தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி
இராமநாதபுரம் மாவட்டக்குழு
சி.பி.எம்.மாவட்ட அலுவலகம், குட்செட்ரோடு-இராமநாதபுரம்.
அனுப்புநர்
நா.கலையரசன்
மாவட்டத் தலைவர்
பெருநர்.
உயர்திரு. துலைமை செயலாளர் அவர்கள்
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்
சென்னை – 600 009.
ஐயா,
இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் தாலுகா இராமநாதபுரத்திற்கு அருகேயுள்ள புத்தேந்தல் கிராமத்தில் 31.05.2012 அன்று நடைபெற்ற தங்களது உறவினர் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து தியாகி இமானுவேல் சேகரம் படம் வரையப்பட்ட ப்ளக்ஸ் போர்டை தலித் இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டு அன்று இரவே கிழித்தெறியப்பட்டதுடன் 01.06.2012 அன்று குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்தும் எழுதி வைத்துள்ளனர். இதற்கு நியாயம் கேட்டு யாதவ சமூக கிராம தலைவர்களைச் சந்திக்கச் தலித் மக்கள் சென்றபோது யாதவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தி ஒரு பெண் உள்பட 4 தலித் மக்கள் கடுமையாக தாக்கப்பட்டு ஒருவர் மதுரை அப்போலோவிலும் மற்றவர்கள் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த பிரச்சனை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவனத்திற்கு வந்ததும் 02.06.2012 அன்று புத்தேந்தல் கிராமத்திற்கு சென்று விசாரித்தோம். பிறகு சம்பந்தப்பட்ட இராமநாதபுரம் பி.1 காவல்நிலையத்திலும் நடந்தது குறித்து விசாரித்த பிறகு புத்தேந்தல் பிரச்சனை சாதி ஆதிக்க வெறியுடன் நடந்துள்ளது என்றும் தலித் மக்;கள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்றும் பிரச்சனையின் துவக்கம் அதன் தன்மை எதையும் கவனத்தில் கொள்ளாமல் வழக்கு பதிவு செய்துள்ளது எனும் முடிவிற்கு வந்து மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை சந்திக்க முயற்சித்தோம். 2-ம் தேதி மாலை சந்திப்போம் என்றவர் 3.6.2012 மாலை வரை தொடர்ந்து முயன்றும் சந்திக்க முடியாததால் 4.6.12 அன்று அவருக்கான மனுவை கூரியர் தபாலில் அனுப்பி வைத்தோம். அதன் பிறகு 21.06.2012அன்று மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை புத்தேந்தல் பிரச்சனையை எஸ்சி.எஸ்டி பிரிவில் வழக்கு பதியவில்லை. மேலும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மக்கள் மீதான வழக்கினை வாபஸ் பெறவில்லை என்பதுடன் பிரச்சனையில் தொடர்பில்லாதவர்களை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பார்க்க வந்த பாலிடெக்னிக் மூன்றாமாண்டு மாணவன் கவியரசுவையும் மற்றும் உறவினர்களையும் கைது செய்தது மட்டுமின்றி காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளது அதிச்சியானதாகும்.
தியாகி இமானுவேல் சேகரன் படம் போட்டதற்காகவே பிளக்ஸ் போர்டு கிழிக்கப்பட்டதும், குருசாமி கோவில் சுவற்றில் பள்ளர் சமூக மக்களை இழிவு செய்து எழுதி வைத்ததும் தான் பிரச்சனைக்கு காரணம். போர்டு வைக்கும் போதெல்லாம் இப்படியான அராஜகம் தொடர்கிறது. மேலும் பிரச்சனைக்குப் பிறகு இனிமேல் ஒரு பள்ளப்பயலும் இங்கவந்து பஸ் ஏறக்கூடாது, ஏறினா ஊரோட நெருப்பு வச்சு கொழுத்திடுவோம் என வெறியாட்டம் போட்டுள்ளனர்.
இவை அனைத்தும் ஜாதி ஆதிக்க வெறியுடன் நடத்தப்பட்டவை. ஆனால் சரக காவல் துறை அதிகாரிகளோ போர்டை யாரைகேட்டு வைத்தீர்கள் என தலித் மக்களை மிரட்டியதுடன் பெண்களை இழிவாக பேசியதுமான நடவடிக்கையில் இறங்கியது அதிர்ச்சியானதாகும்.
மேற்கண்ட பிரச்சனைகளுக்கு பிறகு தலித் ஊராட்சி தலைவரை தங்கள் கைக்கருவியாக பயன்படுத்திக்கொண்டு ஊரின் கண்மாயில் மீன் பிடித்தபோதும் , நூறுநாள் வேலைக்கான பணியிடம் பிரிக்கப்படும் போதும் உங்களோட ஒன்னா வேலைப்பார்க்க அவங்க முடியாதுங்கறாங்க அதனால எஸ்சி எல்லாம் அந்த பக்கம் வேலை பாருங்க எனப் பிரித்து தருவது தீண்டாமையின் ஒரு பகுதிதான் . அதையும் அரசு திட்டத்திலேயே தலித் ஊராட்சி தலைவரை வைத்தே நடைமுறைப் படுத்துகிற அவலம் நடைபெற்று வருகிறது.
மேலும் ஏற்கனவே ரேசன் கடை செயல்பட்டுவந்த கட்டிடம் பழுதானதால் தற்காலிக ஏற்பாடாக தலித் ஒருவரது வீட்டில் நான்காண்டு காலமாக ரேசன் கடை செயல்பட்டு வந்துள்ளது. மேற்கண்ட பிரச்சனைக்கு பிறகு அந்த ரேசன்கடை யாதவர் குடியிருப்பிற்குள்ளே இடம் மாற்றப்படுகிறது. ஏன் இப்படி என்று கேட்டால் இங்கே கடை இருந்தால் யாதவ மக்கள் வரமாட்டோம் என்கிறார்கள் எனவே தற்காலிகமாகத்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறோம் என்கிறார்கள் அதிகாரிகள். அப்படி மாற்றப்பட்டபிறகு தலித் மக்கள் வரமாட்டோம் என்றால் என்ன செய்வது. எனவே அரசு இயந்திரத்தையே சாதி ஒடுக்குமுறைக்கு உதவியாக பயன் படுத்துகிற இந்த தந்திரம் ஆபத்தானதாகும்.
எனவே தாங்கள் தலையிட்டு பிரச்சனையின் தன்மை அடிப்படையில் இந்த வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்கிடவும், அரசுத் திட்டங்களிலேயே தீண்டாமையை அமல்படுத்துகிற போக்குகளையும் தடுத்து நிறுத்தி, உரிய முறையில் தலையிட்டு நியாயம் கிடைக்க உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
உண்மையுள்ள
(நா.கலையரசன்)
மாவட்டத்தலைவர்