Saturday, June 23, 2012

திசையறியா பயணம்.....

உடலுக்குள் உயிரை
சிறைவைக்கும் அவதியில்
இரைதேடி சிறகடிக்கும்
குருவிகளின் அவசரத்தில்

ஏதோ ஒன்றைத்தேடி-அல்லது
எதைத்தேடுவதெனத்தேடி
முடிவெடுத்தோ எடுக்காமலோ
பயணித்தபடி மனிதர்கள்

சூரியக்கோபத்தை
சூராவளி வேகத்தை
தேவைகளின் துரத்தலினூடே
பாலையில் சுனை தேடும்
பரம்பரைப் பயணம்

வில்-அம்பு பறித்து
குறி பொருள் மறைத்து
வெட்டவெளி நின்று
வில்லாளப் பட்டம் பெற
விரட்டும் சமூகம்

இருந்தும் ....
கடந்து போகிற இரவுகள்
மறுநாள் நம்பிக்கையை
மனம் நிறைத்துவிட்டே
மரணிக்கிறது

தூரத்தின் இலக்கறியா
பயணப்பாதையில்
கண்டடைந்து விட்டதாய்
செவி நுழையும் - சில
அசரீரிக் குரல்கள்
ஆவேசம் விதைக்கிறது.

தாத்தனும் தகப்பனும்
தவறவிட்ட இலக்கில்
தயங்கி தடம் மாறி
தேங்கிடாதிருக்க
ஏதிரெதிர் வந்து
தூரம் குறைவதாய்
நம்பிக்கை உரமிடும்
நெடுஞ்சாலை மைல் கற்கள்.

    மங்களக்குடி-நா.கலையரசன்.

No comments:

Post a Comment