இராமநாதபுரம் மாவட்டத்தைக் கதைக் களமாக வைத்து அந்த மண்ணின் கலைஞர்கள் பங்குபெற்ற `பாஞ்சாலி' என்ற குறும்படம் சர்வதேசக் குறும்படப் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளதை அந்த மாவட்ட மக்கள் கொண்டாடிவருகிறார்கள்.
பெங்களூரைச் சேர்ந்த இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி ஆண்டுதோறும் குறும்படப் போட்டிகளை நடத்திவருகிறது. இதில் சுப்பிரமணிய பாரதி என்பவர் திரைக்கதை இயக்கத்தில், ராமநாதபுரம் கலையரசன் கதை வசனம் எழுதிய ’பாஞ்சாலி’ குறும்படம் இடம்பெற்றது.
இதுகுறித்து இயக்குநர் சுப்பிரமணிய பாரதியிடம் பேசினேன், "10 வருடங்களுக்கு முன் இயக்குநர் தமிழ்வாணன் இயக்கிய ’நந்தி’ படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றினேன். அதன் படப்பிடிப்பு முழுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்தது. சேலத்தைச் சேர்ந்த எனக்கு ராமநாதபுரம் மாவட்டம் ரொம்ப பிடித்துப் போனது. அங்கு ஏகப்பட்ட கதைசொல்லிகள், கலைஞர்கள், நல்ல மனிதர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. நந்தி படத்தில் உள்ளூர்க் கலைஞர்கள் பலர் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிவந்த கலையரசன் அறிமுகமானார். அவர் நல்ல எழுத்தாளர். சிறுகதை, கவிதை நூல் வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தின் சமூகப் பிரச்னைகளைப் பிரதிபலிக்கும் அவர் கதைகளைப் படமாக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதே ஏற்பட்டது.
இதற்கிடையில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சாதிப்பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் 'தொப்புள்கொடி' என்ற திரைப்படத்தைத் தொடங்கினோம். சில பிரச்னைகளால் அப்படம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் பெங்களூரிலுள்ள இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி நடத்தும் குறும்படப் போட்டிக்குப் படம் எடுக்கச் சொல்லி, நான் உறுப்பினராக இருக்கும் 'தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தினர்' வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கான நிதி உதவியும் செய்தார்கள். அதில் என்னைப்போல் பட வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் இயக்குநர் சங்க உறுப்பினர்கள் 30 பேர் படம் எடுத்தார்கள். இப்போட்டியில் முதல் மூன்று இடங்கள் வருகிறவர்களுக்கு யூனியன் சார்பில் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. அதை ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டு கலையரசன் எழுதிய கதையை 'பாஞ்சாலி' என்ற பெயரில் ராமநாதபுரம் தாதனேந்தல் கிராமத்தில் படமாக்கினோம்.
நம் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த படங்கள், வெளிநாட்டுப் படங்கள் என 650 படங்கள் போட்டியிட்டதில் எங்களுடைய 'பாஞ்சாலி' பெஸ்ட் மூவியாக அறிவிக்கப்பட்டு முதல் பரிசு பெற்றது. இதில் ஜூரிகளாக எடிட்டர் லெனின், நடிகர் நாசர், நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் சுபா, ஒளிப்பதிவாளர் ரத்னவேல் இருந்தனர். ஒன்றைரை லட்சம் ரூபாய் பரிசு கிடைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்னை ஊக்குவித்த அண்ணன் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சரவண பிரசாத் மற்றும் ராமநாதபுரம் நண்பர்கள்தான். இதன் மூலம் எனக்குப் பெரிய படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. அடுத்ததாக, நிறுத்தப்பட்ட ’தொப்புள்கொடி’ படத்தையும் எடுக்க உள்ளேன்" என்றார்.
கதை வசனம் எழுதிய இராமநாதபுரம் மாவட்டம், மங்களக்குடி என்.கலையரசனிடம் பேசியபோது, "சின்ன வயசிலிருந்தே கதை கவிதை எழுதுவதில் ஆர்வம். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருவதால் மக்களுடைய பிரச்னைகளை அனுபவபூர்வமாக உணர்ந்தவன். இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்வாணன் 'நந்தி' என்ற படத்தை எடுத்தபோது அதில் நானும் நடித்தேன். அந்தக் குழுவிலிருந்த இணை இயக்குநர் சுப்பிரமணிய பாரதியுடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்பு அவர் தொடங்கிய 'தொப்புள்கொடி' படத்துக்கு வசனம் எழுதச் சொன்னார். இந்த நிலையில்தான் என்னுடைய மூளைச்சாவு எனும் சிறுகதை பாஞ்சாலியாக எடுக்கப்பட்டது. அது சர்வதேசக் குறும்படப் போட்டியில் முதலிடம் வந்தது ரொம்பப் பெருமையா இருக்கு" என்றார்.
வறண்ட மாவட்டமாகச் சொல்லப்படும் இராமநாதபுரத்திலிருந்து படைப்பாளிகள் மட்டும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துகள்!
Get Vikatan Newsletter
By providing email, you agree to ourTerms and Conditions&Privacy Policy
No comments:
Post a Comment