Saturday, April 12, 2025

கவிதை


சன்னல் இருக்கை 
__________________________

வைக்கோல் போருக்கு
கால்கள் முளைத்ததுபோல 
ஊர்ந்து வரும்பேருந்தை
 தேரென வியந்த 
பாலப்பருவமது 

பேருந்து பயணம் 
பெருங் கனவாய் 
வந்து போகும் 
சன்னலில் முகம் பதித்து
 மனதை வெளியே விட்டு
வெறிப்பதை விட வேறென்ன... 

தலையை வெளியே காட்டாதே
 தந்தையின் எச்சரிக்கை 
கையை வெளிக்காட்டுவது யார் 
ஓட்டுனர் குரல் -ஓடிவரும்
எந்த குரல்களையும்
காது வழி நுழையாமல் 
காற்றள்ளிப் போகும்

 காற்று வந்து மல்லுக்கட்டும் 
முகமறைந்து சினம் காட்டும்
இருந்தென்ன 
காற்றுக்குள் நுழைந்து
கரைந்து விட 
மனசெல்லாம் 
மலர்ந்து விரியும் 

பனை மரம் வேப்பமரம் 
வயல் வரப்பு என
என்னைத் தவிர அனைத்தும் 
பின்னோக்கி ஓடி 
கண்ணாமூச்சி ஆடும்


 நெஞ்சத்தில் துள்ளளாடும் 
நினைவுகளை கிளறிவிட்டு 
ஆர்வம் கண்களில்  ஊர
 சன்னலோரம் பார்த்தேன் 

அண்டை அயலார் மறந்து 
அலைபேசி திரைக்குள்
 புதைந்தபடி பயணிக்கும் 
ஒரு பாலப் பருவத்தினன்...
_மங்கலக்குடி நா.கலையரசன்_

No comments:

Post a Comment