Saturday, October 29, 2011

சர்க்காரின் சாதித்திட்டம்

மீண்டும்  ஒரு முறை 
பரமக்குடியிலும் 
எம்மக்களின் 
குருதி  நக்கி குடித்தது 
அதிகார  அரிதாரம்  பூசிய 
சாதி வெறி 
புதையுண்டவர்களின் 
அடையாளம்  விளக்கி 
அதிகாரம்  பரித்தவர்கள் 


அடிமை  சாதிக்கு 
அடையாளம்  எதற்கென 
ஆத்திரம்  கொட்டினார்கள்


ஆள்வோரும் - அரசும் 
மநுவின் ஆலிங்கனத்தில் 
மயங்கி கிடப்பதால் 
சாதி வெறிக்கொம்பு வளர்த்த 
சர்க்கார்  மாடுகள் ... 

ஐந்தாம் வருணமாய்
அடக்கி  வைத்தோரை
 குத்தி  குதறி  உயிர்
  உருவி  எறிந்தது

 ஐந்து முனை சந்திப்பில் 
கொட்டிக்  கிடந்த
இரத்தக் குட்டையில்
உங்கள்  சமத்துவ  முக  மூடி 
கிழிந்து  மிதக்கிறது 

கூட நின்று  கொள்ளி வைத்து
கூடி  நின்று  அழுதால்  
அமைதி  கெடுமென  அலறி
காட்டுக்குள்  விரட்டி  
காவு  கொடுத்தீர்கள் 

உயர்  சாதி  ஆதிக்கம் 
நிலைத்திருக்க  - எங்கள் 
உயிர்  உறிஞ்சிக்  குடித்தே 
உறுதி  செய்கிறார்  என்றால் ....

சாதி ஒழிப்பு  ஒரு 
சாதியையே  ஒழிப்பதென
சர்க்காரும் சேர்ந்திருந்து 
சாதித் திட்டமிடுகிறதோ 

கொடியங்குளம் - வாச்சாத்தி 
தாமிரபரணி  என - உங்கள் 
அதிகார  வெறியாட்டம்  
நீண்டு  வளர்ந்தாலும் 
அழுது ஓய்கிறோம் என
அகந்தை  சுமக்காதீர் 

அழுகை  ... 
ஆத்திரத்தின்  உச்சம்
அழுகைகள்  இணைந்து 
ஆவேசமானால்

உங்களின்  ..... 
எவ்வகை  ஆயுதங்களாலும் 
எதிர்கொள்ள  முடியாது . 

No comments:

Post a Comment