Saturday, November 19, 2011

பேய்காமனுக்கு ஒரு மறுப்பு.

நண்பரே வணக்கம்.
    தோழர்.ச.தமிழ்செல்வன் 'அனணயா வெண்மணி ' இதழில் எழுதியிருந்த மீண்டும் மீண்டும் இமானுவேல் எனும் தலைப்பிலான கட்டுரை குறித்து முகநூலில் நீங்கள் எழுதியிருந்த எதிர்வினையை படித்தேன். தமிழ்செல்வன்  கட்டுரைக்கு எதிர்வினை எழுதிட,  குறைகளைத் தேடி மெனக்கெட்டிருந்தது உங்கள் எழுத்தின் வழியில் அறியமுடிந்தது.
    உங்கள் எதிர்வினையில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.  தமிழ்செல்வன் எந்த தகவலை தவறாக அல்லது மாற்றிச் சொல்லியிருக்கிறார்.  ராணுவப்பணியினைத் துறந்து,  தமது சமூகத்தின் மீது கடைபிடிக்கப்படும் இழிவுகளை எதிர்த்து போராடிட முடிவெடுத்தது, தந்தையின் வழியில் காங்கிரசில் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தது,  சாதி இழிவை எதிர்க்க தம் மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி போராட்டத் தளபதியாய் மிளிர்ந்தது, இரட்டை கிளாஸ் முறையை எதிர்த்து மாநாடுகளை நடத்தியது ,  57;  பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு வாக்களிக்காத தலித் மக்களை வேட்டையாடியபோது அடித்தால் திருப்பி அடி என சொன்னதோடில்லாமல் தற்காத்து தாக்கும் பயிற்சியினைத்தந்தது.
    பரமக்குடியில்  நடந்த சமாதானக் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவரின் அவதூறான கருத்துகளுக்கு திமிறி  நின்று தெளிவான பதிலைத்தந்தார். தேவர் வரும்போது எழுந்து நிற்கவில்லை, எதிர்த்து பேசினார் என்பதற்காக மறுநாள் வெட்டிக் கொல்லப்பட்டார். ஆனாலும் இன்றும் சாதி இழிவு எதிர்ப்பின் அடையாளமாய் , ஆதர்ச சக்தியாய் இருக்கிறார். சாதி ஒடுக்குமுறைக்கெதிராய் போராடுவோரை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யும் போதெல்லாம் இமானுவேல் சேகரனை கொன்றதாகவே எண்ணுகிறார்கள். ஆனாலும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்க மீண்டும் மீண்டும் இமானுவேல் சேகரன்கள் பிறந்தபடியே இருப்பார்கள். இப்போராட்டம் வெற்றி பெற்றே தீரும் என்று நம்பிக்கையை  விதைத்துள்ளார். இதில் ஏதும் வரலாற்றுப் பிழையோ, நிகழ்வுப்பிழையோ பதியப்படாதபோது ஏன் இந்தப் பதட்டம் , பதிலடி எல்லாம். 
      எனக்குப் புரிந்துகொள்ளும் மேதமையில்லையோ என்னவோ,  ஆனால் ஒன்று எனக்குப் புரிகிறது. தலைப்பு உங்களுக்கு பிடித்ததாக இல்லை. ஆதிக்க சாதிகள் எனும் இடத்தில்  மறவர் அகமுடையார் பிள்ளைமார் என சாதி வகையரா பட்டியல் வகைப்படுத்தவில்லை. தலித் மக்களை அடித்தால் திருப்பி அடி என இமானுவேல்சேகரன் சொன்னது சீனிவாசராவின் தொடர்ச்சி என எழுதியிருக்கக் கூடாது, எடுத்து கையாளப்பட்ட கிராமிய பாடலில் மறவர் என வந்திருக்க வேண்டும் இதுதானே நண்பா உங்கள்  எதிர்பார்ப்பு  எப்படி.....எப்படி...? உங்கள மாதரி சிலபேரால எதையும் குறைசொல்லி எழுதிவிட முடிகிறது (ரூம்போட்டு யோசிப்பீங்களோ..? )
        பரமக்குடி கொடூரம்  நடந்ததற்கான காரணிகளை சமரசமின்றி முன்வைத்து நிகழ்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க இமானுவேல் சேகரன் உயிரை உரமாக்கி உருவாக்கிய விழப்புணர்வு எழுட்சியின் பக்கம் நின்று சமகால தலித் அமைப்புகளின் தலைவர்களையும் ஜனநாயக சக்திகளையும் தீண்டாமை இழிவுக்கெதிரான போராட்டத்தில் களமாட கைகோர்த்து  அழைத்துச் செல்லும் தமிழ்ச்செல்வன் கட்டுரையை மீண்டும் படித்துப் பாருங்கள் நண்பா.... சில வார்த்தைகளை பிடித்துக்கொண்டு வாதாடத் துவங்குவது தலித்தியமல்ல அது தனித்தியம்
    நான் ஆய்வாளனெல்லாம் இல்லை வாசிப்பில் வசப்பட்ட விபரங்களை நினைவில் வைத்துக்கொண்டே சிலவற்றை நினைவூட்ட விரும்புகிறென். நாம் வாழ்கிற சமூகத்தில் சாதிப் பாகுபாட்டிற்கும் தீண்டாமை இழிவிற்கும் எதிராய் நீ;ண்ட நெடுங்காலமாய் நடந்து வரும் போராட்டத்தில் தலித் அல்லாத பலரும் தலித் அமைப்புகள், தலைவர்களுடன் இணைந்து  பங்கேற்றுள்ளனர். என்பதை மறுத்துவிடமாட்டீர்கள்  என நம்புகிறேன்.  இன்றைய சில தலைவர்கள் சொல்வதுபோல இது எங்கள் பிரச்சனை நாங்கள் பார்த்துக் கொள்வோம்  அடிபடுபவர்கள், கொலையாபவர்கள் வலியை அனுபவிப்பவர்கள் நாங்கள்தான் எனவே நாங்களே  பார்த்துக்கொள்வோம் என அன்றைய தலைவர்கள் யாரையும் தடுக்கவில்லை. (இரங்கல் நோட்டில் கையெழுத்துப்போடுவது ஒப்பாரி வைத்து ஓய்வது  என நீங்கள் சொல்வதும் அது தானே நண்பா)  சாதி ஒழிப்பு – தீண்டாமை என்பதெல்லாம் தலித் மக்கள் பிரச்சனையல்ல தேசத்தின் பிரச்சனை என புரிந்து கொண்ட பிற சமூகங்களைச் சேர்ந்தவர் பலர் அன்றைய சமூக கண்ணோட்டங்களை மறுத்து எதிர்த்து போராடினார்கள்.
   அந்த முற்போக்கு பாரம்பரியத்தின் முதிர்ச்சியும் முழமையும் பெற்ற தொடர்ச்சிதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமைக் கெதிரான போராட்டம்.  அந்த செயல்பாட்டின் விரிவாக்கப்பட்ட களம்தான் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அதில் முன்னனிப்படைவீரனாய் செயல்படும் த.மு.எ.கச-வின் மாநிலத் தலைவர் தமிழ்செல்வன். இவர் பார்த்ததை படித்ததை மனதில் படுவதை கவிதையாய் கட்டுரையாய் கதையாய் எழுதிவிட்டு கடமையை முடித்துக்கொள்ளும் படைப்பாளியல்ல. சமூக அநீதிகளுக்கெதிராய் களமாடும் போராளி, ஒரு போராளிக்கு தனது இலக்கினையடையும் போராட்டத்தின் பலத்தினை அதிகரித்துக்கொள்ள கிடைக்கும் ஆயுதம், அமைப்புகள் தனி மனிதர் என அனைத்தையும் கைக்கொள்ளும் தெளிவு தேவை . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தந்த பயிற்சி,  அது பற்றிய கள அறிவும் உள்ளதால் தான் எழுத்தில் அது வெளிப்படுகிறது. அந்த கட்டுரை பலரின் கவனம் கவர்கிறது.
    தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவானபிறகு  இணைந்து செயல்பட இசைந்த அமைப்புகளின்  எண்ணிக்கைகளே மார்க்சிஸ்ட் கட்சியின் தெளிவுக்கு கிடைத்த வெற்றியாகும். மார்க்சிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனியை உருவாக்கிய பிறகு தலித் மக்களுக்கு பாதை விட மறுத்த சுவர்கள், கதவினைத் திறக்க மறுத்த ஆலயங்கள்,  தனிக்கிளாஸ் தந்து  ஒதுக்கிவைத்த டீ கடைகள்,  அமர்ந்திட இருக்கை மறுத்த பஞ்சாயத்து அலுவலகங்கள்-  என தீண்டாமையின் சகல வடிவங்களையும் எதிர்த்த போராட்டங்கள் எத்தனை...எத்தனை  அதில் கடலளவு எனச் சொல்லவில்லை கையளவேனும் கிடைத்த வெற்றிகளுக்கு யார்...?  காரணம். 
        எந்தச் சாதிகள் இந்த அநீதிகளை அமுலாக்குகிறதோ அதே சாதியென அடையாளப்படுத்தப்பட்டவர்களே மார்க்சிஸ்டாய் , சி.ஐ.டி.யு-வாய் எல்.ஐ.சி ஊழியர் அமைப்பாய்,  டி.ஒய்.எப்.ஐ,  எஸ்.எப்.ஐ , வி.ச, வி.தொ.ச, மாதர் அமைப்பின் ஊழியராய்,  த.மு.எ.க.ச படைப்பாளியாய் .  மனித நீதியின் மனச்சாட்சியாய் ,  களத்தில் நின்றதால்தான் இதை சாதிக்க முடிந்தது. ஆட்சியாளர்களால் கூட சாதிச்சாயம்  பூசமுடியாத போராட்டங்களை நடத்தியவர்களுக்கு சாதி அடையாளம் பூசிட நினைக்காதீர்கள்
(உங்க வேடெல்லாம் ...ரொம்ம பேடா இருக்கே நண்பா..)
        உங்களிடம் ஒரே ஒரு கேள்வி-
பரமக்குடி துப்பாக்கி சூடுக்கு எதிராய் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாய் (இப்படி குதற்கமாய் எதிர்வினைகள் எழுதுவது தவிர) நீங்கள் செய்தது என்ன...? உங்களின் நினைவுக்காகச் சொல்கிறேன். செப்டம்பர்-11 துப்பாக்கிச்சூடு  கலங்கிப்போன பலர் காவல்துறையின்  காளித்தனத்தினை நினைத்து தயங்கிய நிலையில் 13-ம் தேதியே காவல்துறையின் மிரட்டலை மீறி  உயிர் பறிக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்து ஆறுதல் சொன்னது தீ;ண்டாமை ஒழிப்பு முன்னணியும்,   மார்க்சிஸ்ட் கட்சியும் தான் அன்றோடு ஒதுங்கிவிடவில்லை (உங்கள் மொழியில் சொன்னால் அதுதான் இரங்கல் நோட்டிஸ் கையெழுத்துப் போட்டாயிற்றே ) 15-ம் தேதி சிபி.எம் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு வந்தது.
20-ம்தேதி சி.பி.எம் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் வந்தார். இப்படி இதுவரை 6முறை மார்க்சிஸ்ட் கட்சி , தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் துயரத்தில் உள்ள பச்சேரி பழனிக்குமார் உள்ளிட்ட 7 குடும்பங்களை சந்தித்துள்ளோம். ஆறதல் சொன்னது மட்டுமல்ல துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை பணி இடை நீக்கம் செய்வது,  இழப்பீட்டை 5 லட்சமாக்குவது , குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி,  இரவுத் தேடலை நிறுத்து, 1400பேர் மீதான பொய் வழக்கினை வாபஸ் வாங்கு என அக்-2-ல் போலீஸ் கெடுபிடி மீறி பரமக்குடி ஐந்துமுனையிலேயே ஆர்ப்பாட்டம் , சிபிஐ விசாரணை கோரி உயர்நீதி மன்றத்தில வழக்கு இப்படித் தொடரும் எங்கள் நடவடிக்கை உங்கள் பார்வையில் ஒப்பாரி வைத்துவிட்டு போவதா, நண்பா (உங்க அப்ரோச் ரொம்ப புதுசா இருக்கே)  இல்லை நண்பா .  பாதிக்கபட்டது  எங்கள் வர்க்கமாயிற்றே எனும் உறவு தந்த உணர்வும், உரிமையும்..
        நீண்டபடி போகும் நண்பா முடிப்போம்....
        நீண்டகாலமாய் நீண்டுவரும் சாதி ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட நீளும் கரங்களையெல்லாம் பற்றிக்கொள்வோம் . தமிழ்செல்வன் ஆதிக்க சாதியை மறவர் சாதியென ஏன் குறிப்பிடவில்லையென கோபப்பட்ட நீங்களே அதே சாதியில் பிறந்த திரு.தினகரனை தோழர் என இணைத்துக்கொள்கிறீர்கள் பாருங்கள் அதுதான் சரியான பார்வை - இதே போல எல்லா சமூகத்திலும் தினகரன்கள் இருக்கிறார்கள்- அவர்களையும்  கண்டறிந்து இணைத்துக்கொள்வோம் தனிப்பலம் காட்ட எண்ணும் சிலரால் நாமும் தனிமைப்பட்டுவிடக்கூடாது சாதித்தடைகளை உடைத்தெறிய நமது மன இடைவெளிகளை தோழமை உணர்விட்டு நிரப்புவோம்.
               
                                                                           தோழமை உணர்வுடன் -கலையரசன்.

Tuesday, November 8, 2011

சாதி அடையாளம் தேசிய தலைவர்களுக்கு பெருமை சேர்க்குமா..?

அப்பாடா என பலர் பகிரங்கமாகவும் சிலர் ரகசியமாகவும் பெருமூச்சு விட்டனர். செப்டம்பர் -11 அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரும் நிலையில் அக்டோபர் -30 பற்றிய திகிலில் 10 மீட்டர் தூரம் கேட்க்கும் அளவுக்கு இதயம் ஆபத்தான அதிகபட்ச  அளவில் துடித்தது. அக்டோபர் 30 எதுவும் பிரச்சனையின்றி முடிந்தது எனும் செய்தியினை ஊடகங்கள் உறுதி செய்த பிறகுதான் இதயத்துடிப்பு நார்மலுக்கு வந்தது.
    12 இலட்சம் மக்கள் வாழ்கிற இராமநாதபுரம் மாவட்டத்தில் தலித் மக்கள் சுமார் 21மூ  வாழ்கிறார்கள், மானாவாரிப்பகுதியான இந்த மாவட்டத்தில் சொந்த நிலமில்லாதவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக சுமார் 2 இலட்சம் பேர் வரை உள்ளனர். இந்த எண்ணிக்கையில் 50மூ  பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்தான். 
    நிலம் வைத்துள்ள நடுத்தர விவசாயிகள் கூட லாபமற்ற தொழிலாக மாறிப்போன விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அடிக்கடி போதிய மழையின்றி விவசாயம் கடனுக்குள் தள்ளி விடும் சூழலில் பலர் நகரம் நோக்கி நகரத் துவங்கி விட்டனர். நடுத்தர விவசாயிகளுக்கே இந்த நிலையெனில் விவசாயத் தொழிலாளர்கள் நிலை பரிதாபமாகி விடுகிறது. மாவட்டத்தில் இதுவரை வந்த எந்த அரசுகளும் தொழில் வளர்ச்சிக்கு திட்டமிடவில்லை. மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கையை உறுதி செய்வது, கடல் தொழிலும் , விவசாயமும் தான். இவை இரண்டுமே நெருக்கடியைச் சந்திப்பதால் விவசாயத் தொழிலாளர்கள் பிற மாவட்டங்களுக்கு பிழைப்புக்காக குடிபெயரும் நிலையுள்ளது. இந்த நிலை தலித் மற்றும் பிற்ப்படுத்தப்பட்ட சமூக மக்களின் பொதுநிலையாகும் . இப்படியான வாழ்வியல்  நிலைகொண்ட மக்களிடம் சாதிப்பகை உணர்வை மட்டும் அழுத்தமாய் பதிய வைத்திட சிலர் செய்து வரும் முயற்சியால் - இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11-ம் , அக்டோபாம் 30-ம் திகிலூட்டும் தேதியாக மாற்றப்பட்டுவிட்டது .

    தேசத்தின் சமூக அரசியல் பண்பாட்டுத் தலங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச்  செய்த ஆளுமைகள் அனைத்து மக்களாலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்;. சில அரசியல் சுயநலக்காரர்களின் சாதி வணிகவலையில் சிக்கிக்கொண்டு சாதிச் சங்க  உறுப்பினர்களாக்கப்பட்டு விட்டது கொடுமை. இதனால் குறிப்பிட்ட சாதி தவிர பிரசாதி மக்களுக்கு எதிரியாய், அச்சம் விதைக்கும் குறியீடாய்  மாற்றப்பட்டு விட்டார்கள். சுதந்திரப்போராட்டத் தலைவர்களின் தலைகளும் தப்பிவிடவில்லை.
    இந்திய குழந்தைகளுக்கு தாத்தாவாக, இந்தியர்களுக்கு மகாத்மாவாக, தேசபிதாவாக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூட வாணியச் செட்டியர் சங்க கூட்டத்திற்கு வாசலில் நின்று வரவேற்பது வரலாற்றுச் சோகம்.
    சுதந்திர இந்தியாவின் பெருமுதலாளிகள் அரசு தனது குடிமக்கள் தேவையை நிறைவேற்றி அவரவருக்குறிய பங்கினை வழங்கும் வளர்ச்சியை எட்டுவதில் ஏற்பட்ட தோல்வி நமது பகுதியை, இனத்தை, சாதியை புறக்கணிக்கிறது இந்த அரசு எனும் அதிருப்தியை குடிமக்களிடம் ஏற்படுத்தியது.
    இந்த அதிருப்தியை முதலீடாய்க் கொண்டு சாதி சார்ந்த அமைப்புகள் பிறந்து வளர்ந்தது பிரதான அரசியல் கட்சிகளில் முக்கிய இடத்தினை இந்த சாதி சார்ந்த பலத்தைக்கொண்டே பற்றிக்கொள்கிறார்கள். இல்லையெனில் அரசியல் பேரத்தில் உரிய பங்கினை பெற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள். பணமும்-பதவியும் கைவந்து சேர படித்தவர் சிலருக்கு இந்த பண்பட்ட திரண் பயன்படுகிறது.    
    தன் சாதியினை ஒன்றிணைக்க, உறுதி செய்ய பிற சாதிகளை எதிராக்கிவிடுவதும்  சாதிப்பெருமையின் தூண்டலுக்காய் பொதுத் தலைவர்களுக்கு சாதி அடையாளம் தருவதும் என தங்களது சாதி வணிகத்தை விரிவுபடுத்துகிறார்கள். இந்த சூது தெறியாமல் விரிக்கப்படும் சாதி பெருமித வலையில் சிக்கி; மயங்கி கிடக்கின்றனர் கணிசமான மக்கள்.
    இந்த மயக்கமும், உணர்வும் குறைந்து விடாமல் காத்துக்கொள்ளவே தலைவர்களின் நினைவுநாட்களை பயன்படுத்துகிறார்களோ எனும் சந்தேகம் ஒவ்வொரு தலைவரின் நினைவு தின ஏற்பாடுகளில் காணமுடிகிறது. அரிவாள் முனையில் ரத்தம் வழியும் ஓவிய விளம்பரங்கள , தங்கள் தலைவர்களின் பாதங்களின் பக்கத்தில் புலி- சிங்கம் , சிறுத்தை வரைந்த பிளக்ஸ் போர்டுகள், வேன்களில் செல்பவர்கள் எழுப்பும் சாதிப் பெருமித வெறிக் கோஷங்கள் என  நினைவு நாளின் நிகழ்வு ஒவ்வொன்றிலும் சாதிவெறித் தூண்டலுக்கான பொறியை விதைக்கிறார்கள். இது தொடர்ந்து சாதி சாயம் பூசப்பட்ட எல்லா தலைவர்களுக்கும் நடத்தப்படும் நினைவு தினத்திலும் தொடர்ந்தபடியே உள்ளது. இந்த நிகழ்வு சாதிபெருமிதவெறியை அடுத்த தலைமுறைகளுக்கு கைமாற்றிதருவதற்காகவும் - புதுப்பித்துகொள்ளவுமாக மாறி வருகிறது. அதனால் தான் இந்த  நினைவு நாட்களை நிறுத்த வேண்டும் என சிலர் பேசிடத் துவங்கியுள்ளனர். அந்த கருத்துக்களை எளிமையாக ஏற்பவர் எண்ணிக்கையும் வளர்கிறது.
    இது துவக்க நிலையிலேயே தூக்கி எரிய வேண்டிய கருத்து. இது ஆண்டுதோறும் நிகழும் கசப்பான சம்பங்கள் தந்த அச்சத்தால் அல்லது இதை அனுமதிச்சா கண்ட கண்ட சாதித் தலைவருக்கெல்லாம் அரசு விழான்னு போகும் என்கிற மேல்சாதி உணர்வுடன் கூடியதாகவும் இருக்கலாம். எனவே இதை ஒதுக்கி வைத்துவிட்டு சாதிச்சிறைக்குள் சிக்கிக்கிடக்கும் தலைவர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் நினைவு தினங்களை அரசு விழாவாக நடத்தி அந்த தலைவர்கள்மீது பற்றுள்ளவர்கள் வந்து அஞ்சலி செலுத்திச் செல்வது போதும் என முடிவெடுப்பது அவசியம். இது பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு மட்டுமல்ல , ஆண்டுதோறும் சாதிவெறியை புதுப்பித்துக் கொள்கிற தினமாக மாற்றி தலைமுறைப் பகையாக்கிடத் துடிக்கும் சாதிவெறி அரசியலுக்கு முடிவு கட்டும். மகாத்மாகாந்தி, வ.உ.சி, காமராஜ், காயிதே மில்லத் , அண்ணா என விரிந்து படர்ந்து வரும் பட்டியலில் இமானுவேல் சேகரனையும் இணைத்து அரசு விழாவாய் நடத்திடவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் இந்த சமூகத்திற்கான பங்களிப்பைக் செய்திருப்பதால் இவர்கள் தேசத்தின் பொதுத்தலைவர்கள். எனவே இவர்களின் சாதி அடையாளம் நீக்கி பொதுவான தலைவர்களாக்கும் கடமை அரசுக்கல்ல சமூக ஒற்றுமையை நேசிக்கும் ஜனநாயக சக்திகளுக்கு  அதிகம் உள்ளது.

இவங்க அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க....

வழக்கம் போல உலகச்சந்தையை காரணம் காட்டி  பெட்ரோல்  விலையை 1.80-க்கு உயர்த்தியுள்ளது மத்திய காங்கிரஸ் அரசு, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரிகள் இதை கடுமையாக கண்டித்துள்ளனர். உலக நாடுகளைச்சுற்றினாலே உள்நாட்டைச் சுற்றுவதாய்தானே அர்த்தம் என திருவிளையாடல் பிள்ளையாராய் புதுவிளக்கம் தரவும் தயாராய் , உலகம் சுற்றி வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் 'வேர வழியே இல்லையேப்பா' என கை விரித்துவிட்டார்.  திருடர்களிடமே வீட்டுச் சாவியைக் கொடுக்காதீர்கள் என இடதுசாரிகள் எதிர்த்ததை பொருட்படுத்தாமல் சாவியை மட்டுமல்ல வீட்டையே ஒப்படைத்த காங்கிரஸ் அரசின் மதிமந்திரியான நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியோ பெட்ரோல் விலை குறைப்பு அரசின் கையில் இல்லை நாம்தான்  எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்துவிட்டோமே' என நினைவுப்படுத்துகிறார்.  ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆலோசனை தரும் தலைவர் சோனியா காந்தியோ அவரின் உடல்நிலை மேம்பட மருத்துவர்களின் ஆலோசனையில் அடைக்கலமாகிவிட்டார். இந்திய எதிர்காலத்திற்கான இளைய தலைவர் ராகுல்காந்தியோ  மாநிலம் மாநிலமாய் காடு-மலை-கிராமம் நகரம் பேருந்து –பைக் என ஒரு நல்ல டீ கிடைக்காமல் தேடி அலைகிறார். இந்த அரசின் பங்காளியான தி.மு.க தலைவர் கருணாநிதியோ கட்சியின் எதிர்காலத்தை ஜாமினில் விடுவித்து விட மண்சோறு சாப்பிடாத குறையாய் நீதிமன்றத்திலேயே ஒற்றைக்கால் தவமிருக்கிறார். இவர்களை நம்பி வாக்களித்த மக்கள் முதுகை முறிக்கும் விலைவாசி உயர்வால் முழிபிதுங்கி நிற்கும் நிலையில் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு மேலும் நிம்மதியைக் கெடுத்துள்ளது.
    மத்திய அரசுக்கு எதிரான இந்த அதிருப்தியை தனக்குச் சாதகமாய் அறுவடை  செய்து கொள்ள நினைக்கும் பி.ஜே.பி-யோ இந்த விலை உயர்வை எதிர்த்து சண்டமாறுதம்  செய்கிறது. சரியாக புரிந்து கொள்வதானால் கடந்த காலத்தை நினைவில் தோண்டி  எடுத்துப் பார்ப்பது அவசியம். அன்றாடம் உயரும் இந்த பெட்ரோல் விலை உயர்விற்கான அடித்தளம் பி.ஜே.பி-யால் போடப்பட்டதுதான். பி.ஜே.பி மத்தியில் ஆட்சி நடத்த வந்த போது  பெட்ரோல் டீசல்;களின் விலைகளை கட்டுக்குள் நிறுத்த ஒரு பொது நிதியம் இருந்தது. எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இந்த நிதியத்திற்கு பேரல் ஒன்றுக்கு ஒரு டாலர் வீதம் கட்டிட வேண்டும் என விதி இருந்தது. இப்படி சேரும் நிதியினை வைத்து சர்வதேசச் சந்தையின் விலை உயர்வினை ஈடு  செய்யப்பட்டதால் பெட்ரோல் ,டீசல் விலை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்தது.
    இந்த பி.ஜே.பி புன்னியவான்கள் ஆட்சியில் தான் அந்த நிதியத்தை கலைத்து அதிலிருந்த பல ஆயிரம் கோடி ரூபாய்களை பொதுநிதியோடு இணைத்து செலவு செய்தார்கள். இன்று சர்வதேச சந்தையின் விலை உயர்வை ஈடுசெய்கிறோம் என நுகர்வோர் பாக்கெட்டிருந்து நேரடியாய் பறிக்கும் வழிப்பறிக்கு வாசல் திறந்து விட்ட இவர்கள் தான் மக்களின் துயரத்திற்கு மாய்ந்து மாய்ந்து அழுகிறார்கள். நமக்கு மறதி இருக்கும் என்ற நம்பிக்கையில்தான்.
    இதைவிட பெட்ரோல் விலையில் பாதிக்கு மேல் இருப்பது மத்திய-மாநில அரசுகளின்  வரிதான் கடும் வரிவிதிப்பைச் செய்து விலையை உயர்த்திய மாநில ஆட்சியாளர்களும் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதுகிறார்கள். எங்கே பிரதமரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு விடுவாரோ என அச்சம் ஏற்படுகிறது.
    இன்றைக்கும் நமது அண்டைநாடுகளான பாக்கிஸ்தான் 26ரூ , பங்களாதேஸ் 22, நேபால் 34, பர்மா 30, ஆப்கானிஸ்தான் 36ரூ  இந்தியாவைவிட ஆட்சியாளர்கள் அதிகம் நேசிக்கும் அமெரிக்காவிலேயே 30 ரூபாய்க்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கபடும்போது இந்தியாவில் மட்டும் 75 ரூபாயானது எப்படி ..? எல்லாம் மத்திய-மாநில அரசுகளின் வரிகளால் தான்.
            எனவே ஊரோடு சேர்ந்து அழுவதை நிறுத்தி விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்திட வேண்டும்.
•    சர்வதேசச்சந்தையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை ஏற்ற இரக்கங்களை சமன் செய்வதற்கான  பொது நிதியத்தை மீண்டும் உருவாக்குங்கள்.
•    இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்-க்கான  வரி விதிப்பை குறையுங்கள்.
•    தனியார் ஆலை-நிறுவனங்களுக்கு வழங்கும் பெட்ரோலுக்கு ஒரு விலையும்  , சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு விலையும் ,  சாதாரண –மற்றும் நடுத்தர நுகர்வோறுக்கு –வழங்கும் பெட்ரோலுக்கான விலையையும் வகைப்படுத்தி விலையை நிர்ணயிக்க வேண்டும்.
•    மத்திய-மாநில அரசுகள் விதித்துள்ள நியாயமற்ற வரிகளை குறைக்க வேண்டும்.

       என்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டால் நமது நாட்டிலும் சாதாரணமானவர்கள்  30 ரூபாய்க்கு பெட்ரோல் பெற முடியும்.  ஆனா இவர்கள் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்கள்.

Tuesday, November 1, 2011

பரமக்குடி துப்பாக்கிச்சூடு பதிலில்லா பல கேள்விகள்.

    
செப்டம்பர் 11-தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று காவல்;;துறை நடத்திய கொலைவெறி துப்பாக்கிக்சூட்டில் 6 தலித் மக்கள் கொலை செய்யப்பட்ட கொடூரம் நடந்து  ஒரு மாதம் ஆகப்போகிறது. தமிழக அரசு இந்தப் பிரச்சனையில் பெரும் மௌனத்தையே கடைபிடித்து வருகிறது. கொலையானவர்கள் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயையும், ஒரு நபர் கமிசன் ஒன்றையும்  அமைத்து விட்டதோடு பிரச்சனை முடிந்து போய் விட்டது என கருதுகிறார்கள் போலும்.
     தங்கள் சமூகத்தின் மீதான அடக்குமுறைகளை தடுக்க முடியாத , அடிப்படைப் பிரச்சனைகளைக்கூட தீர்க்காத , மிகப்பெரும் ஊழல் முறை கேடுகளில் ஊறித்திளைத்த தி.மு.க. அரசை மாற்றிட நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க-வை ஆதரித்து வாக்களித்த மக்கள், சமூக ஒடுக்குமுறை  எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளமாய் கருதும் தங்கள் தலைவர்  இமானுவேல் சேகரன் குருபூஜையை  சிறப்பாக நடத்திக் காட்டி அரசே இந்த விழாவை ஏற்று நடத்திட கோரிக்கை வைப்பது என்று இந்த ஆண்டு அமைதியாக விழாவை நடத்திட முயன்ற தேவேந்திரகுல மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அந்த விழாவையே யுத்தக்களமாய் மாற்றி, துப்பாக்கிச்சூடு  நடத்தி 6 தலித்துகளை கொலை செய்து தீராத களங்கத்தைச் சுமந்து கொண்டது அ.தி.முக அரசு .
    இத்தனை உயிர் பலிகள் நடந்த பிறகும் தனது பொருப்பில் உள்ள காவல்துறையை பாதுகாக்கும் நோக்கத்தில், கமுதி தாலுகா எம்.பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் பழனிக்குமாரின்  படுகொலையோடு தொடர்புப்படுத்தி அதற்கு ஒரு காரணத்தைச்சொல்லி நடந்த கொடுமைக்கு சாதிக் கலவரமுலாம்  பூச முதல்வர் முயன்றது அதிர்ச்சியானது. 9.9.11 அன்று பழனிகுமாரின் படுகொலை நடந்தது.  10-ம்தேதி  முழுவதும் தேவேந்திர குல மக்கள் திரட்சியாய் வாழும் பகுதிகளில் கூட எந்த சிறு அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு எம்.பள்ளபச்சேரி  மாணவரின் படுகொலையுடனான தொடர்ச்சி என சட்டமன்றத்திலேயே  முதல்வர் ஜெயலலிதா பேசியதும், அவர் கூறிய சுவரெழுத்துப் பிரச்சனை மண்டல மாணிக்கத்திற்கு அருகேயுள்ள கிராமங்களுக்கே தெரியாத நிலையில் உலகமே அறிய உரத்து பேசியதற்கும் வேறு ஏதும் காரணம் இருக்குமோ என்கிற சந்தேகங்களை பிற சமூகங்களை சேர்ந்த நடுநிலையாளர்களே விவாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நடந்து முடிந்து போன இந்த கொலை பாதக நிகழ்வுக்கு காவல்துறை சொன்ன காரணம்  ஜான்பாண்டியன் கைது, எதற்காக அவரை கைது செய்ய வேண்டும். அவர் முகவை மாவட்டத்திற்குள் வந்தால் கலவரம் ஏற்பட்டு விடும். அதைத்தடுக்க என்றார்கள். ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்ட வல்லநாட்டிற்கு  வருவதற்குமுன் தூத்துக்குடி –நெல்லை-மாவட்டங்களில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவி;ட்டுத்தான் வந்துள்ளார்.  அந்த பகுதிகளில் கலவரம் ஏதும் நடந்ததாய் செய்தி ஏதும் இல்லை, ஆனால் அவரை கைது செய்துவிட்டு பரமக்குடியில் காவல் துறையினரே தங்களின் நரவேட்டையை நடத்தி முடித்தனர்.

    இந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு கட்சியின் தலைவரை ஆளுகிற அரசு நினைத்தால் அந்த ஊருக்கு போகாதே. இந்த நிகழ்ச்சிக்கு போகாதே என தடை போட முடியும் மீறி அவர் சென்றுவிட்டால் என்ன ஆவது என முன் கைது செய்யலாம் என்பதும்  தங்கள் அமைப்பின் தலைவரை விடுதலை செய் என தொண்டர்கள் போராடினால் எந்த சட்ட நெறிமுறையும் இன்றி துப்பாக்கி சூடு நடத்தி கொன்று குவிப்பதும் எந்த வகை ஜனநாயகம்?. 
    புரமக்குடியில்தான் போராடினார்கள். மதுரை சிந்தாமணி, இளையான்குடி போன்ற இடங்களில் ஒரே சமயத்தில் துப்பாக்கி சூடு நடத்தியது எதற்காக? இது உள் நோக்கத்துடன் காவல்துறை திட்டமிட்டு நடத்pய கொலைவெறித்தாண்டவம் என உயிhகளை பறிகொடுத்தவர்களின் உறவுகள் எழுப்பும் சந்தேகத்திற்கு எவரும் பதில் தரவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்திட உத்தரவிட்டவர் யார் என இதுவரை யாருமே சொல்லாதது மர்மமாயுள்ளது.
    பாதுகாப்பிற்காக எனும் பெயரில் பல காவல்துறை உயரதிகாரிகள் ஆயிரக்கணக்கில் காவலர்கள் படையோடு  இருந்தும் 50 பேர்  நடத்திய மறியலைக் கையாள முடியாமல்  போனது தமிழக காவல்துறையின் திரனை கேள்விக்குறியதாய் ஆக்கியுள்ளது.
    தங்களின் பலகீனங்களை மறைக்க மாவட்டம் முழுமைக்கும் 144 தடை ஆணையை அமுலாக்கி 1400 பேருக்கு மேல்  பொய் வழக்கு பதிவு செய்து இரவு தேடல் எனும் பெயரில் தேவேந்திரகுல மக்கள் வாழும் அனைத்து கிராமங்களிலும் அத்துமீறி நுழைந்து வெறியாட்டம் போட்டதும் , பெண்களிடம் அநாகரீகமாய் நடந்து கொண்டதும் கொடுமையின் உச்சம்.
    இந்த அச்சுருத்தலுக்கு பயந்து ஆண்கள் இரவு நேரங்களில் காடுகளில் பதுங்கி உறங்கியதும் இதில் விசப்பூச்சி மற்றும் பாம்புகள் கடித்து மருத்துவம் பார்க்கும் கொடுமையும் இதில் ஒருவர் இறந்;து போன துயரமும் நிகழ்ந்தது. பிரச்சனையை  தீவிரமாக்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை ஒழிப்பு முன்னனி உள்ளிட்ட அரசியல்கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கண்டனம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் 144 தடை ஆணை , இரவுத்தேடல் கைவிடப்பட்டாலும் 1400 பேர் மீதான வழக்கு அச்சமூட்டுகிறது.
    செப்டம்பர்-11  துப்பாக்கிச்சூடு நடந்ததும் 13-ம் தேதி தமிழ்நாடு தீண்டாமை ஒழப்பு முன்னனி 
15-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குழு 21-ம் தேதி உதவி நிதி தலா 25,000 வழங்கி ஆறுதல் கூற வந்த மார்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஸ்ணன் ஆகியோரோடு சென்ற போதும் 2.10.11 அன்று பரமக்குடியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபோதும், கொடுமலூர் வீரம்பல் சடையனேரி பல்லான்வலசை, மஞ்சூர் காக்கனேந்தல் கிராம மக்கள் நடந்த கொடூரமான நிகழ்ச்சியின் அதிர்ச்சி நீங்காத  பல கேள்விகளை முன் வைத்தனர் . அது மனதை உலுக்கியது.
•    அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டு ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு  அவங்க தர்ர பரிசு இதுதானா?
•    சுhதிப்பெயரால அடிவாங்கர எங்கள சர்க்காரே அடிக்கிறது நியாயமா?
•    ஏழைகளோட உயிருக்கு விலை 1 லட்சம் தானா?
•    சுட்டுக் கொன்னவங்க ரோட்டுல திரியரப்போ நாங்க மட்டும் எப்ப கைது செய்வாங்களோனு பதட்டத்தோட திரியுரோமே. –கொன்னவங்களுக்கு தண்டனை ஏதும் இல்லையா..?
உள்ளங்களை உறைய வைத்த இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் சொல்லுமா? புதில் சொல்ல வேண்டும், சொல்லும்படி  வைக்க வேண்டும.

                நா.கலையரசன்,
                 04.10.2011