தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இராமநாதபுரம் மாவட்டக்குழு
குட்செட் தெரு- அண்ணாநகர்-இராமநாதபுரம்.
அனுப்புதல்
நா.கலையரசன்
மாவட்டச் செயலாளர்
பெறுநர்
உயர்திரு. மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்கள்
இராமநாதபுரம்.
இராமநாதபுரம் தாலுகா புத்தேந்தல் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகளின் திருமணம் 31.05.2012 அன்று புத்தேந்தல் கிராமத்தில் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளார்கள். திருமணத்தன்று இரவு தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் படம் வரையப்பட்டு இருந்த அந்த ப்ளக்ஸ் போர்டு கிழித்து எடுக்கப்பட்டிருந்தது.
யாதவ மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில் போர்டு வைக்கப்பட்டிருந்ததால் யாதவ இளைஞர்கள் தான் கிழித்திருக்கிறார்கள் என தலித் மக்கள் யாதவ கிராமத் தலைவர்களிடம் முறையிட்டிருக்கிறார்கள். அவர்களும் யார் இதைச் செய்திருந்தாலும் தவறு தவறுதான் நாங்கள் கேட்டுத் தருகிறோம் என கூறியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் தலித் மக்களும் கலைந்து சென்றிருக்கிறார்கள்.
01.06.2012 அன்று மதியம் யாதவ மக்களின் குடியிருப்பிற்கு நடுவே உள்ள குருசாமி கோவில் சுவற்றில் தலித் மக்களை இழிவு செய்யும் வகையில் இமானுவேல் படம் கிழித்து 24-மணி நேரம் ஆனபிறகும் கேட்க்க வக்கில்லாத பள்ளர்கள் 9-க்கள் என இழிவாக எழுதப்பட்டிருந்தது. இது தலித் மக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு கேட்டுத் தருவதாக சொல்லிருந்த யாதவ கிராம தலைவர்களை சந்திப்பதற்காக யாதவர் தெருவிற்கு தலித் மக்கள் சென்றிருக்கிறார்கள்.
இதை எதிர்பார்த்து இருந்தது போல யாதவ இளைஞர்களும் அந்த பகுதியினரும் வந்த தலித் மக்களை கல்லாலும், கம்பாலும் அடிக்க தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கைகலப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் தலித் சமூகத்தைச் சேர்ந்த குமார மணிகண்டன் (20)த.பெ. சுப்பிரமணி என்பவர் பின் மண்டையில் கடுமையாக தாக்கப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். நாகவள்ளி(35) க.பெ. பாலுச்சாமி என்பவர் வலது கண்ணிற்கு மேல் நெற்றியில் தாக்கப்பட்டு கொடுங்காயத்தோடு இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கருப்புசாமி (40) த.பெ. ஆறுமுகம் என்பவர் வலது கண்ணில் தாக்கப்பட்டும், வலது கையில் வெட்டப்பட்டும், பழனி (55) த.பெ. சேவுகன் என்பவர் நெஞ்சில் கடுமையாக தாக்கப்பட்டும் இராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காயமடைந்த இராமசந்திரன் த.பெ. அர்ச்சுணன் சிகிச்சை ஏதும் வழங்கப்படாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட சம்பவம் சாதிவெறியோடு திட்டமிட்டு நடந்த தாக்குதல் என்பதாகவே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கருதுகிறது.
பிரச்சனையின் துவக்கத்தையும் அதன் தன்மையையும் கவனத்தில் கொள்ளாமல் இது ஒரு கோஷ்டி தகறாறு என காவல்துறை முடிவு செய்தது ஆச்சரியமாகவே உள்ளது.
இமானுவேல் சேகரன் படம் வரைந்ததற்காகவே போர்டு கிழிக்கபட்டதும் , தலித் மக்களின் கோபத்தை தூண்டும் வகையில் சுவரில் எழுதி வைத்ததும், நியாயம் கேட்டு வந்த தலித் மக்களை, பள்ள பயலுகளுக்கெல்லாம் ப்ளக்ஸ் போர்டு கேட்க்குதா? என இழிவாக பேசியதும் , இனிமேல் பஸ் நிறுத்தத்தில் ஒரு பள்ளப் பயலும் பஸ் ஏறக் கூடாது என ஒரு கொலை வெறி தாக்குதலை நடத்தி வெறியாட்டம் போட்டதும் ஆதிக்க சாதி வெறியாகவே கருதுகிறோம்.
இந்த பிரச்சனையில் காவல்துறை கோஷ்டி தகராறு என முடிவு செய்து அந்த பக்கம் 3 பேர் இந்த பக்கம் 3 பேர் என பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்திருப்பதும் அதிலும் பிரச்சனையில் சம்பந்தப்படாத கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவரான கவியரசுவை கைது செய்ததும் , பாதிக்கப்பட்ட தலித் மக்களையே மிரட்டுவதுமான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபடுவது பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்யாது என கருதுகிறோம்.
எனவே கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழுவின் சார்பில் முன் வைக்கிறோம்.
திருமணத்திற்கு வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன்படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை கிழித்த விசமிகள் யார் என்றும், தலித் மக்களை ஆத்திரமூட்டும் இழிவான வாசகங்களை சுவற்றில் எழுதிய குற்றவாளிகளையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதே பிரச்சனைகள் முடிவுக்கு வர உதவி செய்யும்.
மேலும் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள தலித் மாணவன் கவியரசுவையும் மற்றவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள நபர்கள் கண்டறியப்பட்டு கொலை முயற்ச்சி மற்றும் எஸ்.சி,எஸ்.டி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.
மேற்க்கண்ட நியாயமான நடவடிக்கைகளே பிரச்சனை மீண்டும் வராமல் தடுப்பதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் உதவும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
நாள்: இப்படிக்கு
இடம்:
(நா.கலையரசன்)
மாவட்ட செயலாளர்
No comments:
Post a Comment