Tuesday, October 15, 2024

சுவியம் சிறுகதை குறித்து

புத்தகத்தின் பெயர்: சுவியம் (சிறுகதைகள்)

ஆசிரியரின் பெயர்: மங்களக்குடி நா. கலையரசன் 

பதிப்பகம்: மாற்று ஊடக மையம் 

பக்கங்கள்‌:  168.,  விலை: 175

நான் எந்த கதையை எழுதுவது? என் சிறு வயதில்  பாட்டியிடம் கேட்ட மகிழ்ந்து மாயாஜாலக் கதைகளை எழுதுவதா, அல்லது  என்னைச் சுற்றி நான் பார்த்த, கேட்ட கதைகளை எழுதுவதா என்ற ஆழ்ந்த யோசனையில் மூழ்கி இருந்த மார்க்சிம் கார்க்கிக்கு அவர் கைபட்டு அழுக்கடைந்த காகிதம் பதிலாக அமைந்தது. ஆம், அவர் எழுதியது அழுக்கு படிந்த ரஷ்ய நாட்டு உழைக்கும் மக்களின் கதைகள்.  அவர்கள் படும் பாடுகளை கதைகளாக மாற்றி தன் சமூகத்தின் அசல் முகத்தினை வெளிப்படுத்துகிறார்.  அவர் எழுதிய அசல் இன்று வரை ரஷ்ய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் அறிமுகம் செய்யப் போகும் சுவியம் என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் தோழர் நா.கலையரசன் அவர்கள் மாயாஜாலக் கதைகளை சொல்லி போலி மயக்கத்தில் மக்களை வைத்திருக்க விரும்பவில்லை.  அதற்கு மாற்றாக மக்களை அவர்களின் அறியாமை குறித்தும் அவர்களின் உரிமைகள் குறித்தும் சிந்திக்க வைத்திருக்கிறார். நம் வாழ்வில் நாம் அன்றாடம்  பார்க்கத் தவறிய, பார்த்தும் பார்க்காமல் செல்ல எண்ணுகின்ற பல விஷயங்களை உண்மையின் மிக அருகில் நின்று பேசுகின்றன இவரின் கதைகள். இப்புத்தகத்தில் மொத்தமாக பதினோரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பதினோரு கதைகளின் கதைக்கருக்களும் நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. “பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால் தங்களது தலைவிதியை தங்களது விருப்பப்படி மாற்றி அமைத்துவிட முடியும். அப்படி அவர்கள் உருவாக்க நினைக்கும் புதிய விதியை அவ்வளவு எளிதாக இப்பொதுசமூகம் அங்கீகரிக்காது” என்பதை ‘புது விதி’ என்கிற கதை நம்மிடத்தில் எடுத்துக்காட்டுகிறது. “அனைத்து உயிர்களையும் நேசிக்கிற மனிதம் மகத்தானது‌”. அதைத் திரும்பத் திரும்ப இன்று இணைய வழியில் இயந்திரத்தனமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிற இளம் தலைமுறை பிள்ளைகளிடத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே ‘உறவுக்காரி’ என்கிற கதை. குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில், கூடி வாழ்தளின் அவசியத்தையும் அதன் இன்றைய தேவையையும் ‘சுவியம்’ என்கிற கதையை சுவைக்கும் போது நாம் உணர முடியும்.  “இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?” இந்த வாசகம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால், இன்றைய இனைய காலத்திலும் சாதிய பாகுபாடுகளும் சாதியை ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுப்பதற்கல்ல. இப்புத்தகத்தில் வருகின்ற “உயிர்ச்சொல், அழுக்கு” போன்ற கதைகள் கொஞ்சம் நம் காலத்திற்குப் பின்னால் செல்லக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் அந்தக் கதைகள் சொல்லக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுகளும், இழிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது. அதிகாரம் என்பது ஊரை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஒருவருக்கு வழங்கப்படுவது அல்ல. அதைக் கைகொண்டு அதன் வழியே மக்களுக்கு நீங்கள் ஆற்றக்கூடிய சேவையின் வழியே தான் மக்கள் உங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரம் உங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்பதை “கர்ண தாண்டவம்” என்கிற கதையை வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். இப்படியாக புத்தகம் முழுவதும் வாசிப்பவர்கள் கடந்து செல்ல, கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் தாராளமாக படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது.  அதை கிள்ளி எடுப்பதும், அள்ளி எடுப்பதும் வாசிப்பவர்களின்  சிந்தனையைப் பொறுத்தது…

நன்றி!

அன்புடன்: வா. ஸ்டாலின்

Sunday, August 11, 2024

சுவியம் புத்தக விமர்சனம்

புத்தகத்தின் பெயர்: சுவியம் (சிறுகதைகள்)

ஆசிரியரின் பெயர்: மங்களக்குடி நா. கலையரசன் 

பதிப்பகம்: மாற்று ஊடக மையம் 

பக்கங்கள்‌:  168.,  விலை: 175

இப்புத்தகத்தில் மொத்தமாக பதினோரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பதினோரு கதைகளின் கதைக்கருக்களும் நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.

“பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால் தங்களது தலைவிதியை தங்களது விருப்பப்படி மாற்றி அமைத்துவிட முடியும். அப்படி அவர்கள் உருவாக்க நினைக்கும் புதிய விதியை அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிக்காது” என்பதை ‘புது விதி’ என்கிற கதை நம்மிடத்தில் எடுத்துக்காட்டுகிறது.

“அனைத்து உயிர்களையும் நேசிக்கிற மனிதம் மகத்தானது‌”. அதைத் திரும்பத் திரும்ப இன்று இணைய வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிற இளம் தலைமுறை பிள்ளைகளிடத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே ‘உறவுக்காரி’ என்கிற கதை.

குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில், கூடி வாழ்தளின் அவசியத்தையும் அதன் இன்றைய தேவையையும் ‘சுவியம்’ என்கிற கதையை சுவைக்கும் போது நாம் உணர முடியும். 

“இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா” இந்த வாசகம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம் ஆனால் இன்றைய இனைய காலத்திலும் சாதிய பாகுபாடுகளும் சாதியை ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுப்பதற்கல்ல. இப்புத்தகத்தில் வருகின்ற “உயிர்ச்சொல், அழுக்கு” போன்ற கதைகள் கொஞ்சம் நம் காலத்திற்குப் பின்னால் செல்லக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் அந்தக் கதைகள் சொல்லக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுகளும், இழிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது.

அதிகாரம் என்பது ஊரை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஒருவருக்கு வழங்கப்படுவது அல்ல. அதைக் கைகொண்டு அதன் வழியே மக்களுக்கு நீங்கள் ஆற்றக்கூடிய சேவையின் வழியே தான் மக்கள் உங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரம் உங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள் என்பதை “கர்ண தாண்டவம்” என்கிற கதையை வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

இப்படியாக புத்தகம் முழுவதும் வாசிப்பவர்கள் கடந்து செல்ல, கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் தாராளமாக படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது.  அதை கிள்ளி எடுப்பதும், அள்ளி எடுப்பதும் வாசிப்பவர்களின்  சிந்தனையைப் பொறுத்தது…

நன்றி!

அன்புடன்: வா. ஸ்டாலின்

Saturday, August 3, 2024

சுவியம் சிறுகதை தொகுப்புகுறித்து சிபிஐஎம் மாநில குழு உறுப்பினர் தோழர் பாஸ்கரன்

11 சிறுகதைகளைக் கொண்ட சுவியம் தொகுப்பை தோழர் கலையரசன் கொடுத்து கொஞ்ச நாளாயிற்று. மேசை மேல் இருந்த புத்தகம், இன்னுமாப்பா படிக்கல என்று கேட்பது போல இருந்தது. அப்படிச் சொல்கிற நிறைய புத்தகங்கள் இங்குண்டு. போன முறை பார்த்த போது தோழர் கலையரசன் கேட்டும் விட்டார் என்னாச்சு படிச்சீங்களா. காரணம் சொல்லி தப்பிக்கத்தான் நம்மிடம் பல உத்திகள் உண்டே. இத்தனை நாளாக சுவியத்தை படிக்கவில்லை என்கிற குற்ற உணர்ச்சி தான் மேலே கண்ட வரிகளை எழுத வைத்தது. மூன்று கதைகளை வாசித்தேன். தோழர் கலையரசன் நல்ல கதை சொல்லி என்பதை தெரிந்து கொண்டேன்.

காமம் தின்னும் பசி எனும் கதை, பருவ வயதில் இயல்பாக மேலெழும் பாலியல் உணர்வுகளை பதின்பருவ வாலிபனொருவன் எப்படி எதிர் கொள்கிறான் என்றாயும் களம். பாலியல் குறித்து வெளிப்படையான உரையாடல், கல்வி, புரிதல் ஏதுமில்லாத சமூக சூழலில் தனித்தே விளங்கிக் கொள்ள வேண்டிய ஆறுமுகத்திற்கு, அதனை மிருதுளா விளக்குகிறாள். மிருதுளா வந்து விளக்குவது தான் கதையின் உச்சம். இது போன்ற ஒரு கதையை எழுத நினைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்து நாயக நடை எனும் கதை, கிராமத்தை விட்டு நகரத்திற்கு இடம் பெயர்தல், வயோதிகம், நகரத்தின் ஒவ்வாமை என போகிறது கதை. குஸ்தி, சிலம்ப வாத்தியார் நாயகம் குறித்த சித்தரிப்பும், வயோதிகத்தில் தளர்ந்த அவரது நடையும், அவரது சிரிப்பும் என விவரணை விரிந்து செல்கிறது. சூரியன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்ட தொடங்கியதும், ஒளியாமல் இருந்த மிச்ச இருட்டும் சிதறி ஓடியது என ஒரு வரியுண்டு கதையில். 

அழுக்கு. இது தான் கதையின் பெயர். இந்தக் கதையை எளிதாக விவரித்து விட முடியாது. அவ்வளவு அடர்த்தியான கதை. சினை ஆடு வெட்டப்பட்டு, தலைகீழாக தொங்குகிறது. அந்த இடம் முழுவதும் ரத்தக்காடு. மாடசாமியும், கார்மேகமும் நிற்கிறார்கள். ஆனால் இருவருக்குமான இடைவெளி, இத்தனை ஆண்டு காலத்திலும் இட்டு நிரப்ப முடியாத பெரும் இடைவெளியோடு நிற்கிறார்கள். நாமும் நிற்கிறோம். வழிந்தோடும் ஆட்டின் குருதி, நமது கால்களையும் தொட்டு நனைத்துச் செல்கிறது. நின்றபடி இருக்கிறோம்.

கலையரசன் நல்லதொரு கதை சொல்லி. 
மீதக் கதைகளையும் படித்து விட்டு எழுதுகிறேன்.

Sunday, June 9, 2024

நடைதவம். கவிதை

நடை தவம்
-------------------------------
காலை கதிர்களால்
அடித்து துவைத்தும்
புரண்டு படுக்காதவன்
ஊரடங்கால் வீடடங்கி
வேலையில்லா வேலையாய்
இரவின் எல்லை வரை
காத்திருப்பவன் ஆகிறேன்

யானைக்கு முன்வரும்
மணியின் ஓசையாய்
 சூரிய கதிர்களின் இளம்
பருவ வெளிச்சத்தில்
துரத்தி வரும் சோம்பலைத் தள்ளி
திமிரி வெளி வந்தேன்

பாதி முகம் மறைக்கும்
முகத்திரை கவசத்துடன்
பாதையை வந்து சேர்ந்தேன்
காற்றினை கிழித்து
கரங்கள் வழி விலக்க
பாதணிகளின் ஜதியில்
பாதங்கள் பயணிக்கும்

வெற்றுக் காகிதத்தில்
வரைந்தார் போல் இரு
கண்களை மட்டும் காட்டி
கடந்து சென்றார் பலர்

மெல்ல மெல்ல உயரும்
வெப்பத்தின் அனலில்
கொழுப்பு கொதித்துறுகி
மயிர்க்கால்கள் வழியே
ஊற்றாய் நிறைந்து
உடலில் வழிந்தது

வழிந்த உடல் நீரில்
நனைந்த உடையூரி
கனத்து கசகச த்தது
கை இடுக்கு தொடை இடுக்குகள்
தூரம் கடக்க மருத்து
எரிந்து எதிர்க்கிறது

சிகை சிந்திய நீர் வழிந்து
நெற்றி மூக்கு வழி பயணித்து
உதடுகளுக்குள் ஊடுருவி
உப்புக் கரிக்கிறது

உடம்பு வூரி கரைவதான
கனப்பில் கடுப்பாகி
புறப்பட்ட இடம் திரும்பி
மொத்த நீரையும் ஊற்றி
சுத்தம் செய்த பின் தெரியும்
 புத்துயிர் பின் அர்த்தம்

அதிகாலை நடை தவத்தால்
உற்சாகத்தில் ஊற வைத்து
நெய்யப்பட்ட உடலாய்
மேலும் நாள் முழுதும்
முகிழ்ந்து கிடப்பதால்
 மறுநாள் முதல் வேலையாய்
இரவு போர்வையை
உதறி கலைந்து
இளம் கதிர் வரவை
எதிர்பார்த்தபடி நான்...
..

Sunday, June 2, 2024

வாக்குறுதி கவிதை


வாக்குறுதி
__________________

வாக்குறுதி என்பது 
நேர்மை குறித்தானது 
வறியவனும் கூட 
நெறியாய் பேணுவது
 வாக்குறுதி காத்தல்.

வாக்குறுதி காக்க 
மூன்றாவது அடிவைத்த 
வாமனன் பாதத்தை 
கிரீடம் தரித்த தலையால் 
தாங்கினான் மன்னன்

 வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
 தசரதன் என்பர்

வாக்குறுதி காக்க 
சதி என்று அறிந்தும் 
உயிர் கவசத்தை 
உரித்து தந்தான் கர்ணன் 

வாக்குறுதி காக்க
 நாட்டை துறந்து 
மனைவி மகனை விற்று அடிமையானான் அரிச்சந்திரன் 

 இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
 பரப்பியவர் யாரும் 
பாதையாக்கிக் கொள்ளவில்லை 

இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கு உறுதிசெய்யும் 
வலையாகிப் போனது 

வாக்கு மீறல் 
நேர்மை மீறலென 
சொன்னவனும் 
நம்பியவனுமே 
ஒப்புவதில்லை 

வார்த்தைப்படி 
வாழாதார் யாரும் வராதீர்
 எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின்  கதவடைப்போம்...

_ மங்களக்குடி நா. கலையரசன்_

அடையாளம் கவிதை


அடையாளம்
________________

பாருக்குள்ளே நல்ல நாடு - அது யாருக்கானது என்பது
எதிரே நிற்கும்கேள்வி 

தானியம்
தளைக்கும்நிலங்கள் 
பாசன வசதி செய்ய
 பாராண்டோர் மறந்ததால் 
ஏரி கண்மாய்க்குள் 
கான்கிரீட் வீடுகள் 

மாமலையும் நீர்நிலையும் 
கை கொடுக்க மறந்ததால் பொன்விளைந்த பூமி 
பிரசவிக்க மறந்தது 

பேய்ந்தும் காய்ந்தும்
 கெடுத்த இயற்கையால் 
சம்சாரி சன்னியாசி 
நிலையில் ...

வீட்டின் புழக்கடையில் 
மேலி உடைந்த கலப்பை 
பழைய இரும்பு காரரிடம் பேரிச்சம்பழத்திற்காய் 
கைமாறிய கொழுகம்பி 

 நெரிசலில் திணறி 
பயணிக்கும் சாமானியராய் லாரியில் ஏர் மாடுகள் 

பயிர் காப்பீடு 
வளர்ச்சி நிவாரணத்தில் 
காலம் தள்ளும் காலம்
 விவசாயி எனும்
 தடம் இழந்து தவிக்கிறது 
சம்சாரி வீடு...

_மங்கலக்குடி நா. கலையரசன்_

Sunday, February 4, 2024

தரிசனம் (சிறுகதை)

 தரிசனம்.    (சிறுகதை,)


பெருவாக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு எதிரே அந்த வீடு இருந்தது  மண் சுவர் வைத்த ஓட்டு வீடாக இருந்தாலும் திண்ணை வைத்து கட்டப்பட்டிருந்த அந்த வீடு அழகாகவே இருந்தது வாசலில் இருந்த வேப்பமரம்   வாசலில் பந்தல் போடப்பட்டது போல எப்போதும் நிழலாகவே வைத்திருந்தது அந்த பிற்பகல் நேரத்தில் வேகமாக சைக்கிளில் வந்து இறங்கினார் கண்ணப்பன் வேப்பமரத்து நிழலில் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டின் திண்ணையில் வந்து அமர்ந்து தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தில் வழிந்து கொண்டிருந்த வியர்வையை துடைத்தபடி "ஆத்தா அலமேலு" என்று வீட்டிற்கு உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் மாலை நேர வெயில் ஆனாலும் சட்டையை ஊடுருவி உடலை எரிச்சல் அடைய வைத்த நிலையில் வேப்ப மரக் காற்றும் நிழலும் இதமாக இருந்தது கண்ணப்பனின் குரலை  கேட்டு வெளியே வந்த அலமேலு முகம் நிறைந்த மகிழ்வோடு "வாங்கண்ணே நல்ல நேரத்தில தான் வந்து இருக்கீங்க ஏட்டி... தமிழு... யார் வந்திருக்கான்னு பாரு அந்த பத்திரிகையை எடுத்துட்டு வா" என்றபடி முந்தானையால் கைகளை துடைத்த படி அவர் எதிரேவந்து அமர்ந்தாள் "பத்திரிக்கை எல்லாம் வந்திருச்சா நல்லது" ... என்று கண்ணப்பன் சொல்லிக் கொண்டிருந்த போது"வாங்க மாமா அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா" என்று விசாரித்தபடி பத்திரிகையை நீட்டினாள் "எல்லாரும் நல்லா இருக்காங்க டா" என்றபடி சிரித்துக் கொண்டே  பத்திரிக்கையை வாங்கி படித்தார் படித்து முடித்ததும் அலமேலுவை பார்த்து "ஏத்தா ராத்திரி சடங்கு காலையில கல்யாணம்னு சொன்னே.. இப்ப பத்திரிகையில் கல்யாணம்னு மட்டும் தான் போட்டு இருக்கே ஏன்பா சடங்கு வைக்கலையா" என்றதும் அலமேலு கண்கள் கலங்குவதை பார்த்து பதறிய கண்ணப்பன்" ஆத்தா ஆத்தா சங்கடம் ஏதும் இல்லைன்னா சொல்லு இல்லன்னா விடு ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று ஆறுதலாகச் சொன்னார் "இதுல சங்கடப்பட என்னென்னே இருக்கு நான் ஒத்த தானே எங்க அம்மா சொன்ன மாதிரி நான் பொறக்கும் போதே அவ வயித்தையும் சுத்தமாக கழுவிட்டு தானே பொறந்தேன்.. ஒத்த கம்ப வச்சு பந்த போட முடியுமா விடுங்க.. சடங்கு வைக்க வாய்ப்பில்லே சீக்கா சடங்கா சுத்தி சடங்க கழிச்சு கல்யாணத்தை முடிச்சிருவோம்"என்று கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள் "விடுத்தா.. இப்போ என்ன பத்திரிகையில போட்டாத்தானா" என்ற கண்ணப்பன் தமிழ்செல்வியை பார்த்து "என்னடா நம்ம சீக்கா சடங்க   சடங்கா மாத்திடுவோமா" என்று சிரித்தார் தமிழ்ச்செல்வியும் சிரித்தாள்  அலமேலு நினைவு வந்தவளாக "தமிழ்.. மாமாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு வா" என்றாள் கண்ணப்பனும் "வேணா.. தாயி நான் இப்பதான் சாப்பிட்டேன்" என்று மறுத்தார் "பரவாயில்லைன்னே கொஞ்சமா சாப்பிடுங்க "என்று சொல்லிக் கொண்டிருந்த போது தமிழ்ச்செல்வி  சாப்பாட்டோடு வந்தால் கையை கழுவி சாப்பிட தட்டை தொட்டவர் "சிக்கனா.. என இழுத்தார் "ஆமாண்ணே பத்திரிக்கை அடிச்சு வந்துருச்சுன்னு சொன்னதும் மாப்பிள்ளையோட அம்மாவும் அக்காவும் பத்திரிக்கையை பார்க்கணும்னு வந்தாங்க அவங்களுக்காக சமைச்சதுண்ணே" என்று சிரித்தாள் "ஓ சம்பந்தி விருந்தா" என சப்தமாக சிரித்தபடி சாப்பிட்ட ஆரம்பித்தார் கண்ணப்பன்


 

அலமேலுவுக்கும் கண்ணப்பனுக்கும் உறவோ சொந்தமோ.. இல்ல

கண்ணப்பன் தனது சைக்கிளில் குறுக்காக கம்புகளை வைத்து கட்டி காலி எண்ணெய் டின்களை கேரியரில் அடுக்கி அதில் பன்னு. ரஸ்க்ரொட்டி என குழந்தைகளுக்கான தின்பண்டங்களை டின்களில் நிரப்பி தேவகோட்டையில் இருந்து ஓரியூர் வரை சைக்கிளிலேயே கொண்டு வந்து டீக்கடைகளுக்கு கொடுத்து விட்டு மறுநாள் வந்து முதல் நாள் பணத்தை பெற்றுக் கொள்வதோடு அந்த நாளுக்கான சரக்கை போட்டுவிட்டு போவது அவரது வழக்கம் தேவகோட்டையிலிருந்து ஒரியூருக்கு அதிகமான பேருந்து வசதி இல்லாததால் கிராமங்களுக்கு முதலில் தேவகோட்டையிலிருந்து வரும் நபராக கண்ணப்பனே இருப்பார் எனவே அவர் தினசரி பத்திரிகைகளையும் வாங்கி வந்து டீக்கடைகளுக்கு கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்வார் சில கடைகளில் விற்றுத்தீர்ந்து போன பொருட்களைக் கூட சொல்லிவிட்டால் வாங்கி வந்து தருவது அவரது வழக்கம் எனவே தினசரி இவர் தேவகோட்டையில் இருந்து ஓரியூர் வந்து செல்வது அவரது அன்றாட பணியாக இருந்தது அப்படி ஒரு நாள் தேவகோட்டையில் இருந்து டீக்கடைகளுக்கு சரக்குகளை கொடுத்து கொண்டே வந்தவர் மங்கலகுடி தாண்டியதும் பெருவார்கோட்டை பாலத்தின் அருகே வந்தபோது உடம்பு வியர்த்தது தலை சுற்றத் துவங்கியது தன்னை அறியாமல் வண்டியோடு கீழே விழுந்தார் சாலையின் ஓரத்தில் இருந்த புங்கை மரத்து நிழலில் தன் நிலை மறந்து விழுந்து கிடந்தார் அந்தச் சாலையில் போக்குவரத்து அதிகம் இல்லாத சூழ்நிலையில் வந்து போகும் சிலரும் ஏதோ போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்து அவரைப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தனர் அப்போதுதான் அதிகாலையில் சென்று விட்டு தனது மகன் முருகனோடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவள் கண்ணப்பன் விழுந்து கிடந்ததை பார்த்ததும் பதவி போய் இது அந்த ரஸ்க் ரோட்டி அண்ணன் இல்ல.. என்றபடி பதறி அவரை போய் அசைத்தாள் "அண்ணே.. அண்ணே எந்திரிங்க அண்ணே.. என்ன  பண்ணுது அண்ணே.. அண்ணே".. என்று பதட்டத்தோடு அவரை அசைத்துப் பார்த்தாள் ஆனால் அவர் எதையும் உணர்ந்தவராக இல்லாமல் ஏதோ சொல்ல வந்தவர் நாக்கு உளற அப்படியே கிடந்தார் அலமேலுவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இவர் அன்றாடம் இந்த சாலையிலே பார்த்தவர் என்பதால் அவரை அப்படியே விட்டு விட்டு போகவும் மனதில்லை என்ன செய்வது என யோசித்தபடி சுற்றும்முற்றும் பார்த்தாள் அப்போது அரசத்தூர் கருப்பையா மாட்டு வண்டியில் வர அவரிடம் விவரத்தை சொல்லி அவரோடு சேர்ந்து அவரை மாட்டுவண்டியில் அழைத்து வந்து மங்களக் குடியிலிருந்த ஒரு சித்த மருத்துவரிடம் காண்பிக்க அவர் "உடனடியாக தேவகோட்டை கொண்டு செல்லுங்கள்" என்று பதட்டத்தை தெளித்ததால் என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் நின்றநிலையில் கருப்பையா "அம்மா யோசிக்காத இப்ப சரவணா பஸ் வரும் நான் ஏத்தி விடுறேன் நீ கொண்டு போய் ஆஸ்பத்திரில சேரு இவர் தேவகோட்டை காரர் தானே அவங்க சொந்தக்காரர்களுக்கு சொல்லிவிடு  எனக்கு வேலை இருக்குதாத்தா ..இல்லைன்னா நானும் வருவேன்"என்று சரவண பஸ்ஸில் ஏற்றி தேவகோட்டை அனுப்பினார் தேவகோட்டையில் பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கிற மீனாட்சி மருத்துவமனையில் உடனடியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை துவங்கப்பட்டது உடனடியாக தரப்பட்ட சிகிச்சையால் கண்ணப்பன் நிதானமடைந்து தன்னுடைய வீட்டு முகவரியை சொல்ல  மருத்துவர் அந்த முகவரிக்கு தகவல் சொல்லி கண்ணப்பனின் மனைவி சகுந்தலா மற்றும் மகன் ரத்தினம் ஆகியோர் வந்து சேர்ந்தார்கள் மருத்துவரிடம் என்ன ஏது என்று விசாரித்து விட்டு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்த அலமேலுவிடம் வந்து அவளின் கைகளை பிடித்துக் கொண்டு அழுது நன்றி சொன்னாள் "எல்லாரும் மாதிரி.. நீங்களும் பார்த்துட்டு பேசாம போகாம உடனடியாக கொண்டு வந்து சேர்த்து என் புருஷனை காப்பாத்திருக்கீங்க இல்லைனா எங்க நிலைமையை நான் யோசித்துக் கூட பார்க்க முடியல ரொம்ப சந்தோசம்மா நாங்க எப்பவும் இந்த நன்றியை மறக்க மாட்டோம் "என்று அவள் கைகளை கண்களில் வைத்த படி அழுதால் அவள் தோளைப் பற்றிய அலமேலு "உசுரு எல்லாருக்கும் ஒன்னு தானே ரோட்ல கிடந்து ஒரு உசுரு துடிக்கும் போது எப்படி வேடிக்கை பார்த்துவிட்டு போக முடியும் மனுஷனுக்கு மனுஷ செய்கிற ஒத்தாசைதானே இது இதை போய் பெரிதாக பேசுறீங்க" என்று சகுந்தலாவை  அரவணைத்துக் கொண்டாள் அதற்குப் பிறகு இரண்டு குடும்பங்களும் உறவுகளை கொண்டாடின அவர் உடல்நிலை சரியாகி மீண்டும் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கியதும் அவர் ஓய்வு எடுக்கும் இடமாக அலமேலுவின் வீட்டு திண்ணை மாறியது அன்று முதல் அந்த குடும்பம் உறவானது கண்ணப்பன் தொடர்ந்து வந்து சென்று அந்த உறவை பலப்படுத்திக் கொண்டு இருந்தார்  இப்போது அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்கிற உறவு வட்டத்தில் நிற்கிறார்கள் உறவை பேணுகிறார்கள் 



அந்த குட்டி யானை பெருவாக்கோட்டை  பஸ் ஸ்டாப் அருகே வந்து நின்றது முதலில் டிரைவர் சீட்டுக்கு அருகே இருந்து குதித்து இறங்கிய கண்ணப்பன் அலமேலுவின் வீட்டைப் பார்த்தார் கல்யாண வீடா அது மைக் செட் பாடவில்லை நாதஸ்வரம் கேட்கவில்லை பந்தலில் கூட்டத்தை காணோம் இருக்கும் ஒன்று இரண்டு பேரும் ஏதோ  குழப்பத்தில் இருப்பதாக பட்டது என்ன ஏது என்று புரியவில்லை சகுந்தலாவிடம் சொல்லிவிட்டு வேகமாக பந்தலுக்குள் வந்தார் கண்ணப்பன் அவர் கண்கள் அலமேலுவை தேடியது அங்கே இங்கே பார்த்துவிட்டு கூட்டம் கூடி இருந்த ஒரு இடத்தை கவனித்து அங்கே சென்றார் பெண்கள் கூடி இருந்த அந்த கூட்டத்திற்கு நடுவே அலமேலு அழுது அரற்றி கொண்டு இருந்தாள் அருகே மணப்பெண் அலங்காரத்தோடு அழுது அழுது கண்கள் வீங்க பறித்துப் போட்ட பரங்கிப் பூ மாதிரி வாடிப்போன முகத்தோடு தமிழ்செல்வியும் இருந்தாள் என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியவில்லை அலமேலு அழுவதை பார்த்ததும் ஏதோ மனது குமைந்தது தொண்டைக்குழி அடைத்து அழுகை வந்து முட்டியது தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு "ஆத்தா அலமேலு" என்று குரல் கொடுத்தார்  கண்ணப்பனை பார்த்ததும் அடைத்து வைத்திருந்தகண்மாயின் கலுங்கை திறந்து விட்டதும் பெருங்கூச்சலோடு ஓடிவரும் தண்ணீரைப் போல "அண்ணே அண்ணே" என்று கதறியபடி கண்ணப்பனின் கால்களை வந்துவிழுந்து கட்டிக் கொண்டு கதறினாள் அலமேலு  தமிழ்ச்செல்வி மாமாவை ஒட்டி வந்து நின்று கொண்டாள் அவளை அரவணைத்துக் கொண்டு அழுது கொண்டு இருந்த அலமேலுவின் தலையை தடவியபடி "என்ன நடந்ததுத்தா என்னன்னு சொல்லு" என்று கேட்டார் அழுகையின் ஊடாக "நான் எண்ணத் தன்னே சொல்லுவேன் உங்க மருமக வாழ்க்கையை நானே அழிச்சுப்புட்டேண்ணே இனிமே என் புள்ள என்ன செய்யப் போறான்னு  தெரியவில்லை" என்று புலம்ப  முனையும்.. முடிவும் தெரியாத கண்ணப்பன் "ஆத்தா கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லேன்" என்றார்  " ஊரே நல்ல பையன்னு சொன்னதுனால தான் அந்த வீணா போனவனை நான் மாப்பிள்ளையா கல்யாணம் பேசினேன் அவன் தான் எங்க தலையில கொல்லி வச்சிட்டு போயிட்டான்"என்றவள் சிறிது நேரம் இடைவெளி விட்டு "ஆக்சிடெண்ட்ல செத்துப்பொனானே  மகாலிங்கம் அவனோட பொண்டாட்டி வள்ளியோட இவனுக்கு தொடர்பு இருந்திருக்கு இவனுக்கு கல்யாணம் பேசினதகவல தெரிஞ்ச உடனே அவள் தொடர்ந்து அவனோட சண்டை போட்டு இருக்கா.. என்னை ஏமாத்த பாக்குறியா உன்னை கொன்னே போட்டுருவேன்னு மிரட்டி இருக்கா அந்த சண்டை நேத்து ராத்திரி பெருசாகி அவன் அடிச்சு புடிச்சு தள்ளுனதுல செவுத்துல மோதி வள்ளி இறந்துட்டாளாம் காலையில போலீஸ் வந்து அவனை அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டாங்கண்ணே...  நாங்க யாருக்குமே எந்த பாவமும் செய்யலையே அப்புறம் ஏன் எங்க கிட்டயே எல்லா கஷ்டமும் வருது.. இனிமே நான் என்ன செய்வேன் மனவரைக்கு வந்து கல்யாணம் நின்னு போச்சுன்னா அந்த பொண்ணு அடுத்து கரையேறாதுன்னு சொல்லுவாங்களே நான் என்ன செய்யப் போறேன்" என்று கதறி அழுதாள் கண்ணப்பனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை அழுகையில் கரைந்து நின்ற அலமேலுவையும்  தமிழையும் பார்த்துப் பார்த்து கூட்டமும் அழுதது  அவர்களிடமிருந்து விலகி பஸ் ஸ்டாப்பில் நிறுத்தி இருந்த குட்டி யானை அருகே வந்தார் வண்டியை நிறுத்திவிட்டு போனவரை எதிர்பார்த்து காத்திருந்த சகுந்தலா இவர் வரும் நிலையை பார்த்து பதறி என்ன ஏது என்று விசாரித்தார் நடந்தது அனைத்தையும் சகுந்தலாவிடமும் இரத்தினத்திடமும் கூறினார் பிறகு மூன்று பேருமாக பந்தலுக்குள் வந்தார்கள் சகுந்தலாவை பார்த்ததும் அலமேலு கட்டிக்கொண்டு அழத் துவங்கினாள் அவளின் தோள்களை ஆதரவாக தடவி கொடுத்த சகுந்தலா "தைரியமா இருங்க நாங்கல்லாம் இருக்கோம்" என்று ஆறுதல்  சொன்னாள் கண்ணப்பன் அலமேலுவை பார்த்து "ஆத்தா அலமேலு இங்க பாரு அண்ணே ஒன்னு சொல்றேன் கேக்குறியா போன என் உயிரை புடிச்சு மீட்டு தந்த தாயி நீ  நீ என்னை எப்படி பார்க்கிறேன் என்று எனக்கு தெரியல ஆனா நான் உன்னைய என் கூட பொறந்த பொறப்பாபார்க்கிறேன்  அதனால நான் ஒன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் சொல்லவா " என்று நிறுத்தினார் அலமேலு "என்னண்ணே இப்படி சொல்றீங்க  உங்களை  அண்ணான்னுகூப்பிட துவங்கினதுலருந்து நீங்க என் கூட பிறந்திருக்க கூடாதான்னு எத்தனையோ முறை அந்த ஆண்டவன் கிட்ட கேட்டு இருக்கேன் என்னட்ப் போய் இப்படி சொல்றீங்களே" என்றாள் ஆற்றாமையோடு "சரி அப்படின்னா கேளு" என்றபடி தனது மகன்  ரத்தினத்தை நிறுத்தி "இது என் மகன்  உனக்கு தெரியும் தேவகோட்டையிலே சொந்தமா பேக்கரி வச்சு கொடுத்து இருக்கேன்அவனுக்கு தமிழ் செல்வியக் கட்டி எனக்கு மருமகளா அனுப்பு நான் மகளா பாத்துக்குறேன் அதுவும் நீயும் தமிழும் ஏத்துக்கிட்டாத்தான்" என்று பேச்சை நிறுத்திவிட்டு இரண்டு பேரையும் பார்த்தார்  அலமேலு முகத்தில் அத்தனை சந்தோஷம் அவள் சகுந்தலாவை கட்டிக் கொண்டாள்


நின்ற இடத்தில் இருந்து திருமண வேலைகளை மீண்டும் இயக்கத் துவங்கிய  அலமேலுவை தடுத்து நிறுத்தி "எக்கா நான் பலமுறை  கேட்டுருக்கேன் அப்போ எல்லாம் என்னைத் திட்டி இருக்க ..இப்போ பொண்ணையே கட்டிக் கொடுக்கிற நிலைமைக்கு வந்துட்டே.  இப்பவாவது கண்ணப்பண்ணே என்ன ஆளு கன்னு அதான்.. என்ன சாதின்னு நைசா விசாரிச்சுரு".. என்றாள் திருமண வேலைகளில் உதவி செய்து வரும் பக்கத்து வீட்டு ரேவதி அவள் அப்படி சொன்னதும் நின்று திரும்பி அவளை நேராக பார்த்து "ஏண்டி இவளே என் மகளை அலங்கரிச்சுக் கொண்டு வந்து சபையில் நிறுத்தி அலங்கோல படுத்தின மாதிரி விட்டுட்டு போனானே ஒருத்தன்  நிராதரவா நின்னமே உறவு- சொந்தமின்னு எத்தனை பேரு இதை பார்த்தாங்க  எல்லாரும் பரிதாபப்பட்டாங்களே தவிர யாராவது பரிகாரம் பண்ண நினைச்சாங்களா நாங்க எந்த ஆதரவும் இல்லாம யாருவிட்ட சாபமோ நம்ம வீட்ட புடிச்சு ஆட்டுதுன்னு தவிச்சு நின்ன போ அந்த சாபத்தை நீக்க வந்த சாமிடி  கண்ணப்பண்ணே அந்த சாமி கிட்ட போய் சாதியக் கேக்க சொல்றயா போடி வேலையத்தவளே" என்று வேகமாக வீட்டிற்குள் போனாள் 

 மணவீடு மீண்டும் மணக் கோலம்  பூண்டது மங்கள வாத்தியம் முழங்கத் துவங்கியது ஒலிபெருக்கி குரல் எழுப்பியது கூட்டம் மணப்பந்தலை நிரப்பியது..


_மங்கலக்குடி நா. கலையரசன்_