Saturday, November 19, 2011

பேய்காமனுக்கு ஒரு மறுப்பு.

நண்பரே வணக்கம்.
    தோழர்.ச.தமிழ்செல்வன் 'அனணயா வெண்மணி ' இதழில் எழுதியிருந்த மீண்டும் மீண்டும் இமானுவேல் எனும் தலைப்பிலான கட்டுரை குறித்து முகநூலில் நீங்கள் எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். தமிழ்செல்வன்  கட்டுரைக்கு எதிர்வினை எழுதிட,  குறைகளைத் தேடி மெனக்கெட்டிருந்தது உங்கள் எழுத்தின் வழியில் அறியமுடிந்தது.
    உங்கள் எதிர்வினையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.  தமிழ்செல்வன் எந்த தகவலை தவறாக அல்லது மாற்றிச் சொல்லியிருக்கிறார்.  ராணுவப்பணியினைத் துறந்து,  தமது சமூகத்தின் மீது கடைபிடிக்கப்படும் இழிவுகளை எதிர்த்து போராடிட முடிவெடுத்தது, தந்தையின் வழியில் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தது,  சாதி இழிவை எதிர்க்க தம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத் தளபதியாய் மிளிர்ந்தது, இரட்டை கிளாஸ் முறையை எதிர்த்து மாநாடுகளை நடத்தியது ,  57;  பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத தலித் மக்களை வேட்டையாடியபோது அடித்தால் திருப்பி அடி என சொன்னதோடில்லாமல் தற்காத்து தாக்கும் பயிற்சியினைத்தந்தது.
    பரமக்குடியில்  நடந்த சமாதானக் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் அவதூறான கருத்துகளுக்கு திமிறி  நின்று தெளிவான பதிலைத்தந்தார். தேவர் வரும்போது எழுந்து நிற்கவில்லை, எதிர்த்து பேசினார் என்பதற்காக மறுநாள் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனாலும் இன்றும் சாதி இழிவு எதிர்ப்பின் அடையாளமாய் , ஆதர்ச சக்தியாய் இருக்கிறார். சாதி ஒடுக்குமுறைக்கெதிராய் போராடுவோரை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யும் போதெல்லாம் இமானுவேல் சேகரனை கொன்றதாகவே எண்ணுகிறார்கள். ஆனாலும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்க மீண்டும் மீண்டும் இமானுவேல் சேகரன்கள் பிறந்தபடியே இருப்பார்கள். இப்போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்று நம்பிக்கையை  விதைத்துள்ளார். இதில் ஏதும் வரலாற்றுப் பிழையோ, நிகழ்வுப்பிழையோ பதியப்படாதபோது ஏன் இந்தப் பதட்டம் , பதிலடி எல்லாம். 
      எனக்குப் புரிந்துகொள்ளும் மேதமையில்லையோ என்னவோ,  ஆனால் ஒன்று எனக்குப் புரிகிறது. தலைப்பு உங்களுக்கு பிடித்ததாக இல்லை. ஆதிக்க சாதிகள் எனும் இடத்தில்  மறவர் அகமுடையார் பிள்ளைமார் என சாதி வகையரா பட்டியல் வகைப்படுத்தவில்லை. தலித் மக்களை அடித்தால் திருப்பி அடி என இமானுவேல்சேகரன் சொன்னது சீனிவாசராவின் தொடர்ச்சி என எழுதியிருக்கக் கூடாது, எடுத்து கையாளப்பட்ட கிராமிய பாடலில் மறவர் என வந்திருக்க வேண்டும் இதுதானே நண்பா உங்கள்  எதிர்பார்ப்பு  எப்படி.....எப்படி...? உங்கள மாதரி சிலபேரால எதையும் குறைசொல்லி எழுதிவிட முடிகிறது (ரூம்போட்டு யோசிப்பீங்களோ..? )
        பரமக்குடி கொடூரம்  நடந்ததற்கான காரணிகளை சமரசமின்றி முன்வைத்து நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க இமானுவேல் சேகரன் உயிரை உரமாக்கி உருவாக்கிய விழப்புணர்வு எழுட்சியின் பக்கம் நின்று சமகால தலித் அமைப்புகளின் தலைவர்களையும் ஜனநாயக சக்திகளையும் தீண்டாமை இழிவுக்கெதிரான போராட்டத்தில் களமாட கைகோர்த்து  அழைத்துச் செல்லும் தமிழ்ச்செல்வன் கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள் நண்பா.... சில வார்த்தைகளை பிடித்துக்கொண்டு வாதாடத் துவங்குவது தலித்தியமல்ல அது தனித்தியம்
    நான் ஆய்வாளனெல்லாம் இல்லை வாசிப்பில் வசப்பட்ட விபரங்களை நினைவில் வைத்துக்கொண்டே சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறென். நாம் வாழ்கிற சமூகத்தில் சாதிப் பாகுபாட்டிற்கும் தீண்டாமை இழிவிற்கும் எதிராய் நீ;ண்ட நெடுங்காலமாய் நடந்து வரும் போராட்டத்தில் தலித் அல்லாத பலரும் தலித் அமைப்புகள், தலைவர்களுடன் இணைந்து  பங்கேற்றுள்ளனர். என்பதை மறுத்துவிடமாட்டீர்கள்  என நம்புகிறேன்.  இன்றைய சில தலைவர்கள் சொல்வதுபோல இது எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம்  அடிபடுபவர்கள், கொலையாபவர்கள் வலியை அனுபவிப்பவர்கள் நாங்கள்தான் எனவே நாங்களே  பார்த்துக்கொள்வோம் என அன்றைய தலைவர்கள் யாரையும் தடுக்கவில்லை. (இரங்கல் நோட்டில் கையெழுத்துப்போடுவது ஒப்பாரி வைத்து ஓய்வது  என நீங்கள் சொல்வதும் அது தானே நண்பா)  சாதி ஒழிப்பு – தீண்டாமை என்பதெல்லாம் தலித் மக்கள் பிரச்சனையல்ல தேசத்தின் பிரச்சனை என புரிந்து கொண்ட பிற சமூகங்களைச் சேர்ந்தவர் பலர் அன்றைய சமூக கண்ணோட்டங்களை மறுத்து எதிர்த்து போராடினார்கள்.
   அந்த முற்போக்கு பாரம்பரியத்தின் முதிர்ச்சியும் முழமையும் பெற்ற தொடர்ச்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமைக் கெதிரான போராட்டம்.  அந்த செயல்பாட்டின் விரிவாக்கப்பட்ட களம்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அதில் முன்னனிப்படைவீரனாய் செயல்படும் த.மு.எ.கச-வின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வன். இவர் பார்த்ததை படித்ததை மனதில் படுவதை கவிதையாய் கட்டுரையாய் கதையாய் எழுதிவிட்டு கடமையை முடித்துக்கொள்ளும் படைப்பாளியல்ல. சமூக அநீதிகளுக்கெதிராய் களமாடும் போராளி, ஒரு போராளிக்கு தனது இலக்கினையடையும் போராட்டத்தின் பலத்தினை அதிகரித்துக்கொள்ள கிடைக்கும் ஆயுதம், அமைப்புகள் தனி மனிதர் என அனைத்தையும் கைக்கொள்ளும் தெளிவு தேவை . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தந்த பயிற்சி,  அது பற்றிய கள அறிவும் உள்ளதால் தான் எழுத்தில் அது வெளிப்படுகிறது. அந்த கட்டுரை பலரின் கவனம் கவர்கிறது.
    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானபிறகு  இணைந்து செயல்பட இசைந்த அமைப்புகளின்  எண்ணிக்கைகளே மார்க்சிஸ்ட் கட்சியின் தெளிவுக்கு கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனியை உருவாக்கிய பிறகு தலித் மக்களுக்கு பாதை விட மறுத்த சுவர்கள், கதவினைத் திறக்க மறுத்த ஆலயங்கள்,  தனிக்கிளாஸ் தந்து  ஒதுக்கிவைத்த டீ கடைகள்,  அமர்ந்திட இருக்கை மறுத்த பஞ்சாயத்து அலுவலகங்கள்-  என தீண்டாமையின் சகல வடிவங்களையும் எதிர்த்த போராட்டங்கள் எத்தனை...எத்தனை  அதில் கடலளவு எனச் சொல்லவில்லை கையளவேனும் கிடைத்த வெற்றிகளுக்கு யார்...?  காரணம். 
        எந்தச் சாதிகள் இந்த அநீதிகளை அமுலாக்குகிறதோ அதே சாதியென அடையாளப்படுத்தப்பட்டவர்களே மார்க்சிஸ்டாய் , சி.ஐ.டி.யு-வாய் எல்.ஐ.சி ஊழியர் அமைப்பாய்,  டி.ஒய்.எப்.ஐ,  எஸ்.எப்.ஐ , வி.ச, வி.தொ.ச, மாதர் அமைப்பின் ஊழியராய்,  த.மு.எ.க.ச படைப்பாளியாய் .  மனித நீதியின் மனச்சாட்சியாய் ,  களத்தில் நின்றதால்தான் இதை சாதிக்க முடிந்தது. ஆட்சியாளர்களால் கூட சாதிச்சாயம்  பூசமுடியாத போராட்டங்களை நடத்தியவர்களுக்கு சாதி அடையாளம் பூசிட நினைக்காதீர்கள்
(உங்க வேடெல்லாம் ...ரொம்ம பேடா இருக்கே நண்பா..)
        உங்களிடம் ஒரே ஒரு கேள்வி-
பரமக்குடி துப்பாக்கி சூடுக்கு எதிராய் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாய் (இப்படி குதற்கமாய் எதிர்வினைகள் எழுதுவது தவிர) நீங்கள் செய்தது என்ன...? உங்களின் நினைவுக்காகச் சொல்கிறேன். செப்டம்பர்-11 துப்பாக்கிச்சூடு  கலங்கிப்போன பலர் காவல்துறையின்  காளித்தனத்தினை நினைத்து தயங்கிய நிலையில் 13-ம் தேதியே காவல்துறையின் மிரட்டலை மீறி  உயிர் பறிக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து ஆறுதல் சொன்னது தீ;ண்டாமை ஒழிப்பு முன்னணியும்,   மார்க்சிஸ்ட் கட்சியும் தான் அன்றோடு ஒதுங்கிவிடவில்லை (உங்கள் மொழியில் சொன்னால் அதுதான் இரங்கல் நோட்டிஸ் கையெழுத்துப் போட்டாயிற்றே ) 15-ம் தேதி சிபி.எம் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வந்தது.
20-ம்தேதி சி.பி.எம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வந்தார். இப்படி இதுவரை 6முறை மார்க்சிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் துயரத்தில் உள்ள பச்சேரி பழனிக்குமார் உள்ளிட்ட 7 குடும்பங்களை சந்தித்துள்ளோம். ஆறதல் சொன்னது மட்டுமல்ல துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பணி இடை நீக்கம் செய்வது,  இழப்பீட்டை 5 லட்சமாக்குவது , குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி,  இரவுத் தேடலை நிறுத்து, 1400பேர் மீதான பொய் வழக்கினை வாபஸ் வாங்கு என அக்-2-ல் போலீஸ் கெடுபிடி மீறி பரமக்குடி ஐந்துமுனையிலேயே ஆர்ப்பாட்டம் , சிபிஐ விசாரணை கோரி உயர்நீதி மன்றத்தில வழக்கு இப்படித் தொடரும் எங்கள் நடவடிக்கை உங்கள் பார்வையில் ஒப்பாரி வைத்துவிட்டு போவதா, நண்பா (உங்க அப்ரோச் ரொம்ப புதுசா இருக்கே)  இல்லை நண்பா .  பாதிக்கபட்டது  எங்கள் வர்க்கமாயிற்றே எனும் உறவு தந்த உணர்வும், உரிமையும்..
        நீண்டபடி போகும் நண்பா முடிப்போம்....
        நீண்டகாலமாய் நீண்டுவரும் சாதி ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட நீளும் கரங்களையெல்லாம் பற்றிக்கொள்வோம் . தமிழ்செல்வன் ஆதிக்க சாதியை மறவர் சாதியென ஏன் குறிப்பிடவில்லையென கோபப்பட்ட நீங்களே அதே சாதியில் பிறந்த திரு.தினகரனை தோழர் என இணைத்துக்கொள்கிறீர்கள் பாருங்கள் அதுதான் சரியான பார்வை - இதே போல எல்லா சமூகத்திலும் தினகரன்கள் இருக்கிறார்கள்- அவர்களையும்  கண்டறிந்து இணைத்துக்கொள்வோம் தனிப்பலம் காட்ட எண்ணும் சிலரால் நாமும் தனிமைப்பட்டுவிடக்கூடாது சாதித்தடைகளை உடைத்தெறிய நமது மன இடைவெளிகளை தோழமை உணர்விட்டு நிரப்புவோம்.
               
                                                                           தோழமை உணர்வுடன் -கலையரசன்.

No comments:

Post a Comment