சுவியம்.
( சிறுகதை)
_மங்களக்குடி நா கலையரசன்_
கண்ணாத்தாளுக்கு உடம்பு முழுவதும் பதற்றம் பற்றிக் கொண்டது "பொழுது சாஞ்சு போச்சு இனி எப்ப சந்தைக்கி போயிட்டு வீடு திரும்புறது" மங்கலக்குடிமெயின் ரோட்டில் வேகமாக நடந்தாள் மாலை நேர வெயிலில் உடம்பு கச..கச...வென்று வேர்த்து வடிந்தது "இனிமே போயி குளிச்சிட்டு சந்தைக்கு போனா நேரம் ஆயிடும் அதனால போயிட்டு வந்து மேல கழுவிக்கலாம்" என்று நினைத்தபடி வேகமாக நடந்தாள் வழியில் "தக்காய்" ஊரணியை பார்த்ததும் மனசு உற்சாகமடைய சேலையை தூக்கி இடுப்பில் சொருகி மாராப்பை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொண்டு ஊரணிக்குள் இறங்கினாள் கை நிறைய தண்ணீரை அள்ளி முகத்தில் சலுக்.. சலுக்....என்று அடித்தால் தண்ணீர் முகத்தில் பட்டு சிதறி உடலெங்கும் சிதறியதும் ஒரு
சிலிர்ப்பாய் இருந்தது இரு கைகளிலும் தண்ணீரை அள்ளி முதுகு பக்கம் எரிந்தால முதுகில் விழுந்த தண்ணீர் சட்டையை நனைத்து வயிறு வழியாக வழிந்தது வேர்த்திருந்த உடம்பில் நீர் பட்டதும் திடீரென்று உடம்பே ஜில்லென்று ஆனது போல் இருந்தது அந்த புத்துயிர்ப்போடு கரையேறி வந்து "தக்காய்" ஊரணி கரையில் இருந்த "அரக்காசம்மா "பள்ளிவாசல் முன்பு நின்று சிறிது நேரம் கண்மூடி வணங்கி "அரக்காசம்மா உன்ன சின்ன புள்ளையிலிருந்து கும்பிட்டுக் கிட்டு வரேன் ஆனா என் லோலுப்பட்ட வாழ்க்கையப்பத்தி கவலையே படாம இருக்க.. ஏதாவது பார்த்து செய்யி தாயி" வேகமாக நடந்து நரி ஊரணி தாண்டி இடது பக்கமாக இருந்த ஓட்டு வீட்டின் முன்பு வந்து நின்று "யாருடி வீட்டில.." என்று குரல் கொடுத்தாள் "நான் தான் இருக்கேன்அத்தே "என்றபடி வெளியில் வந்தாள் கண்ணாத்தாளின் மருமகள் ராசம்மாள் "எங்கடி வீட்டில ஒருத்தரையும் காணோம் "என்று கேட்டாள் "எல்லாரும் இங்கதான் இருந்தாங்க எங்க போனாங்கன்னு தெரியலஅத்தே" என்று சொன்னதும் "உனக்குத்தான் ஒன்னும் தெரியாதே..சரி எனக்கு ஒரு கடையப்பட்டி . இரண்டுகைப் பை குடு நான் சந்தைக்கு போயிட்டு வந்துடறேன்"அவசரப்படுத்தினாள் ராசம்மாள் வீட்டிற்குள் சென்று பொட்டியையும் பைகளையும் கொண்டு வந்து தந்ததும் திரும்பி நடக்க துவங்கிய போது அவள் சேலை முந்தானையை பிடித்து இழுத்தபடி நின்றான் சுப்பு என்கிற சுப்பிரமணியம் அவன் கண்ணாத்தாளின் மகன் இந்திரனின்மகன் அவனை குனிந்து பார்த்து "சேலையை அவுத்துடாதடா நானே அவசரத்துல இருக்கேன் நீ வேற விளையாடுற "என்றவள் சேலையை பறிக்க முயன்றாள் ஆனால் அவன்" சந்தைக்குத்தான போற நானும் வரேன்" என்றான் செல்லமாக "அதெல்லாம் வேணாம் இப்பவே இருட்டிருச்சு உன்னை இழுத்துக்கிட்டு போனா ரொம்ப நேரம் ஆயிடும் நான் போயிட்டு உனக்கு பலாரம் வாங்கிட்டு வரேன்" என்றாள் "நீ இருட்டிடும்னு சொல்ற இல்ல அப்ப நான் உனக்கு துணைக்கு வரேன்" அவனை கிண்டலாக பார்த்த கண்ணாத்தாள் " நீ ...எனக்கு... துணைக்குவாரே.. அது சரி".. என அவன் தலையில் தட்டியபடி " 45 வருஷத்துக்கு முன்னால உங்க தாத்தா துணைக்கு வரேன்னு சொல்லித்தான் வந்தாரு .. அவர் கிழிச்சது பத்தாதுன்னு இப்ப நீ துணைக்கு வந்து என்ன கிழிக்கப் போற " என்றால் "சொல்லு அப்பத்தா நானும் வரேன்" சுப்பு சிணுங்க "இங்க பாரு இப்ப துணைக்கு வாரன்னு வருவ அங்க வந்து தொட்டதையெல்லாம் வாங்கி தாடின்னுகேட்பே.. அதுக்கு இப்ப எனக்கு நேரம் இல்லை.. காசும் இல்லை.. அதனால நீ இரு நான் போயிட்டு உனக்கு பலகாரம் வாங்கிட்டு வரேன்" என்றபடி ராசம்மாள் கொடுத்த கடையப்பொட்டி இரண்டு பையை வாங்கிக் கொண்டு நகர முயன்ற அவளின் முன்பு வந்து நின்றான்
சுப்பு "அப்பத்தா நானும் வர்றேன்னு சொல்றேன்ல என்னை கூட்டிட்டு போ ..நான் உன்கிட்ட ஒன்னும் கேட்க மாட்டேன் எனக்கு சுவியம் மட்டும் வாங்கி தா" என்றான் அவனைப் பார்க்க பாவமாக இருந்ததால் அவனும் விடமாட்டான் என்பதாலும்" இங்க பார்ரா சுவியம மட்டும் தான் வாங்கித்தருவேன் வேற எதுவும் கேக்கக் கூடாது சரியா" என்று அவனிடம் கராராக பேசினாள் "சரி எனக்கு சுவியம் மட்டும் போதும்" என அவள் கையில் இருந்த கடையப் பொட்டியை எடுத்துக்கொண்டு அவளுக்கு முன்பு நடந்தான் வீட்டை விட்டு சாலைக்கு வந்ததும் ரைஸ் மில் ஓரமாகவே பிரிந்து செல்லும் ஒத்தையடி பாதை வழியாக அரசத்தூர் சந்தையை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள் எங்குபார்த்தாலும் பச்ச பசேல்.. என்று விரிந்து கிடந்த வயல் பரப்பில் வரப்பு வழியே வேக வேகமாக நடந்தாள் கண்ணாத்தாள் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்தபடி அவளைப் பார்த்து "அப்பத்தா சந்தை தூரமா போயிருச்சோ நாம போய்கிட்டே இருக்கோம் சந்தையே வரல" என்றான் "அப்படி இல்ல பேராண்டி முதல்லயெல்லாம் வயலுக்குநடுவ பாதை இருக்கும் நடந்து வந்தோம் இப்ப வயல்லயெல்லாம் பயிர் ஆயிடுச்சா வரப்பிலேயே நடந்து வாரோம் அதனாலதான் உனக்கு தூரமா தெரியுது சந்தை அங்கேயே தான் இருக்கு வெரசா வா பொழுது சாயப்போகுது" என்றதும் "சரி சரி வாரேன் போனதும் எனக்கு சொன்னபடி சுவியம் வாங்கி தரணும் சரியா " என்றதும் அவனைப் பார்த்து சிரித்தபடி "எல்லாம் வாங்கிடுவோம் வா" என்றபடி சந்தைக்குள் நுழைந்தார்கள் கிராமப்புறங்களில் உள்ள சாதாரண மக்களில்
துவங்கி வசதியானவர்கள் கூட வாரம் ஒரு முறை சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான மளிகை பொருள்களில் இருந்து காய்கறிகள் வரை வாங்கி வந்து வைத்துக் கொள்வார்கள் கூலித்தொழிலாளிகள் வாரம் முழுவதும் வேலை செய்துவிட்டு வேலை செய்த கூலியை வாங்கிக்கொண்டு வியாழக்கிழமை சந்தையில் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வருவது வழக்கம் பக்கத்தில் இருக்கிற திருவாடானைக்கோ அல்லது தேவகோட்டை க்கோ சென்று தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வருவது அவ்வளவு சாதாரணமல்ல என்பதால் வார சந்தையை மட்டுமே மிகுதியான மக்கள் நம்பி இருக்கிறார்கள், அரசத்தூர் சந்தை என்பது சுமார் 2 ஏக்கர் நிலத்தில் பனை ஓலையால் கூரை போடப்பட்டு வரிசையாகவும் குறுக்காகவும் கடைகள் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பொருள்கள் என்ற அடிப்படையில் சரக்குகள் வந்து குவிந்து விடும் ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தனை அத்தியாவசிய பொருள்களும் சந்தையில் இருக்கும் ஒவ்வொரு கடைக்கும் ஒரு வாடகை என்று ஊராட்சி நிர்வாகம் வாடகை வசூலிக்கும்
. ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொருபொருளாக விற்பனை செய்து கொண்டிருந்தார்கள் ஒவ்வொன்றாக பார்த்து விலை பேசி பேரம் பேசி வாங்கி தான் கொண்டு வந்திருந்த கடையப் பொட்டியை பேரனின் தலையில் வைத்து வாங்கிய பொருள்களை எல்லாம் அந்த பெட்டிக்குள் போட்டபடி வந்தாள் பேரன் சுப்பிரமணி ஒவ்வொன்றையும் தலையில் உள்ள கடையப் பொட்டியில் வாங்கிக் கொண்டு கண்ணாத்தாளின் பின்னாலேயே சந்தையை வேடிக்கை பார்த்தபடி வந்து கொண்டிருந்தான் "அடியாத்தி என்ன விலை விக்குது போன வாரச் சந்தையில 80 ரூபாய் வித்த பொருளு இப்ப 110 ரூபாய்க்கு விக்கிது அறுபது ரூபாய் வித்தது 85 ரூபாயா இருக்கு கூலி வேலை பார்த்து பொழப்பு நடத்துறவங்க எப்படி இதெல்லாம் வாங்கி சாப்பிட்டு உசுரு வாழ... நான் வந்தா விலைய குறைச்சிடுவேன்னு சொல்ற ஒரு பயலும் விலையை குறச்ச பாட்டைக்காணம் வெலைய உசராம வைக்கக் கூட துப்புல்லை, என்ன செய்யறது வாங்கி சாப்பிட்டு தானே ஆக வேண்டி இருக்கு" என்று முணுமுணுத்த படி நடந்தாள் கண்ணாத்தாள் "அப்பத்தா சுவியக் கடையை காணோம் முதல்ல அதை வாங்குவோம்" என்று துரிதப்படுத்தினான் "அவசரப்படாதடா பொழுது இருட்ட போகுதுல்ல பொருளெல்லாம் வாங்கிட்டோம்னா நிதானமா சுவியத்தை வாங்கி தின்னுக் கிட்டே ஊருக்கு போலாம் சரியா" என்றபடி பொருள்களை வாங்கிஅவன் தோளில் போட்டிருந்த பையில் பொருள்களை சேர்த்துக் கொண்டே வந்தாள் திடீரென "ஆத்தா கண்ணு" என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள் அவளுடைய பெரியம்மா மகன்சின்னத்தம்பி எதிரே நின்றார் "ஆத்தா எப்படி இருக்க நல்லா இருக்கியா மச்சான் வரலையாமருமக்கமாரு நல்லா இருக்காங்களா" என்று கண்ணாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு விசாரித்தார் கண்ணாத்தாளும் அவர் கையை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டபடி "அண்ணே என்னண்ணே ஆளே பாக்க முடியல அத்தாட்சி எப்படி இருக்குறாக ஒரு எட்டு வந்துட்டு போலாம்ல
யான்னே வரவே மாட்டேங்குற" என்று குரல் கம்ம பேசினாள் "எங்கடா வர முடியுது காட்டுக்கும் வீட்டுக்குமா பொழுது போகுது இதுல சொந்த பந்தம் வீட்டுக்கு போற நிலைமைலயா இருக்கேன்,
வர்றேன்டாம்மா கண்டிப்பா வரேன் மச்சான் மருமக்க மாற விசாரித்ததாக சொல்லு" என்று சொன்னவர் "இருட்டப் போறது ஆத்தா சீக்கிரம் கிளம்புங்க "என்று சொல்லிவிட்டு சுப்புவின் கன்னத்தை தடவி முத்தம் கொஞ்சினார் சுப்புவுக்கு யார் என்று தெரியவில்லை ஆனால் அவர் தலையை பாசமாக தடவிய போது அது அவனுக்கு பிடித்திருந்தது சொல்லிவிட்டு கூட்டத்திற்கு காணாமல் போனார் ஒவ்வொரு கடையாக கண்ணாத்தாள் ஒவ்வொரு பொருளாக வாங்கி சேர்த்தபடி வரும்போது திடீரென்று அவர் கையில் ஒரு பார்சலோடு மீண்டும் வந்தார் "ஆத்தா கண்ணு இந்தா இதை வச்சுக்கோ "என்று கொடுத்து விட்டு மீண்டும் சுப்புவின் தலையை தடவி விட்டு சென்று விட்டார் "அப்பத்தா யாரு அது ரொம்ப நல்ல தாத்தாவா இருக்காரு" என்று அவளை பார்த்தான் "அது எங்க அண்ணன் டா"சொல்லியபடி நடந்தாள் "அண்ணனா நான் பார்த்ததே இல்ல"என்றதும் "அவரு வேற ஊர்லவீட்டுக்குமாப்பிள்ளையாக பொய்ட்டாரு"சலிப்பாக சொன்னதும் "வீட்டுக்கு மாப்ளன்னா என்ன" "எதையோ யோசித்தபடி வந்தவள்"அவரு வேற ஊர்ல இருக்காரு"சுப்புவுக்கு புரியவில்லை"வேற ஊர்ல இருக்காரா ஏன்"விடாமல் கேட்டான் "அவரு எங்க அத்தாட்சி ஊரிலேயே தங்கிட்டார்" நடந்தபடி
சொன்னாள் "அது என்ன என்னமோ பார்சல் கொண்டு வந்து தந்தாரே" என்று சந்தேகமாக கேட்டதும்" கண்களை சுருக்கி அவனை பார்த்தபடி"அதை நீயே பாரு "என்று சிரித்தவள் "அதுல என்ன இருக்கும் எள்ளு
வடையிருக்கும் "சிரித்தாள்" எள்ளு வடையா " ஆச்சர்யமாக கேட்டான் "ஆமாடா உனக்கு எப்படி சுவியம் பிடிக்குமோ அது மாதிரி சின்ன வயசுல இருந்தே எனக்கு எள்ளு வடை பிடிக்கும் எள்ளு முறுக்கும் பிடிக்கும்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பார்சலை பிரித்து பார்த்தவன் "ஆமா எள்ளு வடை தான் இருக்கு.. பாத்தியா அப்பத்தா நான் மறந்துட்டேன் நம்ம என்னஇன்னும் சுவியமே வாங்கலையே... "சிணுங்கத் துவங்கியவனை "சரி சரி.. வாங்குவோம் வா . வாங்கத்தான போறோம்" நடந்தாள் ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்றவள் எதிரே வந்த பவளத்தை பார்த்ததும்"என்னடீ பவளம் எப்படி இருக்க.. அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் பவளம் சிரித்தபடி "நல்லா இருக்கேன் அக்கா நீங்க எப்படி இருக்கீங்க புள்ளைங்க எல்லாம் எப்படி இருக்காங்க" அவள் தலை முடியை சரிசெய்தபடி "எனக்கென்ன நான்நல்லா இருக்கேன் கொழுந்தன் எப்புடி இருக்கு" கண்ணாத்தாளை ஜாடையாக பார்த்தபடி"நல்ல இருக்காரு ஆமா என் புருஷன பத்தி எதுக்கு அக்கறையா கேக்குறீய.." கிண்டலாக சிரித்தாள்"மாங்கா புளியங்கான்னு சொல்லும்போதே எப்படி வாய்ல எச்சி
ஊருமோ அதுமாதிரி கொழுந்தன்னு சொல்லும் போதே கொஞ்சம் குறுகுறுப்பா இருக்குமா இல்லையா" .. ஜாலியாக பேசி சிரித்தாள்
கண்ணாத்தாள் பவளமும் கேலியாய் "இருக்கும்ல .. என சிரித்தபடி "ஆமா நீங்க மட்டுமா வந்தீய.. கூட யாரும் வரலையா" தனது பேரனை காட்டி" இந்த மாவீரன் தான் வந்திருக்கான்" என சிரித்ததும் பவளமும் சேர்ந்து சிரித்தாள் "அது சரிக்கா மச்சான் எங்க காணோம்"சிரிப்பு மாறாமலேயே"அவர் இந்நேரம் எங்கே சிலம்பு சுத்திகிட்டு இருக்காரோ "என்றாள் பாத்துக்கா.. ரொம்ப சுத்த விடாதீங்க அவருக்கு உடம்பு கெட்டுபோகும் உங்களுக்கு வாழ்க்கையே கெட்டுப் போயிடும் எச்சரிக்கையா இருந்துக்கங்க" கண்களை சிமிட்டியபடி சத்தமாய் சிரித்தாள்..அடி போடி.. சின்ன புள்ளை நிக்கும் போது என்ன பேச்சு பேசுற "என்று பேரனை காட்டினாள் "அவனுக்கு இது புறியாதுக்கா அதைவிடுங்க மச்சான் என்னையவே குறு..குறு ன்னு பாக்குறாரு அது தெரியுமா உங்களுக்கு"கண்ணாத்தாளை கண்களைச் சுருக்கிப்பார்த்தாள் .. "அடிப்போடிவேலையத்தவளே அவருக்கு முன்னால சிலுக்கி குலுக்கி நடந்தா பாக்காம என்ன செய்வாராம் மொதல்ல நீ ஒழுங்கா இரு அவரை அப்பறம் சரி செய்யலாம்" அவளை முதுகைப்பிடித்து தள்ளியபடி அடுத்த கடைக்குப்போனாள் "அக்கா அப்போ நான் சொல்றத கேக்கமாட்டீங்களா" என சிணுங்கினாள் "அடியே சிலம்பு .குஸ்தின்னு காலு கீழ பாவாம
ஒலகம் சுத்துறவரு அவரு நாம பின்னாலேயே திரிய முடியுமா காட்டாத்து வெல்லத்துக்கு காவல் போட முடியுமா சொல்லு" அடுத்து என்ன சொல்வது என யோசித்த பவளம் "இருந்தாலும் கவனமா இருங்கக்கா" நின்று நிதானமாக பவளத்தை பார்த்து கண்ணாத்தாள் "நம்பிக்கை தாண்டி வாழ்கை நான் காலையில எந்திரிச்சு வீட்டு வேலை காட்டு வேலைன்னு சுத்திட்டு திரிகிறேன் என்னைய அவர் சந்தேகப்பட்டா என்ன ஆகும் யோசிச்சு பாரு அது மாதிரி தான் அவர் மேல நானும் என் மேல அவரும் வைக்கிற நம்பிக்கைதான் வாழ்க்கை சரிதானா" சிரித்த கண்ணாத்தாவை பார்த்து"நீங்க இப்படியே இருங்க ஒரு நாளைக்கு மச்சானோட மாலையும் கழுத்து மா வந்து நானே நிக்க போறேன்"என்றவளை ஜாடையாக பார்த்து "அப்படியா.. அப்போ நானும் ரெண்டு தலையும் கையுமா நிக்கிறத நீயும் பாப்பே ..சரியா போடி போயி" கொழுந்தன கவனிக்கிறதப்பாரு.." கேலியாக சிரித்தபடி பொருள்களை வாங்க துவங்கினாள் அவள் சென்றதும் "அதுயாரு அப்பாத்தா ஏன் உன்னோட சண்டை புடிக்கிறாங்க" கண்ணாத்தாவின் முகத்தைப் பார்த்தான் அவள் புன்னகைத்த படி "அவ சண்டை பிடிக்கலடா விளையாடுறா உனக்கு அவளும் அப்பத்தா முறைதான்" என்றதும் "அப்பத்தாவா சரி சரி வா அப்பத்தா.. கடைய மூடிட போறாங்க சுவியம் வாங்குவோம்" கண்ணாத்தாவின் சேவை பிடித்து இழுக்கத் தொடங்கினான் "அவ்வளவுதாண்டா எல்லாம் வாங்கியாச்சு இனிமே சுவியத்தை வாங்கிட்டு ஊருக்கு போக வேண்டியது தான்" என மீன் கடை அருகில் வந்து நின்றாள் எப்போதும் எல்லா பொருள்களும் வாங்கி சேகரித்த பிறகு வீட்டிற்கு போகும் போது தான் மீன் வாங்குவது வழக்கம் முன்பே வாங்கினால் கையில் வைத்துக் கொண்டு அலைவது கஷ்டம் என்பதால கடைசியாக தான் வாங்குவார்கள் அதுபோல கண்ணாத்தாள் மீன் கடை முன் கூடி இருந்த கூட்டத்தை விளக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான் அப்போது அவளின் தோள்களை யாரோ தட்டியதும் திரும்பிப் பார்த்தான் எதிரில் காமாட்சி நின்றிருந்தாள் "என்ன கண்ணாத்தா இப்பதான் மீனு வாங்க போறியா" வாஞ்சையாக அவளை தோளோடு அணைத்தபடி விசாரித்தாள் "ஆமாக்கா இப்பதான் எல்லாம் வாங்கி முடிச்சேன் இனிமே மீன வாங்கிட்டு அப்படியே கிளம்ப வேண்டியதுதான்" கண்ணாத்தாளின் முகத்தை பார்த்தபடி "நான் வெள்ளிக்கிழமை மங்கல குடிக்கு வந்தேன் நீ களை எடுக்கப் போயிட்டதா சொன்னாங்க ஏண்டி நீ இன்னும் காட்டு வேலைக்கு போறியா" அக்கறையாக விசாரித்தாள். கண்ணாத்தாள் ஆச்சரியமாக "ஏக்கா வேலை வெட்டி பார்க்க முடியாத அளவுக்கு வயசா ஆயிருச்சு எனக்கு" அவள் பதிலை கேட்டதும் சிரித்தபடி "அதுக்கு இல்லடி இந்த வயசுலயும் இந்த வேலையெல்லாம் பார்க்கணுமான்னு கேட்டேன்"சுப்புவை இழுத்து பக்கத்தில் நிறுத்தியபடி "உழைக்கிறதுக்கு என்னக்கா வயசு உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் உழைக்க வேண்டியது தானே "சுப்புவின் தலையை தடவிக் கொடுத்த படி"அது சரிதான்டீ.. ஒரு காலத்துல புள்ளைங்க சின்ன பிள்ளைகளா இருந்தது நாம உழைச்சோம் காப்பாத்துனோம் இன்னைக்கு பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துடுச்சு அதுக கல்யாணம் பண்ணி குடும்பம் குட்டின்னு ஆயிருச்சு இனி அதுகளிடம் குடும்பப் பொறுப்பை விட்டுட்டு கால ஆட்டிகிட்டு உட்கார்ந்து கஞ்சிய குடிச்சிட்டு போக வேண்டியது தானே"என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று ஆர்வமாக பார்த்தபடி "புள்ளைகள்ள சின்ன புள்ள பெரிய புள்ளன்னு இருக்கா என்ன அது எல்லாம் நம்ம புள்ளைய அது நம்ம குடும்பம் அதுக்காக உழைக்கிறது சந்தோஷம் தானே"அவள் ஏதோ விவரம் இல்லாமல் பேசுவதாக நினைத்துக் கொண்டு"என்னடி பேசுற நீ என்னைய பாரு பிள்ளைகளை பெத்தேன் வளர்த்தேன் கல்யாணம் பண்ணி வச்சேன் அவன் அவன் குடும்பத்தை பாருங்கடானு பிரிச்சு விட்டுட்டு நான் பேசாம வீட்ல இருக்கேன் ஏதோ ஊத்துற கஞ்சியை குடிச்சிட்டு நிம்மதியா இருக்கேன் அவ்வளவுதான் எத்தனை காலத்துக்கு நீ குடும்பம் குடும்பம் கஷ்டப்படுவ"குரளில் பச்சாதாபத்தை கலந்து பேசினாள் காமாட்சி ."அது எனக்கு சரியாக வராது நான் பெரிய குடும்பத்திலேயே வாழ்ந்து பழகிட்டேன் நான் இந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்டு வரும்போது மாமன் மாமியா நண்டு சுண்டுமா கொழுந்தன்கன்னு ஒரு கல்யாணக் கூட்டத்திலதான் நான் வாழ்ந்தேன் அப்புறம் நானும் ஏழு பிள்ளைகளை பெத்து இன்னைக்கு அதுகளுக்கு கல்யாணம் பண்ணி பேரன் பேத்தின்னு ஒரு திருவிழா கூட்டத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன் இது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அக்கா. இதிலிருந்து மார்றதெல்லாம் என்னால முடியாது" கண்ணாத்தாளை பாவமாக பார்த்த காமாட்சி "உன்னை யாரு மாற சொன்னா நீ தனியாஇருன்னுதானே
சொல்றேன் புள்ளைய சந்தோஷமா வாழ்ரத ஒதுங்கி இருந்து பாருன்னு சொல்றேன் இதுல என்ன இருக்கு ஊர் உலகத்துல நடக்காததா"கண்ணாத்தாள் தீர்க்கமாக பேசினாள் "ஊர் உலகத்துல நடக்கிறத எல்லாம் நான் குறையா சொல்லல அக்கா கல்யாணம் பண்ணதும் குடும்பங்கள்ளேருந்து பிரின்சு வேலை படிப்புன்னு சொல்லி நகரங்களுக்கு தனியா போறாங்க அது அவங்க விருப்பம் ஆனால் என்னை பொருத்தவரைக்கும் கூட்டத்துக்குள்ளேயே இருந்து வாழ்ந்துட்டேன் எனக்கு இதுவே போதும்அக்கா"காமாட்சிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை "போடி லூசு கூட்டுக் குடும்பம் எல்லாம் அந்த காலத்தோடு போச்சுடி இப்போ அது ..அது வாழ்க்கையை அது.. அது பாத்துக்குறதுன்னு ஆயிடுச்சு இதுல நீ ஏன் இவ்வளவு சுமையை தூக்கி சுமக்கிற.. அவங்க.. அவங்க வாழ்க்கை அவங்களோட யார் ..வாழ்க்கையையும் யாரும் காப்பாற்ற முடியாது பெரிய குடும்பம் ..பெரிய குடும்பம்.னு எல்லாத்தையும் தூக்கி சுமக்கப் போறியா" அவளை நிமிர்ந்து பார்த்த கண்ணாத்தாள் "இல்லக்கா என் குடும்பம் தான் எனக்கு பலம் அதுதான் எனக்கு நம்பிக்கைஒன்னா சேர்ந்து சாப்பிட்டு ஒன்னா சேர்ந்து சிரிச்சு ஒன்னா தூங்கி ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி குடும்பத்துக்கு ஒரு கஷ்டம்னா எல்லாரும் கூடி நின்று அதை சமாளிச்சு சந்தோசமா வாழ்ற அந்த வாழ்க்கை இருக்கே அது பெரிய வரம்கா... எனக்கு இதுதான் புடிச்சிருக்கு இதுல வருத்தமெல்லாம் இல்லக்கா" கடுப்பான காமாட்சி"உனக்கு நான் சொல்றது புரியல குடும்பம் குடும்பம்னுஎதுக்கு நாய் படாத பாடுபடுற "என்றாள் "இது என்னக்கா நான் ஏதோ ஊருக்கு உழைக்கிற மாதிரி சொல்ற நான் பெத்த பிள்ளைகளுக்கு என் குடும்பத்துக்கும் தானே நான் வேலை செய்கிறேன் இதுல என்ன இருக்கு" அவளை ஆழமாக கூர்மையாக பார்த்த காமாட்சி "நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா இப்படி வயசான காலத்துல மொத்த குடும்ப பாரத்தையும்இப்படி தூக்கிச் சுமந்துகிட்டு திரியிரியேஅதை பார்க்கும்போது எனக்கு வருத்தமா இருக்கு" இறக்கப்படுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு காமாட்சி பேசியதை கேட்டதும் "எனக்கு இதுல ஒன்னும் வருத்தமா இல்லக்கா இங்க பாரு என் பேரன் அவன் வயசுக்கு எவ்வளவு சொமை. தலையிலையும் தோலிலையும் அத்தனை பாரத்தை தூக்கிட்டு வரான் பாத்தியா எப்படி.. அவனால தூக்க முடியுது நான் அவனுக்கு சுவியம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கேன் அந்த சுவியத்தை திங்கப் போற சந்தோஷத்துல இத்தனை சொமையை தூக்கிட்டு வந்தாலும் அவனுக்கு கஷ்டமா தெரியல அது மாதிரி தான் நானும் என்னோட பெரிய குடும்பத்து சந்தோஷத்துல என் சந்தோஷமும் இருக்கரதை நினைச்சா என் குடும்பபாரம் ஒன்னும் எனக்கு பெருசா தெரியல ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வரவாக்கா.." என புறப்பட்டவள் வீட்டுக்கு மீனை வாங்கிக் கொண்டு"வாடா சுப்பு நம்ம சுவியம் வாங்குவோம்" என்று பேரனோடு நடந்து சென்றாள் அவர்கள் மீண்ட தூரம் சென்ற பிறகும் காமாட்சி பார்த்துக் கொண்டே.. நின்றாள்....
WRITE A COMMENT