வாகனப்பயணம்
கால் நடைப் பயணத்தை விட
களைப்பாய் இருக்கிறது
நீ உடன் இல்லாத
ஒய்வரை
நெருக்கடியாய் இருப்பினும்
வெறுமையாய் இருக்கிறது
செவிகிரங்குமுன்
செல்ல குரல் இன்றி
அருகாமை ஓசைகள்
அந்நியமானது
அழகு முக அழுத்தமின்றி
இதய துடிபோசை
இடைவெளி விடுகிறது
உன் சுவாசம் கலக்காத
ஆக்சிசனை ஏற்க்க
நுரையீரல் திணறுகிறது
இருந்தும் என்ன செய்ய ..?
பணவரவற்ற எனக்கு
சன உறவும்
மண உறவும்
பாரமாகிப்போனது
அடிவயிர் எரியும்
பசி நெருப்பால் நம்
அன்பின் அடர்த்தி
குறைந்திட கூடாதென
விரைந்தெடுத்த முடிவிது
உடல் அணு அனைத்திலும்
ஊடுருவி நின்ற உன்னை
விலகி வாழ வருமென
கனவுகூட சொன்னதில்லை
பரம்பரை ஆட்சியாய்
பத்திரபடுத்துவோர்
தருத்திர சரித்திரத்தை
திருத்திட திறனின்றி
பொருத்துவாழ போதிக்கிறார்
அவ்வபோது வரும்
ஐந்தாண்டு திட்டங்களும்
ஆன்டைகளையும்
அம்பானிகளையுமே
அரவணைத்துகொண்டது
அபயக்கரம் நீட்ட
எவருமற்ற நிலையில்
ஆண்டு தவணையில்
அடுத்த நாடே எனக்கு
ஆதரவு தந்தது
வறுமை தொலைத்து
வளமை பெற நம்
இளமையை பணயம் வைத்த
இறுதி போர் இது
இனியவளே காத்திரு
இறுதி காலம் வரை
அருகிருப்பேன் எனும்
உறுதிமொழி காத்திட
ஒப்பந்த நாளின்
கடைசி நிமிடத்தில்
காத்திருகிறது என் மனசு .......
No comments:
Post a Comment