Tuesday, November 8, 2011

சாதி அடையாளம் தேசிய தலைவர்களுக்கு பெருமை சேர்க்குமா..?

அப்பாடா என பலர் பகிரங்கமாகவும் சிலர் ரகசியமாகவும் பெருமூச்சு விட்டனர். செப்டம்பர் -11 அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் நிலையில் அக்டோபர் -30 பற்றிய திகிலில் 10 மீட்டர் தூரம் கேட்க்கும் அளவுக்கு இதயம் ஆபத்தான அதிகபட்ச  அளவில் துடித்தது. அக்டோபர் 30 எதுவும் பிரச்சனையின்றி முடிந்தது எனும் செய்தியினை ஊடகங்கள் உறுதி செய்த பிறகுதான் இதயத்துடிப்பு நார்மலுக்கு வந்தது.
    12 இலட்சம் மக்கள் வாழ்கிற இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் சுமார் 21மூ  வாழ்கிறார்கள், மானாவாரிப்பகுதியான இந்த மாவட்டத்தில் சொந்த நிலமில்லாதவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக சுமார் 2 இலட்சம் பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 50மூ  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். 
    நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகள் கூட லாபமற்ற தொழிலாக மாறிப்போன விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிக்கடி போதிய மழையின்றி விவசாயம் கடனுக்குள் தள்ளி விடும் சூழலில் பலர் நகரம் நோக்கி நகரத் துவங்கி விட்டனர். நடுத்தர விவசாயிகளுக்கே இந்த நிலையெனில் விவசாயத் தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விடுகிறது. மாவட்டத்தில் இதுவரை வந்த எந்த அரசுகளும் தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை. மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கையை உறுதி செய்வது, கடல் தொழிலும் , விவசாயமும் தான். இவை இரண்டுமே நெருக்கடியைச் சந்திப்பதால் விவசாயத் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களுக்கு பிழைப்புக்காக குடிபெயரும் நிலையுள்ளது. இந்த நிலை தலித் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சமூக மக்களின் பொதுநிலையாகும் . இப்படியான வாழ்வியல்  நிலைகொண்ட மக்களிடம் சாதிப்பகை உணர்வை மட்டும் அழுத்தமாய் பதிய வைத்திட சிலர் செய்து வரும் முயற்சியால் - இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ம் , அக்டோபாம் 30-ம் திகிலூட்டும் தேதியாக மாற்றப்பட்டுவிட்டது .

    தேசத்தின் சமூக அரசியல் பண்பாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்த ஆளுமைகள் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்;. சில அரசியல் சுயநலக்காரர்களின் சாதி வணிகவலையில் சிக்கிக்கொண்டு சாதிச் சங்க  உறுப்பினர்களாக்கப்பட்டு விட்டது கொடுமை. இதனால் குறிப்பிட்ட சாதி தவிர பிரசாதி மக்களுக்கு எதிரியாய், அச்சம் விதைக்கும் குறியீடாய்  மாற்றப்பட்டு விட்டார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் தலைகளும் தப்பிவிடவில்லை.
    இந்திய குழந்தைகளுக்கு தாத்தாவாக, இந்தியர்களுக்கு மகாத்மாவாக, தேசபிதாவாக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட வாணியச் செட்டியர் சங்க கூட்டத்திற்கு வாசலில் நின்று வரவேற்பது வரலாற்றுச் சோகம்.
    சுதந்திர இந்தியாவின் பெருமுதலாளிகள் அரசு தனது குடிமக்கள் தேவையை நிறைவேற்றி அவரவருக்குறிய பங்கினை வழங்கும் வளர்ச்சியை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி நமது பகுதியை, இனத்தை, சாதியை புறக்கணிக்கிறது இந்த அரசு எனும் அதிருப்தியை குடிமக்களிடம் ஏற்படுத்தியது.
    இந்த அதிருப்தியை முதலீடாய்க் கொண்டு சாதி சார்ந்த அமைப்புகள் பிறந்து வளர்ந்தது பிரதான அரசியல் கட்சிகளில் முக்கிய இடத்தினை இந்த சாதி சார்ந்த பலத்தைக்கொண்டே பற்றிக்கொள்கிறார்கள். இல்லையெனில் அரசியல் பேரத்தில் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள். பணமும்-பதவியும் கைவந்து சேர படித்தவர் சிலருக்கு இந்த பண்பட்ட திரண் பயன்படுகிறது.    
    தன் சாதியினை ஒன்றிணைக்க, உறுதி செய்ய பிற சாதிகளை எதிராக்கிவிடுவதும்  சாதிப்பெருமையின் தூண்டலுக்காய் பொதுத் தலைவர்களுக்கு சாதி அடையாளம் தருவதும் என தங்களது சாதி வணிகத்தை விரிவுபடுத்துகிறார்கள். இந்த சூது தெறியாமல் விரிக்கப்படும் சாதி பெருமித வலையில் சிக்கி; மயங்கி கிடக்கின்றனர் கணிசமான மக்கள்.
    இந்த மயக்கமும், உணர்வும் குறைந்து விடாமல் காத்துக்கொள்ளவே தலைவர்களின் நினைவுநாட்களை பயன்படுத்துகிறார்களோ எனும் சந்தேகம் ஒவ்வொரு தலைவரின் நினைவு தின ஏற்பாடுகளில் காணமுடிகிறது. அரிவாள் முனையில் ரத்தம் வழியும் ஓவிய விளம்பரங்கள , தங்கள் தலைவர்களின் பாதங்களின் பக்கத்தில் புலி- சிங்கம் , சிறுத்தை வரைந்த பிளக்ஸ் போர்டுகள், வேன்களில் செல்பவர்கள் எழுப்பும் சாதிப் பெருமித வெறிக் கோஷங்கள் என  நினைவு நாளின் நிகழ்வு ஒவ்வொன்றிலும் சாதிவெறித் தூண்டலுக்கான பொறியை விதைக்கிறார்கள். இது தொடர்ந்து சாதி சாயம் பூசப்பட்ட எல்லா தலைவர்களுக்கும் நடத்தப்படும் நினைவு தினத்திலும் தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிகழ்வு சாதிபெருமிதவெறியை அடுத்த தலைமுறைகளுக்கு கைமாற்றிதருவதற்காகவும் - புதுப்பித்துகொள்ளவுமாக மாறி வருகிறது. அதனால் தான் இந்த  நினைவு நாட்களை நிறுத்த வேண்டும் என சிலர் பேசிடத் துவங்கியுள்ளனர். அந்த கருத்துக்களை எளிமையாக ஏற்பவர் எண்ணிக்கையும் வளர்கிறது.
    இது துவக்க நிலையிலேயே தூக்கி எரிய வேண்டிய கருத்து. இது ஆண்டுதோறும் நிகழும் கசப்பான சம்பங்கள் தந்த அச்சத்தால் அல்லது இதை அனுமதிச்சா கண்ட கண்ட சாதித் தலைவருக்கெல்லாம் அரசு விழான்னு போகும் என்கிற மேல்சாதி உணர்வுடன் கூடியதாகவும் இருக்கலாம். எனவே இதை ஒதுக்கி வைத்துவிட்டு சாதிச்சிறைக்குள் சிக்கிக்கிடக்கும் தலைவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் நினைவு தினங்களை அரசு விழாவாக நடத்தி அந்த தலைவர்கள்மீது பற்றுள்ளவர்கள் வந்து அஞ்சலி செலுத்திச் செல்வது போதும் என முடிவெடுப்பது அவசியம். இது பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு மட்டுமல்ல , ஆண்டுதோறும் சாதிவெறியை புதுப்பித்துக் கொள்கிற தினமாக மாற்றி தலைமுறைப் பகையாக்கிடத் துடிக்கும் சாதிவெறி அரசியலுக்கு முடிவு கட்டும். மகாத்மாகாந்தி, வ.உ.சி, காமராஜ், காயிதே மில்லத் , அண்ணா என விரிந்து படர்ந்து வரும் பட்டியலில் இமானுவேல் சேகரனையும் இணைத்து அரசு விழாவாய் நடத்திடவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த சமூகத்திற்கான பங்களிப்பைக் செய்திருப்பதால் இவர்கள் தேசத்தின் பொதுத்தலைவர்கள். எனவே இவர்களின் சாதி அடையாளம் நீக்கி பொதுவான தலைவர்களாக்கும் கடமை அரசுக்கல்ல சமூக ஒற்றுமையை நேசிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு  அதிகம் உள்ளது.

No comments:

Post a Comment