Monday, January 22, 2024

கவிதை (அடையாளம்)

அடையாளம்
_____________________


குடும்பங்கள் ஒவ்வொன்னுக்கும் குல சாமிகள் இருக்கு 
தெருவுக்கு ஒரு அம்மன் கோயில் கட்டாயமா இருக்கு

 ஊருக்குள்ள அய்யனாரும் மகாலிங்க சாமிகளும் இருக்கு ஊரைச்சுத்தி-
காளியம்மன் . காத்தாயி . 
நொண்டி கருப்பு .ராக்கச்சி. முனியாண்டி. மதுரை வீரன். வழிவிட்டான் சாமிகளும்  
பாதுகாப்பா இருக்கு

 தூரம் தொலைவு போய் கும்பிட பழனி மலை இருக்கு 

இப்படி சொந்த சாமி
 வகை வகையா
 நூறு சாமி இருக்க 
ஓஞ்சாமி  ராமனை ஏன்
 எங்க மேல திணிக்கே..

எல்லாரும் சேர்ந்து வணங்கும் சாமி எங்கே இருக்கு 
தனித்தனியா சாமிகளும் சடங்குகளும் இருக்கு-இதுல 
 ஒன்ச்சாமிய பாக்க எனக்கு 
தாக்கீது எதுக்கு ...

எந்த சாமி வேணும்கிறது 
தனி நபரின் விருப்பம் 
கோயில் கட்டும் ஆசையெல்லாம் பக்தருக்கு வரலாம்
அனுமதிதாரதுமட்டும் 
அரசுக்கு  வேலை
ஆராதனை மணி ஆட்டுவது  வேண்டாத வேலை..

எங்க சேலைக்காரி அருளைப் பெற உங்கள் சேணைஎல்லாம் வருமா சடை முனிக்கு படையல் வச்சு  சங்கரமடம் தருமா 
அலகு குத்தி நேர்த்தி வைக்க அக்ரஹாரம் வருமா? 
 நாங்கள் மட்டும் எதுக்குஅங்கே 
விலகி நில்லு ஓரமா...

அப்போ நீ பேசுற பாசையவே என்னையும் பேசச் சொன்னே
.அப்புறம்
 நீ சாப்பிடும் உணவுபோல 
என்னையும் சாப்பிடச் சொன்னே
இப்ப  ஓஞ்சாமிய 
சேந்து கும்பிட  
அழைப்பு வேற தார ....
 
வங்கிக்குபதினைந்துலட்சம் 
வந்தபாடில்லை
இருபது கோடி பேருக்கு 
வேலை ஒண்ணும் தரல 
விலைவாசியை குறைக்க 
யாரும்யோசிக்கவே இல்ல  விவசாயத்தை. தொழிலை காக்க திட்டம் எதுவும் இல்லை _இதுல

 அடுத்தவன் கோயில இடிக்கிறது அதுல கோயிலை கட்டுவதும் பொழப்பத்த வேலை 
ஜனங்கள் நல்லா வாழ்ந்தாதானே சாமிகூட வாழும்...

அஞ்சு வருஷம் ஆளத்தானே  
ஓட்ட சனங்கபோட்டோம் .எங்க அடையாளத்தை மாத்திடவா உன்கிட்ட வந்து கேட்டோம் 
அடி மேல அடி அடிச்சா 
அம்மிகூட நகரும் -நாங்க
சேந்து திருப்பி அடிச்சா- உன் 
அதிகாரமே தகரும் ...

_மங்கலக்குடி நா.கலையரசன்_

(பாபர் மசூதி இடித்த இடத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பிஜேபி மோடி அரசு நடத்திய 22/1/2024 அன்று எழுதிய கவிதை)

Thursday, January 18, 2024

கவிதை (அரிதாரம் கலைந்தது)

 அரிதாரம் கலைந்தது

___________________________


பாசிசத்தால் நெய்யப்பட்ட இந்துத்துவ அரசியலை போர்த்திக்கொண்டு

 அலையும் போதும்...


ராஜா வேஷம் போட்டு 

காவித் துணி தரித்து

 ராம நாமம் பாடி 

இந்து தேசம் இதுவென 

எகிரிப் பேசித்திரிந்த போதும்..


இல்லாரும் உடையாரும் 

இல்லாத ராஜ்ஜியமே

 இந்து ராஜ்யம் என 

கனவை விதைத்து 

அதிகாரம் வந்ததும்

குடிமக்கள் வாழ்க்கையை 

குதறிப் போட்ட போதும்...


குஜராத்தில் இரக்கமின்றி குடிமக்களையே

படுகொலையை வல்லுறவை தூண்டிவிட்டு நடக்க வைத்து கைகட்டி ரசித்த போதும்...


இந்து மத பாசம் 

அரியணைக்காண வேஷம் என வரலாற்றுப் பொய்களை அம்பலப்படுத்தி எதிர்த்தோரை அடக்கியும் .அழித்த போதும்...


ஏழு சகோதரிகளின்

 இளைய சகோதரியாம் 

நாகலாந்து மலை மக்களை  

நர வேட்டையாடியபொதும்...


நாலு பேருக்கு நாட்டை விற்று நட்டாற்றில் இந்துக்களை தள்ளி நாக்பூருக்கு சேவை செய்து 

நத்தி பிழைத்த போதும்...


நினைத்துப் பார்த்தீரா 

நரேந்திரரே... உம்மையும் 

இந்து மதம் தந்த 

சூத்திர பட்டம் 

துரத்தி வரும் என்று...


_மங்கல குடிநா.கலையரசன்_

Friday, January 5, 2024

வாக்குறுதி. கவிதை


வாக்குறுதி
__________________

வாக்குறுதி என்பது 
நேர்மை குறித்தானது 
வறியவனும் கூட 
நெறியாய் பேணுவது
 வாக்குறுதி காத்தல்.

வாக்குறுதி காக்க 
மூன்றாவது அடிவைத்த 
வாமனன் பாதத்தை 
கிரீடம் தரித்த தலையால் 
தாங்கினான் மன்னன்

 வாக்குறுதி காக்க வென்றே உயிரையே உதிர்த்தான்
 தசரதன் என்பர்

வாக்குறுதி காக்க 
சதி என்று அறிந்தும் 
உயிர் கவசத்தை 
உரித்து தந்தான் கர்ணன் 

வாக்குறுதி காக்க
 நாட்டை துறந்து 
மனைவி மகனை விற்று அடிமையானான் அரிச்சந்திரன் 

 இந்தப் புராணக் கதைகளை பாராயணம் செய்து
 பரப்பியவர் யாரும் 
பாதையாக்கிக் கொள்ளவில்லை 

இப்போது
வாக்குறுதிஎன்பது
வாக்கு உறுதிசெய்யும் 
வலையாகிப் போனது 

வாக்கு மீறல் 
நேர்மை மீறலென 
சொன்னவனும் 
நம்பியவனுமே 
ஒப்புவதில்லை 

வார்த்தைப்படி 
வாழாதார் யாரும் வராதீர்
 எம் தேசத்தேர் இழுக்க -என தேசத்தின்  கதவடைப்போம்...

_ மங்களக்குடி நா. கலையரசன்_