ஒரு சொந்த வேலையாக பைக்கில் முதுகுளத்தூர் சென்று கொண்டிருந்தபோது எனது வேகத்திற்கு வேகத்தடையாய் அலைபேசி அலறியது. அபதாரம் கட்டிட 500 ரூபாய் பையில் இல்லாத பயத்தில் சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி அலைபேசியின் அலரலுக்கு செவி கொடுத்தேன். என் உறவினரின் நண்பர் மனைவி குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்த அதிர்ச்சிச் செய்தியை ரகசியமாய் சொன்னது அலைபேசி.
பதட்டத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு செவிலியர்கள் நீதிமன்ற டவாலியாய் ' சத்தம் போடாதீங்க' என அடிக்கடி சொன்னாலும் தீக்குளித்த சகோதரியின் உறவினர்கள் கூடிநின்று எப்படி நடந்தது என அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். சில நடுத்தர வயதுப் பெண்கள் அடிப்பாவி மகளே இந்த பச்சப் புள்ளையல அனாதையாக்கப் பாத்தியடி என கதறினார்கள் மனசு கனத்தது.
கொசுவலை கட்டப்பட்டிருந்த கட்டிலில் வாழை இலைகளின் மீது கிடத்தி சில வாழை இலைகளால் மூடியிருந்தார்கள். இலைகளின் இடைவெளியில் நெருப்பில் எரிந்து தோல் உரித்தெறியப்பட்ட உடலாய் ரத்தம் கசிய மரணத்துடன் போராடியபடி கிடந்த அந்த சகோதரியை அருகில் பார்த்த வினாடி எனக்கு கண் பார்வை இருப்பதை இரண்டாவது முறையாக நினைத்து வருந்தினேன்.
எனது அமைப்பின் தொடர்பால் எனக்கிருந்த அறிமுகத்தை பயன்படுத்தி மருத்துவர்களிடம் பேசி அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவினேன். எனக்கு உதவிய அறுவை சிகிச்சை மருத்துவர் கருப்புசாமி அவர்கள் 'நெருப்பு வச்சுக்கற கேசு நிறைய வருது ஏதோ ஒரு கோபத்துல வச்சுக்கராங்க. ஆனா பிறகு படர அவதியை நெனைக்க மாட்டேங்கிராங்களே என வேதனையை வெளிப்படுத்தினார் .
நெருப்பின் அனல் பட்டாலே அலறி ஒதுங்கும் இயல்பு அனைவருக்கும் பொதுவானது. ஆனால் தன்னையே நெருப்பிட்டு எரித்துக்கொள்வதென்றால் நெருப்பைவிட ஏதோ ஒன்று சுட்டுள்ளது என்பதாய்த் தானே அர்த்தம்.
இந்த சகோதரி இந்த முடிவினை எடுக்க என்னதான் நடந்திருக்கும் என அறிந்து கொள்வதற்காக உறவினர்கள் கூடியிருந்த இடத்தில் நானும் வந்து அமர்ந்தேன்.
அவர்களின் அழுகை , ஆத்திரம் துயரங்களிடையே துணுக்குத் துணுக்காய் பேசிய விபரங்களை தொகுத்துப்பார்த்தால் அந்தச் சகோதரியின் கணவன் போதை அடிமை, கஞ்சா பழக்கமும் கூட்டணி சேர்ந்து அவனை 'அகோரி'யாக்கியுள்ளது. தமிழகத்திலும் இராமநாதபுரத்திலும் போதை பொருள்களின் விற்பனை தட்சணை கொடுத்து விடுவதால் தங்குதடையற்று நடைபெற்று வருகிறது. இதே போல தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. சமீபத்திய பத்திரிக்கை சக்திகளை கூர்ந்து கவனித்தால் குடி வெறியால் கொடுமை செய்ததால் கணவனை கொன்றேன் என வாக்குமூலம் தரும் வீர தமிழச்சிகளை நம்மால் தரிசிக்க முடிகிறது. பலர் மட்டுமே தன்னையே மாய்த்துக் கொள்ளும் கொடுமையும் நடந்தபடிதான் இருக்கிறது.
போதை தனது சக்தியை தின்றுவிட்டதை அறியும் போதை அடிமைகளின் சிந்தனை மனைவியையே சந்தேகத்துடன் மையம் கொள்ளும். தனது இயலாமையினால் மனைவி அதிர்ப்தியுற்று யாரோடும் உடன் போக்கிற்கு தயாராகிவிடுவாளோ என பிராந்தி ஓட்டத்தில் இயங்கும் மூலை உள்ளே வந்த கஞ்சா புகையுடன் சந்தேகத்தையும் சேர்த்து வெளிவிடும் . இதனால் நிம்மதி குலைந்து மனைவியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் தேடி தேளாய் கொட்டி மனைவியை ரணமாக்கிக் கொண்டே இருப்பார்கள் .
அதுதான் இந்த தொண்டிப் பகுதியை சேர்ந்த சகோதரிக்கும் நிகழ்ந்துள்ளது. அவளுக்கு தைரியம் கொடுத்து ஆறுதல் சொல்லும் விதமாக அருகில் நின்று கனிவாய் பேசிக்கொண்டே வந்த போதுதான் அந்தப்பெண் வேதனை முனங்கள்களுடன் பேசத் துவங்கினாள்.
'இது ஏதோ அவசரமா வந்த கோபத்தினால் செய்துக்கலைண்ணா . உசுரோட பிணமா நடமாடரதை விட ஒரேதா பொணமாயிடனும்முன்னுதான் இப்படி செஞ்சுகிட்டேன். இந்த ஆளோட புத்திய கல்யாணமாகி மறு வீடு போகும் போதே தெரிஞ்சுக்கிட்டேன். எங்க ஊரைச்சேர்ந்த எங்க சித்தப்பா ஒருத்தரக்காட்டி அந்த ஆளு என்ன உங்கிட்ட அடிக்கடி வந்து நெருக்கமாநின்னு பேசுரான். ஆவனை நீ வச்சிருந்தியான்னு கேட்டான். நான் பதறி போய் ஏங்க அது எங்க சித்தப்பாங்கன்னேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அப்ப ரொம்ப வசதி தான் அப்படின்னு என் நெஞ்சுல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டு அவன் பாட்டுல போய்ட்டான் .
மனதில் இருந்த ரணமும் உடம்பில் இருந்த ரணமும் கண்ணீராய் பெருகி வழிய வேதனையை சமாளித்துக்கொண்டு கொஞ்சம் இடைவெளி விட்டு பேசத்துவங்கினாள்;.
அன்னக்கித் துவங்கினது தினசரி குடி கஞ்சான்னு ஒரு குருப்போட சேர்ந்து குடிச்சிட்டு வந்து இன்னக்கி எங்க போனே ....யாரோட பேசினே.... தண்ணி தூக்கிட்டு வரும்போது பேசினானே அவன் யாருன்னு ஒரே சித்திரவதைதான். அத்தனையையும் இந்த ரெண்டு புள்ளைகளுக்காக தாங்கிக்கிட்டேன். ஆனா என்னோட மகனைக்காட்டி என்னோட சொந்த அண்ணன் பேரைச் சொல்லி அவன் மாதரியே இருக்கானே எப்படி.... அவனுக்குத்தானே பெத்தே...உண்மையைச் சொல்லுன்னு என்னையை உசுரோட எரிச்சுட்டான்னே . நான் எப்படி தாங்குவேன்... நீங்க சொல்லுங்க என்றாள் .
நான் கோமா நிலைக்குப் போகாத குறைதான் அத்தனை அதிர்ச்சி. அந்த சகோதரிக்கு கண்ணீரை மட்டுமே பதிலாய்த்தர முடிந்தது எத்தனை கொடுமை. போதை வெறி மனிதனை எந்த அளவுக்கு மனநோயாளியாய் மாற்றி விடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களின் தீக்குளிப்புகளுக்கு பின்னால் எத்தனை மனநோயாளிகள் இருக்கிறார்களோ..... இன்னும் எத்தனை சசோதரிகள் இது போன்ற சைக்கோ பேர்வளிகளிடமிருந்து விடுதலைபெற அக்கிணியை அரவணைப்பார்களோ என நினைத்தால் மனசு கணக்கிறது .
இன்று குடிப்பது அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாகிப் போய்விட்டது. பள்ளிச்சீருடையுடனேயே வளர் இளம் பருவத்தினர் ஒயின் சாப்புக்குள் ஒதுங்குவதாய் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது. பிராந்திக்கடையின் 'பார்-ருக்குள் தான் இன்று தமிழ்நாடே இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றாக குடிப்பதையும் சேர்த்து தங்கள் அடையாளங்களை இழந்து வருகிறார்கள் தமிழர்கள் . சினிமாவிலும் பாடல்களிலும் தொலைக்காட்சி தொடர்களிளும் சந்தோசம் என்றாலும் சங்கடம் என்றாலும் குடித்தே கொண்டாடுவது என்பதை சொல்லித் தருகிறார்கள். இது அடிப்படை உரிமை- உழைப்பவன் களைப்புத்தீர உதவும் உற்சாக பாணம் என நியாயப்படுத்தும் அறிவாளிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்ன செய்வது ஊருக்கு 10 கடைகள் தெருவுக்கு 10 கடைகள் என மதுபானக் கடைகளை திறந்து தனது அறக்கடமையை அரசே செய்கிறதே. மின்சாரம் , கல்வி , தண்ணீர் என அனைத்தையும் தனியாரிடம் தந்து விட்டு இந்த உயிர் காக்கும் !! பிராந்தி விற்பனையை மட்டும் அரசே செய்கிறது. இதுவரை 6696 பிராந்திக்கடை உள்ளது. 45 கடைகளை மேலும் திறந்து 16500-கோடியாக போதை விற்பனையை அதிகரிக்க அரசே அற்புதத் திட்டம் தீட்டியுள்ளது எனும்போது மனது கொதித்து ஆவது என்ன என விட்டுவிட முடியவில்லை.
இது தமிழர்களின் கைக்காசை களவாடி , வாழ்க்கையை சீரழித்து அவர்களை போதை அடிமைகளாக மாற்றி சுயத்தைப் பறித்து எவர் எதைக் கொடுத்தாலும் கையேந்தி வாழப் பழக்கிவிடும் சதி ...இதை முடிவுக்கு கொண்டு வர முயன்றிடவேண்டும்.
அதுவரை இதுபோல தமிழகத்தில் தீக்குளிப்பில் ஒரு பெண் ஈடுபட்டால் அதற்கு காரணம் என்னவென விசாரித்து கணவன் மது வெறியன் எனத் தெரிந்தால் அவன்மீது கொலை வழக்கு பதிய வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் முழு கல்வி செலவினை ஏற்பதோடு அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தலா 5 இலட்சம் ரூபாயை அரசே வழங்க வேண்டும். (ஏனெனில் அவனை மது வெறியனாக்க உதவியதும் அவன் வருமானத்தை ஏற்கனவே பிடுங்கி கொண்டதும் அரசுதானே)
மேலும் போதையில் ஏற்படும் வாகன விபத்து உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தொடரப்படும் வழக்குகளில் நீதி மன்ற தீர்ப்புகளில் சொல்லப்படும் நிவாரணமோ அபதாரமோ அதை அரசே ஏற்க்க வேண்டும். இவைகளை ஏற்கவி;ல்லையென்றால் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவைகள் தமிழ் சமுதாயத்தின் நலன் விரும்பும் அனைவரும் கோரிக்கையாக முன் வைத்து போராடுவது அவசியம் . இல்லையெனில் நமது சகோதரிகளின் அவலக்குரல் ஏதாவது ஒரு பகுதியில் ஒலித்தபடி இருக்கும். எது நமக்கு விருப்பம்.
குறிப்பு: தீக்குளித்த அந்த சகோதரி இறந்து விட்டாள் என்ற துயரச் செய்தியோடுதான் இதை எழுதுகிறேன் . அவளின் குழந்தைகளுக்கும் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment