11 சிறுகதைகளைக் கொண்ட சுவியம் தொகுப்பை தோழர் கலையரசன் கொடுத்து கொஞ்ச நாளாயிற்று. மேசை மேல் இருந்த புத்தகம், இன்னுமாப்பா படிக்கல என்று கேட்பது போல இருந்தது. அப்படிச் சொல்கிற நிறைய புத்தகங்கள் இங்குண்டு. போன முறை பார்த்த போது தோழர் கலையரசன் கேட்டும் விட்டார் என்னாச்சு படிச்சீங்களா. காரணம் சொல்லி தப்பிக்கத்தான் நம்மிடம் பல உத்திகள் உண்டே. இத்தனை நாளாக சுவியத்தை படிக்கவில்லை என்கிற குற்ற உணர்ச்சி தான் மேலே கண்ட வரிகளை எழுத வைத்தது. மூன்று கதைகளை வாசித்தேன். தோழர் கலையரசன் நல்ல கதை சொல்லி என்பதை தெரிந்து கொண்டேன்.
காமம் தின்னும் பசி எனும் கதை, பருவ வயதில் இயல்பாக மேலெழும் பாலியல் உணர்வுகளை பதின்பருவ வாலிபனொருவன் எப்படி எதிர் கொள்கிறான் என்றாயும் களம். பாலியல் குறித்து வெளிப்படையான உரையாடல், கல்வி, புரிதல் ஏதுமில்லாத சமூக சூழலில் தனித்தே விளங்கிக் கொள்ள வேண்டிய ஆறுமுகத்திற்கு, அதனை மிருதுளா விளக்குகிறாள். மிருதுளா வந்து விளக்குவது தான் கதையின் உச்சம். இது போன்ற ஒரு கதையை எழுத நினைத்ததை பாராட்டத்தான் வேண்டும்.
அடுத்து நாயக நடை எனும் கதை, கிராமத்தை விட்டு நகரத்திற்கு இடம் பெயர்தல், வயோதிகம், நகரத்தின் ஒவ்வாமை என போகிறது கதை. குஸ்தி, சிலம்ப வாத்தியார் நாயகம் குறித்த சித்தரிப்பும், வயோதிகத்தில் தளர்ந்த அவரது நடையும், அவரது சிரிப்பும் என விவரணை விரிந்து செல்கிறது. சூரியன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்ட தொடங்கியதும், ஒளியாமல் இருந்த மிச்ச இருட்டும் சிதறி ஓடியது என ஒரு வரியுண்டு கதையில்.
அழுக்கு. இது தான் கதையின் பெயர். இந்தக் கதையை எளிதாக விவரித்து விட முடியாது. அவ்வளவு அடர்த்தியான கதை. சினை ஆடு வெட்டப்பட்டு, தலைகீழாக தொங்குகிறது. அந்த இடம் முழுவதும் ரத்தக்காடு. மாடசாமியும், கார்மேகமும் நிற்கிறார்கள். ஆனால் இருவருக்குமான இடைவெளி, இத்தனை ஆண்டு காலத்திலும் இட்டு நிரப்ப முடியாத பெரும் இடைவெளியோடு நிற்கிறார்கள். நாமும் நிற்கிறோம். வழிந்தோடும் ஆட்டின் குருதி, நமது கால்களையும் தொட்டு நனைத்துச் செல்கிறது. நின்றபடி இருக்கிறோம்.
கலையரசன் நல்லதொரு கதை சொல்லி.
மீதக் கதைகளையும் படித்து விட்டு எழுதுகிறேன்.
No comments:
Post a Comment