Saturday, February 3, 2024

கவிஞர் யுவாவின். "அவளுக்கெ(ன்)ன" கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்தவரும் சமூக நலத்துறையில் பணியாற்றி வருபவருமான கவிஞர் மோகனப்பிரியா அவர்கள் யுவா என்கிற பெயரில் எழுதிய "அவளுக்கெ(ன்)ன" என்கிற முதல் கவிதை தொகுதி இது அலுவலகப் பணி மற்றும் இந்த சமூகம் பெண்கள் மீது திணித்துள்ள குடும்ப வேலை கள் என இரண்டு பணிகளுக்கு ஊடாக கவிதைக்கும் நேரம் ஒதுக்கி இருப்பதற்கே கவிஞர் யுவா அவர்களை பாராட்ட வேண்டும்

 கவிதை எழுதுவதற்கு "காதல் மனசு" வேண்டும் என்பார்கள் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை. உறவுகளை. உயிர்களை நேசித்தால் போதும் கவிதை ஊற்றெடுத்து வரும்

 கவிஞர் யுவா விற்கு உறவுகளை' பெண்களை' நேசிக்கும் காதல் மனசு இருப்பது கவிதைகளில் தெரிகிறது 

இந்தியச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளதால் சகலத்தையும் அவர்களுக்கு உகந்ததாகவே வடிவமைத்துள்ளனர் அதில் குடும்ப உறவுகளும் சமூக உறவுகளும் அடக்கம் அதிலும் பெண்களை அவர்களின் தேவைக்கேற்றார் போல செதுக்கி நடமாட வைக்க முயற்சிக்கிறார்கள்

 இதை உடைத்து அவ்வப்போது பெண்களின் உணர்வுகளை- கனவுகளை- பாடுகளை- விடுதலையை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ் கவிதை பரப்பில் பாரதி துவங்கி பலர் முயன்று உள்ளனர்

 கவிஞர் பாரதி பாடியது போல 

"நிமிர்ந்த நன்னடை
 நேர்கொண்ட பார்வை 
புவியில்
 யாருக்கும் அஞ்சா
 ஞானச்  செருக்கோடு.".

பெண்கள் வாழ வேண்டும் என்கிற ஆழமான புரிதலுடன் ஆண்கள் பலரும் கவிதைகள் படைத்துள்ளது தமிழ் கவிதை பரப்பில் விரவிக்கிடக்கிறது  

"நாளும் கிழமையும்
 நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமை 
பெண்களுக்கு இல்லை "

என்கிற கந்தர்வன் கவிதையாகட்டும்

"சமையலறைக்கும் 
ஹாலுக்கும் ஓடிஓடி 
ரன்னெடுத்து 
ரணமாகி போகிறாள்
 அம்மா"...

 என்றும் பல கவிதைகள் வந்துள்ளது அதில் 

"என் அம்மா 
இதுவரை எத்தனை 
தோசைகளைசுட்டிருப்பாள்" 

என்கிற  கேள்வியையே கவலையோடு முன்வைத்த படைப்பாளிகளும். படைப்புகளும் வந்தாலும்

 ஒரு பெண்ணால் தன் கனவை- பாடுகளை -படைப்பாக்கும்போது இன்னும் காத்திரமானதாக நம் உணர்வுகளோடுஒட்டி நிற்பதை உணர முடியும் 

கவிஞர் யுவா வின் கவிதைகளில் அதை உணர முடிகிறது பிறப்பு முதல் இறப்பு வரை தனது சுயத்தை இழந்து வாழும் பெண்கள் குறித்து பேசிட வேண்டியது ஏராளம் உண்டு என்பதை உணர்த்துகிறது கவிதைகள் 

"அவளுக்கென்ன என்ற 
ஆயிரம் வார்த்தைகளில் அவளுக்கென ஒரு மனது இருப்பதை மறந்தே போகிறார்கள்"

 என கலிவிரக்கம் கொள்கிறது கவிதை 

"அடி வாங்குனது என்னவோ 
நான் தான் ஆனால் 
அழுவது 
அவளாகத்தான் இருக்கும்" 

என அம்மா குறித்தும் 

"தாய் தகப்பன் 
கிட்ட இருந்து 
அம்மாவை கூட்டிகிட்டு 
வரும்போது சிரிச்சவரு 
மக பிரிஞ்சு 
அடுத்த வீட்டுக்கு போகையில தேம்பித் தேம்பி அழுதவரு"..

 அப்பாவின் முரணான பாசம் குறித்த கவிதையாகட்டும்

"தாத்தா வளர்த்த 
தென்னையும் 
பாட்டி வீட்டுத் 
திண்ணையும் தான் 
எங்கள் ஆனந்தத்தின்
 அடித்தளம் "

என கடந்த காலத்தை அசைபோடுகிற கவிதையாகட்டும் திருமணம் ஆன பெண்கள் குறித்து எழுதுகிற போது 

"குடும்பம் தான்
 மாறுச்சுன்னா 
குலசாமியுமா"?

 என்கிற கவிதை போன்றவை ஒரு பெண் தனக்கான நிரந்தர அடையாளம் இன்றி குடும்பத்திற்கு_ ஊருக்கு- என பயந்து ஒடுங்கி வாழ்வதை நினைத்து ஆத்திரம் கொள்கிறது 

சிரிப்பதும் பேசுவதும் கூட தம் விருப்பமாக இல்லையே என்று விஷனப்படும் கவிதை -நினைத்த வாழ்க்கையை நடத்தி முடிக்க முடியாத வாழ்க்கை -என  கவிதைகள் பெண்களின் பாடுகளை பேசும் கவிதைகளாக இருக்கிறது

 கவிஞர் யுவா வின் இந்த கவிதைகள் பெண்ணிய கவிதைகள் வரிசையில் இடம்பெறும் என்பது திண்ணம்

 எழுதுங்கள்  யுவா இன்னும் அழுத்தமாக - காத்திரமாக இந்த சமூகம்செம்மையடைய நிறைய எழுதுங்கள்

 இந்த மாவட்டத்தில் பெண் படைப்பாளியாக மிளிர தடையாக எது வந்தாலும் எதிர்கொண்டு எழுதுங்கள் 

தமிழக பெண்ணிய எழுத்தாளர்கள் வரிசையில் நீங்களும் தடம் பதிக்க வாழ்த்துக்கள் 

அன்புடன்
மங்களக்குடி நா. கலையரசன் மாவட்டத் துணைச் செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
 ராமநாதபுரம்


No comments:

Post a Comment