Monday, January 16, 2012

மாட்டுக்கறி இழிவானதெனும் கற்பிதம்

தமிழகத்தின் அரசியல் பொது வெளியில் இட நெருக்கடியை உருவாக்கிக் கொண்டிருந்த – நக்கீரன் மற்றும் ஜெயலலிதா இருவருக்குமான  பிரச்சனை 'வருந்துகிறோம்' எனும் ஒரு வரியால் முற்றுப் பெற்றது.
    முன்பொறுமுறை  நக்கீரன் வாரஇதழ் சந்தித்த நெருக்கடியில்  ஆயிரம்  கரங்கள் ஆதரவாய் நீண்டது.  ஜெயலலிதாவும் கடும் கண்டங்களை சந்தித்தார். இப்போது அந்தச் சூழல் இல்லை. காரணம் விவாதிக்கப்பட்ட பிரச்சனையில் இருவருமே ஒரே கருத்தியலில் காலூன்றி நின்றதுதான்.
    சமீபகாலமாய் வாசிக்கும்போதே தி.மு.க-வின் சார்பில் வெளியிடப்படும் கையோடாகவே  கருதத்தூண்டும் வகையில் மாறிப்போன நக்கீரன் சினிமா நடிகைகளின் அந்தரங்கங்களை துப்பறியும் அத்தியாவசியப் பணிகளுக்கிடையில் முதல்வர் ஜெயலலிதா  விருப்பமாய் உண்ணும் உணவு எது எனும் விபரத்தை புலனாய்வு செய்து வெளியிட்டதும் , தமிழக முதல்வரும் தமிழக பிரச்சனைகளான விலை உயர்வு, முல்லைப்பெரியாறு, கொலை-கொள்ளைகளை ஒதுக்கி வைத்து விட்டு மிக முக்கிய ஜீவாதாரப் பிரச்சனையாக இதை கையில் எடுத்துக்கொண்டு அவரும்,  அவரது கட்சி எம்.எல்.ஏ-க்கள் , தலைவர்கள்; நடத்திய ஆவேசப் போராட்டங்களும் அறிவார்ந்த பொது மக்களை மெய்சிலிர்க்கச் செய்து விட்டது (என்ன கொடுமை சார் இது...)
    'கருத்து முதல்வாதிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை லோகாதவாதிகளாய் நின்றே சந்திக்கிறார்கள். அதே போல பொருள் முதன்மை தத்துவம்  பயின்றோர் அதன் பிரதி நிதி என்போர் பல பிரச்சனைகளை கருத்து முதன்மை நிலை நின்றே கையாள்கிறார்கள் என்பார் ஜார்ஜ் பொலிட்சர்' . இதையே எளிய முறையில் அறிவியல்  பேராசிரியர்கள் விஞ்ஞானிகள், மேதைகள் என புகழப்படுவோர்  பலர் நடைமுறையில் காலங்காலமாய் கை மாற்றி வந்துள்ள பத்தாம்பசலித்தனமான கருத்துக்கள் மூட நம்பிக்கைகளை ஒரு விவரமற்ற பாமரனாகவே கடைபிடித்து வாழ்கிறார்கள். அப்படியானவர்களை படித்தவர்கள் அறிவைஅறிந்தவர்கள் என எப்படிச் சொல்வது அப்படியானவர்கள் படித்ததெல்லாம் தேர்வுகளில் மதிப்பெண் பெறவே .. என்பார் செம்மலர் இலக்கிய இதழின்  ஆசிரியர்  எங்கள் தோழர்.எஸ்.ஏ.பெருமாள் அவர்கள். இவை எத்தனை உண்மை என்பதை தற்போது பரபரப்பாக இவர்கள் நடத்திய 'மாட்டுக்கறி'  குறித்த வாத பிரதிவாதங்கள்  உணர்த்துகிறது.
        பரபரப்பு செய்தி வெளியிடுவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட நக்கீகரன் வார இதழே பரபரப்புச் செய்தியானது வினோதம்.
       
பிரச்சரனயின்  மையமான இருவரில் ஒரு சாரார் பத்திரிக்கையாளர். இன்னொருவர் மிகப்பெரிய படிப்பாளி அவருக்குதெறியாத விபரமே இல்லை என அவரது கட்சியினர் மற்றும் சில அரசியல் தலைவர்களால் பாராட்டப்படுபவர். இவர்கள் இருவருமே தமிழ்  அறிவு சார் மனிதர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்களாய் சொல்லப்படுபவர்கள். ஆனால் அவர்கள் இப்பிரச்சனைகளை கையாண்ட விதத்தினை நோக்கினால் எனக்கு அப்படி எண்ணத் துணிவில்லை.
    எங்கள் கிராமத்தில் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இரண்டு பெண்கள் சண்டைபோட நேர்ந்தால் எதிர் பெண்ணை இழிவு செய்வதற்காக போடி...பறப்பயலோட போனவளே..என வசை பொழிவதை காணமுடியும். இதன்மூலம் அந்தப்பெண் நினைப்பது என்ன' ஒரு கீழ்சாதிப்பயலோட சேர்த்து கேவலப்படுத்தீட்டம்ல.... என்பதுதான்.  இன்னொருத்தியோ  குறவனோடு போனவள் என சான்றிதழ் தந்து வசையாடுவாள் . இந்த வாதப்பிரதி வாதத்தில் எங்கேனும் மேதமை தென்படுகிறதா?  இந்தியச் சாதிச் சமூகம் இவர்களின் பொதுப் புத்தியில் ஏற்றி வைத்திருக்கிற சாதிச் சாக்கடை நாத்தம்  வாய் வழியே  வெளியேறுகிறது என்பதைத் தவிர  இதே மாதிரியின் அடுத்த பகுதியாய்த்தான் நக்கீரனின் புலனாய்வும் ஜெயலலிதாவின் எதிர்வினையும்.  இவர்களின் செயல்பாட்டில் துளிகூட  கற்ற அறிவு வெளிப்படவில்லை.
        ஏதோ ஒரு கூட்டத்தில் மறைந்த எம்.ஜி.ஆர்  அவர்கள் ஜெயலலிதா மாட்டுக்கறியை விரும்பி சமைத்து சாப்பிடுவார் எனச் சொன்னாராம். அட்டைப்படக் கட்டுரையாய் வெளியிடும் அளவுக்கு இதில் அதிர்ச்சியான வினோதமான செய்தி என்ன உள்ளது ? நமக்குப் புரியவில்லை. ஆனால் ஜெயலலிதாவை இழிவுசெய்யும் நோக்கம் நிச்சம் உள்ளது.
    உலகம் முழுவதும் இந்தியாவிலும் மாட்டுக்கறியை விருப்பமான உணவாக ஏற்பவர் அதிகரித்து வரும் நிலையில் அதை வைத்து ஒருவரை இழிவு செய்யு முற்பட்டது ஏன். மாட்டுக்கறி என்பது(மிலேச்சர்கள் உணவாம் )தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்களின் உணவு என மநுவின்  அடிமைகளால் கட்டி வைக்கப்பட்டுள்ள வஞ்சகக் கருத்தியல்  நக்கீரனையும்  பற்றிக் கொண்டுள்ளது தெரிகிறது. 
        இந்த போக்கால்தான் அறிவுத்துறையினர் விலகி  நின்றார்கள். ஊடகங்கள் விமர்சித்து எழுதின. நீதிமன்றத்தில்  நக்கீரன் வருத்தம் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. மெத்தப்படித்த இந்த மேதாவிகளின் இந்த கருத்து அகநிலை உணர்வெனில் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே '  என நக்கீரனுக்கும் சொல்ல வேண்டியது நம் கடமை. 
        நக்கீரனில் வெளியான இந்த கருத்தை முதல்வர் எதிர்த்து சாமியாட்டம் போடாமல் இருந்திருந்தால் வேறுவகையான கண்டனங்களை நக்கீரன் சந்தித்திருக்கும்.  நிதானமே நெருங்கமுடியாத நெருப்பல்லவா அவர் . அவர் நிதானமாய் இருப்பார் என எதிர்பார்ப்பது நம்மை சிறுபிள்ளையாக்கும்.
        இயல்பான குணத்துடன் கர்ச்சித்து எழுந்தார். கட்சியினர் , எம்.எல்.ஏக்கள் முன்னனித் தலைவர்களின் முக்கியப்பணியாய்  அலுவலகத்தாக்குதல் , ஆபாச அர்ச்சனை என போர்க்களமானது தமிழகம்.
        ஏன் இந்த ஆர்ப்பாட்டம் அம்மாவின் கருணைப்பார்வைக்கும் , பதவி அறுவடைக்கும் முக்கிய தலைவர்களெல்லாம் முன்வரிசையில்  நின்றார்கள்.  அவர்கள் அப்படி பொதுவெளியின் அமைதி கெடுத்ததை ஜெயலலிதா  கண்டிக்காதது மட்டுமல்ல அவரும் ஆவேச உச்சம் தொட்டார்.  எதனால் இத்தனையும். பிறப்பால் பிராமணரான தன்னை மிலேச்சர்களின் உணவை உண்டதாய் சொல்வது தனது உயர்சாதிக் கிரீடத்திற்கு உலைவைக்கும்  என பதறிப்போனார். சொந்த சாதி சாபமிட்டு விடக்கூடாதே எனத்துடித்து நான் மாட்டுக்கறி சாப்பிடமாட்டேன் என சத்தியம் சுமக்கும் அறிக்கை வெளியிட்டார். இத்தனையும் எதற்கு..? சகல விபரமும் தெறிந்த படிப்பாளிக்கு உணவில் இழிவானதொன்றும் இல்லையெனத் தெரியாமல் போனது துரதிஷ்டம்.
        தன்னைப்பற்றி ஒரு தவறான செய்தி வெளிவந்தால் உண்மையெனில் தைரியமாய் ஏற்பதும், இல்லையெனில் அழுத்தமாய் மறுப்பதும் கற்றறிந்தவரின் பண்பான நடவடிக்கை. 'மிகுதியான் மிக்கவை செய்தாரை –தாம்தம் தகுதியான் வென்றுவிடல்' என்பான் வள்ளுவன். அவை மீறப்பட்டதற்கு காரணம் மாட்டுக்கறி என்பதுதான். அந்த செய்தியே மான்கறி  என வந்திருந்தால் இத்தனை பதட்டம் இருக்காது. உலகத்தில் 90 சதவீதம் பேர் உண்ணும் உணவை இவர்கள் இருவரும் இழிவானதாய் முன்வைத்து வாதிடுவதில்  அதை உண்பவரையும் சேர்த்து இழிவு செய்வதை மறந்து விடுகிறார்கள். அல்லது ஆமா..அப்படித்தான் செய்வோம்  உங்களால் என்ன செய்யமுடியும்  என சவால் விடுகிறார்கள்.  பிறர் உண்ணும் உணவை இழிவு எனச் சொல்ல எவருக்கும் உரிமையில்லை. இனி ஒரு முறை இப்படி ஒரு திமிர்த்தன விவாதத்தை சமூக பொது வெளியில் எவர் துவங்கினாலும் மாட்டுக்கறியை உணவாய் கொள்வோர்  அந்த திமிர் உடைப்பார்கள் எனும் அச்சத்தை உருவாக்க வேண்டும்.  
        மேற்கண்டவை எதிலிருந்து  புறப்படுகிறது என்றால் மாட்டுக்கறி உண்போர் இழிவானோர்  எனும் மடத்தனமான கருத்தியல் தான் .  ம்.... இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த கேடு கெட்ட மநுவின் பிணத்தை சுமந்து திரியப்போகிறதோ இந்த சமூகம்...
       


No comments:

Post a Comment