Wednesday, August 17, 2022

சிறுகதை

கடைசி ஆசையின் மரணம்     

____________________

-மங்களக்குடி நா. கலையரசன்


அந்த வீட்டிற்கு முன் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடிக் கொண்டிருந்தது கூடிய கூட்டத்தின் நடுவில் நின்று அவன் பேசிக் கொண்டிருந்தான் அவன் பேசி முடித்ததும் சிலர் பைக்குகளில் ஒவ்வொரு பக்கமும் விரைந்தார்கள் சிலர் தனியாக சென்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்கள் இவர்களை எல்லாம் இயக்கிக் கொண்டிருந்தவன் பெண்களை அருகில் அழைத்து அவர்களுக்கும் சில வேலைகளை சொன்னான் சிறிது நேரத்தில் அந்தத் தெருவும் அந்த சிறிய வீடும் முகம் மாறத் தொடங்கியது அந்த வீட்டிற்கு முன் தெருவை மறைக்கும் விதமாக சாமியானா பந்தல்கள் கால்களை ஊன்றியது வீட்டிற்கு முன்பும் தெரு முனையிலும் பிளக்ஸ் கோடுகள் முளைத்தன அதில் எல்லோரையும் பாசத்தில் கரைய வைக்கும் சிரிப்புடன் அந்தப்பாட்டி இருந்தாள் அங்கு வரும் ஒவ்வொருவரும் நின்று அந்த பிளக்ஸ் போர்டை பார்த்ததும் கலங்கித் தான் நகர்ந்தார்கள் வரிசையாக ஆட்டோக்கள் வந்து நின்றன அதிலிருந்து ட்ரம் செட் குழுவும் பறை இசை குழுவும் வந்து இறங்கியது அவசர அவசரமாக அருகே கிடந்த ஓலை குப்பைகளை கொளுத்தி அந்த நெருப்பின் அனலில் பறைகளையும் ட்ரம்ஸ் கலையும் காட்டி வாட்டினார்கள் அந்த வெப்பத்தின் வெக்கையில் கோபமான பறையும் ட்ரம்சும் பெரும் குரலில் நெருப்பில் வாட்டியவர்களை பார்த்து திட்டுவது போல அலற அந்தப் பகுதியே அதிர்ந்தது இந்த கலவரங்களுக்கிடையில் அந்த குரல் சோக மழையில் நனைந்த ஈரக்குரல் இரைச்சலோ அலரலோ உறுத்தலோ இல்லாத அந்த இனிய குரல் ஒவ்வொரு இடத்திலும் நிரவி தழும்பி நின்றது மனதை கணக்க வைத்தது நேரம் செல்ல செல்ல கூட்டம் தெருவை திணற வைத்தது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலைகளாக தேர்வு செய்து செய்து கொண்டிருந்தார்கள் சேர்கள் வந்து இறங்கி கொண்டே இருந்தது வந்து அமர்ந்தவர்களுக்கு காபி கொடுப்பதை சிலர் பார்த்துக் கொண்டார்கள் இவர்கள் அனைவரையும் எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டிருந்தவனிடம் வந்து "தம்பி செல்வம் சேர் போதுமா எடுக்கணுமா என்ற வரிடம் "இதையெல்லாம் என்கிட்ட கேட்கணுமாண்ணே யாரும் சேர் இல்லாமல் நிக்க கூடாது அவ்வளவுதான்" என்றபடி திரும்பி இன்னொரு இளவட்டத்தை அழைத்து "பழனி என்ன ஆச்சு" கேட்டு முடிப்பதற்குள் "அண்ணே பாட்டிக்கு எந்தெந்த ஊர்ல சொந்தம் இருக்கோ அத்தனை பேருக்கும் தகவல் சொல்லியாச்சு போன் நம்பர் இருந்தா போன்லயும் இல்லைனா நேர்ல போய் சொல்ல சொல்லியாச்சு" பழனி சொல்லி முடித்ததும் திருப்தியாக தலையசைத்தபடி வீட்டிற்குள் வந்தான் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த ஊர் பெரியம்மா புஷ்பத்தை அழைத்து "அம்மா இப்ப பெட்டி வந்துரும் அதுக்குள்ள பாட்டியை குளிப்பாட்டி ரெடி பண்ணுங்க பொட்டில வைக்கணும் இல்ல" என்றதும் "அஞ்சு நிமிஷம் செல்வம் நான் பாத்துக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு பெண்களை அழைத்தபடி உள்ளே போக வெளிய வந்த செல்வத்தை "ஏண்ணா மயான செலவுக்கு கொடுத்துட்டா அந்த ஏற்பாடுகளும் நடக்கும்ல என்கிட்ட இருந்த பணத்துல மளிகை சாமான் வாங்க கொடுத்துட்டேன் அரசத்தூர் முருகன் சேர்க்கல்லாம் பணம் கொடுத்துட்டான் ஆண்டாஊரணி மாரிமுத்து அண்ணே தண்ணி வண்டி ஏற்பாடு பண்ணிட்டாங்க இப்ப என்ன செய்யலாம்" என்ற ஐயப்பனிடம் பணத்தை எடுத்துக் கொடுத்து "எவ்வளவுன்னாலும் கேளு தேவைனா தரேன் தேவைனா என் பேர சொல்லிட்டு வாங்கிவா" சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் அந்த குட்டி யானை வந்து நிற்க அதிலிருந்து குதித்து இறங்கி வந்த மாலிக் "செல்வம் பெட்டிய எங்க வைக்க கரண்ட் எடுக்கிற மாதிரி சுவிட்ச் பாக்ஸ் பக்கம்னா நல்லா இருக்கும்" செல்வம் மாலிக்கிடம் இடம் சொல்ல அங்கே இறக்கி வைத்து விட்டு புறப்பட்டபோது மாலிக் அருகில் வந்த செல்வம் "வாடகை இப்பவே தரணுமா அப்புறம் தரட்டுமா மாலி" கேட்க மாலிக் சிரித்தபடி "பாட்டிக்காக இது தமுமுக பொறுப்பு வேற எதுவும் வேணும்னா போன் பண்ணுங்க" என்றபடி புறப்பட்ட குட்டியானையில் ஓடிப்போய் ஏறிக் கொண்டான் மாலிக் பாட்டியின் உடல் பெட்டியில் வைக்க வரிசையாக வந்த பெரியவர்கள் நடுத்தர வயதினர்கள் வரிசையாக மாலைகளை வைத்து கண்கலங்கி நின்றார்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மாலைகள் மலையாய் குவிந்து கிடந்தது மக்கள் தகவல் தெரியத் தெரிய வந்து குவிய தொடங்கினார்கள் அப்போதுதான் ஞாபகம் வந்தவனாக "டேய் சதீஷ் எங்கன்னு பாரு" என பக்கத்தில் நின்ற கிஷோரை ஏவினான் சிறிது நேரத்தில் சதீஷ் வர "டேய் முத்தம்மாவுக்கு போன் பண்ணியா இல்லையாடா" கேட்டதும் "அண்ணே அந்த அக்கா அறந்தாங்கி பக்கம் ஏதோ ஒரு ஊர்ல

கேதம்னு போய் இருக்கு நேரம் ஆகும்னு சொல்லிச்சு" என்றான் "சரி சரி வர்றவங்களை போய் பாரு என்றபடி திரும்பிய அவனிடம் ஒரு பெண் ஒரு செம்பை நீட்டி "தம்பி செல்வம் இதக்குடி காலையில இருந்து பார்க்கிறேன் தண்ணி வெண்ணி எதுவும் குடிக்காம அம்புட்டு வேலையையும் பார்த்துகிட்டு இருக்கே கஞ்சியைக் கரைச்சு கொண்டு வந்திருக்கேன் குடி" என்றதும் லேசாக சிரித்தபடி வாங்கி குடித்துவிட்டு "நன்றிங்கம்மா "என செம்பை கொடுத்தான்


அதிகாலையிலேயே கோரம்பாய்களை விற்பதற்காக அந்த ஊருக்குள் கணவனுடன் வந்த காந்திமதி திடீரென ஏற்பட்ட சம்பவங்களால் அதிர்ந்து போய் அந்த கிராமத்தின் காட்சிகளில் லயித்த வளாக அங்கேயே தேங்கிப் போனார்கள் இருவரும் அடுத்தடுத்து வந்த இளைஞர்கள் கூடி கூடி பேசி வேகமாக இயங்குவதை பார்த்து அதிசயித்தாள் பெண்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டு இருந்தனர் என்னதான் நடக்கிறது? இறந்து போனது யார் இதை தெரிந்து கொள்ளாமல் அவளால் இருக்க முடியவில்லை அதற்கேற்றார் போல் உள்ளூர் பெண் சகுந்தலை எதிரில் வருவதை பார்த்து லேசாக பேச்சு கொடுத்தாள் "அடேயப்பா எவ்வளவு கூட்டம்" ஆச்சரியப்பட்டவளாக கேட்டதும் "பின்ன இந்த சுத்துப்பட்டு கிராமங்களுக்கும் தெரிஞ்ச ஆளாச்சே" என்றபடி கடக்க முயன்றவளை "அக்கா நீங்க தண்ணி கொடுத்தீர்களே அவர் யாரு அந்த அம்மாவோட மகனா" அவள் முகத்தை ஆர்வமாக பார்த்தால் "மகனா" சத்தமாக சிரித்தவள் "மகனெல்லாம் இல்ல அந்த தம்பி பக்கத்து ஊரு" சொன்னவளை விடாமல் "அப்ப நெருங்கின சொந்தமா" விவரம் தெரியாமல் விடமாட்டாள் என உணர்ந்தவள் "இங்க பாருமா இவர் மகனும் இல்ல சொந்தமும் இல்லை இவ்வளவு ஏன் அவரு இவங்க சமூகமும் இல்லை தெரிந்தவர் தான் என்றவள் இவருக்கு மட்டுமில்ல இந்த சுற்று வட்டார கிராமங்களுக்கு மட்டுமில்ல இந்த மாவட்டம் பக்கத்து மாவட்டம் பூரா இந்த அம்மாவுக்கு தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க" சொல்லி முடிக்கும் முன் "என்னக்கா சொல்றீங்க பெத்த புள்ள கணக்கா அம்புட்டு வேலையையும் இழுத்து போட்டு செய்தேன்னு பார்த்தா அந்த தம்பி இவங்க ஆளுங்களே இல்லைன்னு சொல்றிய" அவளால் இதை நம்ப முடியவில்லை அவரது ஆச்சரியத்தை இன்னும் அதிகமாகுவது போல "அது மட்டும் இல்லம்மா இங்க கூடியிருக்கிறவங்க முக்காவாசி பேரு வேற வேற சாதியைச் சேர்ந்தவங்க இங்கே ஓடியாடி வேலை செய்றாங்களே அவங்க செல்வம் மாதிரியே இளவட்ட புள்ளைங்க திரியுதுகளே அந்த பிள்ளைகளும் வேற வேற சாதி புள்ளைங்க தான் "கேட்க கேட்க இவளுக்கு என்ன சொல்றதுன்னு புரியல "அப்படின்னா இறந்து போன அந்த அம்மா இவங்களுக்கு என்னதான் பண்ணி இருக்கும்" யோசித்தாள் இப்படி ஒருத்தன் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ற அளவுக்கு அவனுக்கும் கூட இருக்கிற பிள்ளைகளுக்கும் அப்படி என்ன முக்கியம் அந்த அம்மாகிட்ட இவங்களுக்கு" குழப்பமாக இருந்தது அதை அவள் கேட்டே விட்டால் "எக்கா இப்படி ஊரே திரண்டு கிடக்கே யாரு தான் இந்த அம்மா" என அவளையே பார்த்தான் அவளும் நின்று இவளுக்கு இவளுக்கு விளக்கிச் சொல்ல துவங்கினான்..

2

அமைதியாக  உறங்கிய அந்த கிராமத்தில், அந்த கல்லு வீடு மட்டும் இயங்கிக்கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் அந்த வீட்டிற்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அத்தனை முகங்களிலும் இனம் புரியாத கவலை அப்பி இருந்தது. வீட்டின் வெளித்திண்ணையில் 70 வயது மதிக்கத்தக்க மெலிந்த தேகமுடைய சிவநேசன், கண்ணில் வடியும் நீரை தோளில் இருக்கும் துண்டால் துடைத்தபடி அமர்ந்திருந்தார். வருகிறவர் போகிறவர் எல்லாம் அவரிடம் வந்து ஆறுதல் சொல்லி தேற்றிவிட்டு செல்கிறார்கள். அதே போல் வீட்டிற்கும் வாசலுக்குமாக செல்வம் நடந்துகொண்டிருந்தான். அவன் சிவநேசனின் மூத்தமகன். வீட்டிற்குள் வந்தவர்களை கவனித்து காப்பிகொடுத்துக்கொண்டும் நடந்த விபரங்களை கூறியபடி சுருசுருப்பாக இயங்கிக்கொண்டிருந்தான் செல்வத்தின் மகன் அமுதன்,  அவனை அழைத்து ஏதோ விசாரித்துவிட்டு செல்வம் மீண்டும் வாசலுக்கு வந்தான். வாசலில் நின்று இருபக்கமும் பார்த்தான் அவன் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருக்கிறான் என்பது புரிந்தது ஆனால் யாரை எதிர்பார்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ள அவனை கவனித்துக் கொண்டிருந்த அனைவருக்கும் ஒரு தவிப்பு இருந்தது. ஆனால் அவன் நினைப்பு வேறாக இருந்தது. தாம் செய்வது சரிதானா என யோசித்துக் குழம்பினான். ஏதோ நினைவு வந்தவனாக வீட்டிற்குள் வேகமாக நடந்து கூடத்தை கடந்தான். எதிரே வந்தவர்கள் ஆதரவாக அவனைத் தொட்டு ஆதரவு சொல்ல எத்தனித்தபோது அவர்களையெல்லாம் விலக்கிக்கொண்டு அந்த அறைக்குள் சென்றான் அங்கே…

         அந்த விசாலமான அறையில் ஒரு நடுத்தர குடும்பத்தின் வீடு என்பதை உணர்த்துவது போல அழகாக இருந்தது. அங்கே உள்ள கட்டிலில் கசக்கிப்போட்ட துணிபோல கிடந்தாள் அமராவதியம்மா.. அவள்தான் சிவநேசனின் மனைவி… இரண்டு பெண்கள் இரண்டு ஆண்பிள்ளைகளை பெற்றெடுத்தவள் நினைவற்றவளாகக் கிடந்தாள். அவளைச்சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் அவள் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் எதை எதையோ பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென செல்வம் அந்த அறைக்குள் நுழையவே அந்த அறை அமைதியானது. உள்ளே நிழைந்து தன் அம்மாவின் முகத்தையே சிறிது நேரம் பார்த்தபடி நின்றான். அவனது தாயும் அவனைப் பார்ப்பதுபோல் இருந்தது. அவனையறியாமல் பெருக்கெடுத்த கண்ணீரை துடைத்தபடி வெளியில் வந்தான். வந்தவன் நேராக வாசலுக்கு வந்தான் அவன் வரவும் அந்த ஆட்டோ வந்து நிற்கவும் சரியாக இருந்தது. 

           எல்லோர் பார்வையும் ஆட்டோவை மொய்த்தது. ஆட்டோவில் இருந்து இறங்கிய நபரைப் பார்த்ததும் பலர் ஆச்சரியமாகினர். அதிலிருந்த 7 பெண்களும் எதிரே நின்றவர்களை கும்பிட்டபடி வீட்டுத்திண்ணைக்கு வந்தனர். "இதென்னடி கொடுமை இந்த செல்வம் செய்யுரத பாரேன் அம்மா சாவுரதுக்கு முன்னாலயே ஒப்பாரி வக்கிரவங்களை கூலிக்கு அமர்த்திருக்கான்" என சிலர் கோபப்பட்டனர். ஆனாலும் சிலர் "அவன் என்ன செய்வான் ஒரு வாரமா இப்போ.. அப்போன்னு இழுத்துட்டு கெடந்தா அவன் என்னதான் செய்வான்… இன்னக்கி போய்ரும்னு நெனச்சுருப்பான். அதான் ஆளுகளை கூப்பிட்டு இருப்பான்" என்றனர். 

              அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. அமராவதியின் உடல்நிலை கெட்டு அவள் படுக்கையில் விழுந்ததுமே சிவனேசன் மகள்கள்-மகன்களுக்கு தகவல் சொல்லிவிட உடனே குடும்பத்துடன் பதறியடித்துக் கொண்டு வந்து சேர்ந்தனர். ஆனால் ஒருவாரம் கடந்தும் உயிரோடு இருக்கிறாளா இறந்துவிட்டாளா என அவ்வப்போது வந்து பரிசோதனை செய்தபடி நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. தகவல் கிடைத்ததும் வந்த நெருங்கிய உறவினர்கள் கூட "என்னப்பா இது சோலி முடிஞ்சா தூக்கிப்போட்டுட்டு போயி வேற வேலையை பாக்கலாம்" என சலிப்படைந்துவிட்டனர்.

           இந்த சூழலில் தான் அவர்கள் வந்தார்கள். அதன் தலைவிபோல வந்தவள் தான் இராமாயி பாட்டி. அவளின் ஒப்பாரிபாடலுக்கு ஊரே கெரங்கிக்கிடந்தது. அவளைத் தான் தன் தாய் இறப்பதற்கு முன்பே ஒப்பாரி வைக்க அழைத்து வந்திருக்கிறான். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ன யோசிப்பார்கள் என்றெல்லாம் யோசிக்காமல் தனது மகன் அமுதனை அழைத்து இராமாயிப்பாட்டி முழுவினருக்கு இடம், ஒலிப்பெருக்கி ஏற்பாடுகள் என செய்யச் சொன்னான். அத்தனையும் செய்துமுடித்த அமுதன் இராமயி பாட்டியிடம் வேறு எதுவும் வேண்டுமா எனக்கேட்க அவள் "சுக்கு மல்லி காபி போட சொல்லுங்க அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க சொல்லுங்க இதுவே போதும்" என தன்னுடன் வந்த பெண்களை அழைத்துப் பேசப்பேச அடுத்தடுத்த வேலைகள் வேகமாக நடந்தது. வீட்டின் ஹாலில் ஒரு உடல் கிடப்பதாக வடிவப்படுத்திக்கொண்டு வந்த பெண்கள் வளையமாக அமர்ந்து "நாம்பொறந்த சீமையிலே" என ஒப்பாரி பாட்டை இராமயி துவங்க அந்த வீட்டிலிருந்த அத்தனை கண்களும் காதுகளும் ராமாயியின் பாடலுக்கு சொக்கத்துவங்கின. ஒலிப்பெருக்கி அவளது பாடலை பெரிதாக்க அது காற்றில் கலந்து அந்த பகுதியை நிரப்பியது. அந்த பாடல் வீட்டில் நுழைந்து அமராவதியம்மா காதுகளுக்குள் நுழைய அமராவதி முகத்தில் மாற்றமும் கண்களில் ஒரு ஒலியும் நிறைந்தது. இராமாயி பாட்டில் லயித்துப்பாடி அவளுடன் வந்தவர்கள் அவள் பாட்டை தொடர்ந்து பாடினார்கள். இராமாயி, அமராவதி பிறந்தது...வாழ்ந்தது… என அவளது வாழ்கையைப் பாடினாள். இதைக்கேட்க கேட்க அமராவதியின் கண்களில் கண்ணீர் கன்னத்தில் வழிந்து தலையனையை நனைத்தது. இராமாயி பாடினாள், 


செல்லமா பொறந்தவலே 

என் பொறந்தவளே

செழிப்பா வாழ்ந்தவளே

கூட வந்த ராசனோட 

கூடி வாழ்ந்து கொண்டாடினே

பொண்ணு புள்ள நாலு பெத்து

புகளோட வாழவச்சே

என் பொறந்தவளே

சின்னதும் பெருசுமா

தலைமுறை மூனையும் 

மொத்தமா பாத்துப்புட்டே

நெய்ப்பந்தம் கை புடிச்சு

நெடும்பயண வழியனுப்ப

இத்தனை கொள்ளு பேரன்

பேத்திகளும் நெரஞ்சுநிக்க 

கொடுப்பினை வேரென்ன

வேனுமடி பொறந்தவளே

போய்வாடி....பொன்மகளே

பொறந்தவளே போய்வாடி

மீண்டும் வர ஆசையின்னா

சேந்துவாழ வேனுமுன்னா

பேத்தி வயித்துக்குள்ளே..

பொண்ணா பொறந்துவாடி 

மகராசி போய்வாடி 

பொறந்தவளே போய்வாடி.. 

   ராகம் போட்டு பாடிட அத்தனை கண்களும் குளமாய் நிறைந்தன. இவர்களைப் போலவே அமராவதி அம்மாவும் பாடல் வரிகளில் லயித்துக்கிடந்தாள். 

         பாடல் வரிகளின் அர்த்தங்களில் மூழ்கி ஆனந்தம் கொண்டாள். கண்களில் புதிய வெளிச்சம்- மகிழ்ச்சி பூரிப்புடன் உதட்டில் சிறிய புன்னகையுடன் உறைந்துபோனாள். பார்வை நிலை நின்றது கூடியிருந்தவர்கள் பரபரப்பாகி விபரத்தை வெளியில் வந்து செல்வத்திடம் சொன்னார்கள். ராமாயியின் ஒப்பாரியில் கரைந்து கிடந்தவன் இந்த செய்தியை கேட்டதும் அவனையறியாமல் சிரித்தான். "அம்மா, இதுக்குதான் காத்துருந்தியா… என்ன பெத்தவளே இதூதான் உன் ஆசையா" என் முனுமுனுத்தபடி அம்மாவைப் போய் பார்த்தான் அவள் உதட்டிலிருந்த அந்தகடைசி சிரிப்பு "கடைசியா என்னோட ஆசைய புரிஞ்சு நெரவேத்திட்டடா மயனே" என்பது போல இருந்தது. 

        அப்படியே வெளியே வந்து பாடிக்கொண்டிருந்த ராமாயியின் காதில் விபரத்தைச் சொன்னான். ராமாயி ஒரு நிமிடம் மௌனமாகிவிட்டு பிறகு மீண்டும் பாடத்துவங்கினாள். அவளைத் தடுத்து பேசிய சம்பளம் 5000துடன் இரண்டாயிரம் சேர்த்து அவள் கையில் திணித்தபடி "கேக்க வேண்டியவ கேட்டுட்டு போயிட்டா, இனிமே… எதுக்கு? போதும் பாட்டி" என பணத்தை அவள் பெற்றுக்கொண்டதும் தனது தம்பி கதிர்வேலனை கூப்பிட்டு அவனோடு சேர்ந்து ராமாயி கால்களில் விழுந்து கும்பிட்டார்கள். "ரொம்ப நன்றி பாட்டி, நீங்க மட்டும் இங்க வரதுக்கு ஒத்துக்கலன்னா! எங்கம்மா ஆசைய நெரைவேத்தாத புள்ளைகளா ஆயிருப்போம் பாட்டி" என்றான் செல்வம். "ஆமா பாட்டி அம்மான்னா எங்களுக்கு உசுருதான் ஆனா, எங்கம்மா வாழ்ந்த வாழ்கைய, எங்கள பெத்து வளக்கப்பட்ட கஸ்ட்டத்த நாங்க யோசிச்சுப்பாத்ததில்ல பாட்டி. அத உணரவச்சது நீங்கதான் பாட்டி. ரொம்ப நன்றி பாட்டி" என கை கூப்பி கதறினான் கதிர்வேலு, ராமாயி பதறிப் போனாள். "என்னப்பா இது நான் கூலிக்கு ஒப்பாரி பாட வந்தவ என்னப் போயி கும்புடுரீங்க!" எனக் கூச்சப்பட்டாள். "இல்ல பாட்டி நீங்க அம்மாவோட தியாகத்த புரியவச்ச புண்ணியவதி பாட்டி நீங்க" என அவளைக் கட்டிக்கொண்டார்கள். ராமாயிக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் இருவர் முதுகையும் தடவிக்கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு புறப்பட்டார்கள். கிராமம் அமராவதி அம்மாவின் இறுதிப் பயணத்தை உறுதி செய்யும் பணிகளில் ஈடுபட்டது. எல்லா ஏற்பாடுகளையும் முன்பே செய்திருந்ததால் வேலைகள் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.


3

கிராம சாலையிலிருந்து மெயின் ரோட்டுக்கு வந்தது. ஆட்டோ, உள்ளே இருந்த பெண்களுக்கு சம்பளத்தைப் பிரித்துக்கொண்டிருந்தாள் ராமாயி. அப்போது அந்தக் குழுவில் இருந்த ஒரு பெண் சொன்னாள், "பாட்டி நாங்க ஒப்பாரி பாடப்போன காலத்துல நீ வந்ததுக்கு அப்பரம் தான் அழுகுறோம். முன்னே எல்லாம் நடிப்போம். இப்ப நீ பாட ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே அழுகை வந்துருது பாட்டி" என்றதும் மற்றொருத்தி "உண்மைதான் பாட்டி, நாங்க அழுகத்தான் செய்வோம் அனா அழுகை வராது கண்ணீர் வராது. ஆனா நீ இப்போ ஒப்பாரிய துவங்கும்போதே ஒரு பொண்ணா பொறந்து பொறந்த வீட்டுலயும் புகுந்த வீட்டிலும் பிள்ளைகளோட ஊம்பற கஷ்டத்தையும் சந்தோஷத்தையும் நீ பாடும்போது நான் பொறந்து பட்ட பாடெல்லாம் ஞாபகம் வர வர அழுகை வருது பாட்டி" என பாராட்டினாள். இதுல என்ன இருக்கு ஒரு உசுரு போச்சுனா அந்த குடும்பத்துல உள்ளவங்க எவ்வளவு கஸ்ட்டப்படுவாங்கன்னு நெனச்சாவே மனசு கலங்குதுல்ல, அதுதானே மனுச மனசு. சினிமா, தொடர்னு பாக்குமோதே அதுல நமக்கு பிடிச்சவங்க கஸ்ட்டப்பட்டா அது சினிமா நாடகம்னு தோனுதா? சக மனுச ஏதோ கஸ்ட்டப்படராங்கன்னுதான அழரோம். அதுமாறிதான். என்னைப் பொறுத்தவர இறந்துபோனவங்களோட வயசக்கேப்பேன் அப்பரம் அவுங்கள அண்ணன் - தம்பி - அக்கா - தங்கை ன்னு நெனைப்பேன் பாட்டும் அழுகையும் தானா வந்துரும்" என்றாள் ராமாயி. "அதான் பாட்டுல ஒரு உருக்கம் வருது" என்றாள் இன்னொருத்தி. அப்போது இராமாயி அலைபேசிக்கு அழைப்பு வர எடுத்துப்பேசினாள். 

  

   ராமாயி இன்றைக்கு செல்வாக்கு பெற்ற ஒப்பாரிப் பாடகி என்றாலும் இவள் ஒன்றும் தொழில் முறை பாடகியல்ல.  அதே சமயம் இவள் இந்த தொழிலுக்கு வந்து நீண்ட காலமும் இல்லை. இதற்குமுன் அவளுக்கே இத்துறைக்கு வருவோம் என்று தெரியாது, எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் காலம் இந்த பாதைக்கு இழுத்து வந்தது. 

         மண்டல கோட்டை கிராமத்தில் கூலித்தொழிலாளியான ஆறுமுகத்துடன் சந்தோசம் பொங்க பொங்க வாழ்ந்து இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று ஊர் கண்ணே படும் அளவுக்கு மகிழ்ச்சி நிறைந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் கூலி வேலை பார்த்தாலும் தனது மனைவி குழந்தைகள் மீது அளவற்ற அன்பும் அக்கரையும் வைத்து கொண்டாடினார். எத்தனை சிரமங்கள் வந்தாலும் பிள்ளைகளுக்கு வேண்டியதையும் மனைவியின் தேவைகளையும் எப்படியும் நிறைவேற்றிவிடுவார். மேலும் எந்த காரணத்தைக் கொண்டும் இந்த அத்தக்கூலி வாழ்கைக்கு பிள்ளைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பிள்ளைகளின் கல்வியின் மீது மிகுந்த அக்கரையின் செலுத்தினார் ஆறுமுகம். பிள்ளைகளும் அதற்கு ஏற்றார் போல நன்றாக படித்து வந்தார்கள்.

தன்னைப்புறிந்து தன் தேவையுணந்து அவற்றை நிறைவேற்றி தன் மீது அளவு கடந்து அன்பு வைத்துள்ள கணவன்

இந்தவீட்டையேசொர்க்கமாக்கி அன்பு உலகமாக்கிய குழந்தைகள் என மனநிறைவுடன் வாழ்ந்து வந்து ராமாயி வாழ்க்கையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை திடகாத்திரமாக இருந்த ஆறுமுகம், காய்ச்சல் என படுத்தவர்தான் பிறகு எழுந்திருக்கவே இல்லை. ஒரு  நிமிசத்தில் அவளது சந்தோசமாளிகை சரிந்தது நிலை குலைந்து போனாள் இத்தனை  சீக்கிரம் தனது சந்தோச வாழ்கை சல்லி சல்லியாக சிதறிப்போனதை நினைத்து

திகைத்துப்போனாள். அவன் இல்லாமல் எப்படிவாழ்வது? என்றும் தனது குழந்தைகள் எதிர்காலம் என்ன ஆகும் கலங்கி தவித்தாள். ஆனாலும் விரைவில் நிதானித்தாள் அறுமுகம் கனவுகண்ட வாழ்க்கையை பிள்ளைகளுக்கு அமைத்துத்தர வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டாள் தன்னை திடப்படுத்திக்கொண்டு ஒரு வாரத்திலேயே கூலி வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆறுமுகம் இருந்தவரை "நான் இருக்கும் போது நீ ஏன் வேலைக்கு போகனும் என்னால உன்னையும் பிள்ளைகளையும் காப்பாற்றும் அளவுக்கு சம்பாரிக்க முடியும்" என அவள் கூலி வேலைக்கு போக விடவில்லை ஆனால் இப்போது போக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. வேரு வழியின்றி தனது தெரு பெண்களுடன் கூலி வேலைக்கு சென்றாள். வேலையோடு தங்களுக்கு சொந்தமான முக்கால் ஏக்கர் புஞ்சை நிலத்தில்  பாடுபட்டாள் இப்படி ஆறுமுகமாக மாறி அந்த வீட்டின் சகலமுமாக மாறி நின்றாள். குழந்தைகள் வளர்ந்தனர். 

    அவர்கள் வளர வளர தேவைகளும் வளர்ந்தது அதனால் செலவுகளும் வளர்ந்தது. அத்தனையும் அணைத்தையும் சமாலித்தாள் ஆனால் கல்லூரி என வரும்போதுதான் திணரிப்போனாள். என்ன செய்ய கல்வி என்பது காசுல்லவர்கள் வாங்கும் பொருளாகிப்போய் விட்ட பிறகு ஏழைகள் அதை பெற கடுமையான பாடுகளை பட்டே ஆக வேண்டும். 

       வேரு வழியின்றி பிள்ளைகளின் கல்விக்காக தனது கணவன் பெயரில் இருந்த முக்கால் ஏக்கர் புஞ்சைக்காட்டை விற்று தனது மூத்த மகனை கல்லூரிக்குள் அனுப்பினாள். தனது மகனின் கல்லூரிக்கான பணம் போக இளையவனை அடுத்த ஆண்டு சேர்க்கவும் பணத்தை சேமித்தாள். இப்படி அசையும் அசையாத சொத்துக்களை விற்று பிள்ளைகளை படிக்க வைத்தாள் அவர்களும் குடும்ப நிலையறிந்து கல்விதான் தங்கள் வாழ்கையை நிலை நிறுத்தும் என புறிந்து படித்து தேறினார்கள். அதற்கு மேல் படிக்க முடியாது என்பதை பிள்ளைகள் புரிந்துகொண்டனர். எனவே வேலைக்கான தகுதித் தேர்வுகளில் கவனம் செலுத்தி அதில் வெற்றியும் பெற்று ஆளுக்கொரு வேலைக்கு போனார்கள். இராமாயிக்கு தலை கால் புரியவில்லை. பிள்ளைகள் இனி பிழைத்துக் கொள்வார்கள் என்பது மட்டுமல்ல… தனது கணவனின் கனவை, ஆசையை தாம் நிறைவேற்றியதை நினைத்து பெருமை கொண்டாள். ஊரு இவளை பெருமையாக பார்த்தது. கணவனை இழந்த பிறகு தைரியமாக நின்று குடும்பத்தைக் காப்பாற்றி பிள்ளைகளையும் ஆளாக்கிய தைரியமான பெண் என பாராட்டியது. "உனக்கென்ன இராமாயி ரெண்டு புள்ளைகளும் கவர்மென்ட் சம்பளம், இனி வீட்டுல உக்காந்து கால ஆட்டிக்கிட்டே சாப்புடலாம்" என்பார்கள். இராமாயியும் ஒரு சுற்று பெருத்துப்போனாள். காலம் ஓடிக்கொண்டே இருந்தது. தனது பிள்ளைகளுக்கு நல்ல இடங்களாய் தேடி பெண்களைப்பார்த்து திருமணம் செய்து வைத்தாள். மருமகள்களும் அவளை பிரியமாகவும் மரியாதையாகவும் பார்த்துக்கொண்டனர். மகிழ்ச்சியாக கடந்து போனது நாட்கள். இந்த சூழலில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார்கள். மருமகள்கள் தன்னோடு இருக்க, மகன்கள் பக்கத்து மாவட்டங்களில் வேலை செய்தார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் வருவார்கள் பிறகு சென்றுவார்கள். ராமாயிக்கு அது சந்தோஷமாக இருந்தாலும் ஒருவகையில் வருத்தமாகவும் இருந்தது. திருமணமான சின்னஞ்சிருசுகளை இப்படி பிரித்து வைக்கலாமா.. இது வாழ வேண்டிய வயசு இல்லையா என யோசித்து பிள்ளைகளை அழைத்துப்பேசினாள் முதலில் மறுத்தார்கள், பிறகு இராமாயியும் தங்களோடு வர வேண்டும் என வற்புருத்தினார்கள். ஆனால் இராமாயி அதற்கு உடன்படவில்லை. ஆறுமுகத்தின்கால் தடம் பதிந்திருக்கும் இந்த ஊரை விட்டு எப்படி போவது என நினைத்து அவள் மறுத்ததும் பிள்ளைகள் அவர்கள் தங்கள் மனைவிகளை அழைத்துக்கொண்டு தாங்கள் பணியாற்றிய ஊர்களிலேயே தங்கி வாழ ஆரம்பித்தனர். 

           பிள்ளைகள் ஊரைவிட்டு சென்றபிறகுதான் தனிமையை உணர்ந்தாள். ஆறுமுகம் இறந்தபோது இருந்த வெறுமை மனதை நிறைத்தது. ஆனால் மகன்கள் இருவரும் காலை-மாலை அலைபேசியில் பேசி உரையாடுவதும் பகலில் மகன்கள் வேலைக்கு சென்றபிறகு மருமகள்கள் பேசினார்கள். இந்த ஏற்பாடுகளால் இராமாயி சகஜ நிலைக்கு திரும்பினாள். மகன்கள் இருவரும் மாதம் 1000-2000 அனுப்பினார்கள். கிராமத்தில் ஒரு உசுரு வாழ எவ்வளவு செலவாகிரப்போகுது. இந்த பணத்தை வைத்து சிரமமில்லாமல் வாழ்கை ஓடியது. காலம் ஓடியது, பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பிறந்து நகர வாழ்கையில் செலவு கூடியது. மாதாமாதம் அனுப்பிய பணம் குறைந்தது. ஒரு கட்டத்தில் "செரமம்னா சொல்லுமா பணம் ஆனுப்புரேன்" எனச் சொல்ல ஆரம்பித்தனர். 

       இராமயி இதைப்பற்றி ஒன்றும் கவலைப்படவில்லை. "நாம ஒரு சீவன்தான… நீட்டிப்படுத்தாலும் போச்சு.... நிமுந்துபடுத்தாலும் போச்சு" புள்ளைய கஸ்ட்டமில்லாம வாழனும்னு குருமிலாங்குடி காளிய வேண்டிக்குவா. என்ன, பேரம்பேத்தியல கைக்குள்ளயே வச்சு வளக்க குடுத்துவைக்கலயென்ற ஏக்கம் மட்டும் இருக்கும். திருவிழா காலங்கல்ல புள்ளைங்க பேரம்ப்பேத்தியலோடவரும்போது சொர்க்கமா இருக்கும். அவங்க போய்ட்டா பழையபடி தனிமைதான். இதை மாத்திக்கத்தான் 100 நாள்  வேலைக்கு போனா. இப்ப தனக்கான செலவுக்கே வேண்டியிருக்குன்னு போரா… இப்ப அவள் வாழ்ரது முதியோர் பென்சன்லயும் 100 நாள் வேலையை யும் நம்பித்தான் அதுலயும் முதியோர் பென்ஷன் வாங்கினால் 100 நாள் வேலை இல்லைன்னு வேற சொல்றாங்க இது எங்கே போய் முடியும்னு தெரியல அப்படின்னு புலம்பிக்கிருவா

        இப்படியே வாழ்கை போனது. என்னதான் சமாலித்தாலும் தனிமை அவளை கடுமையா பாதிச்சது. எவ்வளவு சண்டை - பிரெச்சனை - வறுமைன்னு வாழ்ந்தாலும் கூட்டுக்குடும்பம் ஒரு தைரியத்தை ,நம்பிக்கையைத் தரும். தனிமைங்கரது அச்சத்தையும், பதட்டத்தையும் தர்ரதா இருக்குது. அதனாலதான் கூடி வாழ்ந்தா கோடி நன்மைன்னு சொல்லி வச்சாங்க. இது வீடு, நாடுன்னு சகலத்துக்கும் பொருந்தும். இராமாயியும் இந்த தனிமையான வாழ்கையில் கொஞ்சம் அச்சம் பதட்டத்துடன் தான் வாழ்ந்தாள். இப்படி, பதட்டம் பயம் வரும்போதெல்லாம் எதையாவது பாடத்துவங்குவாள். பிறகு இது பழக்கமானது. தனித்திருக்கும்போதெல்லாம் பாட்டு, முதலில் நாட்டுப்புற பாடல்கள் - சினிமா பாடல்கள் என மாறி தனது துயரமான வாழ்கை குறித்து பாடுவாள். இவள் பாட ஆரம்பித்த காலத்தில் அண்டை வீட்டவர்களும் அந்த தெரு வழியாக செல்பவர்களும் நின்று கவனித்து ரசிப்பார்கள். சிலர் நேரில் பாராட்டிவிட்டும் செல்வார்கள். "பாட்டு சோகமா இருந்தாலும் குரல் அத்தனை சொகமா இருக்கு" என்பார்கள். இப்படி பேசத்துவங்கியவர்களில் ஒருவன்தான் பக்கத்து வீட்டு ஆதவன் . இராமாயி வீட்டிலிருக்கும் சமயம் ஸ்கூல் நேரமில்லையென்றால் அங்குதான் இருப்பான். அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லி, கதை சொல்லி, பாட்டுப்படித்து தனது தனிமையை போக்கிக்கொண்டாள். இப்படித்தான் ஒரு நாள் மதிய வெயிலில் வீட்டிற்கு எதிரே, சாலையில் படர்ந்து குடைபோல உயர்ந்து நின்ற வேப்பமரத்தடியில் காற்றுக்காக அமர்ந்திருந்தவள் தனது தனிமை, துயரங்களை மறக்க கீழே கிடந்த கூழாங்கற்களை எடுத்து "கட்டலங்காய்" விளையாடியபடி வழக்கம்போல பாடினாள். பாடிமுடித்தபோது மொத்தமாக கைத்தட்டுர சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். தன்னைச் சுற்றி ஏழெட்டு பெண்கள் சிரித்தபடி நின்றார்கள். 

       அவர்களைப் பார்த்ததும் கண்களை முந்தானையால் துடைத்தபடி "வாங்கத்தா எங்க போயிட்டு வாரிய..." என் அவர்களைப் பார்க்க.."பதனக்குடி கேதத்துக்கு போயிட்டு வர்ரோக்கா.." என இழுத்தவள். "அக்கா இன்னக்கிதான் நீ பாடுரதை கேக்குறேன், எவ்வளவு நல்லா இருக்கு" என வியந்தாள். ""அடி யேன்டி நீ வேற .. என்ன நல்லா இருந்து என்ன புரோசனம் பொழப்பு நல்லாயில்லையே..." என சிரிக்க முயன்றாள் ஆனால் வரவில்லை. "ஏக்கா அப்புடி சொல்ற.. ஊரு மெச்சத்தானே வாழ்ந்தே … சிங்கக்குட்டி மாறி ரெண்டு புள்ளய பெத்த… மத்த மாமியார்கள மாதிரி இல்லாம, புள்ளைய விரும்பலன்னாலும் அவங்கள தனியா சந்தோசமா வாழவச்சே. இப்ப பேரன் பேத்தியன்னு பாத்துட்ட… இனி என்னக்கா" என்றாள் வந்தவர்களில் மூத்தவளாகத் தெரிந்த முத்தம்மா. "எல்லாம் இருந்து என்ன புரோசனம் சொல்லு.... நான் தனியாதான கெடக்கேன்" என வழிந்த மூக்கை இடது கையால் சிந்தி வீசிவிட்டு தனது முந்தானையால் துடைத்துக்கொண்டார். "உன்ன சுத்தி ஊரே இருக்கே அக்கா பிறகென்ன" ராமாயி தோளை தட்டி செல்லமாக சிரித்தாள் முத்தம்மா. "ஊர் இருக்கு அனா ஒவ்வொருத்தருக்கும் ஒரு வேல இருக்கே, யாரும் யாரையும் விசாரிக்கவோ, பேசவோ, நேரம் எங்க இருக்கு" என பெருமூச்சு விட்டாள். ராமாயி "அக்கா அதை விடு உன் பாட்டைக் கேட்டதும் எனக்கு ஒரு யோசனை. அதை எங்கூட இருக்குறவங்களும் ஒத்துக்குவாங்கன்னு நெனைக்கிறேன் சொல்லவா?"  என கேள்வியோடு ராமாயி முகத்தைப் பார்த்தாள். ராமாயி சந்தேகமாக முத்தம்மவைப் பார்த்து "என்ன கேக்கபோற" என்றதும் "ஒங்கொரல் அவ்வளவு சொகமா இருக்கு… இதமா..சூப்பரா இருக்கு அதனால… ஒப்பாரி பாட எங்களோட வாரியாக்கா..." என இராமாயி முகத்தைப் பார்த்தாள். இராமாயி வெறுமையாய் பார்த்தபடி "நான் ஏதோ என்னோட ஆத்தாமையை போக்குறதுக்கு வாயில வந்ததை பாடுறேன் அதை போயி பெரிய பாடகர் ரேஞ்சுக்கு பேசுரே" என விரக்தியாய் சிரித்தாள். ஒன்னோட கொரல் எவ்வளவு அருமையாய் இருக்குன்னு உனக்குத் தெரியாது நீ மட்டும் ஒத்துக்க… அப்புரம் பாரு.. ஊரே உன் பாட்டுக்கு காத்திருக்கப்போகுது" என ஆர்வமாய் அடுக்கினாள். "சே..சே.. சும்மா இரு முத்தம்மா நானாவது பாடுறதாவது போயி வேலைய பாரு" என்றபடி இடதுகையை ஊன்றி ஏழ முயன்றாள். உடனே அவள் தோளை அழுத்தி அமர வைத்ததுடன் அவளோடு நெருக்கமாக அமர்ந்தபடி அவளின் முகவாயை தொட்டு உயர்த்திப் பிடித்தபடி "அக்கா அவசரப் படாதே, நான் சொல்றத கேளு.. நீ..தனியா இருக்குறது கஸ்டமா இருக்குன்னு சொன்னல்ல, எங்க கூட வந்தா எப்போதும் நாங்க உங்க கூடவே இருப்போம். உங்களுக்கு தனிமை  தெரியாதுல்ல… யோசிங்கக்கா நீங்க யோசிச்சு முடிவெடுக்கா" எனக் கெஞ்சினாள். "இல்ல முத்தம்மா அது சரியா வராது" என பிடிவாதமாக மறுத்தாள். ஆனால் முத்தமாவோடு வந்திருந்த பெண்களும் மாற்றி மாற்றி வலியுருத்த ராமாயி கொஞ்சம் தடுமாறினாள். அதைப் பயன்படுத்தி "அக்கா, நீ மொதல்ல ரெண்டு நிகழ்ச்சிக்கு வா.. உனக்கு பிடிக்கலைனா.. நீ… வரவேணாம்" என்றாள் உறுதி காட்டி. இராமாயியால் தொடர்ந்து மறுக்க முடியவில்லை. தனது தனிமையைப் போக்கிக்கொள்ளவும், வருமானத்திற்கு வழியாகவும் இருக்கும் என யோசித்துத் தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டாள். முத்தம்மாள் குழுவினர் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர். 

          

4

அன்று துவங்கியது இந்த பயணம். முதலில் தயக்கத்துடன் தான் இணைந்தாள். இறப்பு நிகழ்ச்சிகளுக்கு போகும்போது எல்லோரும் தம்மைப் பார்ப்பதும், அப்படி பாடு, இப்படி பாடு என வந்து யோசனை சொல்வதும் இவையெல்லாம் இராமாயிக்கு சங்கட்டமாகவும் கூச்சமாகவும் இருந்தது முதலில் முத்தம்மாள் பாட… இணைந்து எல்லோரோடும் சேர்ந்து பாடினார்கள்   இரண்டு மூன்று நிகழ்வுகளுக்கு பிறகு முத்தம்மாவுக்கு இளைப்பாருதல் தர ராமாயி பாட ஆரம்பித்தாள். அதன் பின்னர் தான் அந்த மாற்றம் நிகழ ஆரம்பித்ததுஇறப்பு வீட்டுக்காரர்கள் மட்டுமல்ல கேதம் கேட்க வந்தவர்கள் கூட “அந்த அம்மாவ பாட சொல்லுங்க” என இராமாயியை பாட வலியுறுத்ததுவங்கினர். படிப்படியாக இது வளர்ந்து முத்தம்மாளின் ஒப்பாரிக்குழு - இராமாயிப்பாட்டியின் கலைக்குழு ஆனது. சுத்துப்பட்டு கிராமத்துல எங்கே சாவுன்னாலும் ராமாயிப்பாட்டைக் கேட்காமல் பொணம் பொரப்படாது. அப்புடி ஊரும் ஒலகமும் அவ பாட்டுல மயங்கிக்கிடந்தது. வயசான காலத்துல பெரியவங்களுக்கு இருக்குர கடைசி ஆசைகள்ள ராமாயி வந்து தங்களோட சாவுக்கு பாடனும்ங்கரதும் ஒரு ஆசையா இருந்துச்சு. அதனால ஓய்வில்லாம பாடித்திருஞ்சா. சில ஊர்களில் இவர்கள் சாதி அறிந்ததும் மட்டமாக நடத்தும் போக்கும் தெரிந்தது இவர்களுக்கு தரும் தண்ணீரிலிருந்து உணவு வரை ஒரு ஒதுக்குதல் தெரிந்ததும் ராமாயி மிகவும் சங்கடத்துக்குள்ளானால் இதை அவள் பல இடங்களில் எதிர்க்க துவங்கினார் ஒன்று தருவதானால் எங்களுக்குள்ள மரியாதையோடு தர வேண்டும் இல்லை என்றால் கடைகளில் பார்சலாக வாங்கி தந்து விடுங்கள் என்று கராராக பேசி விடுவாள் இது பல இடங்களில் எதிர்ப்பு வந்தாலும் அவள் பாட வேண்டுமே என்பதற்காக அவள் சொல்வதை கேட்கவும் தொடங்கினார்கள் சாதியைத் தாண்டி திறமைகளுக்கும் சிறு மரியாதை இருக்கும் தானே இதனால் அந்தப் பிரச்சனை தீர்ந்தது மேலும் இந்த குழுவில் இருந்த சில பெண்கள் சரக்கு அடிக்கும் பழக்கத்தையும் வைத்திருந்தார்கள் அது தவறு என்று ராமாயி பேசி பார்த்தாள் ஆனால் யாரும் கேட்கவில்லை "நாலு மூச்சூடும் அழுகுரதுனால உடம்பு நோகுறதுக்கு கொஞ்சம் சரக்கு அடிச்சா சொகமா இருக்கு அதனால தான் பாட்டீ இத கண்டுக்கிடாத "என்று அவர்களும் எதிர்த்து வாதாடினார்கள் "கஷ்டமா வேலை செய்றவங்க எல்லாமே உடம்பு வலிக்காக சரக்கு அடிக்கிறாங்களா அப்படி யாரும் செய்யிறது இல்லை சரக்கு அடிக்கிற சில பேரு இப்படி சாக்கு சொல்றாங்க அதுபோல நம்மள நாமே ஏமாற்றிக் கொள்ள வேனாம் அது நமக்கு மரியாதையா இருக்காது" என்று சொன்னால் வாதாடினால் கேட்கவில்லை ஆனால் ஒருமுறை ஒரு ஊரில் கேதத்தில் இருந்தபோது சரக்கு வாங்கி தந்த ஒருவன் "என்ன பூமயிலு சரக்கோடு சேர்த்து மட்டன் சிக்கன்னு சப்ளை பண்ணிடுவோம் ராத்திரிக்கு அப்படியே தங்கிட்டு போறது" என்று பேசி கையை பிடிக்க ஆரம்பித்தான் இப்படி சில காவாலிகள் சில இடங்களில் பிரச்சனை செய்தனர் இதில் மட்டும் அவர்களுக்கு சாதி தெரிவதில்லை என்ன செய்வது இப்படி வந்த சில பிரச்சனைக்கு பிறகுதான் தன் குழுவில் யாரும் சரக்கடிக்க கூடாது என்று முடிவு எடுத்து இப்போது சரக்கு அடித்த ஒரு சிலர் இப்போது மாறி உள்ளனர் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெயர் பெற்ற ஒப்பாரி குழுவானது இராமாயி பாட்டியின் குழு இதனால் அவர்களின் வேலை முறையும் கூலி முறையும் மாறியது . முன்னாடி எல்லாம் சாவுக்கு போனா அடக்கம் செய்ய எடுத்துப் போகிற வரை இருந்து ஒப்பாரி வச்சா தான் சம்பளம் வாங்க முடியும் ராமாயி பாட்டியோட ஒப்பாரி பாட்டுக்கு செல்வாக்கு வந்த பிறகு ஒரே நாளில் அடக்கம் செய்து விட்டால் சரி மறுநாள் தான் என்றால் இரட்டைச் சம்பளம் ஆனது அதனால் இறந்த அன்றே அடக்கம் செய்பவர்கள் முதல் நாளும் மறுநாள் அடக்கம் செய்வதாக இருந்தால் மறுநாளும் ஒப்பாரி குழு ஒப்பந்தம் செய்தார்கள் இதனால் இராமாயின் ஒப்பாரிப்பாட்டுக்கு ஓய்வின்றி போனது ஏதோ ராமாயி புகழ் பெற்றதும் சம்பாதிக்கும் ஆசையில் இப்படி நடந்து கொள்வதாக நினைக்கக் கூடாது அவளை ஒப்பு வைக்க அழைத்தவர்கள் தான் இதற்கு காரணம் அவளைக் கொண்டு ஒப்பு பட வைப்பதை சிலர் கௌரவ பிரச்சினையாக பார்த்ததே காரணம் ராமாயி பாட்டியை பாட வைத்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக நின்று இறப்பு அன்றே அடக்கம் செய்தால் ஒரு நாள் மறுநாள் என்றால் இரண்டு நாள் கூலி என மாற்றியதுடன் 2000 கோடியாக இருந்ததை ஐந்தாயிரம் ரூபாய் வரை உயர்த்தியும் விட்டார்கள் இப்படி கூலி உயர்ந்தாலும் அவள் அனுசரணையாக நடந்து கொள்வாள் அப்படித்தான் சம்பூரணி சோனமுத்து இறந்த போது அவர் மனைவி சாந்தி 3 ஆயிரம் ரூபாயை கொடுத்து கண்ணீர் மல்க கைகூப்பியபடி "ஆத்தா என் புருஷன் செத்த பிறகு நீ வந்து அவர் சாவுக்கு பாடணும்னு அவர் ஆசைப்பட்டு இருந்தா அதை நிறைவேத்தாமல் போயிடக் கூடாதுன்னு தான் ஆத்தா இத்தனை கஷ்டத்திலும் உங்கள ஒப்பு வைக்க கூப்பிட்டேன் எதையும் நினைச்சுக்காம இதை வாங்கிக் கோங்க அத்தா" கதறும் சாந்தியின் தோள்களை சேர்த்து அணைத்தபடி "நீ போயி மத்த வேலையை பாருமா இது எனக்கு போதும்" ஆறுதல் சொல்லி அனுப்பினாள் பாட்டியின் குழுவில் உள்ள மற்ற பெண்கள் "பாட்டி நீ இப்படி இறக்கப்பட்டு கூலிய குறைச்சா எல்லாரும் இதயே பழக்கமாக்கிடுவாங்க ஆமா" என்று சொன்னவளை பார்த்து சிரித்தபடி "நாம ஒண்ணும் அவங்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துட்டு கூலி வாங்கல அதுக குடும்பத்துக்கு ஆதரவா இருந்த உசுர இழந்துட்டு நிராதரவா நிக்கிறவங்க கிட்ட எப்படி பேரம் பேச சொல்ற அது பாவம் இல்லையாடி" என்றதும் "நீ இப்படி இரக்கப்பட்டுயன்னுவையி உன்னையே ஏமாத்தி பாடையில போட்டு ஒப்பாரி வச்சிருவாக பாத்துக்க" கழுத்தை ஒரு பக்கமாக வெட்டியபடி பேசிய அவளை பார்த்து ராமாயி "போடி இவளே இதுக்கு பேரு ஏமாளித்தனம் இல்லை இறக்க குணம் இது கூட இல்லைனா நீ என்ன மனுசி? வாங்கடி போகலாம்" என கிளம்பி விடுவாள் சில இறப்புகளில் அவர்களின் ஏழ்மையை அறிந்து பேசிய சம்பளத்தை குறைத்தும் வாங்கிக் கொண்டு வந்து விடுவாள் இது போல பல நிகழ்வுகள் இந்த செய்தி வெளியில் பரவி ராமாயி பாட்டியின் மீது பெரும் மரியாதையே வந்து விட்டது

முதல்ல தங்களோட ஊரச்சுத்தின்னு ஆரம்பிச்சு பிறகு தாலுகா, மாவட்டம்னு வளந்து இப்போ பல மாவட்டங்களுக்கு போற அளவு ஒப்பாரி பாட்டுல பேரும் புகழும் வாங்கிட்டா… 


5

       இப்படி இறப்புன்னா பறந்து திரிஞ்சு பாடுறது, இறப்பு இல்லன்னா ஆதவனோட பொழுதைக் கழிக்கிறதுன்னு நாட்கள் ஓடியது. இந்த காலத்தில் தான் அது நடந்தது ஒரு இறப்பில் பாடிக்கொண்டிருந்தபோது இராமாயி பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இறப்பு வீட்டுக்காரர்களே பதறிப்போயி மருத்துவமனைல சேத்து, மருந்து மாத்தரைய் வாங்கிக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஒரு வாரமாச்சு, படுத்த படுக்கையா கெடந்தவளுக்கு ஆதவன்தான் தொணை. அப்பப்போ வந்து பாட்டி ஏதாவது வேணுமான்னு கேப்பான். அப்பப்போ சின்னச்சின்ன உதவிகளை செய்வான். முத்தம்மாவோட குழு ஏதாவது நிகழ்ச்சிக்கு போனா, எப்போவும் போல ராமாயிக்கு சம்பளம் பிரிச்சு கொண்டுவந்து தருவாங்க அத முதல்ல மறுத்தா பாட்டி எல்லோரும் வற்புறுத்தினதுனால வாங்கிக்கிட்டா அதுல தான் மருந்து மாத்திரை வாங்க முடிந்தது. இருந்தாலும் இராமாயி உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த நெலமைலதான் ஒரு நாள் ஆதவன் வழக்கம்போல வீட்டுக்குள் வந்தான் ராமாயி பாட்டி அலங்கோலமாக விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான் "பாட்டீ.. பாட்டீ"ன்னு கத்திப்பாத்துட்டு தன் அம்மாட்ட வந்து விபரத்த சொன்னான். அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்காம "போடா அங்கிட்டு அந்த கெழவி இப்படித்தான் செத்துபோன மாதிரி கெடப்பா கொஞ்ச நேரம் போன பிறகு எந்திருச்சு ஊரிக்கிட்டு திரிவா" என ஆதவனை ஒதுக்கிவிட்டு அடுப்படிக்குள் நுழைந்தாள்.  ஆதவனுக்கு என்ன செய்வதுன்னு புரியல. தெருவுல பலருக்கிட்ட சொல்லிப்பாத்தான். ஆனா இத யாரும் பெருசா நெனைக்கல. மறுபடியும் வீட்டுக்குள்ள ஓடிவந்தான். இராமாயி அப்புடியே கிடந்தாள். ஆதவன் செய்வதறியாது பதறினான். பிறகு சினிமால இறந்துபோயிட்டாங்களான்னு பாக்க என்னென்ன செய்வாங்கன்னு யோசிச்சு, மூக்குல கை வச்சு காத்து வருதான்னு பாத்தான். நெஞ்சுல தலைய வச்சு பாத்தான். எல்லா சோதனைலயும் பாட்டி செத்துட்டான்னு புரிஞ்சுது. ஆதவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. "அப்போ பாட்டி செத்துப்போச்சா" என நினைத்தபோதே அழுகை வந்தது. இப்ப என்ன செய்ரதுன்னு யோசிச்சான். தெருவுல வந்து நின்னு வர்ரவங்ககிட்ட எல்லாம் "மாமா பாட்டி செத்துருச்சு, சித்தி பாட்டி செத்துருச்ச்சு, அக்கா.. பாட்டி செத்துருச்சு" என ஒவ்வொருவரிடமும் சொன்னான். சிலர் மட்டும் "என்னடா சொல்றா எப்புடி சொல்ற" எனக்கேட்டனர். அவன் செய்த சோதனைகளைச் சொன்னதும் சப்தமாக சிரித்து "அடேயப்பா, டாக்டர் வேலையெல்லாம் பாக்குரியா" எனக் கேலி பேசிவிட்டு சென்றனர். ஆதவனக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. கடைசியாக அவனின் வீட்டிற்குள் அம்மாவின் அதட்டலையும் மீறி டீ.வி அருகில் வைத்திருந்த தனது எல்போனை எடுத்து ஏதோ ஞாபகம் வந்தவனாக முத்தம்மாவிற்கு போன் செய்து சொன்னான். தாங்கள் தூரமான ஒரு ஊரில் இருப்பதால் அடக்கம் நடந்ததும் உடனே வந்துவிடுவோம் என்றாள். வேறுவழியில்லாமல் இராமாயி வீட்டிற்குள் வந்தான். இராமாயி முகத்தைப் பார்த்தான். வழிந்த கண்ணீரால் முகம் சரியாக தெரியவில்லை. கண்களை துடைத்துக்கொண்டு செல்போனை "ஆன்" செய்தான். அதில் ஆடியொ பகுதிக்கு சென்று அதில் ஆடியோவை ஆன் செய்தான். 


எட்டூரும் பெருமை பேசும்

எத்திசையும் போற்றி நிற்கும் 

தாம் பொறந்த சீமை 

இலுப்பங்குடி மண்ணபத்தி

என்னால பாடி வைக்க

எப்படி ஆகுமய்யா 

மண்ணான்ட மன்னனுக்கும் 

மதிசொல்லும் மா மனுசன் 

என்னை பெத்தவரு 

பெருமை சொன்னா

காக்கா குருவி கூட

கண்ணைமூடி நின்னு கேக்கும்

இராமாயியின் ஒப்பாரி காற்றில் கலந்து தெருவுக்குள் நுழைய பக்கத்துவீட்டுக்காரர்கள் வெளியே வந்து எட்டிப்பார்த்தனர். "என்ன இது ராமாயி சொந்தவீட்டுக்குள்ளயே ஒப்பாரி வக்கிறா.. ஒரு வேள அவ புள்ளையளுக்கு ஏதாச்சும்..." என ஒருவருக்கொருவர் பேசியபடி ராமாயியை விசாரிக்கலாம் என வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு இருந்த காட்சியைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ராமாயி பாயில் கிடத்தப்பட்டு தலை மாட்டில் ஆதவனின் செல்போனில் ஒப்பாரி பாடிக்கொண்டிருந்தாள். இராமாயியின் குரல் ராமாயிக்காக பாடிக்கொண்டிருந்தது. ஆம் இது இராமாயி அவளுக்காக அவளே பாடிக்கொண்ட ஒப்பாரி, சுய ஒப்பாரி. 

       இதைக்கண்ட தெருமக்கள் கலங்கிப்போனார்கள். பிள்ளைகளுக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என ஆளுக்காள் ஒவ்வொரு கருத்தாய் பேசிக்கொண்டிருந்தார்கள். இராமாயி இது எதையும் கவனிக்காது படுத்தருந்தாள்.

 

       "ஏப்பாட்டி எங்கபாத்தாலும் உன் பாட்டுதான் கேக்குது. எப்படி பாட்டி. செத்துப்போனவங்க வரலாறு தெறியுது… அவுங்க அப்புடி இப்புடின்னு பாடி அசத்துர" என இராமாயியுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஆதவன் கேட்டான். இராமாயி சிரித்தபடி "அடேய் என்னோட வர்ரவங்கள்ல ஒல்லியா செவப்பா இருக்குமே ஒரு பொண்ணு.. அது முன்னாடியே செத்துப்போனவங்களோட சொந்தக்காரங்ககிட்ட  பேசி வெவரத்தையெல்லாம் வாங்கி எங்ககிட்டே சொல்லும் அதுக்கேத்த மாதிரி நான் பாட்டுக்கட்டி பாடீருவேன்" என சிரித்தாள் ராமாயி. "நீ சரியான ஆளுதான் பாட்டி." ஆதவனும சேர்ந்து சிரித்தான். "பாட்டி இப்ப ஒரு பாட்டுப்பாடேன் ப்ளீஸ்" என ராமாயியிடம் கெஞ்சினான். "போடா நீ வேற திடீர்னு பாடச்சொன்னா என்னாத்த பாடுரது" நழுவப் பாத்தாள் விடவில்லை முகிலன். 

"பாட்டி யாரைப் பத்தியாவது பாடு.. ஏன் பாட்டி ஒன்னப்பத்தி பாடேன்" அடம் பிடித்தான். "என்னப்பத்தி பாட என்னடா இருக்கு" என்றபடி அமைதியானாள் ராமாயி. முகிலன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். ராமாயி… மெதுவாக பாடத்துவங்கினாள். 

    எட்டூரும் பெருமை பேசும்

எத்திசையும் போற்றி நிற்கும் 

தாம் பொறந்த சீமை 

இலுப்பங்குடி மண்ணபத்தி

    இராமாயி பாடப்பாட வார்த்தைகள் வரிசைக்கட்டி வந்தது. பொண்ணா பொறந்த கதை புகுந்த வீடு வந்து புகழோடு வாழ்ந்த கதை புள்ளைகள் ரெண்டு பெத்து பேரன் பேத்தி வரை பாத்து வாழ்ந்த கதையென பாட்டு நீண்டுகொண்டே இருந்தது. ஆதவனின் செல்போனில் பதிவாகிறது எனத் தெரியாமல் பாடிக்கொண்டேயிருந்தாள். 

       அந்த பாட்டுதான் இப்போது அவள் தலைமாட்டில் இருந்து ஆதவன் செல்போன் மூலம் பாடிக்கொண்டிருந்தாள். பாட்டை கேட்டு ஒவ்வொருவராக ராமாயியின் வீட்டை நோக்கி வந்து கொண்டே இருந்தார்கள். ராமாயி பாட்டி இறந்து விட்டாள் என்கிற செய்தியை கேள்விப்பட்டதும் வேறு வேலையாய் இந்த ஊருக்கு வந்திருந்த செல்வம் உடனடியாக ராமாயி வீட்டுக்குள் வந்தான் ராமாயின் முகத்தை பார்க்க பார்க்க அவனுக்கு அழுகை கட்டுப்படுத்த முடியாமல் வந்தது எத்தனை பேருக்கு நீ கடைசி பாட்டை பாடி இருக்கே.. எத்தனை பேரு கடைசி ஆசையை நிறைவேற்றிஇருக்க உன்னோட கடைசி ஆசை என்னன்னு தெரியாம போச்சே பாட்டி ஆனால் நீ என்னென்ன ஆசைப்பட்டு இருப்பியோன்னு நாங்களே யோசிச்சு ஒவ்வொன்னா நிறைவேத்தி உன்ன அடக்கம் பண்ரோம் பாட்டி சந்தோஷமா போயிட்டு வா ... என யோசித்தபடி கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான் பக்கத்து கிராமங்களிலும் உள்ளூரிலும் உள்ள இளைஞர்களுக்கு தகவல் சொல்லி வரச் சொன்னான் ராமாயி பாட்டியை வழி அனுப்பும் பணிகள் தொடங்கின


6


சாலைகள் தெருக்கள் முழுவதும் தலைகள் நிறைந்திருந்தது அந்த கிராமம் எல்லோர் கண்களிலும் கண்ணீர் எல்லோர் முகத்திலும் சோகம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ராமாயி பாட்டியை அவளது ஒப்பாரிப் பாட்டை சிலாகித்து பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் அந்தப் பகுதியினுடைய அரசு அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கூட வந்து மாலை வைத்துவிட்டு சென்றார்கள் ராமாயி பாட்டி ஐஸ் பெட்டிக்குள் அனைத்தையும் பார்த்தபடி இருக்கிறாளோ என்னமோ அவளின் உதடுகளில் லேசான புன்னகை தெரிந்தது அந்தப் பெட்டியை சுற்றி இரண்டு மருமகள்களும் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர் மொத்த வேலையையும் ஊர் பார்ப்பதால் ராமாயி பாட்டியின் மகன்கள் தாயின் தலைமாட்டருகே நின்று கொண்டிருந்தனர் இறப்புக்கு வந்தவர்கள் அனைவரும் மாலையை வைத்துவிட்டு அவளின் பிள்ளைகள் இருவர் கையையும் பிடித்து ஆறுதல் சொல்லிவிட்டு கடந்தனர் பிள்ளைகள் இருவருக்கும் தனது அம்மாவின் மீது சுற்றி இருக்கும் ஊர்களில் உள்ள மனிதர்களுக்கு எத்தனை அன்பு இருக்கிறது என்னை வியந்து வியந்து பேசிக் கொண்டார்கள் ஆனால் மனதில் அம்மாவை தனித்து விட்டு சென்றது தவரோ என எண்ணி எண்ணி அழுதனர் காலம் கடந்து அழுது என்ன செய்ய உயிரோடு இருந்தபோது அந்த உறவை பராமரிக்காமல் பாதுகாக்காமல் விட்டுவிட்டு தவறிவிட்ட பிறகு அதை நினைத்து பயன் என்ன? வேலைகள் வேகமாக நடந்தது இராமாயிபாட்டியின் உறவினர்கள் ஊர் மக்கள் மருமக்கள் மகன்கள் மூலம் நீர்மாலை எடுத்துக் கொண்டு வந்த தண்ணீரில் குளிப்பாட்டப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாடையில் படுக்க வைத்து பயணத்திற்கு தயாரானார்கள் ஆம் ராமாயி பாட்டி தன்னுடைய வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டு தனது கடைசி பயணத்தை துவங்க தயாரானாள் பாடைக்கு முன்னால் பேரன்மார்கள் நெய் பந்தம் பிடித்துச் செல்ல ராமாயிப்பாட்டியின் மூத்த மகன் கொல்லி சட்டி எடுத்துச் செல்ல பாடை ரதம் போல மெல்ல ஊர்ந்து மயானத்தை நோக்கி பயணமானது இப்போதெல்லாம் பாடையை தூக்குகிற பழக்கம் கைவிடப்பட்டு வருகிற சூழல் எல்லா சாதி சமூகமும் ரதம் என்கிற பெயரில் மோட்டார் வாகனத்தையும் சக்கர வாகனங்களையும் தயார் செய்து வைத்துள்ளது தங்களோடு வாழ்ந்த ஒரு உயிரை தங்களுக்காக வாழ்ந்த ஒரு உயிரை தன்னுடைய உறவு என்கிற அடையாளத்தை சுமந்த உயிரை சுடுகாடு வரை கூட சுமந்து செல்ல முடியாத சத்து இல்லாத மனிதர்கள் ஆகிப்போன உலகத்தில் பாடையில் கடத்தப்பட்டு ராமாயி பாட்டியை சாதி தாண்டி மதம் தாண்டி உறவுகள் தாண்டி மாற்றி மாற்றி பாடையை தூக்கி சுடுகாட்டை நோக்கி நகர்ந்தார்கள் ராமாயி பாட்டியின் இறுதி ஊர்வலம் நீண்டு கொண்டே இருந்தது மெயின் சாலையைத் தாண்டி மயானசாலையை தொட்டு கடந்த போது இருபுறமும் நின்ற வாகனங்கள் அதிலிருந்து மனிதர்கள் காத்திருக்க பொறுமையின்றி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் "என்ன இப்படி போக்குவரத்தை மறித்து போகிறார்கள் மற்றவர்கள் போக வேண்டாமா" என்றெல்லாம் பேசினார்கள் அப்போது தாமதத்தினால் எரிச்சல் பட்ட ஒரு பயணி இறங்கி பாடையை பின் தொடரும் ஒருவரை தடுத்து "யாருங்க இது இவ்வளவு கூட்டம் பெரிய தலைவர்ங்களா" என்று கேலி கிண்டலாக கேட்டான் அவனை மெதுவாக திரும்பிப் பார்த்த அந்த நடுத்தர வயது ஊர்காரர் சொன்னார் "உறவில்லாத மனிதர்களுக்காக அவர்களின் கடைசிஆசைக்காக உருகி உருகி உருக்கமாக அழுத மனுசி இறந்து போயிட்டா அவளுக்காகத்தான் எங்க ஏரியாவே அழுதுகிட்டு அவ பின்னாடி போகுது போதுமா பொத்திக்கிட்டு நின்னு பொறுமையா போ" கடுப்பாக பேசியபடி கடந்து போனார் இதற்கு மேல் விளக்கம் கேட்க மற்ற பயணிகளும் தயாராக இல்லை விவரத்தை அறிந்தவர்கள் ஆச்சரியம் குறையாமல் அதிசயமாய் பார்த்தார்கள் ராமாயி பாட்டி மனித உறவுகளின் தோள்களில் மயானத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறாள்.......





      



Show quoted text

No comments:

Post a Comment