Thursday, June 27, 2013

சிறப்புச் சிரிப்பு....

காசு பணம் தேவையில்லை
கரைந்துவிடும் கவலையில்லை
காத்திருந்து கைக்கொள்ளும்
கடல் கடந்த பொருளுமில்லை
தள்ளுபடி தவணைமுறை
தந்து வாங்க தேவையில்லை
நமக்குள்ளே நிறைந்திருக்கும்
அன்பின் சிலிர்ப்பு -இது
நமக்கு மட்டும் இயற்கை தந்த
அற்புதம் சிரிப்பு

நீண்ட காலமாச்சுங்க –நாம
நிம்மதியா சிரிச்சு
தினம் எந்திரமா உழைச்சு-அந்த
நினைப்பே மறந்து போச்சு
படிப்பறிவும் உடல் பலமும்
சந்தைச்சரக்காய் போச்சு –நம்ம
சந்ததிக்காய் சக்கையாகும்
வாழ்க்கை நமக்காச்சு
கூடிச்சிரிப்போம் வாங்க –சிரிச்சா
கூடும் ஆயுள் தாங்க

இயற்கை படைச்சு வச்சதிலே
மனுசந்தாங்க அழகு –அந்த
மனுசனுக்கே களங்கமில்லா
சிரிப்புதாங்க அழகு
மனசுவிட்டு சிரிச்சுப்புட்டா
மரணம் தள்ளிப்போகும் - அந்த
மனிதர்கூடி சிரித்து வாழ்ந்தா
மரணம் மரித்துப் போகும்
வறுமைக்குள்ளும் வாழ்க்கைக்கான உயிர்ப்பு
வாரித்தந்திடுமே இதயம்  வருடும் சிரிப்பு

இறுக்கம் விட்டு குலுங்கி சிரிச்சா
இதயம் துள்ளிக் குதிக்கும் -அது
ரெக்கை கட்டிப் பறக்கும்
அதன் சுற்றுவட்டப் பாதை தடுக்கும்
பொல்லாததை தள்ளும் -உடல்
புதுப்பொலிவைக் கொள்ளும்
ஆரோக்கியம் அள்ளித்தருமே சிரிப்பு-இதை
அடைகாத்து வளப்பது உன் பொருப்பு

குழந்தைகளின் சிரிப்பு –நம்மை
மயிலிறகாய் வருடும் -இளம்
கன்னியரின் சிரிப்பு –நம்
இளவை வாசல் திறக்கும்
மணந்தவளின் சிரிப்பு –நாம்
உயிர்த்தெழுந்திட உதவும்
உடன் பிறந்தோர் சிரிப்பு –நம்
மன பலத்தைக் கூட்டும்
பெற்றவரின் சிரிப்பு –நாம்
பிறந்த சிறப்பைப் பேசும்
நண்பர்களின் சிரிப்பு –நாளைய
நம்பிக்கையை வளர்க்கும்
உறவுகளின் சிரிப்பு –அன்பு
உலகத்தை விரிவாக்கும்

சிரிப்பு நிறைந்து வழியும் வீட்டை
துயரம் நெருங்கிடாது – அந்த
துயர் துறந்த வீட்டைவிட
சொர்க்கம் வேறு ஏது.....

    -மங்களக்குடி நா.கலையரசன் -

No comments:

Post a Comment