரை சைக்கிளிலேயே கொண்டு வந்து டீக்கடைகளுக்கு கொடுத்து விட்டு மறுநாள் வந்து முதல் நாள் பணத்தை பெற்றுக் கொள்வதோடு அந்த நாளுக்கான சரக்கை போட்டுவிட்டு போவது அவரது வழக்கம் தேவகோட்டையிலிருந்து ஒரியூருக்கு அதிகமான பேருந்து வசதி இல்லாததால் கிராமங்களுக்கு முதலில் தேவகோட்டையிலிருந்து வரும் நபராக கண்ணப்பனே இருப்பார் எனவே அவர் தினசரி பத்திரிகைகளையும் வாங்கி வந்து டீக்கடைகளுக்கு கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்வார் சில கடைகளில் விற்றுத்தீர்ந்து போன பொருட்களைக் கூட சொல்லிவிட்டால் வாங்கி வந்து தருவது அவரது வழக்கம் எனவே தினசரி இவர் தேவகோட்டையில் இருந்து ஓரியூர் வந்து செல்வது அவரது அன்றாட பணியாக இருந்தது அப்படி ஒரு நாள் தேவகோட்டையில் இருந்து டீக்கடைகளுக்கு சரக்குகளை கொடுத்து கொண்டே வந்தவர் மங்கலகுடி தாண்டியதும் பெருவார்கோட்டை பாலத்தின் அருகே வந்தபோது உடம்பு வியர்த்தது தலை சுற்றத் துவங்கியது தன்னை அறியாமல் வண்டியோடு கீழே விழுந்தார் சாலையின் ஓரத்தில் இருந்த புங்கை மரத்து நிழலில் தன் நிலை மறந்து விழுந்து கிடந்தார் அந்தச் சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாத சூழ்நிலையில் வந்து போகும் சிலரும் ஏதோ போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்து அவரைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர் அப்போதுதான் அதிகாலையில் சென்று விட்டு தனது மகன் முருகனோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவள் கண்ணப்பன் விழுந்து கிடந்ததை பார்த்ததும் பதவி போய் இது அந்த ரஸ்க் ரோட்டி அண்ணன் இல்ல.. என்றபடி பதறி அவரை போய் அசைத்தாள் "அண்ணே.. அண்ணே எந்திரிங்க அண்ணே.. என்ன  பண்ணுது அண்ணே.. அண்ணே".. என்று பதட்டத்தோடு அவரை அசைத்துப் பார்த்தாள் ஆனால் அவர் எதையும் உணர்ந்தவராக இல்லாமல் ஏதோ சொல்ல வந்தவர் நாக்கு உளற அப்படியே கிடந்தார் அலமேலுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இவர் அன்றாடம் இந்த சாலையிலே பார்த்தவர் என்பதால் அவரை அப்படியே விட்டு விட்டு போகவும் மனதில்லை என்ன செய்வது என யோசித்தபடி சுற்றும்முற்றும் பார்த்தாள் அப்போது அரசத்தூர் கருப்பையா மாட்டு வண்டியில் வர அவரிடம் விவரத்தை சொல்லி அவரோடு சேர்ந்து அவரை மாட்டுவண்டியில் அழைத்து வந்து மங்களக் குடியிலிருந்த ஒரு சித்த மருத்துவரிடம் காண்பிக்க அவர் "உடனடியாக தேவகோட்டை கொண்டு செல்லுங்கள்" என்று பதட்டத்தை தெளித்ததால் என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் நின்றநிலையில் கருப்பையா "அம்மா யோசிக்காத இப்ப சரவணா பஸ் வரும் நான் ஏத்தி விடுறேன் நீ கொண்டு போய் ஆஸ்பத்திரில சேரு இவர் தேவகோட்டை காரர் தானே அவங்க சொந்தக்காரர்களுக்கு சொல்லிவிடு  எனக்கு வேலை இருக்குதாத்தா ..இல்லைன்னா நானும் வருவேன்"என்று சரவண பஸ்ஸில் ஏற்றி தேவகோட்டை அனுப்பினார் தேவகோட்டையில் பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கிற மீனாட்சி மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை துவங்கப்பட்டது உடனடியாக தரப்பட்ட சிகிச்சையால் கண்ணப்பன் நிதானமடைந்து தன்னுடைய வீட்டு முகவரியை சொல்ல  மருத்துவர் அந்த முகவரிக்கு தகவல் சொல்லி கண்ணப்பனின் மனைவி சகுந்தலா மற்றும் மகன் ரத்தினம் ஆகியோர் வந்து சேர்ந்தார்கள் மருத்துவரிடம் என்ன ஏது என்று விசாரித்து விட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்த அலமேலுவிடம் வந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டு அழுது நன்றி சொன்னாள் "எல்லாரும் மாதிரி.. நீங்களும் பார்த்துட்டு பேசாம போகாம உடனடியாக கொண்டு வந்து சேர்த்து என் புருஷனை காப்பாத்திருக்கீங்க இல்லைனா எங்க நிலைமையை நான் யோசித்துக் கூட பார்க்க முடியல ரொம்ப சந்தோசம்மா நாங்க எப்பவும் இந்த நன்றியை மறக்க மாட்டோம் "என்று அவள் கைகளை கண்களில் வைத்த படி அழுதால் அவள் தோளைப் பற்றிய அலமேலு "உசுரு எல்லாருக்கும் ஒன்னு தானே ரோட்ல கிடந்து ஒரு உசுரு துடிக்கும் போது எப்படி வேடிக்கை பார்த்துவிட்டு போக முடியும் மனுஷனுக்கு மனுஷ செய்கிற ஒத்தாசைதானே இது இதை போய் பெரிதாக பேசுறீங்க" என்று சகுந்தலாவை  அரவணைத்துக் கொண்டாள் அதற்குப் பிறகு இரண்டு குடும்பங்களும் உறவுகளை கொண்டாடின அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியதும் அவர் ஓய்வு எடுக்கும் இடமாக அலமேலுவின் வீட்டு திண்ணை மாறியது அன்று முதல் அந்த குடும்பம் உறவானது கண்ணப்பன் தொடர்ந்து வந்து சென்று அந்த உறவை பலப்படுத்திக் கொண்டு இருந்தார்  இப்போது அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்கிற உறவு வட்டத்தில் நிற்கிறார்கள் உறவை பேணுகிறார்கள் 



அந்த குட்டி யானை பெருவாக்கோட்டை  பஸ் ஸ்டாப் அருகே வந்து நின்றது முதலில் டிரைவர் சீட்டுக்கு அருகே இருந்து குதித்து இறங்கிய கண்ணப்பன் அலமேலுவின் வீட்டைப் பார்த்தார் கல்யாண வீடா அது மைக் செட் பாடவில்லை நாதஸ்வரம் கேட்கவில்லை பந்தலில் கூட்டத்தை காணோம் இருக்கும் ஒன்று இரண்டு பேரும் ஏதோ  குழப்பத்தில் இருப்பதாக பட்டது என்ன ஏது என்று புரியவில்லை சகுந்தலாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பந்தலுக்குள் வந்தார் கண்ணப்பன் அவர் கண்கள் அலமேலுவை தேடியது அங்கே இங்கே பார்த்துவிட்டு கூட்டம் கூடி இருந்த ஒரு இடத்தை கவனித்து அங்கே சென்றார் பெண்கள் கூடி இருந்த அந்த கூட்டத்திற்கு நடுவே அலமேலு அழுது அரற்றி கொண்டு இருந்தாள் அருகே மணப்பெண் அலங்காரத்தோடு அழுது அழுது கண்கள் வீங்க பறித்துப் போட்ட பரங்கிப் பூ மாதிரி வாடிப்போன முகத்தோடு தமிழ்செல்வியும் இருந்தாள் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை அலமேலு அழுவதை பார்த்ததும் ஏதோ மனது குமைந்தது தொண்டைக்குழி அடைத்து அழுகை வந்து முட்டியது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு "ஆத்தா அலமேலு" என்று குரல் கொடுத்தார்  கண்ணப்பனை பார்த்ததும் அடைத்து வைத்திருந்தகண்மாயின் கலுங்கை திறந்து விட்டதும் பெருங்கூச்சலோடு ஓடிவரும் தண்ணீரைப் போல "அண்ணே அண்ணே" என்று கதறியபடி கண்ணப்பனின் கால்களை வந்துவிழுந்து கட்டிக் கொண்டு கதறினாள் அலமேலு  தமிழ்ச்செல்வி மாமாவை ஒட்டி வந்து நின்று கொண்டாள் அவளை அரவணைத்துக் கொண்டு அழுது கொண்டு இருந்த அலமேலுவின் தலையை தடவியபடி "என்ன நடந்ததுத்தா என்னன்னு சொல்லு" என்று கேட்டார் அழுகையின் ஊடாக "நான் எண்ணத் தன்னே சொல்லுவேன் உங்க மருமக வாழ்க்கையை நானே அழிச்சுப்புட்டேண்ணே இனிமே என் புள்ள என்ன செய்யப் போறான்னு  தெரியவில்லை" என்று புலம்ப  முனையும்.. முடிவும் தெரியாத கண்ணப்பன் "ஆத்தா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன்" என்றார்  " ஊரே நல்ல பையன்னு சொன்னதுனால தான் அந்த வீணா போனவனை நான் மாப்பிள்ளையா கல்யாணம் பேசினேன் அவன் தான் எங்க தலையில கொல்லி வச்சிட்டு போயிட்டான்"என்றவள் சிறிது நேரம் இடைவெளி விட்டு "ஆக்சிடெண்ட்ல செத்துப்பொனானே  மகாலிங்கம் அவனோட பொண்டாட்டி வள்ளியோட இவனுக்கு தொடர்பு இருந்திருக்கு இவனுக்கு கல்யாணம் பேசினதகவல தெரிஞ்ச உடனே அவள் தொடர்ந்து அவனோட சண்டை போட்டு இருக்கா.. என்னை ஏமாத்த பாக்குறியா உன்னை கொன்னே போட்டுருவேன்னு மிரட்டி இருக்கா அந்த சண்டை நேத்து ராத்திரி பெருசாகி அவன் அடிச்சு புடிச்சு தள்ளுனதுல செவுத்துல மோதி வள்ளி இறந்துட்டாளாம் காலையில போலீஸ் வந்து அவனை அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்கண்ணே...  நாங்க யாருக்குமே எந்த பாவமும் செய்யலையே அப்புறம் ஏன் எங்க கிட்டயே எல்லா கஷ்டமும் வருது.. இனிமே நான் என்ன செய்வேன் மனவரைக்கு வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா அந்த பொண்ணு அடுத்து கரையேறாதுன்னு சொல்லுவாங்களே நான் என்ன செய்யப் போறேன்" என்று கதறி அழுதாள் கண்ணப்பனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை அழுகையில் கரைந்து நின்ற அலமேலுவையும்  தமிழையும் பார்த்துப் பார்த்து கூட்டமும் அழுதது  அவர்களிடமிருந்து விலகி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி இருந்த குட்டி யானை அருகே வந்தார் வண்டியை நிறுத்திவிட்டு போனவரை எதிர்பார்த்து காத்திருந்த சகுந்தலா இவர் வரும் நிலையை பார்த்து பதறி என்ன ஏது என்று விசாரித்தார் நடந்தது அனைத்தையும் சகுந்தலாவிடமும் இரத்தினத்திடமும் கூறினார் பிறகு மூன்று பேருமாக பந்தலுக்குள் வந்தார்கள் சகுந்தலாவை பார்த்ததும் அலமேலு கட்டிக்கொண்டு அழத் துவங்கினாள் அவளின் தோள்களை ஆதரவாக தடவி கொடுத்த சகுந்தலா "தைரியமா இருங்க நாங்கல்லாம் இருக்கோம்" என்று ஆறுதல்  சொன்னாள் கண்ணப்பன் அலமேலுவை பார்த்து "ஆத்தா அலமேலு இங்க பாரு அண்ணே ஒன்னு சொல்றேன் கேக்குறியா போன என் உயிரை புடிச்சு மீட்டு தந்த தாயி நீ  நீ என்னை எப்படி பார்க்கிறேன் என்று எனக்கு தெரியல ஆனா நான் உன்னைய என் கூட பொறந்த பொறப்பாபார்க்கிறேன்  அதனால நான் ஒன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் சொல்லவா " என்று நிறுத்தினார் அலமேலு "என்னண்ணே இப்படி சொல்றீங்க  உங்களை  அண்ணான்னுகூப்பிட துவங்கினதுலருந்து நீங்க என் கூட பிறந்திருக்க கூடாதான்னு எத்தனையோ முறை அந்த ஆண்டவன் கிட்ட கேட்டு இருக்கேன் என்னட்ப் போய் இப்படி சொல்றீங்களே" என்றாள் ஆற்றாமையோடு "சரி அப்படின்னா கேளு" என்றபடி தனது மகன்  ரத்தினத்தை நிறுத்தி "இது என் மகன்  உனக்கு தெரியும் தேவகோட்டையிலே சொந்தமா பேக்கரி வச்சு கொடுத்து இருக்கேன்அவனுக்கு தமிழ் செல்வியக் கட்டி எனக்கு மருமகளா அனுப்பு நான் மகளா பாத்துக்குறேன் அதுவும் நீயும் தமிழும் ஏத்துக்கிட்டாத்தான்" என்று பேச்சை நிறுத்திவிட்டு இரண்டு பேரையும் பார்த்தார்  அலமேலு முகத்தில் அத்தனை சந்தோஷம் அவள் சகுந்தலாவை கட்டிக் கொண்டாள்


நின்ற இடத்தில் இருந்து திருமண வேலைகளை மீண்டும் இயக்கத் துவங்கிய  அலமேலுவை தடுத்து நிறுத்தி "எக்கா நான் பலமுறை  கேட்டுருக்கேன் அப்போ எல்லாம் என்னைத் திட்டி இருக்க ..இப்போ பொண்ணையே கட்டிக் கொடுக்கிற நிலைமைக்கு வந்துட்டே.  இப்பவாவது கண்ணப்பண்ணே என்ன ஆளு கன்னு அதான்.. என்ன சாதின்னு நைசா விசாரிச்சுரு".. என்றாள் திருமண வேலைகளில் உதவி செய்து வரும் பக்கத்து வீட்டு ரேவதி அவள் அப்படி சொன்னதும் நின்று திரும்பி அவளை நேராக பார்த்து "ஏண்டி இவளே என் மகளை அலங்கரிச்சுக் கொண்டு வந்து சபையில் நிறுத்தி அலங்கோல படுத்தின மாதிரி விட்டுட்டு போனானே ஒருத்தன்  நிராதரவா நின்னமே உறவு- சொந்தமின்னு எத்தனை பேரு இதை பார்த்தாங்க  எல்லாரும் பரிதாபப்பட்டாங்களே தவிர யாராவது பரிகாரம் பண்ண நினைச்சாங்களா நாங்க எந்த ஆதரவும் இல்லாம யாருவிட்ட சாபமோ நம்ம வீட்ட புடிச்சு ஆட்டுதுன்னு தவிச்சு நின்ன போ அந்த சாபத்தை நீக்க வந்த சாமிடி  கண்ணப்பண்ணே அந்த சாமி கிட்ட போய் சாதியக் கேக்க சொல்றயா போடி வேலையத்தவளே" என்று வேகமாக வீட்டிற்குள் போனாள் 

 மணவீடு மீண்டும் மணக் கோலம்  பூண்டது மங்கள வாத்தியம் முழங்கத் துவங்கியது ஒலிபெருக்கி குரல் எழுப்பியது கூட்டம் மணப்பந்தலை நிரப்பியது..


_மங்கலக்குடி நா. கலையரசன்_

Saturday, February 3, 2024

கவிஞர் யுவாவின். "அவளுக்கெ(ன்)ன" கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்தவரும் சமூக நலத்துறையில் பணியாற்றி வருபவருமான கவிஞர் மோகனப்பிரியா அவர்கள் யுவா என்கிற பெயரில் எழுதிய "அவளுக்கெ(ன்)ன" என்கிற முதல் கவிதை தொகுதி இது அலுவலகப் பணி மற்றும் இந்த சமூகம் பெண்கள் மீது திணித்துள்ள குடும்ப வேலை கள் என இரண்டு பணிகளுக்கு ஊடாக கவிதைக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதற்கே கவிஞர் யுவா அவர்களை பாராட்ட வேண்டும்

 கவிதை எழுதுவதற்கு "காதல் மனசு" வேண்டும் என்பார்கள் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை. உறவுகளை. உயிர்களை நேசித்தால் போதும் கவிதை ஊற்றெடுத்து வரும்

 கவிஞர் யுவா விற்கு உறவுகளை' பெண்களை' நேசிக்கும் காதல் மனசு இருப்பது கவிதைகளில் தெரிகிறது 

இந்தியச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால் சகலத்தையும் அவர்களுக்கு உகந்ததாகவே வடிவமைத்துள்ளனர் அதில் குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அடக்கம் அதிலும் பெண்களை அவர்களின் தேவைக்கேற்றார் போல செதுக்கி நடமாட வைக்க முயற்சிக்கிறார்கள்

 இதை உடைத்து அவ்வப்போது பெண்களின் உணர்வுகளை- கனவுகளை- பாடுகளை- விடுதலையை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ் கவிதை பரப்பில் பாரதி துவங்கி பலர் முயன்று உள்ளனர்

 கவிஞர் பாரதி பாடியது போல 

"நிமிர்ந்த நன்னடை
 நேர்கொண்ட பார்வை 
புவியில்
 யாருக்கும் அஞ்சா
 ஞானச்  செருக்கோடு.".

பெண்கள் வாழ வேண்டும் என்கிற ஆழமான புரிதலுடன் ஆண்கள் பலரும் கவிதைகள் படைத்துள்ளது தமிழ் கவிதை பரப்பில் விரவிக்கிடக்கிறது  

"நாளும் கிழமையும்
 நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமை 
பெண்களுக்கு இல்லை "

என்கிற கந்தர்வன் கவிதையாகட்டும்

"சமையலறைக்கும் 
ஹாலுக்கும் ஓடிஓடி 
ரன்னெடுத்து 
ரணமாகி போகிறாள்
 அம்மா"...

 என்றும் பல கவிதைகள் வந்துள்ளது அதில் 

"என் அம்மா 
இதுவரை எத்தனை 
தோசைகளைசுட்டிருப்பாள்" 

என்கிற  கேள்வியையே கவலையோடு முன்வைத்த படைப்பாளிகளும். படைப்புகளும் வந்தாலும்

 ஒரு பெண்ணால் தன் கனவை- பாடுகளை -படைப்பாக்கும்போது இன்னும் காத்திரமானதாக நம் உணர்வுகளோடுஒட்டி நிற்பதை உணர முடியும் 

கவிஞர் யுவா வின் கவிதைகளில் அதை உணர முடிகிறது பிறப்பு முதல் இறப்பு வரை தனது சுயத்தை இழந்து வாழும் பெண்கள் குறித்து பேசிட வேண்டியது ஏராளம் உண்டு என்பதை உணர்த்துகிறது கவிதைகள் 

"அவளுக்கென்ன என்ற 
ஆயிரம் வார்த்தைகளில் அவளுக்கென ஒரு மனது இருப்பதை மறந்தே போகிறார்கள்"

 என கலிவிரக்கம் கொள்கிறது கவிதை 

"அடி வாங்குனது என்னவோ 
நான் தான் ஆனால் 
அழுவது 
அவளாகத்தான் இருக்கும்" 

என அம்மா குறித்தும் 

"தாய் தகப்பன் 
கிட்ட இருந்து 
அம்மாவை கூட்டிகிட்டு 
வரும்போது சிரிச்சவரு 
மக பிரிஞ்சு 
அடுத்த வீட்டுக்கு போகையில தேம்பித் தேம்பி அழுதவரு"..

 அப்பாவின் முரணான பாசம் குறித்த கவிதையாகட்டும்

"தாத்தா வளர்த்த 
தென்னையும் 
பாட்டி வீட்டுத் 
திண்ணையும் தான் 
எங்கள் ஆனந்தத்தின்
 அடித்தளம் "

என கடந்த காலத்தை அசைபோடுகிற கவிதையாகட்டும் திருமணம் ஆன பெண்கள் குறித்து எழுதுகிற போது 

"குடும்பம் தான்
 மாறுச்சுன்னா 
குலசாமியுமா"?

 என்கிற கவிதை போன்றவை ஒரு பெண் தனக்கான நிரந்தர அடையாளம் இன்றி குடும்பத்திற்கு_ ஊருக்கு- என பயந்து ஒடுங்கி வாழ்வதை நினைத்து ஆத்திரம் கொள்கிறது 

சிரிப்பதும் பேசுவதும் கூட தம் விருப்பமாக இல்லையே என்று விஷனப்படும் கவிதை -நினைத்த வாழ்க்கையை நடத்தி முடிக்க முடியாத வாழ்க்கை -என  கவிதைகள் பெண்களின் பாடுகளை பேசும் கவிதைகளாக இருக்கிறது

 கவிஞர் யுவா வின் இந்த கவிதைகள் பெண்ணிய கவிதைகள் வரிசையில் இடம்பெறும் என்பது திண்ணம்

 எழுதுங்கள்  யுவா இன்னும் அழுத்தமாக - காத்திரமாக இந்த சமூகம்செம்மையடைய நிறைய எழுதுங்கள்

 இந்த மாவட்டத்தில் பெண் படைப்பாளியாக மிளிர தடையாக எது வந்தாலும் எதிர்கொண்டு எழுதுங்கள் 

தமிழக பெண்ணிய எழுத்தாளர்கள் வரிசையில் நீங்களும் தடம் பதிக்க வாழ்த்துக்கள் 

அன்புடன்
மங்களக்குடி நா. கலையரசன் மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
 ராமநாதபுரம்


Monday, January 22, 2024

கவிதை (அடையாளம்)

அடையாளம்
_____________________


குடும்பங்கள் ஒவ்வொன்னுக்கும் குல சாமிகள் இருக்கு 
தெருவுக்கு ஒரு அம்மன் கோயில் கட்டாயமா இருக்கு

 ஊருக்குள்ள அய்யனாரும் மகாலிங்க சாமிகளும் இருக்கு ஊரைச்சுத்தி-
காளியம்மன் . காத்தாயி . 
நொண்டி கருப்பு .ராக்கச்சி. முனியாண்டி. மதுரை வீரன். வழிவிட்டான் சாமிகளும்  
பாதுகாப்பா இருக்கு

 தூரம் தொலைவு போய் கும்பிட பழனி மலை இருக்கு 

இப்படி சொந்த சாமி
 வகை வகையா
 நூறு சாமி இருக்க 
ஓஞ்சாமி  ராமனை ஏன்
 எங்க மேல திணிக்கே..

எல்லாரும் சேர்ந்து வணங்கும் சாமி எங்கே இருக்கு 
தனித்தனியா சாமிகளும் சடங்குகளும் இருக்கு-இதுல 
 ஒன்ச்சாமிய பாக்க எனக்கு 
தாக்கீது எதுக்கு ...

எந்த சாமி வேணும்கிறது 
தனி நபரின் விருப்பம் 
கோயில் கட்டும் ஆசையெல்லாம் பக்தருக்கு வரலாம்
அனுமதிதாரதுமட்டும் 
அரசுக்கு  வேலை
ஆராதனை மணி ஆட்டுவது  வேண்டாத வேலை..

எங்க சேலைக்காரி அருளைப் பெற உங்கள் சேணைஎல்லாம் வருமா சடை முனிக்கு படையல் வச்சு  சங்கரமடம் தருமா 
அலகு குத்தி நேர்த்தி வைக்க அக்ரஹாரம் வருமா? 
 நாங்கள் மட்டும் எதுக்குஅங்கே 
விலகி நில்லு ஓரமா...

அப்போ நீ பேசுற பாசையவே என்னையும் பேசச் சொன்னே
.அப்புறம்
 நீ சாப்பிடும் உணவுபோல 
என்னையும் சாப்பிடச் சொன்னே
இப்ப  ஓஞ்சாமிய 
சேந்து கும்பிட  
அழைப்பு வேற தார ....
 
வங்கிக்குபதினைந்துலட்சம் 
வந்தபாடில்லை
இருபது கோடி பேருக்கு 
வேலை ஒண்ணும் தரல 
விலைவாசியை குறைக்க 
யாரும்யோசிக்கவே இல்ல  விவசாயத்தை. தொழிலை காக்க திட்டம் எதுவும் இல்லை _இதுல

 அடுத்தவன் கோயில இடிக்கிறது அதுல கோயிலை கட்டுவதும் பொழப்பத்த வேலை 
ஜனங்கள் நல்லா வாழ்ந்தாதானே சாமிகூட வாழும்...

அஞ்சு வருஷம் ஆளத்தானே  
ஓட்ட சனங்கபோட்டோம் .எங்க அடையாளத்தை மாத்திடவா உன்கிட்ட வந்து கேட்டோம் 
அடி மேல அடி அடிச்சா 
அம்மிகூட நகரும் -நாங்க
சேந்து திருப்பி அடிச்சா- உன் 
அதிகாரமே தகரும் ...

_மங்கலக்குடி நா.கலையரசன்_

(பாபர் மசூதி இடித்த இடத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பிஜேபி மோடி அரசு நடத்திய 22/1/2024 அன்று எழுதிய கவிதை)

Thursday, January 18, 2024

கவிதை (அரிதாரம் கலைந்தது)

 அரிதாரம் கலைந்தது

___________________________


பாசிசத்தால் நெய்யப்பட்ட இந்துத்துவ அரசியலை போர்த்திக்கொண்டு

 அலையும் போதும்...


ராஜா வேஷம் போட்டு 

காவித் துணி தரித்து

 ராம நாமம் பாடி 

இந்து தேசம் இதுவென 

எகிரிப் பேசித்திரிந்த போதும்..


இல்லாரும் உடையாரும் 

இல்லாத ராஜ்ஜியமே

 இந்து ராஜ்யம் என 

கனவை விதைத்து 

அதிகாரம் வந்ததும்

குடிமக்கள் வாழ்க்கையை 

குதறிப் போட்ட போதும்...


குஜராத்தில் இரக்கமின்றி குடிமக்களையே

படுகொலையை வல்லுறவை தூண்டிவிட்டு நடக்க வைத்து கைகட்டி ரசித்த போதும்...


இந்து மத பாசம் 

அரியணைக்காண வேஷம் என வரலாற்றுப் பொய்களை அம்பலப்படுத்தி எதிர்த்தோரை அடக்கியும் .அழித்த போதும்...


ஏழு சகோதரிகளின்

 இளைய சகோதரியாம் 

நாகலாந்து மலை மக்களை  

நர வேட்டையாடியபொதும்...


நாலு பேருக்கு நாட்டை விற்று நட்டாற்றில் இந்துக்களை தள்ளி நாக்பூருக்கு சேவை செய்து 

நத்தி பிழைத்த போதும்...


நினைத்துப் பார்த்தீரா 

நரேந்திரரே... உம்மையும் 

இந்து மதம் தந்த 

சூத்திர பட்டம் 

துரத்தி வரும் என்று...


_மங்கல குடிநா.கலையரசன்_

Friday, January 5, 2024

கவிதை


வாக்குறுதி
__________________

வாக்குறுதி என்பது 
நேர்மை குறித்தானது 
வறியவனும் கூட 
நெறியாய் பேணுவது
 வாக்குறுதி காத்தல்.

வாக்குறுதி காக்க 
மூன்றாவது அடிவைத்த 
வாமனன் பாதத்தை 
கிரீடம் தரித்த தலையால் 
தாங்கினான் மன்னன்

 வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
 தசரதன் என்பர்

வாக்குறுதி காக்க 
சதி என்று அறிந்தும் 
உயிர் கவசத்தை 
உரித்து தந்தான் கர்ணன் 

வாக்குறுதி காக்க
 நாட்டை துறந்து 
மனைவி மகனை விற்று அடிமையானான் அரிச்சந்திரன் 

 இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
 பரப்பியவர் யாரும் 
பாதையாக்கிக் கொள்ளவில்லை 

இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கு உறுதிசெய்யும் 
வலையாகிப் போனது 

வாக்கு மீறல் 
நேர்மை மீறலென 
சொன்னவனும் 
நம்பியவனுமே 
ஒப்புவதில்லை 

வார்த்தைப்படி 
வாழாதார் யாரும் வராதீர்
 எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின்  கதவடைப்போம்...

_ மங்களக்குடி நா. கலையரசன்_

Saturday, December 30, 2023

கவிதை ...நீர் பிடித்த நகரம்

நீர் பிடித்த  நகரம் 
-----------------------------
ராமனின் அம்பு பட்ட
கூனி தலைக்குடமாய்
நீர்ததும்பிவந்த 
மேக க் குடங்கள் 
உடைந்து சிதறியது 

மழைப்பொழிவு நீர் சேர்ந்து 
நதியாய் தரையிறங்கியதுபோய் 
மழைப்பொழிவே நதியாய் தரையிறங்க 
த்த்தளித்தது தலைநகரம் 

வேர்பிடித்திந்த. 
கட்டிடங்களின் கழுத்துவரை 
நீர்பிடித்து நின்றதால் 
நோவாவின்கப்பலாய் 
உயிர்காத்தன 
மொட்டைமாடிகள் 

பாஞ்சாலி மானம்காக்க
புடவையாய் வந்தவன் 
படகாய் உயிர்காக்கவும் 
ஓடிவருவானென 
ஆத்திகம் காக்காமல் 
நீண்ட கரங்களைப்பற்றி 
தற்காத்தார் மக்கள் 
நாத்திகம் பூண்டு

உள்ளங்கால்கள் நனையாமல்
கடல்கடந்து சீதையை கண்டாரெனும்
அனுமன் கதையாய் 
அரசும் அதிகாரமும் 
களம்புகாமல் கதை விட்டபோது

கதவுகளை அகலத்திறந்து 
மத விலக்குகள் இன்றி 
ஆரத்தழுவிக்கொண்டது 
ஆலையங்கள் அணைத்தும் 

மனிதருக்கிடையே 
மதிலை நட்டுவைத்த 
சாதிமத வேடமிட்ட
அகோரிகளின் கனவுகள் 
உடைந்து சிதறிட 

எடுவானுக்கும்.       படுவானுக்குமாய் 
எழுந்து நின்றது.                    
மானுடம் 

அடையாளங்களை அகற்றி 
உயிரை பிணை வைத்து
சக உயிர்களைக்காத்து
உணவு உடை உறையுள் என
சகலமுமாகி நின்றது
வென்றது

ஆழிப்பேரலையும் 
ஊழிப்பெருமழையும் 
தந்த பட்டறிவால் இனி
இயற்கையுடன் இசைந்தும் 
இசையவைத்தும் 
இயங்குவர்மக்கள் 
தம்மை மட்டுமே நம்பி ---

கவிதை... பகுத்தறி..

பகுத்தறி...

_________________________

நள்ளிரவு படை திரட்டி 

உறக்கத்தில் தாக்குவதும்

 அப்பாவி மனிதர்களை வழிமறித்து ரணப்படுத்துதலும் சாதிப் பெருமை என்று சிலர் சந்தைப்படுத்துவதை அறியாமல்


அதிகாரம் பெற்றவரிடம் 

உன்னை பணயம் வைத்து 

தன்னைவிற்றுக்கொள்ளும் 

தருதலைகள் பேச்சை நம்பி 

தோள்களை உயர்த்தி 

வீதியில் உறுமித் திரிகிறாய்


உன் சாதிக்கு மட்டுமே 

 வீரம் உண்டென

 எவன் சொன்னதுணக்கு 

மதுரை வீரனும் 

மணிக் குறவனும்

எரிஅம்பாய் வாழ்ந்ததை

என்னவென்று சொல்வாய்


 பலருடன் சென்று

சிக்கிய சிலரைஅடித்து அம்மணமாக்கி என்ன தேடுகிறாய்.. 

உன்னிடத்தில் வேறுபட்டது ஏதாவது தென்பட்டதா ..


அடித்து புண்படுத்தி

 கதற விட்டு 

என்ன கண்டறிந்தாய் 

வேதனை வேறுபட்டிருந்ததா..


 அவனில் சிதறிய

 சிறுநீரிலும் 

தெறித்து சிதறிய 

குருதியிலும்என்ன 

புரிந்து கொண்டாய்

புதிதாக...


உன் கீழ் புத்தியையும் 

சீழ் பிடித்த போக்கும் 

நீ நாகரீகம் தொடாதவன் 

என்பதை நாடறிந்து 

திகைக்கிறது


மனிதனை மனிதன் தின்ற 

காட்டுமிராண்டி 

குணம் இது என

 நாகரிக சமூகம் 

நையாண்டி செய்கிறது


தீ வைத்தால் உன் வீடும் எரியும் உன்வீட்டுப் பொருள்களும் உடையும் ..

அரிவாள் உன் மீது பட்டாலும் ரத்தமும் காயமும் வரும்

அவனைப் போலவே

 கையேறு நிலையில் 

 கவர்மெண்ட்டை எதிர்பார்த்து காத்திருப்பாய் ...எனில்

 

நீ தாக்கிக் கொண்டது

 உன்னை தான். நீ அவமானப்படுத்திக் கொண்டதும் உன்னைத்தான்

அவன் உன்னில்வேறுபட்டவனல்ல 

புரிந்து கொள்..

 

வெறியை உடைத்தெறி 

நெறியை படித்தறி 

சரி எதுவெனும்பகுத்தறி தூண்டியவனை தூக்கி எறி யாவரும் கேளிர் எனும் 

அறம் அறி...


மங்களக்குடி 

நா. கலையரசன்