Friday, March 9, 2012

உயிர் பலி கேட்க்கும் போதை வெறி .


ஒரு சொந்த வேலையாக பைக்கில் முதுகுளத்தூர்  சென்று கொண்டிருந்தபோது எனது வேகத்திற்கு வேகத்தடையாய் அலைபேசி அலறியது. அபதாரம் கட்டிட 500 ரூபாய்  பையில் இல்லாத பயத்தில் சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி அலைபேசியின் அலரலுக்கு  செவி கொடுத்தேன். என் உறவினரின்  நண்பர் மனைவி குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்த அதிர்ச்சிச் செய்தியை ரகசியமாய் சொன்னது அலைபேசி.
    பதட்டத்துடன் இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு செவிலியர்கள் நீதிமன்ற  டவாலியாய் ' சத்தம் போடாதீங்க' என அடிக்கடி சொன்னாலும்  தீக்குளித்த சகோதரியின் உறவினர்கள் கூடிநின்று  எப்படி நடந்தது என அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். சில நடுத்தர வயதுப் பெண்கள் அடிப்பாவி மகளே இந்த பச்சப் புள்ளையல  அனாதையாக்கப் பாத்தியடி என கதறினார்கள் மனசு கனத்தது.
    கொசுவலை கட்டப்பட்டிருந்த கட்டிலில்  வாழை இலைகளின் மீது கிடத்தி சில வாழை இலைகளால் மூடியிருந்தார்கள். இலைகளின் இடைவெளியில்  நெருப்பில் எரிந்து தோல் உரித்தெறியப்பட்ட உடலாய் ரத்தம் கசிய மரணத்துடன் போராடியபடி கிடந்த அந்த சகோதரியை அருகில் பார்த்த வினாடி  எனக்கு கண் பார்வை இருப்பதை இரண்டாவது முறையாக நினைத்து வருந்தினேன்.
    எனது அமைப்பின் தொடர்பால் எனக்கிருந்த அறிமுகத்தை பயன்படுத்தி மருத்துவர்களிடம் பேசி அவசர மருத்துவ சிகிச்சைக்கு உதவினேன். எனக்கு உதவிய அறுவை சிகிச்சை மருத்துவர் கருப்புசாமி அவர்கள் 'நெருப்பு வச்சுக்கற கேசு நிறைய வருது ஏதோ ஒரு கோபத்துல வச்சுக்கராங்க. ஆனா பிறகு படர அவதியை நெனைக்க மாட்டேங்கிராங்களே என வேதனையை வெளிப்படுத்தினார் .
    நெருப்பின் அனல் பட்டாலே அலறி ஒதுங்கும் இயல்பு அனைவருக்கும்  பொதுவானது. ஆனால்  தன்னையே நெருப்பிட்டு எரித்துக்கொள்வதென்றால்  நெருப்பைவிட ஏதோ ஒன்று சுட்டுள்ளது என்பதாய்த் தானே அர்த்தம்.    
    இந்த சகோதரி இந்த முடிவினை எடுக்க என்னதான் நடந்திருக்கும் என அறிந்து கொள்வதற்காக உறவினர்கள் கூடியிருந்த இடத்தில் நானும் வந்து அமர்ந்தேன்.
    அவர்களின் அழுகை , ஆத்திரம் துயரங்களிடையே துணுக்குத் துணுக்காய் பேசிய விபரங்களை தொகுத்துப்பார்த்தால் அந்தச் சகோதரியின் கணவன் போதை அடிமை, கஞ்சா பழக்கமும் கூட்டணி சேர்ந்து அவனை 'அகோரி'யாக்கியுள்ளது. தமிழகத்திலும் இராமநாதபுரத்திலும் போதை பொருள்களின் விற்பனை தட்சணை கொடுத்து விடுவதால் தங்குதடையற்று  நடைபெற்று வருகிறது.  இதே போல தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.  சமீபத்திய பத்திரிக்கை சக்திகளை கூர்ந்து கவனித்தால்  குடி வெறியால் கொடுமை செய்ததால் கணவனை கொன்றேன் என வாக்குமூலம் தரும் வீர தமிழச்சிகளை நம்மால் தரிசிக்க முடிகிறது.  பலர் மட்டுமே தன்னையே மாய்த்துக் கொள்ளும் கொடுமையும் நடந்தபடிதான் இருக்கிறது. 
போதை  தனது சக்தியை தின்றுவிட்டதை அறியும் போதை அடிமைகளின் சிந்தனை மனைவியையே சந்தேகத்துடன் மையம் கொள்ளும். தனது இயலாமையினால்  மனைவி அதிர்ப்தியுற்று  யாரோடும் உடன் போக்கிற்கு தயாராகிவிடுவாளோ என பிராந்தி ஓட்டத்தில் இயங்கும் மூலை உள்ளே வந்த கஞ்சா புகையுடன் சந்தேகத்தையும் சேர்த்து  வெளிவிடும் .  இதனால் நிம்மதி  குலைந்து மனைவியின்  ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் தேடி  தேளாய் கொட்டி மனைவியை ரணமாக்கிக் கொண்டே இருப்பார்கள் .
    அதுதான் இந்த தொண்டிப் பகுதியை சேர்ந்த சகோதரிக்கும் நிகழ்ந்துள்ளது. அவளுக்கு  தைரியம் கொடுத்து ஆறுதல் சொல்லும்  விதமாக  அருகில் நின்று கனிவாய் பேசிக்கொண்டே வந்த போதுதான் அந்தப்பெண் வேதனை முனங்கள்களுடன் பேசத் துவங்கினாள்.
        'இது ஏதோ அவசரமா வந்த கோபத்தினால்  செய்துக்கலைண்ணா . உசுரோட பிணமா நடமாடரதை விட ஒரேதா பொணமாயிடனும்முன்னுதான்  இப்படி செஞ்சுகிட்டேன்.  இந்த ஆளோட புத்திய கல்யாணமாகி மறு வீடு போகும் போதே தெரிஞ்சுக்கிட்டேன். எங்க ஊரைச்சேர்ந்த எங்க சித்தப்பா ஒருத்தரக்காட்டி அந்த ஆளு என்ன உங்கிட்ட அடிக்கடி வந்து நெருக்கமாநின்னு பேசுரான். ஆவனை நீ வச்சிருந்தியான்னு கேட்டான். நான் பதறி போய் ஏங்க அது எங்க சித்தப்பாங்கன்னேன். கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம அப்ப ரொம்ப வசதி தான் அப்படின்னு என் நெஞ்சுல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டு  அவன் பாட்டுல போய்ட்டான் .
     மனதில் இருந்த ரணமும் உடம்பில் இருந்த ரணமும் கண்ணீராய் பெருகி வழிய  வேதனையை சமாளித்துக்கொண்டு  கொஞ்சம் இடைவெளி விட்டு  பேசத்துவங்கினாள்;. 
    அன்னக்கித் துவங்கினது தினசரி குடி கஞ்சான்னு ஒரு குருப்போட சேர்ந்து குடிச்சிட்டு  வந்து  இன்னக்கி எங்க போனே ....யாரோட பேசினே.... தண்ணி தூக்கிட்டு வரும்போது  பேசினானே அவன் யாருன்னு ஒரே சித்திரவதைதான். அத்தனையையும் இந்த ரெண்டு புள்ளைகளுக்காக தாங்கிக்கிட்டேன்.  ஆனா என்னோட மகனைக்காட்டி  என்னோட சொந்த அண்ணன் பேரைச் சொல்லி அவன் மாதரியே இருக்கானே எப்படி.... அவனுக்குத்தானே பெத்தே...உண்மையைச் சொல்லுன்னு என்னையை உசுரோட எரிச்சுட்டான்னே . நான் எப்படி தாங்குவேன்... நீங்க சொல்லுங்க என்றாள் .
    நான்  கோமா நிலைக்குப் போகாத குறைதான் அத்தனை அதிர்ச்சி. அந்த சகோதரிக்கு கண்ணீரை மட்டுமே பதிலாய்த்தர முடிந்தது எத்தனை கொடுமை. போதை வெறி மனிதனை எந்த அளவுக்கு மனநோயாளியாய் மாற்றி விடுகிறது என்பதற்கு இதுவே உதாரணம்.
        தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்களின் தீக்குளிப்புகளுக்கு பின்னால்  எத்தனை மனநோயாளிகள் இருக்கிறார்களோ..... இன்னும் எத்தனை சசோதரிகள் இது போன்ற சைக்கோ பேர்வளிகளிடமிருந்து  விடுதலைபெற அக்கிணியை அரவணைப்பார்களோ என நினைத்தால் மனசு கணக்கிறது .
        இன்று குடிப்பது அன்றாடப் பழக்கங்களில் ஒன்றாகிப் போய்விட்டது. பள்ளிச்சீருடையுடனேயே வளர் இளம் பருவத்தினர்  ஒயின் சாப்புக்குள் ஒதுங்குவதாய் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது.  பிராந்திக்கடையின்  'பார்-ருக்குள் தான் இன்று தமிழ்நாடே இருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றாக குடிப்பதையும்  சேர்த்து தங்கள் அடையாளங்களை இழந்து வருகிறார்கள் தமிழர்கள் . சினிமாவிலும்  பாடல்களிலும்  தொலைக்காட்சி தொடர்களிளும்  சந்தோசம் என்றாலும் சங்கடம் என்றாலும் குடித்தே கொண்டாடுவது என்பதை சொல்லித் தருகிறார்கள்.  இது அடிப்படை உரிமை- உழைப்பவன் களைப்புத்தீர உதவும் உற்சாக பாணம்  என நியாயப்படுத்தும்  அறிவாளிகளும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.
        என்ன செய்வது ஊருக்கு 10 கடைகள் தெருவுக்கு 10 கடைகள் என மதுபானக் கடைகளை திறந்து தனது அறக்கடமையை  அரசே செய்கிறதே.  மின்சாரம் , கல்வி , தண்ணீர் என அனைத்தையும்  தனியாரிடம் தந்து விட்டு இந்த உயிர் காக்கும் !! பிராந்தி விற்பனையை மட்டும் அரசே செய்கிறது. இதுவரை 6696 பிராந்திக்கடை உள்ளது.  45 கடைகளை மேலும் திறந்து 16500-கோடியாக போதை விற்பனையை அதிகரிக்க அரசே அற்புதத் திட்டம் தீட்டியுள்ளது எனும்போது  மனது கொதித்து ஆவது என்ன என விட்டுவிட முடியவில்லை.
    இது தமிழர்களின்  கைக்காசை களவாடி , வாழ்க்கையை சீரழித்து  அவர்களை போதை அடிமைகளாக மாற்றி சுயத்தைப் பறித்து எவர் எதைக் கொடுத்தாலும் கையேந்தி வாழப் பழக்கிவிடும் சதி ...இதை முடிவுக்கு கொண்டு வர முயன்றிடவேண்டும்.
    அதுவரை இதுபோல தமிழகத்தில் தீக்குளிப்பில் ஒரு பெண் ஈடுபட்டால் அதற்கு காரணம் என்னவென விசாரித்து கணவன் மது வெறியன்  எனத் தெரிந்தால் அவன்மீது கொலை வழக்கு பதிய வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குழந்தைகள் இருந்தால் அவர்களின் முழு கல்வி செலவினை ஏற்பதோடு அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தலா 5 இலட்சம் ரூபாயை அரசே வழங்க வேண்டும். (ஏனெனில்  அவனை மது வெறியனாக்க  உதவியதும்  அவன் வருமானத்தை ஏற்கனவே பிடுங்கி கொண்டதும் அரசுதானே)
    மேலும் போதையில் ஏற்படும் வாகன விபத்து உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தொடரப்படும் வழக்குகளில் நீதி மன்ற தீர்ப்புகளில் சொல்லப்படும் நிவாரணமோ அபதாரமோ  அதை அரசே ஏற்க்க வேண்டும். இவைகளை ஏற்கவி;ல்லையென்றால் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவைகள்  தமிழ் சமுதாயத்தின் நலன் விரும்பும் அனைவரும் கோரிக்கையாக முன் வைத்து போராடுவது அவசியம் . இல்லையெனில் நமது சகோதரிகளின் அவலக்குரல் ஏதாவது ஒரு பகுதியில் ஒலித்தபடி இருக்கும்.  எது நமக்கு விருப்பம். 
குறிப்பு: தீக்குளித்த அந்த சகோதரி இறந்து விட்டாள் என்ற துயரச் செய்தியோடுதான் இதை எழுதுகிறேன் . அவளின் குழந்தைகளுக்கும் சகோதரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.


Monday, February 27, 2012

தருதலைகளுக்கும் தாலியறுக்க ஒரு மனைவி

  முகநூல் நண்பர்களுடன் எனது துயரத்தையும்  ஒரு ஆலோசனையையும்  பகிர்ந்து கொள்ள விரும்பி இதை எழுதுகிறேன். எனது அண்ணன் மகள் வனிதாவுக்கு திருமணம் முடிந்து 7 மாதங்கள் கூட முடியாத நிலையில் அவளின் கணவர் இறந்து விட்டார் எனும் செய்தி இடியாய் இரங்க அனைவரும் ஓடினோம்.
    உடைந்து நொருங்கிப்போன அண்ணன் , ஆத்திர அவதாரத்துடன் தம்பி அவர்களது குடும்பம் அவர்களுடன் என்ன செய்வது என்றே இலக்கறியாமல் நானும் உடன் சென்றேன். எங்கள் உறவுகளின் கேள்விகளுக்கு பதில் சொல்லிடமுடியாது தவித்தோம்.
    காரணம் மருத்துவமனையில் இறந்ததாக தகவல் வந்ததால் அவருக்கு எதற்காக வைத்தியம் பார்த்தார்கள் எனத்தெரியாததால் வந்தது இந்த தவிப்பு.
    எங்கள் அண்ணன் மகளை அழைத்து துயரங்களுக்கிடையே காரணம் அறிய முயன்றோம்.  அவளும் தனக்குத் தெரியாது என கை விரித்ததுடன் 'என்னை அம்மா அப்பாவைப் பார்த்து விட்டு வா' என ஊருக்கு அனுப்பிவிட்டு வைத்தியம் பார்க்கப் போனார்கள் என்றும் ஒரு தகவலைச் சொன்னாள்
    எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மனைவிக்கே தெரியாமல் கணவனுக்குவைத்தியம் நடந்தது என்றால் அவருக்கு என்ன நோய் இருந்தது. குழப்பம் வந்து குவிந்தது. முட்டாளாக்கப்பட்டு விட்டோமோ என்ற அதிர்வில் என்மீது எனக்கே அருவருப்பாய் இருந்தது.
    ஆண்கள் போதை அதிகமானால் உண்மையை உளறிவிடுவார்கள் பெண்கள் சோகத்தை வெளியிட்டு அழும்போது உண்மையை வெளியிட்டு விடுவார்கள் என்பதை என்மனைவி வந்து சொன்ன செய்தி உறுதி செய்தது.
    வுனிதாவின் கணவரின் உறவுப் பெண்கள் வைத்த ஒப்பாரி அழுகைக்கிடையில் அவருக்கு மது-கஞ்சா அடிமை என்பதும் அவனுக்கு டி.பி இருந்ததும் வெளிப்பட்டதுடன் அவனுக்கு பேரு சொல்லா நோய் இருந்ததாகவும்  சந்தேகம் இருந்ததாக அண்டை வீட்டாரும் ஆறுதல் சொன்னார்கள்.
    ஊரும் , உறவும் உதிரியாய் சொன்ன தகவல்களில் உண்மையை உரித்தெடுப்பதற்காக தோழர்கள் உதவியுடன் அவனுக்கான மருத்துவ விபரங்களை சேகரித்தேன்.
    உண்மை என் முகத்தில் காரித்துப்பியது. நீண்டகால நோயாளியான தன் மகனை காப்பாற்றிட முடியாது எனத் தெரிந்தும் கள்ளியும் கற்றாளையும் போட்டு என் மகைனை புதைக்கக் கூடாது என (திருமணமாகாமல் இறந்தால்  சடங்கு ஏதுமின்றி கள்ளி கத்தாளை போட்டுத்தான் புதைப்பார்களாம் ) நோயை மறைத்து  அவசரமாய் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
        எனது அண்ணனும் மகளுக்கு 22 வயதாகி விட்டது எப்பத்தான் கல்யாணம் பன்றது  வர்ர மாப்பிள்ளைளை எல்லாம் நொட்டை சொல்லாதீங்க-டான்னு என்னையும் , தம்பியையும் அடக்கிவிட்டு  அவர்களின் அவசரத்திற்கு  இவரும் உதவி செய்தார்.
        மணப்பந்தலிலேயே பைக் வைக்கவில்லை என்றும் மகளுக்கான நகையில் 2 பவுன் நகை குறைந்ததற்கும் எனது அண்ணன் பட்ட அவமானம்  இதுவரை நாங்கள் சந்திக்காதது.
    மகளின் வாழ்க்கையாயிற்றே  என்று எங்கள் வீட்டு மனையிடத்தில் ஒரு பகுதியை விற்று சமீபத்தில்தான் பைக் வாங்கிக்கொடுத்த கடனையும் நகையையும் சமாளித்தோம்.
    அவமான  நெருப்புகளை அள்ளிக் கொட்டியபோதும் மகளின் வாழ்க்கை என வலி சகித்து புன்னகைத்தோம்.
    ஆனால் 7மாதம் முடியவில்லை அவளின் மண வாழ்க்கையை முடித்து விட்டார்கள்.
    என் மனைவி தொடர்ந்து வற்புறுத்தியும் எங்கள் மகளை நான் இப்போதுவரை நேரில் சந்திக்கவில்லை. அந்த தைரியம் எனக்கு வரவில்லை.
    வீடே துயர அமைதியில் ஒவ்வொருவர் மனதிலும் எங்கள் மகளின் எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளோம்.
    இNது போல ஏராளமான துயரங்கள் நடந்துள்ளது. ஆனால் யாரும் திருந்தவில்லை. ஒரு பெண்ணெனில் அவளுக்கு வாழ்க்கையில் இறுதி இலக்கே திருமணம் தான் எனும் கருத்தை  சமூகம் பெற்றவர்களின் பொதுப்புத்தியில் ஏற்றி வைத்துள்ளது.
    எனவே தான் குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்து வைத்து தங்கள் கடமையை முடித்து விடவேண்டும்  என துடிக்கிறார்கள். அந்த அவசரம் அவர்களின் அறிவைத் தின்று விடுகிறது.
       திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது , ஆயிரங்காலத்துப் பயிர் என அடைமொழியிட்டு அழைக்கப்பட்ட திருமணம்  இன்று பகிரங்கமாய் கொள்ளையடிக்கும் திருட்டுத்தனத்தை அங்கீகரிக்கும் அனுமதிச் சீட்டாய் மாறிவிட்டது.
    நமது முன்னோர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் தான் சில நடைமுறைகளை சம்பிரதாயமாய் சடங்காய் உருவாக்கியிருந்தனர்.
    திருவிழாக்களில், விசேச வீடுகளில் ஒரு பெண்ணைப் பார்த்து அந்தப் பெண் பிடித்துவிட்டால் , அந்த பெண் குறித்து விசாரித்து , அந்த ஊருக்கு அருகிலுள்ள தங்கள் உறவுகள் நண்பர்கள்மூலம்  விசாரித்து,  பெண்ணுக்கு திருமணம்  செய்யும்  முடிவில் இருக்கிறார்களா? என அறிந்து கொண்டு பிறகு மாப்பிள்ளையின் நெருங்கிய  உறவினர்கள் நேரில் சென்று கலந்து பேசி பிறகு முறைப்படி பெண்பார்க்கும் சம்பிரதாயம் அரங்கேறும்.
    பெண் வீட்டார்களும் தங்கள் பங்கிற்க்கு மாப்பிள்ளை  விபரங்களை விசாரிப்பார்கள். வீடுபார்ப்பது, ஜாதகம் பார்ப்பது, தேதி குறிப்பது எனும் தனிச்சம்பிரதாயங்களே.  மாப்பி;ள்ளை  அவரது பெற்றோர் குறித்து  விபரம் அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கும் ஏற்பாடுகள் தான். ஆனால் இந்த நிகழ்வுகள் குறித்த புரிதல்களற்று போனதால் இது விருந்து வைபவங்களாய் மாறிவிட்டது.
    மாப்பிள்ளையின் வீடு பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்ட நெருங்கிய உறவினர்களிடம்  மாப்பிள்ளை அவர்கள் பெற்றோர் குறித்து விசாரித்தால்  நல்ல கவனிப்பு, நல்ல விருந்து, வசதியான வீடு எனவே சிலாகிக்கிறார்கள்.
    இதனிடையே திருமண ஏற்பாடுகளும் இன்று தனியார்மயமாகிவிட்டது. கொடுக்கும் கமிசனுக்கு ஏற்ப மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் பெருமைகள் போலியாக கட்டமைக்கப்படுகிறது. நுகர்வு தாக்கங்கள் நிறைந்து போட்டி உலகமாக மாறிப்போன நிலையில் பொருள் சேர்ப்பதிலேயே நேரம் கடந்து விடுவதால்  திருமண தகவல் மையங்கள் , கமிசன் தரகர்களையே  பிள்ளைகளை பெற்றவர்கள் சார்ந்து நிற்க்க துவங்கினார்கதள். இதற்கு பிறகு தான் ஏமாற்று திருமணங்கள் , போலி திருமணங்கள் , நோய் மறைத்து நடக்கும் திருமணங்கள் அதிகரித்துள்ளது.; இதனால் தமிழகத்தில் ஏராளமான குடும்பங்கள் நிம்மதியை இழந்து தவிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. இது மாற வேண்டும்.

பெண்களும் தங்கள் புகுந்த வீட்டில் நடப்பதை மறைந்து விடுகிறார்கள். குhரணம் கடன்வாங்கி  கஷ்டப்பட்டு பெற்றோர் செய்து வைத்த திருமணம் மகள் நல்லமுறையில் வாழ்கிறாள் என சந்தோசப்படட்டும் அதை கெடுக்கக் கூடாது என நினைத்து மறைத்து விடுகிறார்கள்.
    அதன் விளைவாய் நிகழும் துயரங்களில் ஒன்றுதான் எங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததும்  இது தொடரக்கூடாது.
    குடிப்பதையே அடிப்படை உரிமையாய் புரிந்து கொண்டுள்ளவர்க்ள அதிகரித்து போதைச் சமூகமாய் மாறிவரும் சூழலில் தனது பெண்ணை கொடுப்பது என முடிவெடுக்குமுன் தீர்க்கமாக விசாரியுங்கள்.
மருத்துவச் சான்றிதழ் திருமண உறுதிக்கு முன் நிபந்தனையாக்கப்பட வேண்டும்.
      இடைத்தரகர்கள் கட்டமைக்கும் பெருமை புதைகுழியில் சிக்காமல் நண்பர்கள் உறவுகள் மூலம் விசாரித்து உறுதி செய்திடல் வேண்டும்.
பெண்களும் சமூகமும் வரதட்சனை கேட்க்கும் மாப்பிள்ளையை போதை அடிமைகளை இழிவு செய்து புறக்கணிப்பதுடன் தங்களை வரதட்சணை மூலம் மதிப்பிள்ளா பண்டமாய் மாற்றுவோரை ஒதுக்கித் தள்ள  வேண்டும் .
     புகுந்த வீட்டில் உறவுகள் பிரச்சனைகள் குறித்து பெற்றோரிடம்  பெண்கள் பேசவேண்டும்.  தனக்கு எதிரான தவறான எதையும் பொருத்துக் கொள்ளும் பேதமை ஒழிய வேண்டும்.
    அப்போதுதான் தறுதலையை பெற்றிருந்தாலும் தாலியறுக்க பெண் தேடும் இரக்கமற்ற நாய்களை அழிக்க முடியும்.

Thursday, February 2, 2012

தேசியத்தை காவுகேட்க்கும் முல்லைபெரியாறு அணை

  'வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
         மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் '
என்றான் பாரதி அந்த வழியில் வங்காளம் எனும் அண்டை நாட்டுடன் ஆன நதிநீர்ப் பிரச்சனை மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசு வங்க அதிபரோடு பேசி சுமூகமாக தீர்க்கப்பட்டது. ஆனால் உள்நாட்டிலேயே  அருகாமை மாநிலத்துடனான முல்லை பெரியாறு பிரச்சனை கன்னித்தீவுக் கதையாய் நீள்கிறது. பெற்றோர்,பிறப்பு,வளர்ப்பு , தரம், தகுதி – பயன்பாடு பலம் என. மூளை நிரம்பி எங்கே காது வழியே வழிந்து விடுமோ என அஞ்சும் அளவுக்கு முல்லைப்பெரியாறு அணை குறித்த செய்திகள. ;(அதையே நானும் சொல்லி நானும் போரடிக்க விரும்பவில்லை)
    தமிழக அரசியல் தலைவர்கள,; தமிழ் ஊடகங்கள் அள்ளித் திணித்துள்ள  முல்லைப்பெரியாரின் வரலாறு-புள்ளி விபரங்களால் தமிழர்களின் மூளைகள் வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறது.
    கேரள வெகு மக்களுக்கும் இதே நிலை ஏற்படாமலிருக்க வாய்ப்பேதும் இல்லை. இது அங்கு நடைபெறும் போராட்டங்களின் ஊடாக அறிய முடிகிறது.
    உடமை, உரிமை என உணர்ச்சியைத் தூண்டி இரண்டு மாநிலங்களிலும் மக்கள் போராட்டங்களாக மாற்றியதில் மாட்சிமை பொருந்திய அரசியல்வாதிகளின் பங்கு மகத்தானது.
    பெரியாறுத்தண்ணீரை நம்பியுள்ள தமிழக பாசனப்பகுதி குறித்து கேரளத்திலோ,  அணை உடைந்தால் 4 மாவட்டங்கள் அழிந்து போகும் என உருவாக்கப்பட்ட உயிர் பயம் குறித்து தமிழகத்திலோ விவாதிக்கப்படவில்லை.
    கவனமாய் கைவிடப்பட்ட  இந்த தந்திரத்தால் இரு மாநில எல்லைகளும் போர்களமானது.     கட்டுச்சோறு  கட்டிச்சென்று கம்பம் நகரில் போராடுவதே தமிழ் உணர்வின் வெளிப்பாடாய் கணிக்கப்பட்டது.      
         'கங்கை நதிபுரத்து கோதுமைப்பண்டம்
        காவிரி  வெற்றிலைக்கு மாருகொள்வோம்
        சிங்கமராட்டியர் தம் கவிதை கொண்டு
        சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'
என்ற பாட்டன் பாரதியின் பண்டமாற்று உறவுக் கவியை கரைத்துக் குடித்தவர்களே மாற்றுச்சந்தை ஏற்பாடில்லாமல்  தமிழக காய்கறிகளை கேரளாவுககு அனுப்பாதே என்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிப்பார்களே என தமிழகத்திலோ தமிழக காய்கறி வரத்தில்லையெனில் அந்த பற்றாக்குறையை ஈடுசெய்யவும் அதனால் ஏற்படும் விலை உயர்வும் மக்களை பாதிக்குமே என கேரளத்திலோ எந்த அரசியல்வாதிகளும்  கவலைப்படவில்லை. காரணம் ஊடக வெளிச்சம் தன்னை விட்டு விலகுவதை அவர்கள் விரும்பவில்லை.
    கொட்டடிக்கும்போது மட்டும் குதித்து சாமியாடும் கோயில் பூசாரியாய் கேரள அரசியல் வாதிகள் கொட்டடித்ததும் தமிழக அரசியல்வாதிகள் குதியாட்டம் போடுவார்கள் . இந்த திருவிழா காட்சி வருடம் தோறும் வந்து போகிறது.
    முல்லைப்பெரியாறு மட்டும் பிரச்சனையாகிவிட்டது. அதிலும் மெகா தொடர் பிரச்சனையாகிவிட்டது.
    முல்லைப்பெரியாறு பிரச்சனை முடிவுக்கு வராததற்கு என்ன காரணம் ? அரசியல் என அறிவோமாக....
    சில  தினசரிகளில் வந்தது போல, அல்லது உள்துறை அமைச்சர் திரு.சிதம்பரம் சொன்னது போல தற்போது நடைபெற உள்ள பிரபவம் தொகுதி தேர்தலுக்காக என்பதில் முழு உண்மையில்லை. கேரளத்தின் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முல்லைப்பெரியாறு அணையை பிடித்துக்கொண்டு அரசியல் செய்வது நீண்டகால வரலாறு.
    சுதந்திர இந்தியாவில் 1952-ல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் விடுதலை பெற்றுத் தந்த வீரர்களாய் , தியாகிகளாய் தங்களை முன்னிருத்தி தேர்தலை சந்தித்து அனைத்து மாநிலங்களிலும் நிகரற்ற வெற்றியைப் பெற்ற காங்கிரஸ,; 5 ஆண்டுகால ஆட்சியிலேயே தங்களின்  அடையாளங்களை வெளிப்படுத்தி அன்னியப்பட்டுப்போனார்கள்.
    மாநிலங்களில் மாற்று அரசுகள் முளைத்தன.  அதில் உலகத்தின் அதிசயமாய் கேரளத்தில் 1957-ல் மக்கள் வாக்களித்து ஒரு மாநில ஆட்சியை கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைத்தார்கள். இந்தியாவே தங்களின் பரம்பரை சொத்தாய் இறுமாந்திருந்த காங்கிரஸ் கட்சியும் அதன் எஜமானர்களும் பதறிப்போனார்கள்.
    அதிகாரம் பறிபோகும் மாற்றத்திற்கான முதல் துவக்கமாய் இது மாறிவிடக்கூடாதே என்ற அச்சத்தால் , காரணம் இல்லாத காரணத்தினால் 356-ஐ பயன்படுத்தி 1959-ல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை  எழுந்து நடக்கத் துவங்குமுன் இடுப்பை முறித்துப் போட்டார்கள். அன்றிலிருந்து 1979-வரை கேரள அரசியல் நிலையற்றதாய் மாறிப்போனது கேரள மக்களின் கனவுகளுக்கு கல்லறை கட்டிவிட்டு தங்களது  அரியாசனக் கனவுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.
    இவர்களின் சாகச அரசியலில் சந்தி சிரித்தது,  பதவியை பறித்துக்கொள்ள எதையும் பற்றிக்கொள்ளும் பாதை நோக்கி பயணித்தது காங்கிரஸ் அதில் ஒன்றுதான் முல்லைபப்n;பரியாறு அணைப்பிரச்சனை  .
    1970-க்கு பிந்தைய காலங்களில் பெரியாறு அணைக்கட்டில் கசிவதற்கான அளவினை விட அதிகமான நீர் கசிகிறது என்கிற செய்தி வெளிவர காங்கிரஸ்  அதைக் கைப்பற்றி கற்பனை சேர்த்து கயிறு திரிக்கத் துவங்கியது . அன்று துவங்கி  அச்சம் விதைத்து ஆட்சியை அறுவடை செய்து கொள்ள நினைக்கும் ஆபத்தான அரசியல் விளையாட்டில் அனைவரம் ஆர்வம்  காட்டத் துவங்கினார்கள் இதில் கேரளத்திலுள்ள எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல.
    இயற்கையின் கொடையான நதிநீர், உயிரினம் அனைத்திற்கும் உரிமையானது என்பதை தேசியம்  பேசும் மதிமிகு தலைவர்களுக்கு யார் புரிய வைப்பது . அணையின் பாதிப்பு குறித்து எந்தப்பொறியாளர்களும் பேசாததை இவர்கள் பேசுவதிலிருந்தே பதவி ஆசை பகுத்தறியாது என்பது பளிச்சிடுகிறது.
        இதில் இரண்டு மாங்காய் அடிக்கிறார்கள், ஒன்று நமது உயிர்காக்க உறுதியாய் போராடுகிறார்கள் எனும் நம்பிக்கையைப் பெறுவது. இரண்டு பெரியாறு அணையையே  கேரளத்திற்கேயானதாய் மாற்றிக்கொள்வது . இதன்மூலம் கேரளத் தலைவர்கள் பதவிக்காக மாநில நலனைக் காப்பதற்கே இப்பிறவி எடுத்ததாய்க் காட்டிக் கொள்ள பட்டாம்பூச்சியை பருந்தாகக் காட்டி கேரள மக்களை நம்பிட வைக்கப் போராடுகிறார்கள்.
    தமிழகத் தலைவர்களோ ஆதிகாலம் தொட்டு  தமிழகம் பறிகொடுத்தவற்றின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் விடுதலைக்குப் பிறகு 1956 - மொழிவழி மகாணங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற குரல்கள் உரத்துக் கிளம்பிட பிரிக்கப்பட்ட மாநிலங்களில்  தமிழகம் அதிகமான  பகுதிகளை இழந்தது என்று ஏராளமான விபரங்களை கலைஞர் மாதரியான மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பல தலைவர்களும் ஊடகங்களும் பேசி, எழுதி வருகிறார்கள்.
    அதன்பிறகு 74-ல் கச்சத்தீவில் தமிழகத்தின் உரிமை எனத் தொடர்ந்து வராது வந்த மாமனியான சேதுகால்வாய்த் திட்டம் என பட்டியல் நீள்கிறது.
        அன்றைய நிலையி;ல் தேசிய உணர்வுகள் மேலோங்கியிருந்த நமது முன்காலத் தலைவர்கள் தனது சசோதரர்களுடன் பங்கிட்டுக் கொள்வதாய் நினைத்து பெருந்தன்மையாய் நடந்த  எல்லைப் பங்கீட்டை ஏற்றிருக்கலாம் அந்த பண்பினை நாட்டில் தொடர்ந்து வளர்த்தெடுக்க இதுவரை மத்திய ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் முயற்ச்சி எடுக்காததுடன் தனது சந்தர்ப்பவாத அரசியலால் தேசிய உணர்வுகளை சிதைத்து குறுகிய பிரதேச உணர்வுகள் முளைத்து  வளர்ந்திட உதவினார்கள்.
    பல்வேறு தேசிய இனங்களின்  ஒன்றியமாக வடிவம் கொண்டுள்ள இந்தியாவின்  அனைத்து தேசிய இனங்களையும்  அரவணைத்து தேசத்தின் வளங்களில், வாய்ப்பில், வசதிகளில்,  வளர்ச்சியில் சம பங்கினை சகல இனத்திற்கும்  பிரதேசங்களுக்கும் தர மறுத்ததால் பிரதேச பிரச்சனைகள் முன்னுக்கு வந்தது. அதைப்பிடித்துக்கொண்டு  அமைப்புகள்  உருக்கொண்டு  பிரதேச உணர்வுகளை கிளறி வெறியாக்கி மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி அதிகாரம் பெற்றது.
    இந்தியாவில் 107கோடி மக்களையும் ஒரு உருவமாய், ஒரு குரலாய,; ஒரே உறவாய் காஷ்மீர் துவங்கி கன்னியாகுமரி வரை இனம் மொழி கலாச்சாரம்  வௌ;வேறெனிலும்  உணர்வில் ஒன்றி வாழும் தேசமாய் மாற்றும் மாற்றம் நோக்கி பயணிக்கவேண்டிய தருணம் இது. விட்டதை பிடிக்க வேண்டும் என 1940 காலத்தை நோக்கி திரும்பிட சிலர் ஆர்வம் காட்டுவது ஆபத்தான அரசியல்.  
    இன்று தமிழகம சந்திக்கும் நதிநீர்  பிரச்சனைகள்  குறுகிய பிரதேச  அரசியல் உணர்வு கலந்தது. இதை அரசியல்வாதிகளே  செய்கிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வாதாரம் சார்ந்தும் உயிர்பயம்  காரணமாகவும் அவர்களுக்கு ஒத்துக்போகிறார்கள். பகை உணர்வு கொண்டல்ல .  நமது எதிர்நிலை அவர்களை அந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடக்கூடாது.
    முல்லைபெரியாறு அணையால் 5 மாவட்டங்கள் தமிழகத்தில் பாசன வசதி பெறுகிறது என எல்லோரும் பேசியும் , எழுதியும் வருகிறார்கள். அதில் உண்மையில்லை. இராமநாதபுரத்திற்கு கடைமடைப்பகுதி எனும் அடிப்படையில் மூல வைகையிலிருந்து கிடைக்க உரிமையுள்ள 7 பங்கு தண்ணீர் என்பதே கிடைக்காத நிலையுள்ளது. அதற்கே அண்டை மாவட்டங்களோடு முட்டிமோதும் நிலை இம்மாவட்ட விவசாயிகளுக்கு உள்ளது.  இதில் முல்லைப்பெரியாறு தண்ணீர் எப்படி கிடைக்கும். எண்ணிக்கைக்காக முகவை மாவட்டமும் இடம் பெற்று விட்டது. மாநிலத்திற்குள்ளேயே உரிய பங்கைப் பெற போராடி வரும் நிலை பக்கத்து மாவட்டம் , பக்கத்து தாலுகா என்ற அளவிலேயே உள்ளதை மறந்து விடமுடியாது. இது உணர்வு கலந்த வாழ்க்கைப் பிரச்சனை.
    கர்நாடகா, ஆந்திரா, கேரளாவுடன் நமக்கிருக்கும் நதிநீர் பிரச்சனைகளை தேசிய உணர்வை மேம்படுத்தி அரசியல் ரீதியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டுமே  தவிர தேகபலம் காட்டுவது பிரச்சனையை தீவிரமாக்கும்.
    குறுகிய மனதும் சுயநல அரசியலே குறிக்கோலாய் உள்ள இன்றைய அரசியல் சூழலில் நதிநீர் பிரச்சனைகளுக்கான நிரந்தரத் தீர்வும் தேவைப்படுகிறது. நமது முன்னால் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் முன்வைத்த யோசனையை கவனத்தில் கொள்ளலாம்.
    இன்றிருக்கிற நதிநீர் ஆணையத்தின் பணி என்ன என்பதே தெரியாத சூழலில் தேர்தல் கமிசனைப்போல சுய அதிகாரமுள்ள  தேசிய நதிநீர் கமிஷனை அமைக்கலாம். மாநிலங்களுக்கு உள்ளே உள்ள கண்மாய் , ஊரணி , ஏரி போன்ற நீர்நிலைகளை மாநில அரசு கவனித்து வந்தால் போதும். ஆனால்  நதிகளை நிர்வகிக்க இந்த கமிஷன்  பொறுப்பாக்கப்பட வேண்டும்.  அதனிடம் தேசிய நதிகளை ஒப்படைத்து, மாநில பாசனத் தேவைகளை கணக்கிட்டு, நீர் பங்கீடு செய்வதை அதனிடம் ஒப்படைக்கலாம் . நதி பராமரிப்பு , நதிநீர் பாதைப் பராமரிப்பு, அணை பராமரிப்பு போன்றவற்றை அந்த கமஷனிடமே ஒப்படைக்கலாம். அணைகளின் பாதுகாப்பை இராணுவத்திடம் ஒப்படைக்கலாம்.  இதுவே இன்றைய  இந்திய நதிநீர் பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டுவர உதவும்.
       இன்று  இந்தியாவில் உள்ள சுமார் 23.80கோடி குடும்பங்களில் இன்றும் 72.26சத குடும்பங்கள்  கிராமங்களில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் வேளாண் தொழிலோடுதான்  பின்னிக்கிடக்கிறது. சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் விவசாயம் லாபமற்ற தொழிலாகிவிட்டதால் விவசாய நிலங்கள் வேறுபயன்பாட்டுக்கு மாறி வருகிறது. தமிழகத்தில் பயிரிடப்பட்ட சாகுபடி நிலத்தின்  அளவு 1970-ல் 185 லட்சம் ஏக்கர் 91-ல் 156 லட்சம் ஏக்கர் 2001-ல் 131 லட்சம் ஏக்கர் 2010-ல் 128 லட்சம் ஏக்கர் என குறைந்து வருகிறது. அந்த நிலங்கள் ரியல் எஸ்டேட்  வணிகத்தால் வளைக்கப்பட்டு விட்டது. இது தேசம் முழுமைக்குமான நிலையாகும். இது ஆழமான உணவு நெருக்கடி நோக்கி போவதை உணர வேண்டும். எனவே நீராதாரங்களை சந்தைப் பொருளாக்கிவிடாமல் நீர் ஆதாரங்களை பாதுகாக்க மேம்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.

    மேலும் இந்தியாவின் மலைப்பகுதிகளில் ஏராளமான நதிகள் உருவாகி 1500 டி.எம்.சிவரை நீர் பயனின்றி  கடலில் கலந்து விடுகிறது என்ற கணக்கு நீர்வள ஆய்வாளர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.  ஏழுவழிச்சாலை , நாலடுக்கு மேம்பாலம்  என நமது அரசு ஆண்டுவருவாயான சுமார் 12-இலட்சம் கோடி ரூபாயில் கணிசமான ரூபாயை செலவிடுகிறது. ஆனால் 75 சதம் மக்கள் நம்பி வாழ்ந்து வரும் வேளாண்மை தொழிலை பாதுகாக்க வீணாய் கடலில் கலக்கும் நதிகளை தடுத்து அல்லது திருப்பி நீரை சேமித்தால் வேளாண் தொழிலையும் அதை நம்பியுள்ள மக்களையும் பாதுகாக்க முடியும் என தொடர்ந்து ஆய்வாளர்கள் வழியுறுத்திவருகிறார்கள்.  இதை மத்திய மாநில ஆட்சியாளர்களும் கவனத்தின் கொள்வது அவசியம் . அப்படி செய்தால் இந்திய மக்களிடையே பகைமை உணர்வு வேர்விடும் வாய்ப்பை தடுத்திட முடியும்.  இந்த திசையில் நமது அரசுகளும் , அரசியளாளர்களும் சிந்திக்க வேண்டும். நமது ஆசை நிறைவேறுமா...?


                        மங்களக்குடி நா.கலையரசன்

Wednesday, January 25, 2012

நிவாரணம் வந்தது......நீதி..?

                                    
                                        
  
         இந்தியச் சமூகத்தின் மூலைக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள சாதிவெறி தன்னை ஒழிப்பதாய் பிரகடனம்  செய்து,  புறப்பட்டு , போராடி  செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்களையெல்லாம் விழுங்கிவிட்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டதுடன் அதிகார ஆதரவுடன் அரசுத்துறைகளுக்குள்ளும் அழுத்தமாய் ஊடுருவி நீக்கமர நிறைந்திருப்பதை அவ்வப்போது  பகிரங்கமாய் வெளிப்படுத்தியும் வருகிறது.
      கொடியங்குளடம், நாலுமூலைக்கிணறு, வாச்சாத்தி,தாமிரபரணி-என அதிகார வேடத்தில்  சாதி வெறி நடத்திய மலைவாழ் மக்கள், தலித்துகள் மீதான படுகொலைப் பட்டியலில் பரமக்குடியும் இணைந்து 5 மாதங்கள் கடந்து போயுள்ளது.
       என்றாலும் காவல் துறையினரின் வெறியாட்டத்தில் உறவை இழந்த குடும்பங்களில் இழப்பின் வெறுமையிலும் உடல் உறுப்புகள் உருக்குலைக்கப்பட்டவர்கள் தங்களின் காயங்களின் வேதனை  வெளிப்படும்போதும் அந்த  செப்டம்பர்-11 –ன் கொலைவெறிக் காட்சிகள் நிழலாடி ரண வேதனையை  அன்றாடம்  அனுபவித்தபடி உள்ளனர்  மாவட்ட மக்கள் மத்தியிலும் நீங்காத காயத்தை நிரந்தரமாக்கிவிட்டது.
        பொதுமக்களை அச்சுறுத்தி ரௌடியாக நினைப்பவன் ஊர் மந்தையில் வைத்து அப்பாவி ஒருவனை அடித்து துவைப்பது மாதரி தமிழக ஆட்சிக்கு எவர் வந்தாலும் தனக்கு எதிராய் நடக்கும் போராட்டங்கள் அதை வெளியிடும் ஊடகங்களை திசை திருப்பிடவும் ஆட்சி குறித்த அச்சத்தை விதைக்கவும் உழைத்து பிழைக்கிற அப்பாவி தலித் மக்களையும் மலைவாழ் மக்களையும் குறிவைத்து தாக்குவதை வழக்கமாய் கொண்டுள்ளனர். இதுவரை நடந்த தாக்குதல்களை அவதானித்தாலே அது புரியும்.
        இதன் தொடர்ச்சியாக நடந்த  பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 தலித்துகள் கொல்லப்பட்டதும் உடனடியாய் களத்திற்கு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னனி காவல்துறையின் இந்த காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டை கடுமையாக கண்டித்தது உறவுகளை பறிகொடுத்த குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொண்டதுடன் நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியது.
        எந்த இழப்பீடுகளும் உயிர் இழப்பை ஈடுசெய்யமுடியாது என்றாலும் பாதிக்கப்பட்ட உறவுக்கு இது ஒரு உதவியாய் அரசுக்கு இது அவதாரமாய் இருக்கட்டுமே என முடிவுசெய்து காவல்துறையால்  படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்  மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு  நிவாரணம்  இப்படிஒரு படுகொலை நடக்க யார் காரணம் எனக்கண்டறிய சி.பி.ஐ விசாரணை , துப்பாக்கிக்சூட்டை நடத்தியவர்களை பணி இடைநீக்கம்  செய்வது என்ற கோரிக்கைகளை முன் வைத்து காவல்துறையின் கடும் நெருக்கடி –மிரட்டல்களை மீறி அக்டோபர் 2-ம்தேதி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
        தொடர்ந்து நாம் தீண்டாமை ஒழிப்பு முன்னனியாகவும் சமூக அமைப்புகளுடன் இணைந்தும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டோம்  பரமக்குடி துப்பாக்கிச்சூடு  எதிர்ப்பு நடவடிக்கைக்குழுவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வளர்கள்  நீதிபதிகளை கொண்ட  பொது நீதி விசாரணையை நடத்தினோம் .  அ.தி.முக அரசு அசையவே இல்லை.
        முதல்வராய்  ஜெயலலிதா பொருப்பேற்ற பிறகு நீதி மன்றங்களின் குரல்கள் மூலமே நியாயம் பெறமுடிகிறது என்கிற தற்கால உண்மை உணர்ந்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்  பெயரில் வழக்குத் தொடர்ந்தது, மனித உரிமை மீரல்கள் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் சட்டரீதியாய்  போராடி வரும் தமிழக மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி  வாதாடினார் அதன் நியாயம் உணர்ந்தது நீதிமன்றம்.
        இழப்பீடு குறித்தும் சி.பி.ஐ-விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5-லட்சம்  இழப்பீடு  வழங்கப்பட்டது. தற்போது அரசுப் பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
        வீரம்பல் திரு.பன்னீர்அவர்களின் மகள் ரெபேக்காள்  இளநிலை உதவியாளராகவும் ,  கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனியின் அண்ணன் திருநாவுக்கரசு தலையாரியாகவும,; காக்கனேந்தல் வெள்ளைச்சாமி அவர்களின் மகன் சக்திவேல் டாஸ்மார்க்கிலும் ,  மஞ்சூர்  ஜெயபால் மனைவி காயத்திரி அலுவலக உதவியாளராகவும் , பல்லவராயனேந்தல்  கணேசன் அவர்களின்  மகன் குணசேகரன்  அலுவலக உதவியாளராகவும் அரசு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.
        பணி  ஆணை  வழங்கப்பட்டதும் இது தீண்டாமை ஒழிப்பு முன்னனியும் சமுதாய அமைப்புகளும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டதென பகிர்ந்துகொள்வதற்காக நாம் அனைவருடனும் தொடர்பு கொண்டு பேசினோம்.  நமது வாழ்த்துக்களை  பகிர்ந்து  உரையாடி முடிக்கும்  போது  அதில் பலர் அழுத்தமாய் முன் வைத்தது
    'கிடைச்சது வெறும் நிவாரணம் தானேண்ணா...
    நியாயம் கிடைக்கலையே..?' என்பது தான்
இது வெறும் வார்த்தையாக எமக்கு படவில்லை.  மனதின் ஆழத்தில் அழுந்தி கிடக்கும் துயரத்தின் வலியாகவே  உணரமுடிந்தது.  இந்த கொடுமையான படுகொலைகளைச் செய்த காவல்துறையினர்  எவரும் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதும் துப்பாக்ச்சூடு  நடத்திட  உத்தரவிட்ட சூத்திரதாரி யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. உயர்நீதிமன்றத்தின்  உத்தரவால் உருப்பெற்றுள்ள  சி.பி.ஐ விசாரணை இந்த மர்மங்களை மறைத்திருக்கும்  அதிகாரத் திரை விலக்கி அம்பலப்படுத்தும்  என்பதுடன் அந்தக் கொலைகாரர்களுக்கும்  தண்டனை கிடைக்கவும்பயன்படும் என்று நம்புவோம்.  அதுவரை நாம் உயிர்ப்புடன் இணைந்து செயலாற்றுவோம்.  அது தான் பரமக்குடி போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடைபெறாது முற்றுப்புள்ளி வைக்கும்.

                        மங்களக்குடி நா.கலையரசன்



Monday, January 16, 2012

மாட்டுக்கறி இழிவானதெனும் கற்பிதம்

தமிழகத்தின் அரசியல் பொது வெளியில் இட நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருந்த – நக்கீரன் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான  பிரச்சனை 'வருந்துகிறோம்' எனும் ஒரு வரியால் முற்றுப் பெற்றது.
    முன்பொறுமுறை  நக்கீரன் வாரஇதழ் சந்தித்த நெருக்கடியில்  ஆயிரம்  கரங்கள் ஆதரவாய் நீண்டது.  ஜெயலலிதாவும் கடும் கண்டங்களை சந்தித்தார். இப்போது அந்தச் சூழல் இல்லை. காரணம் விவாதிக்கப்பட்ட பிரச்சனையில் இருவருமே ஒரே கருத்தியலில் காலூன்றி நின்றதுதான்.
    சமீபகாலமாய் வாசிக்கும்போதே தி.மு.க-வின் சார்பில் வெளியிடப்படும் கையோடாகவே  கருதத்தூண்டும் வகையில் மாறிப்போன நக்கீரன் சினிமா நடிகைகளின் அந்தரங்கங்களை துப்பறியும் அத்தியாவசியப் பணிகளுக்கிடையில் முதல்வர் ஜெயலலிதா  விருப்பமாய் உண்ணும் உணவு எது எனும் விபரத்தை புலனாய்வு செய்து வெளியிட்டதும் , தமிழக முதல்வரும் தமிழக பிரச்சனைகளான விலை உயர்வு, முல்லைப்பெரியாறு, கொலை-கொள்ளைகளை ஒதுக்கி வைத்து விட்டு மிக முக்கிய ஜீவாதாரப் பிரச்சனையாக இதை கையில் எடுத்துக்கொண்டு அவரும்,  அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் , தலைவர்கள்; நடத்திய ஆவேசப் போராட்டங்களும் அறிவார்ந்த பொது மக்களை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது (என்ன கொடுமை சார் இது...)
    'கருத்து முதல்வாதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை லோகாதவாதிகளாய் நின்றே சந்திக்கிறார்கள். அதே போல பொருள் முதன்மை தத்துவம்  பயின்றோர் அதன் பிரதி நிதி என்போர் பல பிரச்சனைகளை கருத்து முதன்மை நிலை நின்றே கையாள்கிறார்கள் என்பார் ஜார்ஜ் பொலிட்சர்' . இதையே எளிய முறையில் அறிவியல்  பேராசிரியர்கள் விஞ்ஞானிகள், மேதைகள் என புகழப்படுவோர்  பலர் நடைமுறையில் காலங்காலமாய் கை மாற்றி வந்துள்ள பத்தாம்பசலித்தனமான கருத்துக்கள் மூட நம்பிக்கைகளை ஒரு விவரமற்ற பாமரனாகவே கடைபிடித்து வாழ்கிறார்கள். அப்படியானவர்களை படித்தவர்கள் அறிவைஅறிந்தவர்கள் என எப்படிச் சொல்வது அப்படியானவர்கள் படித்ததெல்லாம் தேர்வுகளில் மதிப்பெண் பெறவே .. என்பார் செம்மலர் இலக்கிய இதழின்  ஆசிரியர்  எங்கள் தோழர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்கள். இவை எத்தனை உண்மை என்பதை தற்போது பரபரப்பாக இவர்கள் நடத்திய 'மாட்டுக்கறி'  குறித்த வாத பிரதிவாதங்கள்  உணர்த்துகிறது.
        பரபரப்பு செய்தி வெளியிடுவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட நக்கீகரன் வார இதழே பரபரப்புச் செய்தியானது வினோதம்.
       
பிரச்சரனயின்  மையமான இருவரில் ஒரு சாரார் பத்திரிக்கையாளர். இன்னொருவர் மிகப்பெரிய படிப்பாளி அவருக்குதெறியாத விபரமே இல்லை என அவரது கட்சியினர் மற்றும் சில அரசியல் தலைவர்களால் பாராட்டப்படுபவர். இவர்கள் இருவருமே தமிழ்  அறிவு சார் மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களாய் சொல்லப்படுபவர்கள். ஆனால் அவர்கள் இப்பிரச்சனைகளை கையாண்ட விதத்தினை நோக்கினால் எனக்கு அப்படி எண்ணத் துணிவில்லை.
    எங்கள் கிராமத்தில் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இரண்டு பெண்கள் சண்டைபோட நேர்ந்தால் எதிர் பெண்ணை இழிவு செய்வதற்காக போடி...பறப்பயலோட போனவளே..என வசை பொழிவதை காணமுடியும். இதன்மூலம் அந்தப்பெண் நினைப்பது என்ன' ஒரு கீழ்சாதிப்பயலோட சேர்த்து கேவலப்படுத்தீட்டம்ல.... என்பதுதான்.  இன்னொருத்தியோ  குறவனோடு போனவள் என சான்றிதழ் தந்து வசையாடுவாள் . இந்த வாதப்பிரதி வாதத்தில் எங்கேனும் மேதமை தென்படுகிறதா?  இந்தியச் சாதிச் சமூகம் இவர்களின் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருக்கிற சாதிச் சாக்கடை நாத்தம்  வாய் வழியே  வெளியேறுகிறது என்பதைத் தவிர  இதே மாதிரியின் அடுத்த பகுதியாய்த்தான் நக்கீரனின் புலனாய்வும் ஜெயலலிதாவின் எதிர்வினையும்.  இவர்களின் செயல்பாட்டில் துளிகூட  கற்ற அறிவு வெளிப்படவில்லை.
        ஏதோ ஒரு கூட்டத்தில் மறைந்த எம்.ஜி.ஆர்  அவர்கள் ஜெயலலிதா மாட்டுக்கறியை விரும்பி சமைத்து சாப்பிடுவார் எனச் சொன்னாராம். அட்டைப்படக் கட்டுரையாய் வெளியிடும் அளவுக்கு இதில் அதிர்ச்சியான வினோதமான செய்தி என்ன உள்ளது ? நமக்குப் புரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவை இழிவுசெய்யும் நோக்கம் நிச்சம் உள்ளது.
    உலகம் முழுவதும் இந்தியாவிலும் மாட்டுக்கறியை விருப்பமான உணவாக ஏற்பவர் அதிகரித்து வரும் நிலையில் அதை வைத்து ஒருவரை இழிவு செய்யு முற்பட்டது ஏன். மாட்டுக்கறி என்பது(மிலேச்சர்கள் உணவாம் )தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்களின் உணவு என மநுவின்  அடிமைகளால் கட்டி வைக்கப்பட்டுள்ள வஞ்சகக் கருத்தியல்  நக்கீரனையும்  பற்றிக் கொண்டுள்ளது தெரிகிறது. 
        இந்த போக்கால்தான் அறிவுத்துறையினர் விலகி  நின்றார்கள். ஊடகங்கள் விமர்சித்து எழுதின. நீதிமன்றத்தில்  நக்கீரன் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மெத்தப்படித்த இந்த மேதாவிகளின் இந்த கருத்து அகநிலை உணர்வெனில் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே '  என நக்கீரனுக்கும் சொல்ல வேண்டியது நம் கடமை. 
        நக்கீரனில் வெளியான இந்த கருத்தை முதல்வர் எதிர்த்து சாமியாட்டம் போடாமல் இருந்திருந்தால் வேறுவகையான கண்டனங்களை நக்கீரன் சந்தித்திருக்கும்.  நிதானமே நெருங்கமுடியாத நெருப்பல்லவா அவர் . அவர் நிதானமாய் இருப்பார் என எதிர்பார்ப்பது நம்மை சிறுபிள்ளையாக்கும்.
        இயல்பான குணத்துடன் கர்ச்சித்து எழுந்தார். கட்சியினர் , எம்.எல்.ஏக்கள் முன்னனித் தலைவர்களின் முக்கியப்பணியாய்  அலுவலகத்தாக்குதல் , ஆபாச அர்ச்சனை என போர்க்களமானது தமிழகம்.
        ஏன் இந்த ஆர்ப்பாட்டம் அம்மாவின் கருணைப்பார்வைக்கும் , பதவி அறுவடைக்கும் முக்கிய தலைவர்களெல்லாம் முன்வரிசையில்  நின்றார்கள்.  அவர்கள் அப்படி பொதுவெளியின் அமைதி கெடுத்ததை ஜெயலலிதா  கண்டிக்காதது மட்டுமல்ல அவரும் ஆவேச உச்சம் தொட்டார்.  எதனால் இத்தனையும். பிறப்பால் பிராமணரான தன்னை மிலேச்சர்களின் உணவை உண்டதாய் சொல்வது தனது உயர்சாதிக் கிரீடத்திற்கு உலைவைக்கும்  என பதறிப்போனார். சொந்த சாதி சாபமிட்டு விடக்கூடாதே எனத்துடித்து நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன் என சத்தியம் சுமக்கும் அறிக்கை வெளியிட்டார். இத்தனையும் எதற்கு..? சகல விபரமும் தெறிந்த படிப்பாளிக்கு உணவில் இழிவானதொன்றும் இல்லையெனத் தெரியாமல் போனது துரதிஷ்டம்.
        தன்னைப்பற்றி ஒரு தவறான செய்தி வெளிவந்தால் உண்மையெனில் தைரியமாய் ஏற்பதும், இல்லையெனில் அழுத்தமாய் மறுப்பதும் கற்றறிந்தவரின் பண்பான நடவடிக்கை. 'மிகுதியான் மிக்கவை செய்தாரை –தாம்தம் தகுதியான் வென்றுவிடல்' என்பான் வள்ளுவன். அவை மீறப்பட்டதற்கு காரணம் மாட்டுக்கறி என்பதுதான். அந்த செய்தியே மான்கறி  என வந்திருந்தால் இத்தனை பதட்டம் இருக்காது. உலகத்தில் 90 சதவீதம் பேர் உண்ணும் உணவை இவர்கள் இருவரும் இழிவானதாய் முன்வைத்து வாதிடுவதில்  அதை உண்பவரையும் சேர்த்து இழிவு செய்வதை மறந்து விடுகிறார்கள். அல்லது ஆமா..அப்படித்தான் செய்வோம்  உங்களால் என்ன செய்யமுடியும்  என சவால் விடுகிறார்கள்.  பிறர் உண்ணும் உணவை இழிவு எனச் சொல்ல எவருக்கும் உரிமையில்லை. இனி ஒரு முறை இப்படி ஒரு திமிர்த்தன விவாதத்தை சமூக பொது வெளியில் எவர் துவங்கினாலும் மாட்டுக்கறியை உணவாய் கொள்வோர்  அந்த திமிர் உடைப்பார்கள் எனும் அச்சத்தை உருவாக்க வேண்டும்.  
        மேற்கண்டவை எதிலிருந்து  புறப்படுகிறது என்றால் மாட்டுக்கறி உண்போர் இழிவானோர்  எனும் மடத்தனமான கருத்தியல் தான் .  ம்.... இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கேடு கெட்ட மநுவின் பிணத்தை சுமந்து திரியப்போகிறதோ இந்த சமூகம்...
       


Tuesday, January 10, 2012

தலைமுறைப் பகை

 எதனை இழந்தாய்
இத்தனை கோபம்
அடிவயிற்றில்  அக்கினி
தொட்டதுபோல்
இத்தனை ரௌத்திரம்

ஒழுக்கமும்
பண்பாடும் பிரள
வாழ்வதாய் பகிரக்கேட்டு
பதறிப்போகாத நீ ......

பத்மநாப கோவிலின்
சுரங்கமாய்  கார்டன்
காட்சிப் படுத்தப்பட்டபோது
கலங்கிடாத நீ.....


ஊரைச் சுருட்டியதாய்
துரத்திய சம்மனுக்கு
ஊருக்கு ஊர் போய்
உள்ளேனய்யா... என்றெதென்னி
வருந்தியறியா நீ...

மாமிசம் உண்டாய்
எனும் செய்தி
மானப்பிரச்சனையாய்
மாறியது வியப்பு

மாமிசம் தொடா
மானிடப் பிறவியா நீ...
மாறிவந்த காலம்
அறியா மனுசியா நீ...

மாமிசம் புசிப்பதற்கே
யாக குண்டம் கண்ட
அசைவ அக்கிரகாரத்தை
அறியாத பேத்தியா நீ....

நீ உண்ட தாய் பாலில்
கான்வெண்ட கல்வியில்
கனவுகூட  காட்டாத
நிகழ் அதிகார வாழ்க்கையில்
எங்கள் ரத்தமும் வியர்வையும்

பிறப்பை-...நிறத்தை....
இருப்பை....உழைப்பை ...
பிரித்திழிவு செய்த
பரம்பரை பகையில்
இன்றெங்கள் உணவும் ..

உழைப்போர் தாழ்ந்தோரென
ஓதிவந்த திமிர்
ஒடுக்காது விட்டதால்
உழைக்கும் விலங்குவரை
விரிவுபடுத்தப்படுகிறது.

வரலாற்றின் பக்கங்களில்
வலிமை சேர்க்கும்  பலர்
அசைவர்கள் என்பது
அசையா உண்மை

உலகின் மிகுதியானோர்
உண்டிடும் உணவிது
மாமிசம் உண்பவர்
இழிவானோர் என்பது
மலிவான  மநு புத்தி.....
                மங்களக்குடி – நா.கலையரசன்
   


Saturday, December 10, 2011

மீண்டும் ஆக்கிரமிப்புப் போர் அதே வணிக வடிவில்


           தற்போது அச்சு ஒளி ஊடகங்களின் பேசுபொருளாக்கப்பட்டுள்ள விசயம் சிறுவணிகத்தில் அன்னிய மூலதனத்தை மத்திய அரசுஅனுமதித்தது குறித்துதான் . இதனையொட்டி இந்திய பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளால் அணல் தகிக்கும் நிலையேற்பட்டது. 2011 நவம்பர் 22 துவங்கி டிசம்பர் 7வரை பாராளுமன்றம் முடக்கப்ட்டது. ஒருசில கட்சிகளைத்தவிர ஏனையஎதிர்கட்சிகள் எதிர்த்து போராடி வருகிறார்கள். சிறு வணிக நிறுவனங்கள் ஒரு நாள் கடை அடைப்பு செய்து தங்கள் எதிர்ப்பை அரசுக்கு சொன்னார்கள்.   இந்த அதிரடிகளால் அசந்துபோன  எது நடந்தாலும் கவலைப்படாமல் கைபேசியும் கையுமாய்த் திரியும் இந்திய குடிமகன்களுக்குக் கூட இது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
          அப்படி என்ன சட்டத்தை;தான் கொண்டுவருகிறது மத்திய அரசு..?  பெரும் தொழில்களையெல்லாம் கூட முழுவதுமாய் விழுங்கி சுக்குக் கசாயம் இல்லாமலேயே செரிமானம் செய்துவரும் வெளிநாட்டு நிறுவனங்களை நமது நாட்டில் சிறுவணிகத்திலும் அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதனை செயல்படுத்தவும்  முனைகிறது. அதாவது காய்கறிக்கடை மளிகடைக்கடைகள் வைக்க அவர்களுக்கும் அனுமதி தருகிறது . எப்படியெனில்  ஒரே பொருளாக விற்றால் 100 சதவீதம்  மூலதனம்  போட்டு அவர்களே செய்யலாம் பல்பொருள விற்பனை என்றால் 51சதவீதம் மூலதனம் போட்டு வணிகம் செய்யலாம் என்பது தான் அந்த சட்டத்தின் சாரம்.
    ஒருமுறை இந்தியாவுக்கு வருகை தந்த 'மைக்ரோ சாப்ட்வோ'; அதிபர் 'பில்க்கேட்ஸ'; சொன்னார். ஏந்த நாட்டிலும் இல்லாத வகையில் இந்தியாவில் மட்டும் தான்  எந்த நேரத்திலும்  தேனீர் குடிக்கும்  மனிதர்களும் கடைகளையும் நான் பார்த்தேன்.  இந்தியாவில் என்னை கவர்ந்தது இதுதான். இதுகுறித்து ஆய்வு செய்வேன்  என்றார். காரணம் பிற நாடுகளில் பருவகால நிலைகளுக்கேற்பவே வௌ;வேறு வகையான பானங்களை பயன்படுத்துவார்கள். இந்தியாவில்தான் காலை, மாலை, இரவு, கோடைவெயில்,அடைமழை என காலமுறையின்றி எப்போதும் தேனீர் கடைகளிலும் பேக்கரிகளிலும் கூட்டம் அலைமோதும். போதை அடிமைகளைப் போல டீ அடிமைகள் இந்தியாவில் அதிகம். இதைக்கண்டுதான் இந்த உலகப்பெருமுதலாளி  தேனீர்கடை நடத்திட யோசிப்பதாய் சொன்னார்.
    இப்படி இந்தியாவின் சிறுதொழில்களின் மீது ஓநாயாய் கண் வைத்திருந்த வெளிநாட்டு பெருமுதலாளிகள் அமெரிக்காவின் உதவியுடன் மத்திய அரசுக்கு நெருக்கடி தந்து இந்த அனுமதியை பெற்றுள்ளனர். முதல் கட்டமாய் அமெரிக்காவைச் சேர்ந்த 'வால்மார்ட்' பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'கேரிபோர்' இங்கிலாந்தைச் சேர்ந்த 'டெஸ்கோ எனமூன்று ராட்சத நிறுவனங்கள் 53 நகரங்களில் கடைகளை துவங்கிடப் போகிறதாம். 
    வால்மார்ட்டைப் பொருத்தவரை தனது கடையை 20 லட்சம் சதுர அடிப்பரப்பில் 650-லிருந்து 1000 கோடிவரை மூலதனம் போட்டு பல்பொருள் அங்காடிகளை திறக்கப்போகிறதாம்(என்ன சொல்லும் போதே சும்மா அதிருதுல்ல). நீங்கள் ஒரே கடைக்குள் நுழைந்தால் போதும் வேண்டிய எந்தப் பொருளையும் வாங்கிக்கொண்டு அலைந்து திரியாமல் வீட்டுக்கு வந்து விடலாம்.  பொருள்களோடு உங்களுக்கான பொழுதுபோக்கு  அம்சங்களும் இருக்கும் அக-புற  நுகர்வு பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்கிறார்கள். தற்போதே உள்ளுர் பணக்காரர்களால் பல நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர்மார்க்கெட் வியாபாரம் சூடுபிடித்துள்ள பகுதிகளை ஆய்வு செய்து பாருங்கள் . அந்த நகரத்திற்கு சூப்பர் மார்க்கெட் வந்த பிறகு 50 சிறு கடைகளாவது மூடப்பட்டிருப்பதை காண முடியும். இந்த நிலையில் பன்னாட்டு  நிறுவனமான வால்மார்ட் அறிவித்திருக்கும்  பிரம்மாண்ட திட்டத்தை அனுமானித்தால்  ஒரு கடையே இந்த அதிரடியென்றால் பிறகடைகளும் சேர்ந்தால்..? மேலும் பல நிறுவனங்கள் இந்த வணிகத்தில் நுழைந்தால் (..ம்  ....இப்பவே கண்ணக்கட்டுதா...?) இந்திய சிறு வணிகச்சமூகமே அதகலமாகிப் போகும்.
    ஆனால் மத்திய அரசோ, ஒரே இடத்தில் உலகத் தரமான பொருள்கள் கிடைக்கும.;  1 கோடிப்பேருக்கு உடனடியாய் வேலை கிடைக்கும் . விவசாயிகள் கூடுதல் பலன்பெருவார்கள் என அம்புலி மாமா கதையைஅள்ளி விடுகிறது.  இதை சில காரியக்காரர்கள் அப்படியே  அனைவருக்கும் அஞ்சல் செய்கிறார்கள்  அப்பாவிகள் சிலரும் இந்த கனவு வலையில் கட்டுண்டு போகவும் விரும்புகிறார்கள்.
    இந்த காரியக்காரர்களான உயர்த்தட்டு வர்க்கத்தினர் மேலைய நாகரீகத்தில் மூழ்கிக் கிடப்பதால் இது போன்ற வசதிகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது  அவர்களுக்குத் தேவையான அனைவருக்கும் தேவையானது என நம்ப வைக்கும் ஆளும் வர்க்கங்களின் கொள்கை பிரச்சாரகர்கள் இவர்கள் . எனவே இதை பொதுக் கருத்தாக்கிட முயல்கிறார்கள்.
    ஆனால் இத்தனையையும் மீறி இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது நம்பிக்கையளிக்கிறது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையில் இந்த திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டும் எனபிரதமர் பதறுவது ஏன்...?
    1917-ல் உலகின் முதன் முதலாய் முண்டாசுக் கவிஞன் பாரதி வர்ணித்தபடி ஆகா வென்றெழுந்த யுகப்புரட்சி மூலம் ரஷ்;யாவில் தொழிலாளி வர்க்க அரசு அமைந்தது. அதன் கொள்கையில் , மக்கள் நலனை முன்னிருத்திய திட்டங்கள் அனைத்தும் விடுதலைக்கு  போராடிய அனைத்து நாடுகளின் மக்களிடமும் பெரும் தாக்கத்தை, செல்வாக்கை உருவாக்கியது. நமது விடுதலைக் கவிஞன் பாரதியைப் போல அறிஞர்கள் பலரும் அந்த நாட்டை நேசித்தனர். உலக அரசியல் போக்கை புரட்டிப்போட்ட ரஷ்ய புரட்சியை வியந்து போற்றினார்கள். மக்களின் மனப்போக்கை அறிந்த விடுதலைபெற்ற தேசகத்தின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் மக்களிடம் இருந்த சோசலிச தாக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சோசலிச கருத்துக்களை பேசியது; மட்டுமல்லாமல். சோவியத் அரசை பின்பற்றி பொதுத்துறைகளை கட்டமைத்தார் சமூக நலத்திட்டங்களை தீட்டினார். நிர்ணயிக்கப்பட்ட வளர்ச்சிக்கு கால இலக்கை தீர்மானித்து அந்த திட்டத்திற்கான பெயரை சோவியத்தின் மாடலாய்  5 ஆண்டு திட்டம் எனபெயர் வைத்து இங்கிருப்பதும் சோசலிசத்தை உள்வாங்கியஅரசுதான் என மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.  அதன் ஒரு பகுதியாக உருவான திட்டங்களில் ஒன்றுதான் சிறு தொழில்களை உருவாக்க ஊக்குவித்தது அதை பாதுகாப்பது அதை வளர்ப்பது என அரசை செயல்படுத்தினார்.
    1980-வரை நேருவின் கொள்கை அடிப்படையிலேயே சிறு தொழில்களை  பாதுகாத்து அவற்றை பாதிக்கும் எதையும் அரசு ஊக்குவிக்காத நிலை இருந்தது.  எனவே தான் 100 கோடிக்குள் மூலதனம் போட்டு நடைபெறும் தொழில்களில் 100கோடிக்கு மேல் மூலதனம் போட தகுதியுள்ள தொழில் நிறுவனங்கள் நுழையக்கூடாது என சட்டப்பாதுகாப்பு இருந்தது.  அதனால் 1500 தொழில்களுக்கு மேல் நடைபெற்ற சிறு தொழில்கள் பாதுகாக்கப்பட்டது.     இதனால்  கோடிக்கணக்கான  குடும்பங்கள் அரசை எதிர்ப்பார்க்காமல் சுயமாய் தங்களின் வாழ்க்கைக்கு வழியை ஏற்படுத்தி கொண்டதுடன்  பல கோடி பேருக்கு வேலை வாய்ப்பையும் தந்தனர். 
இந்த நிலையில் தான் உலகை மிரட்டிச் சுரண்டுவதற்கு பெரும் தடையாக இருந்த சோசலிச சோவியத் யூனியன் 1989-90-ல் பின்னடைவை சந்தித்தது . இதனால் உற்சாகமடைந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்குமாய்  உருவாக்கி வைத்துள்ள  முதலாளிகளின் காரியக்கமிட்டியான அமெரிக்க தலைமையில் செயல்படும் ஜி 8 நாடுகள் சேர்ந்து உலகை கொள்ளையடிக்க ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்கு உலகமயம் எனப் பெயரிட்டார்கள்.   இதை உலக நாடுகளை ஏற்க வைக்க, அங்கம் வகிக்க  வலியுறுத்தி பல நெருக்கடிகளை செய்தன. இந்த திட்டத்தை  இந்திய பெரும் முதலாளிகளும் உற்சாகமாய் வரவேற்று இங்குள்ள அரசையும் ஏற்க வைத்தனர் . வேண்டாம் என வந்த எதிர்ப்புகளை கூட உலகமே இணைந்து வருகையில் நாம் தனித்து நின்றால்  ஊரும் உறவும் ஒதுக்கிவைத்துவிடும் என்றார்கள் . இந்தியபொருளாதாரத்தை பாதுகாக்கும்  பலமான அரண்களை உடைத்து நொறுக்கும்  பல நிபந்தனைகளையும் ஏற்றார்கள்.  சமூக நலத்திட்டங்களின் குரல்வலைகளை நெறித்தார்கள். உணவு மானியங்களில் கைவைத்தார்கள்.வேளாண் தொழிலுக்குள்ளும் இவர்களின் வேட்டைக்கு வழி விட்டார்கள். ஏற்றுமதி எனும் பெயரில் உணவு தானிய பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு இங்குள்ளவர்களை பசியின் கொடுமைக்கு பலிகொடுத்தார்கள்.   வாய்க்கும் வயிற்றுக்கும் போராடும்  நிலையில் மக்களை வைத்தால் தான் வசதிகள் கேட்டு  போராடமாட்டார்கள் எனும் சூத்திரத்தை கைக்கொண்டார்கள் . ஆனால் மறுபுறம் 2008 தொடங்கி 2010- வரை மட்டும் இந்திய மற்றும் அந்நிய பெரும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகள் என்ற வகையில் மட்டும்  14,28,028 ரூபாயை வாரி வழங்கினார்கள். உலக மயத்தை ஆதரித்த பலனை இவர்களே தொடர்ந்து பெற்று வருகிறார்கள். மறுபுறம் தொடர்ச்சியாக ஆண்டு வந்த காங்கிரஸ் பி.ஜே.பி அரசுகளால் வாழ்க்கையே நொறுங்கிப் போய் உருக்குலைந்து போன சாதாரண மக்களுக்கான , மீதம் இருக்கும் நலத்திட்டங்களையும்  பறித்துக்கொள்ள இவர்கள் தயங்கவே இல்லை. இதனால் தான்  ' அன்றைக்கே அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் சந்தையாக மூன்றாம் உலக நாடுகளை மாற்றும் சதி இது . இவர்கள் போடும்  நிபந்தனைகளை நாம் ஏற்றால் நமது நாடு  கடும் நெருக்கடியை சந்திக்கும் எனவே உலக மயத்தில் நாம் இணைய தேவையில்லை'  என இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தார்கள். அந்த எதிர்ப்பை மீறியதன் விளைவுதான் இன்று  நாடு சந்திக்கும் இத்தனை பிரச்சனைக்கும் காரணம்.  நாடு  ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    இந்தியாவை  பொறுத்தவரை  பொதுத்துறையை பாதுகாப்பு சுயாதிபத்தியம் எனும் வார்த்தைகள் ' அவுட்டாப் பேஷன்' -ஆகிப்போனதால் இடதுசாரிகளின்  குரல்கள் எடுபடவே இல்லை. அதனால்தான் சரிந்து போன அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்தியாவிற்;கு  நலன் பயக்கும் என நமது பிரதமரே  பேசும்  தைரியம் பெற்றார். சிறுவணிகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 4கோடி குடும்பங்கள் அதில் பணிபுரிவோர்  என சுமார் 25கோடி  குடும்பங்களை பன்னாட்டு  நிறுவனங்களுக்கு பலி கொடுக்க நினைக்கிறார்.
    அரசின் இந்த மக்கள் விரோதப்போக்கு குறித்து உரையாடும் போதும் தவறாமல் ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது. அதாவது இந்த சிறுவணிகத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகம் தான் மேளாண்மை செய்கிறது என்றும் அந்த சமூகம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதுதான் . இது ஒரு சரியானவாதமில்லை. இவர்கள் சொல்லும் சமூகம் மட்டுமல்ல இதர சமூகங்களும் இந்த தொழிலில் உள்ளது. அதில் அவர்கள்; குறிப்பிடும் அந்த சமூகம் கூடுதலாக உள்ளது என்று வேண்டுமென்றால்; கூறமுடியும். அடுத்து இது அவர்களுக்கு மட்டுமான நெருக்கடி –
என்றுசொல்லலப்படுவதும் சரியான விவாதமல்ல குறைந்த வருமானம் உள்ள ஊழியர்கள், தொழிலாளர்கள், முறைசாரா பணியாளர்கள் விளிம்பு நிலை மக்கள் என தங்கள் வருமானத்திற்குள் வாழ்ந்துவிட போராடி வரும் மக்களுக்குஅவர்களின் வருமானப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும் கடன் உதவியை இந்த வணிக சமூகமே உதவி வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் உள்ள தேனீர்கடை, மளிகைக்கடை, அரிசிக்கடை என அத்தியாவிசய பொருள்கள்  விற்பனைசெய்யும் கடைகளில் கடன் வாங்கியவர்களின் விபரம் கடன்பாக்கி விபரம்  என குறித்து வைக்கப்படும் நோட்டு இல்லாத ஒரு கடையை நம்மாள் பார்க்க முடியாது. 'வால்மார்ட்டிடம் இந்த உதவியைப் பெறமுடியுமா..? எனவே இந்த திட்டம் அமுலாக்கப்படும் போது மேற்கண்ட குறைந்த வருவாயுள்ள மக்கள் அனைவருமே பாதிக்கப்படுவார்கள் என்பது தான் உண்மை. இந்த உண்மை உணரப்பட்டதால்தான் இந்த திட்டத்திற்கு; அனைத்து பகுதியிலும் எதிர்ப்பு வலுக்கிறது.
    இந்த எதிர்ப்பின் வெக்கை தாளாமல்தான் மத்திய அரசு இந்த திட்டத்தை தற்காலிகமாய் நிறுத்தி வைப்பதாய் அறிவித்துள்ளது. கைவிடப்பட்டதாக அறிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இது பதுங்கிப் பாயும் அரசியல் சதி ஒருபக்கம்  பொதுக்கருத்தை  அறிந்தே அரசு செயல்படும் என அறிவித்துக் கொண்டே எதிர்க்கும் அரசியல் கட்சிகளுடன் பேரங்கள் மூலமான ஆதரவினைப் பெற்று  நினைத்த திட்டங்களை அமுலாக்கி விடுவது காங்கிரஸ், பி.ஜே.பி அரசுகள் கடந்த காலங்களாய் கடைபிடித்து வரும் ஆட்சி வரலாறு.. அதற்கு பொதுத்துறைப்பங்குகளில் அன்னிய மூலதனப் பங்குகளை அதிகரித்தது. அணு ஒப்பந்தம் , அரசு ஊழியர் பென்சன் என ஆயிரம் உதாரணங்கள் உள்ளது. இதில் ஆளும் கட்சி எதிர்கட்சியென  வித்தியாசம் ஏதுமில்லை. அரசின் மக்கள் விரோதத்திட்டங்களைக் கூட அடையாளப் பூர்வமாய் நடத்துவதும் அந்த போராட்டகளினூடக அமெரிக்கத் தூதர்களுடனான சந்திப்புகளை நடத்துவதும் பி.ஜே.பி-யின் வழக்கமாகிவிட்டது. ( இது சும்மா தமாசு நீங்க பயந்துட்டீங்களா.... அய்யோ....அய்யோ...)
    இந்த நிலையில் நாட்டின் தொழில்களை சுயசார்பு பொருளாதாரத்தை, வேளாண் தொழிலை ,  நாட்டின் வளங்களை , நமது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டத்தை கொள்கைப் பூர்வமாக நம்மோடு இணைந்து நிற்கத் தயாராயுள்ள அமைப்புகளுடன் இணைந்து நாமே போராடித்தீரவேண்டும.; அவர் வந்தால்.... இவர் வந்தால்..... என்கிற எதிர்பாhப்;பும,; நம்பிக்கையும,; காத்திருப்பும் நமது இழப்புகளை அதிகமாக்கும் போராட்டங்களின் மூலமே நமக்கான  பாதையை நமது முன்னோர்கள் கண்டடைந்தனர். ஆந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சிதான் நாம.; நாலுபேர் வாழ நாட்டை நடத்துவோரிடமிருந்து மீட்டு நமக்கான தேசமாய் நமது நாட்டைமீட்டெடுக்கும் நேரமிது. நமது வீட்டு ஜன்னலை அதிh வைக்கும் 'வால்மார்ட்டை' கைப்பற்றுவோம் என்ற குரல்களின் வெடியோசை போராட்டம் துவங்கி விட்டது என்பதை முரசறிவிக்கிறது. உடனே முடிவுசெய்ய வேண்டிய தருணம் இது. நாம்  பங்கேற்ப்பாளரா...? பார்வையாளரா..?
            மங்களக்குடி நா.கலையரசன்.-10.12.2011