Monday, June 25, 2012

அடையாளம் மீட்டெடுக்க தடைபோடும் சாதி வெறி...

கடந்த 1.6.12அன்று புத்தேந்தலில் ப்ளக்ஸ் போர்டை கிழித்தது குறித்த பிரச்சனையில் யாதவ இளைஞர்கள் சிலரால், தலித் இளைஞர்கள், ஒருபெண் உள்பட கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் .
    இப்படியொரு பிரச்சனை உத்திரகோசமங்கை அருகில் உள்ள நல்லிருக்கை கிராமத்திலும் நடந்துள்ளது. இது காவல்துறையின் கருணைமிக்க !!! நடவடிக்கையினால் சமரசம் ஏற்பட்டுவிட்டது.
    புத்தேந்தல் பிரச்சனையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  தலையிட்டதால் வழக்கு போராட்டம் என மாறியுள்ளது. மனித உரிமை ஆணயம் வரை கொண்டு  செல்லப்பட்டுள்ளது.
    ப்ளக்ஸ் போடு வைப்பதிலெல்லாம் ஏன் பிரச்சனை வரவேண்டும் ஊரில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் ப்ளக்ஸ் போடு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளது. சடங்கு மற்றும் இரங்கல், விளம்பரம் கூட சொல்பவரின் புகைப்படத்துடன் வைக்கப்படுகிறது. இது தன்னை முன்னிருத்திக்கொள்ளும் ஊருக்கு தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளும் , அடையாள அரசியல், பின் நவீனத்துவம் போட்ட குட்டி இது. எல்லோரையும் பேயாய் பிடித்துக்கொண்டது.
    இதில் நாம் அவதானிக்க வேண்டியது ஊரே கைக்கொண்ட பழக்கத்தினை தலித்துகள் கை கொண்டால் மட்டும் பிரச்சனையாவது ஏன்..? சினிமா நடிகர்கள் படம் போடப்படும் போர்டுகள் வைக்கலாம் , ஆனால் ஒரு சமூகம் தனது அடையாளமாகக் கருதும் ஒரு தலைவரின் படத்தைப் போட்டால் மட்டும் ஏன் சிலருக்கு பிடிக்காமல் போகிறது.
    எந்தப் பக்கம் திரும்பினாலும் மறவர் கோட்டையில் மணவிழா , மருது கோட்டையில் மணவிழா, கோகுலத்தில் திருமணம் என ப்ளக்ஸ்  போடுகளை வைத்து கர்வம் கொள்ளும் போது இமானுவேல் சேகரன்  கோட்டையில் திருமணம் என்றோ, ஒண்டிவீரன் கோட்டையில் திருமணம் என்றாலோ எவர் கட்டிய கோட்டையோ இடிந்து விழுந்ததாய் ஏன் இந்த ஆவேசம்.    தலித்துக்கள் அடையானம் பெருகிறார்களே எனும் ஆத்திரம் தான். ஏனெனில் இவர்கள் அடையாளம் பறிக்கப்பட்டவர்கள் .
மநு எனும் மனநோயாளியின் சதியால் சாதி திணிக்கப்பட்டு வருணங்களுக்குள் கூட அடையாளம் மறுக்கப்பட்டு பஞ்சமர் என படியிரக்கப்பட்டு இழிவுக்குள்ளாயினர். உணவு, உடை உறைவிடம்  என எந்த உடமையும் இல்லாதவர்களாக்கி சேவைச்சாதி என பெயர் சூட்டினர். அதை பெருமையென அந்த மக்களையே நம்பிட வைக்க கடவுள்களையும் , புராணங்களையும் பயன்படுத்திக்கொண்டனர்.
அந்த மக்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகளை , அடக்குமுறைகளை கண்டு கொதித்துப்போன மனிதாபிமானம் உள்ள மனிதர்கள் உயர்சாதியினர்  என அடையாளமிடப்பட்ட  முற்போக்காளர்கள் கடுமையாக எதிர்த்தனர் . போராடினர். அந்த மக்களை போராடிட  தூண்டினர்.  அந்தப் போராட்டக் களத்தில் அந்த மக்களிடமிருந்தே அரும்பெரும் தலைவர்கள் உருவாகி வலம் வந்தனர்.
    அறிவும் ஆற்றலும் எந்த சாதியில் பிறக்கிறோம் என்பதல்ல வாய்ப்புக் கிடைத்தால் அறிவுருவானவர்கள் என தனக்குத்தானே பெயரிட்டுக்கொண்ட அந்தணர்களுக்கே அறிவில் அப்பனாக முடியும் என அகிலம் அறிய உயர்ந்து நின்றார் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கார். அவர் வழியில் இன்று அறிவுத்துறையில ஆயிரமாயிரமாய் அணிவகுத்து வருகிறார்கள்.
    இது ஆயிரமாயிரமாண்டு போராட்டத்தின் விளைவு. பலதலைமுறைகளின் தியாகம்  இந்த உருமாற்றம் தான் உயர்சாதியென்போரை ஆத்திரப்படவைக்கிறது. அவர்கள் சுயமாய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் தடுக்க நினைக்கிறார்கள். கடந்த காலத்திலேயே இருத்தி வைக்க நினைக்கிறார்கள். அதனால்தான்  அவர்கள் அடையானம் புனைவதை சகித்துக் கொள்ள முடியாமல் சதி செய்கிறார்கள்.
    அதன் வெளிப்பாடுதான் தலித் தலைவர்களின் படம் ப்ளக்ஸ் போர்டில் வரையப்படும் போது பிரச்சனைகளை வளிந்து உருவாக்குகிறார்கள். அதுதான் புத்தேந்தலில் நல்லிருக்கை என  தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த  சாதிச்சாக்கடையை படித்தவர் , படிக்காதவர் எனும் பாகுபாடின்றி தலையில் ஊற்றிக் கொண்டு ஊர்வலம் வருகிறார்கள்.
    இது அவர்களின் தவறு அல்ல, அவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாய் கைமாற்றித்தரப்பட்டு வருகிறது. தங்களுக்கு கீழே ஏவல் பணி செய்ய ஒரு சாதியெனும் போது பெருமிதப்படும் (இது தலித் பிரிவுக்குள்ளும் உள்ளது) குணம் அவர்களின் மண்டைக்குள் ஊறிக்கிடக்கிறது.அந்த உணர்வு எவ்வளவு படித்து பதவியில் இருந்தாலும் தொடர்கிறது.
காவல்துறையில் இது பகிரங்கமாக வெளிப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது. அருகாமை உதாரணம் பரமக்குடி துப்பாக்ச்சூடு.
புத்தேந்தல் பிரச்சனையிலும் அதே முறையில்தான் செயல்பட்டுள்ளது. மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவரிடம்  வாக்குமூலம்  வாங்கி புகார் பதிவு செய்யும் போதே எஸ்.சி, எஸ்.எஸ்டி பிரிவில் வழக்குப்பதிவு செய்யாமல் கோஷ்டி தகறாராய் வருணித்து இரு பகுதிக்கும் வழக்கு பதிவு செய்துள்ளது. அதோடும் அவர்களின் திருவிளையாடல் முடியவில்லை. பாதிக்கப்பட்ட தலித் மக்களிடம் யாரைக்கேட்டு போர்டு வைத்தாய் , வைத்தால் பாதுகாப்புக்கு ஏன் ஆள் போடவில்லை என மிரட்டியுள்ளது. பிற சாதித் தலைவர்கள் படம்போட்டு வைத்த திருமண போர்டுகளுக்கு காவல் போடு என காவல்துறை கேட்க்குமா..? கேட்காது..முடியாது.
    இது மட்டுமல்லாமல் பெண்களை இழிவாகப் பேசி மிரட்டி கைது செய்தவர்களை காவல் நிலையத்திலேயே  வைத்து அடித்து உதைத்துள்ளனர்.  இவை எதுவும் இந்த மக்களை தாக்கிய யாதவர்கள் மீது கையாளப்படவில்லையே  ஏன்...? உயர் சாதியென்போரின் வன்கொடுமை குறித்து காவல் துறையில் புகார் தந்தால் காவல்துறையும் வன்கொடுமை செய்கிறது. புகார், போராட்டம் என நடத்திய பிறகும் எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்கு பதியவில்லை, மாநில அமைச்சர்கள் சட்ட சபையிலேயே தமிழகத்தில் தீண்டாமையே  இல்லையென பொய்யாய் அறிவித்ததை போலீஸ் உண்மையாக்க முயல்கிறது. அதனால்தான் தெருநாயை யார் வேண்டுமானாலும் கல்விட்டு எரியலாம் என்பது போல தலித்துகளை யார் வேண்டுமானாலும் அடிக்கலாம் கேள்வி கேட்பாடில்லை இதுதான் 21-ம் நூற்றாண்டுகளிலும் தொடரும் என்றால் ஒரு நாட்டிற்கு இதை விட இழிவு வேறு ஏதும் தேவையில்லை.
    ஆனால் அனைத்து சமூகம் மற்றும் அனைத்து அரசு துறைக்குள்ளும்  இந்த அநீதி களைந்தெறியப்படவேண்டும்  என நினைப்போரும் உள்ளனர் என்பதுதான் ஆறுதலான நிகழ்வு - இவர்களையும் இணைத்துக் கொண்டுதான் இந்த சாதி ஆதிக்க குணத்தை – தீண்டாமை கொடுமையை வேரறுக்க முடியும். அடையாளத்திற்காக அரசியல் என்பதற்கு மாறாக அரசியலை தொழிலாளி வர்க்க அடையாளத்துடன் சந்திப்போம்  அதுவே சாதி ஒடுக்குமுறைக்கு எதிராய் சரித்திரம் படைக்க பயன்படும். அதுவரை இடைவிடா போராட்டம் தொரடப்பட வேண்டும்.
                                                          -    மங்களக்குடி நா.கலையரசன -

No comments:

Post a Comment