ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்ட ‘பாஞ்சாலி’க்கு சர்வதேச குறும்பட விழாவில் விருது: இயக்குநர் நெகிழ்ச்சிப் பேட்டி
ராமநாதபுரம்: சர்வதேச குறும்பட விழாவில் முதலிடம் பெற்ற பாஞ்சாலி திரைப்பட குழுவினருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருது வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் படமாக்கப்பட்ட மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் நடித்த 'பாஞ்சாலி' குறும்படம் சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி சாதனை படைத்துள்ளது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விருது வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் மற்றும் இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி சார்பில் பெங்களூருவில் அக்டோபர் 6 முதல் 9-ம் தேதி வரை சர்வதேச குறும்பட திரைப்பட விழா நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க உறுப்பினர்கள் சார்பில் எடுக்கப்பட்ட 35 குறும்படங்கள் உள்ளிட்ட 70 தமிழ் குறும்படங்கள் பங்கேற்றன. சர்வதேச அளவில் 600 குறும்படங்கள் போட்டியில் பங்கேற்றுள்ளன. இதில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநனர்கள் சங்கம் சார்பில் எடுக்கப்பட்ட 'பாஞ்சாலி' குறும்படம் கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்திலும் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்தது.
இதற்கான விருதை கடந்த 9-ம் தேதி மத்திய செய்தி மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், ‘பாஞ்சாலி’ குறும்படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். சுப்பிரமணிய பாரதியிடம் வழங்கி பாராட்டினார். பாஞ்சாலி குறும்படம் முழுக்க ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் கிராமத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை, வசனத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியுமான என்.கலையரசன் எழுதியுள்ளார்.
அதேபோல் இப்படத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தனியார் மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் ஜாகீர், தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீபக்(12), பள்ளபச்சேரி கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகர் ராஜேந்திரன், தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஊர் துணைத்தலைவர் இளையராஜா, குமார், சென்னையைச் சேர்ந்த சக்கரை முருகன், தூத்துக்குடியைச் சேர்ந்த வெடிகண்ணன், சின்னத்திரை நடிகை ஸ்ரீப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இக்குறும்படத்தில் ஆடு மேய்க்கும் தாத்தா தனது பேரனை தன் வழியில் ஆடு மேய்க்க வரவிடாமல், கல்வி கற்க வைக்க படும் பாடும், கல்விதான் மனிதனை மனிதனாக்கும் என்பது தான் இப்படத்தின் கருவாகும்.
சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு பெற்ற பாஞ்சாலி குறும்படத்தின் இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய பாரதி ‘இந்து தமிழ் திசை’யிடம் இன்று கூறும்போது, ''29 நிமிடங்கள் கொண்ட இக்குறும்படம், ஏழ்மையில் உள்ளவர்களையும் கல்விதான் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கும் என்பதும், ஒரு ஆடு மேய்க்கும் தாத்தா, தனது பேரனை கல்வி கற்க வைக்க படும் பாடும் தான் இந்தக் குறும்படத்தின் கரு. இப்படத்தின் திரைக்கதை மற்றும் இயக்குநராக நானும், கதை, வசனம் என்.கலையரசனும், அமர்கேத் இசையமைப்பாளராகவும், கோகுல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளோம்.
சர்வதேச குறும்பட விழாவின் நடுவர்களாக எடிட்டர் லெனின், நடிகர் நாசர், நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் சுபா, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் இருந்தனர். சர்வதேச அளவில் பாஞ்சாலி முதலிடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இதற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் ஆர்.கே.செல்வணி மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வளரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் குறும்படங்கள் எடுக்க வைத்து, அதை சர்வதேச அளவிலும் போட்டியிட இயக்குநர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
இக்குறும்படம் முழுக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாலும், இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துள்ளதாவும், இக்குறும்படத்தை பார்க்க இம்மாவட்ட மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
WRITE A COMMENT