புத்தகத்தின் பெயர்: சுவியம் (சிறுகதைகள்)
ஆசிரியரின் பெயர்: மங்களக்குடி நா. கலையரசன்
பதிப்பகம்: மாற்று ஊடக மையம்
பக்கங்கள்: 168., விலை: 175
இப்புத்தகத்தில் மொத்தமாக பதினோரு கதைகள் இடம்பெற்றுள்ளன. இப்பதினோரு கதைகளின் கதைக்கருக்களும் நாம் அன்றாடம் நம் வாழ்வில் சந்திக்கின்ற நிகழ்வுகளை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது.
“பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற பெண்களால் தங்களது தலைவிதியை தங்களது விருப்பப்படி மாற்றி அமைத்துவிட முடியும். அப்படி அவர்கள் உருவாக்க நினைக்கும் புதிய விதியை அவ்வளவு எளிதாக இச்சமூகம் அங்கீகரிக்காது” என்பதை ‘புது விதி’ என்கிற கதை நம்மிடத்தில் எடுத்துக்காட்டுகிறது.
“அனைத்து உயிர்களையும் நேசிக்கிற மனிதம் மகத்தானது”. அதைத் திரும்பத் திரும்ப இன்று இணைய வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிற இளம் தலைமுறை பிள்ளைகளிடத்தில் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் வெளிப்பாடே ‘உறவுக்காரி’ என்கிற கதை.
குடும்பம் என்கிற அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில், கூடி வாழ்தளின் அவசியத்தையும் அதன் இன்றைய தேவையையும் ‘சுவியம்’ என்கிற கதையை சுவைக்கும் போது நாம் உணர முடியும்.
“இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா” இந்த வாசகம் சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம் ஆனால் இன்றைய இனைய காலத்திலும் சாதிய பாகுபாடுகளும் சாதியை ஏற்றத்தாழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுப்பதற்கல்ல. இப்புத்தகத்தில் வருகின்ற “உயிர்ச்சொல், அழுக்கு” போன்ற கதைகள் கொஞ்சம் நம் காலத்திற்குப் பின்னால் செல்லக்கூடிய கதைக்களமாக இருந்தாலும் அந்தக் கதைகள் சொல்லக்கூடிய சாதியை ஏற்றத்தாழ்வுகளும், இழிவுகளும் இன்னும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது.
அதிகாரம் என்பது ஊரை ஏய்த்துப் பிழைப்பதற்காக ஒருவருக்கு வழங்கப்படுவது அல்ல. அதைக் கைகொண்டு அதன் வழியே மக்களுக்கு நீங்கள் ஆற்றக்கூடிய சேவையின் வழியே தான் மக்கள் உங்களை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அதிகாரம் உங்களை விட்டுச் சென்றாலும் மக்கள் உங்களை ஒருபோதும் விட மாட்டார்கள் என்பதை “கர்ண தாண்டவம்” என்கிற கதையை வாசிப்பவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.
இப்படியாக புத்தகம் முழுவதும் வாசிப்பவர்கள் கடந்து செல்ல, கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் தாராளமாக படைப்பாளரால் வழங்கப்பட்டுள்ளது. அதை கிள்ளி எடுப்பதும், அள்ளி எடுப்பதும் வாசிப்பவர்களின் சிந்தனையைப் பொறுத்தது…
நன்றி!
அன்புடன்: வா. ஸ்டாலின்
No comments:
Post a Comment