Wednesday, January 25, 2012

நிவாரணம் வந்தது......நீதி..?

                                    
                                        
  
         இந்தியச் சமூகத்தின் மூலைக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள சாதிவெறி தன்னை ஒழிப்பதாய் பிரகடனம்  செய்து,  புறப்பட்டு , போராடி  செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடித்தவர்களையெல்லாம் விழுங்கிவிட்டு தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டதுடன் அதிகார ஆதரவுடன் அரசுத்துறைகளுக்குள்ளும் அழுத்தமாய் ஊடுருவி நீக்கமர நிறைந்திருப்பதை அவ்வப்போது  பகிரங்கமாய் வெளிப்படுத்தியும் வருகிறது.
      கொடியங்குளடம், நாலுமூலைக்கிணறு, வாச்சாத்தி,தாமிரபரணி-என அதிகார வேடத்தில்  சாதி வெறி நடத்திய மலைவாழ் மக்கள், தலித்துகள் மீதான படுகொலைப் பட்டியலில் பரமக்குடியும் இணைந்து 5 மாதங்கள் கடந்து போயுள்ளது.
       என்றாலும் காவல் துறையினரின் வெறியாட்டத்தில் உறவை இழந்த குடும்பங்களில் இழப்பின் வெறுமையிலும் உடல் உறுப்புகள் உருக்குலைக்கப்பட்டவர்கள் தங்களின் காயங்களின் வேதனை  வெளிப்படும்போதும் அந்த  செப்டம்பர்-11 –ன் கொலைவெறிக் காட்சிகள் நிழலாடி ரண வேதனையை  அன்றாடம்  அனுபவித்தபடி உள்ளனர்  மாவட்ட மக்கள் மத்தியிலும் நீங்காத காயத்தை நிரந்தரமாக்கிவிட்டது.
        பொதுமக்களை அச்சுறுத்தி ரௌடியாக நினைப்பவன் ஊர் மந்தையில் வைத்து அப்பாவி ஒருவனை அடித்து துவைப்பது மாதரி தமிழக ஆட்சிக்கு எவர் வந்தாலும் தனக்கு எதிராய் நடக்கும் போராட்டங்கள் அதை வெளியிடும் ஊடகங்களை திசை திருப்பிடவும் ஆட்சி குறித்த அச்சத்தை விதைக்கவும் உழைத்து பிழைக்கிற அப்பாவி தலித் மக்களையும் மலைவாழ் மக்களையும் குறிவைத்து தாக்குவதை வழக்கமாய் கொண்டுள்ளனர். இதுவரை நடந்த தாக்குதல்களை அவதானித்தாலே அது புரியும்.
        இதன் தொடர்ச்சியாக நடந்த  பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 6 தலித்துகள் கொல்லப்பட்டதும் உடனடியாய் களத்திற்கு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னனி காவல்துறையின் இந்த காட்டு மிராண்டித்தனமான துப்பாக்கிச்சூட்டை கடுமையாக கண்டித்தது உறவுகளை பறிகொடுத்த குடும்பங்களின் துயரத்தை பகிர்ந்து கொண்டதுடன் நடந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியது.
        எந்த இழப்பீடுகளும் உயிர் இழப்பை ஈடுசெய்யமுடியாது என்றாலும் பாதிக்கப்பட்ட உறவுக்கு இது ஒரு உதவியாய் அரசுக்கு இது அவதாரமாய் இருக்கட்டுமே என முடிவுசெய்து காவல்துறையால்  படுகொலை செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்  மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, காயமடைந்தவர்களுக்கு  நிவாரணம்  இப்படிஒரு படுகொலை நடக்க யார் காரணம் எனக்கண்டறிய சி.பி.ஐ விசாரணை , துப்பாக்கிக்சூட்டை நடத்தியவர்களை பணி இடைநீக்கம்  செய்வது என்ற கோரிக்கைகளை முன் வைத்து காவல்துறையின் கடும் நெருக்கடி –மிரட்டல்களை மீறி அக்டோபர் 2-ம்தேதி ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
        தொடர்ந்து நாம் தீண்டாமை ஒழிப்பு முன்னனியாகவும் சமூக அமைப்புகளுடன் இணைந்தும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டோம்  பரமக்குடி துப்பாக்கிச்சூடு  எதிர்ப்பு நடவடிக்கைக்குழுவுடன் இணைந்து மனித உரிமை ஆர்வளர்கள்  நீதிபதிகளை கொண்ட  பொது நீதி விசாரணையை நடத்தினோம் .  அ.தி.முக அரசு அசையவே இல்லை.
        முதல்வராய்  ஜெயலலிதா பொருப்பேற்ற பிறகு நீதி மன்றங்களின் குரல்கள் மூலமே நியாயம் பெறமுடிகிறது என்கிற தற்கால உண்மை உணர்ந்து மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ்  பெயரில் வழக்குத் தொடர்ந்தது, மனித உரிமை மீரல்கள் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் சட்டரீதியாய்  போராடி வரும் தமிழக மூத்த வழக்கறிஞர் திரு.என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி  வாதாடினார் அதன் நியாயம் உணர்ந்தது நீதிமன்றம்.
        இழப்பீடு குறித்தும் சி.பி.ஐ-விசாரணைக்கும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5-லட்சம்  இழப்பீடு  வழங்கப்பட்டது. தற்போது அரசுப் பணிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
        வீரம்பல் திரு.பன்னீர்அவர்களின் மகள் ரெபேக்காள்  இளநிலை உதவியாளராகவும் ,  கீழக்கொடுமலூர் தீர்ப்புக்கனியின் அண்ணன் திருநாவுக்கரசு தலையாரியாகவும,; காக்கனேந்தல் வெள்ளைச்சாமி அவர்களின் மகன் சக்திவேல் டாஸ்மார்க்கிலும் ,  மஞ்சூர்  ஜெயபால் மனைவி காயத்திரி அலுவலக உதவியாளராகவும் , பல்லவராயனேந்தல்  கணேசன் அவர்களின்  மகன் குணசேகரன்  அலுவலக உதவியாளராகவும் அரசு பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.
        பணி  ஆணை  வழங்கப்பட்டதும் இது தீண்டாமை ஒழிப்பு முன்னனியும் சமுதாய அமைப்புகளும் ஒன்றுபட்டு நடத்திய போராட்டங்களால் வென்றெடுக்கப்பட்டதென பகிர்ந்துகொள்வதற்காக நாம் அனைவருடனும் தொடர்பு கொண்டு பேசினோம்.  நமது வாழ்த்துக்களை  பகிர்ந்து  உரையாடி முடிக்கும்  போது  அதில் பலர் அழுத்தமாய் முன் வைத்தது
    'கிடைச்சது வெறும் நிவாரணம் தானேண்ணா...
    நியாயம் கிடைக்கலையே..?' என்பது தான்
இது வெறும் வார்த்தையாக எமக்கு படவில்லை.  மனதின் ஆழத்தில் அழுந்தி கிடக்கும் துயரத்தின் வலியாகவே  உணரமுடிந்தது.  இந்த கொடுமையான படுகொலைகளைச் செய்த காவல்துறையினர்  எவரும் இதுவரை ஏன் தண்டிக்கப்படவில்லை என்பதும் துப்பாக்ச்சூடு  நடத்திட  உத்தரவிட்ட சூத்திரதாரி யார் என்பதும் மர்மமாகவே தொடர்கிறது. உயர்நீதிமன்றத்தின்  உத்தரவால் உருப்பெற்றுள்ள  சி.பி.ஐ விசாரணை இந்த மர்மங்களை மறைத்திருக்கும்  அதிகாரத் திரை விலக்கி அம்பலப்படுத்தும்  என்பதுடன் அந்தக் கொலைகாரர்களுக்கும்  தண்டனை கிடைக்கவும்பயன்படும் என்று நம்புவோம்.  அதுவரை நாம் உயிர்ப்புடன் இணைந்து செயலாற்றுவோம்.  அது தான் பரமக்குடி போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடைபெறாது முற்றுப்புள்ளி வைக்கும்.

                        மங்களக்குடி நா.கலையரசன்



No comments:

Post a Comment