Sunday, June 9, 2024

நடைதவம். கவிதை

நடை தவம்
-------------------------------
காலை கதிர்களால்
அடித்து துவைத்தும்
புரண்டு படுக்காதவன்
ஊரடங்கால் வீடடங்கி
வேலையில்லா வேலையாய்
இரவின் எல்லை வரை
காத்திருப்பவன் ஆகிறேன்

யானைக்கு முன்வரும்
மணியின் ஓசையாய்
 சூரிய கதிர்களின் இளம்
பருவ வெளிச்சத்தில்
துரத்தி வரும் சோம்பலைத் தள்ளி
திமிரி வெளி வந்தேன்

பாதி முகம் மறைக்கும்
முகத்திரை கவசத்துடன்
பாதையை வந்து சேர்ந்தேன்
காற்றினை கிழித்து
கரங்கள் வழி விலக்க
பாதணிகளின் ஜதியில்
பாதங்கள் பயணிக்கும்

வெற்றுக் காகிதத்தில்
வரைந்தார் போல் இரு
கண்களை மட்டும் காட்டி
கடந்து சென்றார் பலர்

மெல்ல மெல்ல உயரும்
வெப்பத்தின் அனலில்
கொழுப்பு கொதித்துறுகி
மயிர்க்கால்கள் வழியே
ஊற்றாய் நிறைந்து
உடலில் வழிந்தது

வழிந்த உடல் நீரில்
நனைந்த உடையூரி
கனத்து கசகச த்தது
கை இடுக்கு தொடை இடுக்குகள்
தூரம் கடக்க மருத்து
எரிந்து எதிர்க்கிறது

சிகை சிந்திய நீர் வழிந்து
நெற்றி மூக்கு வழி பயணித்து
உதடுகளுக்குள் ஊடுருவி
உப்புக் கரிக்கிறது

உடம்பு வூரி கரைவதான
கனப்பில் கடுப்பாகி
புறப்பட்ட இடம் திரும்பி
மொத்த நீரையும் ஊற்றி
சுத்தம் செய்த பின் தெரியும்
 புத்துயிர் பின் அர்த்தம்

அதிகாலை நடை தவத்தால்
உற்சாகத்தில் ஊற வைத்து
நெய்யப்பட்ட உடலாய்
மேலும் நாள் முழுதும்
முகிழ்ந்து கிடப்பதால்
 மறுநாள் முதல் வேலையாய்
இரவு போர்வையை
உதறி கலைந்து
இளம் கதிர் வரவை
எதிர்பார்த்தபடி நான்...
..

Sunday, June 2, 2024

வாக்குறுதி கவிதை


வாக்குறுதி
__________________

வாக்குறுதி என்பது 
நேர்மை குறித்தானது 
வறியவனும் கூட 
நெறியாய் பேணுவது
 வாக்குறுதி காத்தல்.

வாக்குறுதி காக்க 
மூன்றாவது அடிவைத்த 
வாமனன் பாதத்தை 
கிரீடம் தரித்த தலையால் 
தாங்கினான் மன்னன்

 வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
 தசரதன் என்பர்

வாக்குறுதி காக்க 
சதி என்று அறிந்தும் 
உயிர் கவசத்தை 
உரித்து தந்தான் கர்ணன் 

வாக்குறுதி காக்க
 நாட்டை துறந்து 
மனைவி மகனை விற்று அடிமையானான் அரிச்சந்திரன் 

 இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
 பரப்பியவர் யாரும் 
பாதையாக்கிக் கொள்ளவில்லை 

இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கு உறுதிசெய்யும் 
வலையாகிப் போனது 

வாக்கு மீறல் 
நேர்மை மீறலென 
சொன்னவனும் 
நம்பியவனுமே 
ஒப்புவதில்லை 

வார்த்தைப்படி 
வாழாதார் யாரும் வராதீர்
 எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின்  கதவடைப்போம்...

_ மங்களக்குடி நா. கலையரசன்_

அடையாளம் கவிதை


அடையாளம்
________________

பாருக்குள்ளே நல்ல நாடு - அது யாருக்கானது என்பது
எதிரே நிற்கும்கேள்வி 

தானியம்
தளைக்கும்நிலங்கள் 
பாசன வசதி செய்ய
 பாராண்டோர் மறந்ததால் 
ஏரி கண்மாய்க்குள் 
கான்கிரீட் வீடுகள் 

மாமலையும் நீர்நிலையும் 
கை கொடுக்க மறந்ததால் பொன்விளைந்த பூமி 
பிரசவிக்க மறந்தது 

பேய்ந்தும் காய்ந்தும்
 கெடுத்த இயற்கையால் 
சம்சாரி சன்னியாசி 
நிலையில் ...

வீட்டின் புழக்கடையில் 
மேலி உடைந்த கலப்பை 
பழைய இரும்பு காரரிடம் பேரிச்சம்பழத்திற்காய் 
கைமாறிய கொழுகம்பி 

 நெரிசலில் திணறி 
பயணிக்கும் சாமானியராய் லாரியில் ஏர் மாடுகள் 

பயிர் காப்பீடு 
வளர்ச்சி நிவாரணத்தில் 
காலம் தள்ளும் காலம்
 விவசாயி எனும்
 தடம் இழந்து தவிக்கிறது 
சம்சாரி வீடு...

_மங்கலக்குடி நா. கலையரசன்_