Sunday, April 10, 2022

நாயக நடை (சிறுகதை)

சிறுகதை 

 நாயக நடை

மங்களக்குடி நா கலையரசன்

நான் வந்துருவேன், வரப் போறேன், வந்துட்டேன்..என செல்லமாக மிரட்டியபடி சூரியன் வெளிவர ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. சூரியன் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டத் தொடங்கியதும் ஒளியாமல் இருந்த இருட்டும் சிதறி ஓடியது.  கண்களை உறுத்தாத அந்த வெளிச்சத்தில் மாசிமாத பனித்திரை சூரியக்கதிர்களால் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, மிச்சமிருந்த பனி படலத்தின் ஊடாக தெரிந்த மனித உருவங்கள் நடமாடுவது மிக அழகாக தெரிந்தது. மருத்துவர்களின் உத்தரவுக்கு பணிந்தோ.. அல்லது  தங்கள் உடல் குறித்த கவலையாலோ..ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என பலரும் கைகளை வேகமாக வீசியபடி நடந்தார்கள். 

சிலர் ஓடினார்கள். சிலர் பேசியபடியே ஜாலியாக நடந்தார்கள். சிலர் காற்றில் ஆரன் அடித்தார்கள். குழந்தைகளை இழுத்துக்கொண்டு சிலர் நடந்து வந்தனர் சிலரை நாய்கள் இழுத்துக்கொண்டு சென்றது. குடும்பமாக சிலர் நடந்து வந்தனர். கைகளில் வாழைப்பூ வடையை ஒவ்வொரு வருக்கும் கொடுத்தபடி "வாழைப்பூ வடை உடம்புக்கு ரொம்ப நல்லது" என ஒரு பெரியவர் அனைவரையும் தின்ன வைத்தபடி நடந்து வந்தார். அந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் நகர்ந்ததும், நடுத்தர ஜோடி ஒன்று நடந்து வந்தது அதில் அருகில் வந்த கணவனிடம் அந்தப் பெண்"உங்க தம்பி பொண்டாட்டிங்க பேசரதும் நடந்து கொள்ரதும் உங்களுக்கே தெரியும் ..நான் ஒருத்திதான் சரி சரின்னு நேந்து நிரவி போறேன்அதனாலதான் குடும்பம் இன்னைக்கு வரைக்கும் உடையாமல் இருக்கு ஆனா என்னையே கேவலப்படுத்தர மாதிரிஉங்க தம்பி பொண்டாட்டி அமுதா பேசரா " என்றபடி உடன் வரும் கணவன் என்ன நினைக்கிறான் என்பதை அறிய அவன் முகத்தையே பார்த்தபடி நடந்து சென்றாள். 

இப்படியாக காலை நேர வாக்கிங் பணிகளோடு தனது சொந்த பிரச்சனைகளையும் பேசியபடி பலரும் சென்றனர்.  தொடர்ந்து நடையே
இல்லாமல் பைக் ஓட்டியதால் கொழுப்பு ஏறி குறைப்பதற்காக ஒரு பகுதி நடந்து கொண்டிருக்கும்போது பலர் புதிதாக பைக் ஓட்ட கற்றுக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருந்தது இன்னும்சிலரோ இந்த உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் போல காதுகளில் ஹெட்போன்களை மாட்டிக்கொண்டு தன்னைச் சுற்றி நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் வேக வேகமாக நடந்து சென்றார்கள் காலை நேரத்தில் மிதமான சூழலில் இப்படி நடப்பது சுகமானதாகவும் மனதுக்கு இதமான தாகவும் இருந்தது "சுற்றி நடப்பதை கவனித்து அதில்l கவனம் மூழ்கி விட்டதால்உடன் வந்த அப்பாவை மறந்து விட்ட ராஜேந்திரன் பின்னால திரும்பி பார்த்தான். 

கொஞ்சம் இடைவெளி விட்டு அவர் நடந்து வந்து கொண்டிருந்தார் ".. ராஜேந்திரன் எப்பவும் இப்படி அஞ்சு மணிக்கு அலாரம் வச்சு எந்திரிச்சு அவசரஅவசரமாக வாக்கிங்போறதில்லை. அவனுக்கு அது பிடிக்காது ராத்திரி 12 மணி வரைக்கும் டிவி அல்லது லேப்டாப் பாத்துட்டு தூங்கி காலையில் எட்டு மணிக்கு எழுந்து ஆத்தா தரும் காப்பிய குடிச்சிட்டு பைக்கை எடுத்துக்கிட்டு அம்மா பூங்கா போனா அவனோடபிரண்டு ரெண்டு பேரு வந்துருவாங்க அவங்களோட சேர்ந்து பார் விளையாட்டு  தண்டால் என உடற்பயிற்சி செய்வது மன்னிக்கணும் ஒர்க் அவுட் பண்றது அது தான் பழக்கம். அங்கேயும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சி எல்லாம் நடக்கும் பயிற்சிக்கு புதுசா வரும் டீன் ஏஜ் பசங்க ,வந்த முதல் நாள் பயிற்சியை அரைகுறையா செய்துமுடித்ததும் நெஞ்சை தூக்கி தூக்கி பார்க்கவும் கைகளை மடக்கி சதை எழும்பிவிட்டதா என பார்ப்பது வேடிக்கையாக இருக்கும் அதோட பயிற்சிக்கு வந்த சில நாட்களிலேயே டைட்டா டீசர்ட் போட்டு, நெஞ்ச தூக்கி, கைகளை அகல விரித்து நடந்து வர்றத பார்க்கும்போது பயங்கர காமெடியா இருக்கும். இதுக்காகவே புதிதாக யாரும் பாரில் மெம்பராய் இருக்கிறார்களா என்ன என விசாரிப்பார்கள் ஒன்பது மணிக்கு பயிற்சியை முடித்துவிட்டு வீடுவந்து அரைமணி நேரத்தில் குளித்து ரெடியாகி மனைவி வைத்துள்ள இட்லியை உள்ளே தள்ளி விட்டு புறப்பட்டால் பத்து நிமிடத்தில் அலுவலகம். ராஜேந்திரனுக்கு ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தான் வேலை   மாலை 6 மணிக்கு வீடு அம்மா அப்பா மனைவி குழந்தைகளுடன் பொழுது போய்விடும்  

இப்படித்தான் போனது பொழுதுகள். ஆனா ஆத்தா அழகம்மாவோட தொனதொனாப்பாளதான் ராஜேந்திரன் இந்த வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு" இங்க பாருடா அப்பாவுக்கு  நடக்க முடியல உடம்பு கனமாக இருக்கிறதால காலையில.. காலையில நடக்கனும்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. ஆனா அவரை தனியா அனுப்ப பயமா இருக்கு முன்ன மாதிரி இருந்தா நானே போயிடுவேன். என்னால  இப்ப முடியாது டா புரிஞ்சுக்கடா கண்ணா" என ராஜேந்திரனின் ஆத்தா அழகம்மாகெஞ்சாத குறையாக சொன்னதும் தட்ட முடியல "சரி சரி போறேன் "ஆனால் நான்  "பார்" போகவேண்டுமே என்றதும் "நீ ஏழரை மணிக்கு தானே போவ அதுக்குள்ள வந்துவிடலாம்" என நேரத்தை எல்லாம் கரெக்டா சொல்லி பேசின தால " சரி சரி அப்பாவோட போறேன் "என நான் சொல்லி முடிப்பதற்கும் முன்னால  ஆத்தாகுறுக்கிட்டு "நீ துணையா போறது சரி ஆனா துணைக்கு தான் போறேன்றது உங்க அப்பாவுக்கு தெரியக்கூடாது," என்ற ஆத்தாவை ராஜேந்திரன் முறைத்ததும் "கோவிச்சுக்காதடா அவரை பத்திதான் உனக்கு தெரியுமே நீ துணைக்கு வாரன்னு தெரிஞ்சா எனக்கு எதுக்கு துணை அதெல்லாம் நானே போயிருவேன் என்பார் அதனாலதான் சொல்றேன் புரிஞ்சுக்கடா" என கெஞ்ச அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அப்பாவிடம் வந்து

 "அப்பா நாளைக்கு  காலையில என்னையும் எழுப்புங்கள் நானும் வாக்கிங் வர்றேன் எட்டு மணிவரை தூங்குவதால  பல வேலைகள் கெட்டுப் போகிறது எப்பவும் டென்ஷனாகவே இருக்கிற மாதிரி படுது" என்றதும்  மகனை சந்தோசமாக ஏறிட்ட அவர் "ஓகே "என்றார் ஜாலியாக ஒரு வாரமாக இந்த வாக்கிங் தொடர்கிறது.அப்பாவுக்காக எனத் துவங்கினாலும் ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் போகிற அந்த சூழலே மிகவும் மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் இருப்பதால் இப்போதெல்லாம் அப்பா குரல் கொடுப்பதற்கு முன்னாலேயே ராஜேந்திரன் எழுந்து ரெடியாகி விடுவான். இன்றைக்கும் அப்படித்தான்.. அப்பாவை நோக்கி பின்னால் நடந்து வந்தபோது அவர்கள் வீட்டு நாயும் அப்பாவிற்கு பின்னால் வருவதை பார்த்தான். பின்னால் நடந்து வந்த அந்த நாய் அவ்வப்போது சாலை ஓரத்திற்கு சென்று பூண்டு செடி . மைல்கள்.மின் கம்பங்கள் .என கொஞ்சம் கொஞ்சமாக உச்சா போய்ட்டு அப்பாவோடு வந்து இணைந்து கொள்கிறது.  எதற்காக இப்படி செய்கிறது என்று புரியவில்லை. ஒன்று இதுவரை என்னுடைய அதிகார எல்லைக்கு உட்பட்டது என்று அடையாளம் இருக்கிறதா? அல்லது தன்னுடைய உச்சா  மூலமாக இவையெல்லாம் வேகமாக வளரும் என்ற நம்பிக்கையாலா? அல்லது தனது வரும் பாதையை அடையாளமிட்டு கொள்வதற்காகவா? என புரியவில்லை ஆனால் போய்விட்டு அவ்வப்போது வந்து அப்பாவின் பின்னால் நடந்து வர ஆரம்பித்தது இதை கவனித்துக் கொண்டே

  அப்பாவின் அருகில் வந்தவன் 

 "அப்பா போலாமா முடியலன்னா திரும்பலாம் நாளைக்கு கூட கூடுதல்  நடக்கலாமே என்றதும் "இல்லப்பா 40 நிமிஷம் நடக்கணும் இல்லைன்னா வாக்கிங் போய் பிரயோஜனமில்லை" என்றபடி உறுதி காட்டி வேகமாக நடந்தார் முன்னால் சென்றதும் பின்னால் நடந்து அப்பாவை அவன் கவனித்தான் தனது கனத்த உடம்பை தூக்கி கொண்டு வேகமாக நடந்தார் 

 ஊரே பெருமையா பேசுற மதிக்கிற ஒருத்தர் தான் தன்னோட அப்பான்னு சொல்றது பெருமைதானே 

முன்னால் நடந்து போகிற தந்தையை கவனித்தான் தனது கனத்த உடலை அசைத்தபடி நடந்து பழகும் குழந்தை நடப்பதைப் போல இருந்தது அவனுக்கு உண்மைதான் பிறந்த குழந்தை கவிழ்ந்து தவழ்ந்து நடந்து வளர்ந்து வயதாக வயதாக மீண்டும் பழைய நிலையை அடைவது போல முதியவர்கள் குழந்தைகள் ஆகிவிடுகிறார்கள் அவர்களின் பிள்ளைகள் பிற்காலத்தில் குழந்தைகளாக எண்ணி பெற்றோர்களை பராமரிக்க வேண்டும் என்றுஎத்தனை பிள்ளைகள்  நினைக்கிறார்கள் 

ராஜேந்திரன் கூட தனது வாழ்க்கை ஓட்டத்தில் தனது தந்தை வயதாகி தளர்ந்து போனதை கவனிக்கவில்லைதானே ராஜேந்திரன் தந்தையை இமைக்காமல் பார்த்தான் தனது தந்தையா இது! அவரின் நடையா இது ! என ஆச்சரியப்பட்டான் ஏனென்றால் நாயகத்தின் ஸ்பெஷலே அவரின் சிரிப்பும்,  நடையும் தான்  ஊரே பேசும் .
நீங்கள்  யாராவது ஸ்டைலாக நடந்து வந்தால் எப்படி கேலி செய்வீர்கள் "இவர் பெரிய சிவாஜி கணேசன்!  ஸ்டைல் வேற" அப்படித்தானே சொல்லுவோம். ஆனால் இலுப்பைக்குளம் கிராமமும் சுற்றுவட்டார கிராமங்களிலும்அப்படி சொல்ல மாட்டாங்க "இவரு பெரிய நாயகம் வாத்தியாரு ஸ்டைல பாரு" அப்படின்னுதான் சொல்லுவாங்க அப்படி ஊரே ரசித்த நடை அது.  அது மட்டும் இல்ல ஆம்பளைக்கு ஆம்பளையே ரசிக்கிறஅவர் சிரிப்பை பார்த்து "ஆம்பள கேஆர்விஜயா என்பார்கள் "அப்படி அழகாக சிரிப்பார் "அவர் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தா நாள் கணக்கா சோறு கூட இல்லாமல்   இருந்துருவேன்" அப்படின்னு நாயகத்தோட மனைவி அழகம்மா சொல்லுவாள் இதெல்லாம் ராஜேந்திரன் நினைவுக்கு வர அவனால அவங்க அப்பா கிட்ட இருந்து பார்வையை திருப்ப முடியல. அவரைப் பார்த்தபடியே நடந்தான். 

நாயகம் வாத்தியாரு பள்ளிக்கூட வாத்தியார் இல்லை சிலம்பு வாத்தியார் அவருக்கு குஸ்தியும்  அத்துப்படி இலுப்பைக்குளம் கிராமம் மட்டுமில்லை அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சிலம்பம் குஸ்தி அப்படின்னு சொன்னா நாயகம் வாத்தியார்தான் அதே மாதிரி அந்த பகுதியில் இருக்கிற ஒவ்வொரு கிராமத்திலும் இவர்கிட்ட கத்துக்கிட்ட  சிஷ்யர்கள் ஒருத்தரு ரெண்டு பேரு கண்டிப்பா இருப்பாங்க. எத்தனை பேருக்கு நாயகம் வாத்தியார் கத்துக் கொடுத்து இருந்தாலும் அவரோட ஸ்டைலும் அழகும் எவனுக்கும் வரலையே அப்படின்னு சில பேரு கவலையா பேசுவாங்க அந்தக் காலத்துல கிராமங்கள்ல சினிமா டிவி செல்போன் ஒன்னும் கிடையாது.  அதனால இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தான் மக்களுக்கு  பொழுதுபோக்கு. அதனால நல்லா  பாடுறவங்க நாடக நடிகர்கள் கபடி  வீரர்கள் , சிலம்பு குஸ்தி வீரர்கள் அப்படின்னு சொன்னா ஒரு கிரேஸ் இருக்கும;;. அவங்கள பார்க்கிறது அவங்களோட பேசுறது இதுக்கெல்லாம் மக்கள் விரும்புவார்கள் இலுப்பைக்குளம் பகுதி கிராமங்களில் உள்ள கோயில்கொடை திருவிழா எட்டு நாள் நடக்கும் அதுல ஒரு நாள் கண்டிப்பா சிலம்பப் போட்டி இருக்கும் போட்டி நடக்கிற அன்னைக்கு நிழலுக்காக போடப்பட்ட பந்தல்ல அறிவித்த நேரத்துக்கு எல்லாரும் வந்து விடுவாங்க. பெருவாய் கோட்டை சுப்பு, .பழையன கோட்டை நாகையா,  .மங்கலக்குடி ஆறுமுகம்
பதனக்குடி சோனைமுத்து., வேலாவயல் ராமர், .சம்பூரணி சந்தியாகு .இப்படி சிலம்பத்தில் ஜில்லா விட்டு, ஜில்லா போய் விளையாடி  பரிசு வாங்கிடடு வந்தவங்க எல்லாரும்  போட்டி இடத்துக்கு கரெக்டா வந்துடுவாங்க சுத்துப்பட்டு கிராமமே கோயில் திடலில் கூடியிருக்கும் எள்ளு போடக்  கூட இடம் இருக்காது. அந்த அளவுக்கு கூட்டம் இருக்கும் போட்டிக்கு வர்றவங்க சில பேர் டிரவுசர் பனியன் போட்டு இருப்பாங்க சிலபேரு வேஷ்டியை மல்லுப்பாச்சலா கட்டி,  ஒரு துண்டை இடுப்பில் கட்டி இருப்பாங்க அவங்க எல்லோரும் போட்டிக்கு வர்ற மாதிரி இருக்காது ஏதோ நண்பர்கள் சேர்ந்து ஜாலியா விளையாட வந்தது மாதிரி சிரிப்பும் பேச்சுமாதான் வருவாங்க. போட்டி காலை ஒன்பது பத்து மணிக்கு ஆரம்பிச்சு சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் நடக்கும். போட்டியில் யார் ஜெயிச்சாலும் போட்டியில் கலந்துகொண்ட எல்லாரும் எந்த கசப்பும் இல்லாம பாராட்டுவதை பார்க்கலாம். இப்படி தமிழ்நாட்டில் பல இடத்துல போட்டி நடக்கும் அதுக்கெல்லாம் போவாங்க நாயகம் எந்த போட்டியில் கலந்து கொண்டாலும் மூன்று பரிசுகளில் ஒன்றை கண்டிப்பா வாங்கிட்டு வருவாரு அப்படி எதுவும் வாங்கலைன்னாகூட தன்னோட விளையாட்டு ஸ்டைல் மூலமா ஊரே அவரை பத்தி பேசுற மாதிரி பண்ணிடுவாரு சிலம்பம் அப்படிங்கறது அவரைப் பொறுத்த வரைக்கும் உசுரு மாதிரி சிலம்பம் விளையாடுரவங்க தன்னுடைய நெத்திஅளவு இருக்குற சிலம்பத்தைதான் பயன்படுத்துவார்கள ஆனால் நாயகம் கம்பு உயரத்தை பற்றி கவலையே பட மாட்டார் எவ்வளவு உயர கம்பை வைத்து விளையாடும் போதும் அந்த கம்பு தரையிலேயோ  கூடியிருக்க கூட்டத்தின் மேலேயோ, அவர் மேலேயோ படாம “படை வீச்சு” மாதிரி (அதாங்க பழைய எம்ஜிஆர் படங்கள்ளே பத்து பேரு சுத்தி நின்னு அவரை அடிக்கும் போது நடுவுல நின்னு சுத்தி சுத்தி அடிப்பார் பாருங்கஅதுதான் படை வீச்சு)லாவகமாக சுற்றுவார் ஊரே கூடி நின்னு கூக்குரலிட்டு ரசிக்கும் அந்த அளவுக்கு பம்பரம் மாதிரி சுத்தி விளையாடுவார் . அந்தப் பகுதியே அவர பெருமையா பேசி தலையில தூக்கி கொண்டாடும் அந்தப் பெருமையை பார்த்து அனுபவிச்சு வளந்தவன்தான் ராஜேந்திரன்

 அவனையே பேர் சொல்லி யாரும் கூப்பிட மாட்டாங்க" ஏப்பா நீ வாத்தியார் மகன் தானே "என்பார்கள் சில பேரு ஜாலியாக "வாங்க சின்ன வாத்தியாரே" என செல்லமாக அழைப்பார்கள் அவங்க அப்படி  பிரியமா பேசுறது பெருமையா இருக்கும் பக்கத்து ஊர்ல திருவிழான்னா  நோட்டீஸ் வரும் அதுல இருக்கிற சிலம்பப் போட்டி விளம்பரத்தை பார்த்ததுமே நாயகம் பேரும் அவர் விளையாடுற முறை சம்பந்தமாகவும் பேச ஆரம்பிச்சுடுவாங்க "அவரு சிலம்ப  கையில எடுத்து குதித்து வந்து அடி போட்டு நிற்கிற அழகை பார்க்க ஆயிரம் கண் வேண்டும் "என்பார் ஒருவர் அடுத்தவரும் .."எதிரே நிற்பவர் உடன் பொருதுவதற்கு முன் அவர்மேல கம்ப  நீட்டி அவரை ஏமாற்றிவிட்டு வலது காலை வைத்து கெந்திப்  போய் நின்று ஒரு கிறுக்கி சுத்தி நின்னு பார்ப்பாரு பாரு  அப்படியே மதுரைவீரன் கணக்கா இருக்கும்" என்பார் இன்னொருவரோ "அவர் திடலுக்குள்ள  பாஞ்சு வருவார் பாரு அப்படி..சிறுத்தை மாதிரி இருக்கும்" என்பார் "அவர் சாதாரணமா வந்தாலே பதுங்கி பாய போற சிறுத்தை மாதிரி தானே இருக்கும்" என சொல்லிஒருவர் பெருமிதமாக சிரிப்பார்  சுத்துப்பட்டு கிராமத்தில் ஊரில் நாயகத்தின் புகழ் வளர்ந்தது அவரின் புகழைப் போலவே ராஜேந்திரனும் வளர்ந்தான் 

அப்பாவோடுதெருவில் போகும்போது அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும் அவருக்கு போடும் வணக்கம் எல்லாம் அவனுக்கும் சொல்வது போல் நினைத்து குதூகலமாக கூட வருவான் அவன் படித்த பள்ளிக்கு அவர் வரும்போதெல்லாம் அவன் பள்ளியின் ஆசிரியர்கள் இவன் அப்பாவை பார்த்து வணக்கம் வாத்தியாரே என்று சொல்வதைக் கேட்கும்போது இவனுக்கு பெருமையாக இருக்கும் அடிக்கடி பள்ளிக்கு வந்து போனால் நமக்குஒரு கெத்தாக இருக்குமே என்று நினைப்பான் இப்படி  குடும்பத்தினரின்  பெருமைமிகு அடையாளத்தின் சின்னமாக நாயகம் இருந்தார் நாயகத்தின் மனைவி அழகம்மா மொத்த பெருமைக்குள்ளும் மூழ்கிக் கிடந்தாள் எந்த இடத்தில் என்ன பேசினாலும் யாரிடத்தில் பேசினாலும் தனது கணவனின் பெயரை சொல்லாமல் பெருமை சொல்லாமல் பேச்சை முடிக்கமாட்டாள்" ஊர் உலகம் என்ன சொல்வது அவர் நடை சிரிப்பை பற்றி  நான் அது இரண்டையும் பார்த்து  மயங்கி தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் "என மகிழ்ச்சியாக சொல்வாள்  ஊரில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் நாயகத்துடன் தான் செல்வாள் நாயகத்துடன் தெருவில் உடன் நடப்பதும் நடந்து வரும்போது பின்தங்கி முன்னால் செல்லும் நாயகத்தின் நடையை ரசிப்பதும் அழகம்மாலுக்கு மிகவும் பிடிக்கும். அவரோடு சைக்கிளில் வரும் நிலை ஏற்பட்டாலும் ஊரின் எல்லையில் சைக்கிளை நிறுத்திவிட்டு தெருவில்அவரோடு உரசியபடி நடந்து வருவதுதன் அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் இணைந்து கலந்து கொள்வதிலும் அவளுக்கு அவ்வளவு பெரிய மகிழ்ச்சி அவளுக்கு சந்தோஷம் வரும் போதெல்லாம் அவள் வாய் முணுமுணுக்கும் பாடல் "தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையை தந்தது "என்கிற பாடல்தான் பலர் கேலி செய்த பிறகும் அந்தப் பாடலைத் தான் முனுமுனுப்பால் தெருவில் என்ன அவசரமாக சென்றாலும் இந்தபாடல்  கேட்டால்  சிறிது நேரம் நின்று பாடல் முடிந்த பிறகுதான் அந்த இடத்தை விட்டு நகர்வாள் இன்றைக்கு வரை  அந்த பாடலை தான் முணுமுணுத்து கொள்வாள்.  நாயகத்தின் முன்னால் கூட சிருங்காரமாய் அதை பாடுவாள் நாயகத்தின் மீதும் அவரின் சிரிப்பு நடை மீதும் அவளுக்கு தீரா காதல் நிரம்பி ததும்பும் 

இப்படியே வருடங்கள் ஓடியது ராஜேந்திரனின தங்கை பூரணா திருமணம் முடிந்து கணவன் வீடு சென்றாள் ராஜேந்திரன் படித்து முடித்து வேலைக்கு அலைந்து தகுதித்தேர்வு மூலம் ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை கிடைத்தது குடும்பம் ரமநாதபுரத்திற்கு வரவேண்டிய நிலை வந்தது எப்படி பிள்ளையை தனியாக விடுவது என முடிவுசெய்து நாயகமும்  அழகம்மாலும் உடன் வந்தார்கள். பிறகு ராஜேந்திரனுக்கும் திருமணம் நடந்து 3 குழந்தைகளோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது நாயகத்திற்கு முதலில் ராமநாதபுரத்தில் இருப்பதில் சிரமம் இருந்தது. புதிய இடத்தை கிரகித்துக்   கொள்ளவே அவருக்கு நீண்ட காலம் பிடித்தது. அவ்வப்போது ஊருக்குப் போய் வந்தாலும் அவருக்கு என்னவோ எதையோ பறி கொடுத்து விட்டு வந்தது போல் தடுமாறிப் போனார் .இடையில் வேலையை மாற்றி சொந்த ஊர் பக்கம் போய் விடலாமே என்று மகனிடம் பேசிப் பார்த்தார். அவனும் முயன்று பார்த்தான் முடியவில்லை "நாமாவது ஊருக்கு போகலாமா "என்று அழகம்மாளிடம் சொன்னால்  "பையன  தனிய விட்டுட்டு எப்படி போறது" என்றால்  அழகம்மாள் பிறகு மகனுக்கு திருமணமானதும் போய் விடலாமே என்று நினைத்தார் கல்யாணமான சின்னஞ்சிறுசுகளை தனியா விட்டுட்டு எப்படி போறது அழகம்மாள் சொன்னாள் அப்போதும் நடக்கவில்லை பிறகு குழந்தைகள் பிறந்ததும் மகனும் மருமகளும் வேலைக்குப் போவதால் குழந்தை பராமரிப்புக்கு என்ன செய்வது என்றாள் அழகம்மாள். இப்படி ராமநாதபுரம் நாயகத்தை இறுகப் பிடித்துக் கொண்டது

 ..சரி இங்கேயே சிலரைப் பிடித்து சிலம்பு கற்றுக் கொடுக்கலாமே என முயற்சித்தார் இப்போது யார் சிலம்பத்தை விரும்புகிறார்கள் அப்படி வந்தாலும் ஒருவர் இருவரே வருகிறார்கள் அவர்களும் சிறிது நாட்களுக்குப் பிறகு நின்றுவிடுகிறார்கள் இப்போது சிலம்பம் கற்றுக்கொள்வது எல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன் ஆக மாறி போய்விட்டது இனிமேல் சிலம்பம் குறித்து எந்த டிவிசேனலாவது கேம் ஷோ நடத்தினால்தான் சிலம்பு பற்றிய விவாதமாவது வரும் போலிருக்கிறது கடைசியில் பந்தயக் குதிரையைப் பிடித்து பட்டியில் அடைத்த கதையாக மாறிப்போனது நாயகத்தின் வாழ்க்கைஅதுவே அவரை சோர்வடைய வைத்தது தளர்ந்து போனார் சொந்த ஊரில் அனைத்து மக்களாலும் அன்பு பாராட்டப்பட்டு கம்பீரமாக வலம் வந்த வாத்தியார் இன்று நடை தளர்ந்து மனம் சோர்ந்து வாழ்ந்து வருகிறார்
ஒவ்வொரு மனிதனும் வயதும் வாலிபமும் உள்ள காலத்தில் வசதியாக வாழ்வதே வாழ்க்கை என முடிவு செய்து அதைத்தேடி எந்த ஊர் எந்த தேசத்திற்கும் சொல்லத் துணிந்து விடுகிறார்கள் அதிலும் அரசு அல்லது தனியார் அலுவலகங்களில் அதிகாரிகளாய் வேலை என்றால் அந்த அதிகாரம் சுவைக்க ஆர்வமாகி எந்த பகுதிக்கும் இடம்பெயறும் தைரியம் பெற்றுவிடுவார்கள். அதன் மூலம் செல்வம் சேர்த்து  ஏவலுக்கும் காவலுக்கும் காலடியில் ஆள் இருந்தாலும்  வயதாக வயதாக ஒரு வெறுமை உருவாகும் அருகில் உறவில்லை, வாழ்வது நமது ஊர் இல்லை என்ற ஏக்கம் குடியேறிவிடும். பிறகு தனது சேமிப்புகளை எல்லாம் வைத்து ஊரில் சிறியதாக வேணும் ஒரு வீடு கட்டி அங்கே குடி வந்து விட மனசு துடிக்கும் வாய்ப்பு வசதிகள் ஏதும் இல்லை என்றாலும் பிறந்த ஊரில் வாழ்வது தாய்மடியில் அல்லது  தன்னவள் மடியில் தலை வைத்து தூங்கும் நிம்மதியை தரும் என பலர் ஏங்கிக் கிடப்பது உண்டு தனது அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் வயதை எட்டியவர்கள் புலம்புவதை பார்த்த அனுபவம் ராஜேந்திரனுக்கும் உள்ளது என்பதால் தனது தந்தைக்கும் அப்படியான ஒரு மனநிலை உருவாகி உள்ளதை அவன் அறிவான்.அம்மாவை விட்டுப் பிரிந்த குழந்தையைப் போல ஒரு ஏக்கம் சொந்த ஊரை விட்டு வந்த தன் தந்தையிடம் இருப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறhன் இருந்தாலும் வயதான காலத்தில் உதவிக்கு யாரும் இன்றி ஊரில் இவர்களை விட்டு வைக்க அவனுக்கு மனம் இல்லாததாலேயே தாய் தந்தையை ஊருக்கு அனுப்புவதை தவிர்த்தான் வசதிகளையும் பாதுகாப்பையும் தாண்டி மனதுக்குள ஏற்படும் மகிழ்ச்சி என்பது உடல் நிலையையும் மனநிலையையும் வலுப்படுத்தும்  இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தான் ராஜேந்திரன். 

முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த நாயகம், பின் தங்கி விட்ட மகனை அழைத்தார்" இதோ வந்துட்டேன்" என வேகமாக நடந்து அவரோடு இணைந்து கொண்டான் "அந்த இஞ்சி டீ கடை வரைக்கும் போயிட்டு திரும்பி விடலாம் என்ன" சிறுவனை சமாளிப்பது போல மகனிடம் பேசினார் அது சரி எத்தனை வயதானாலும் பெற்றவர்களுக்கு குழந்தைகள் என்றைக்கும் குழந்தைகள் தானே உடன் நடந்தபடி தன் தந்தையின் முகத்தை பார்த்து  "அப்பா நம்ம காளிமுத்து மச்சான பார்த்தேன் பா" என்றான் "எப்படி இருக்காரு என்ன சொன்னாரு" என்றபடி நடந்த நாயகம் "நல்லா இருக்காருப்பா நம்ம இலுப்பைக்குளம்  வீடு இருளடந்து கிடைக்கிறது நல்லது இல்லைன்னார் இதை சுத்தப்படுத்தி விளக்கு  ஏற்றுவதற்கு ஏற்பாடு பண்ணலாமே அப்படின்னு சொன்னாரு "என்றான் "நீ என்ன யோசிக்கிற "என்று மகனை பார்த்து கேட்டார்" சொந்த வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு வாடகைக்கு ஆள் பிடிக்க முடியாது அதனால எனக்கு ஒரு யோசனை”  என்றான்.  “என்ன செய்யலாம் சொல்லு” என்றபடி வேகமாக நடந்தார் மாசத்துல இரண்டாவது சனிக்கிழமையும் நாலாவது சனிக்கிழமை அரசு விடுமுறைகள் அதனால நம்ம ஏன் வாராவாரம் ஊருக்கு போக கூடாதுன்னு தோணுதுப்பா”  என்றான் நாயகத்தின் கண்களில் ஒரு புதிய ஒளி தெரிந்தது. “என்னப்பா சொல்ற” என ஆர்வமாக கேட்டார ஆமாப்பா ராமநாதபுரத்தில் இருந்து ஊரு என்ன 50  கிலோமீட்டர் தானே கார் எடுத்தா  ஒரு மணி நேரத்துக்குள்ள  போயிடலாம் வாராவாரம் ரெண்டு நாளு நம்ம சொந்த ஊரில் இருப்போமே” என்று சொல்லிவிட்டு அவர் முகத்தை ஊடுருவிப் பார்த்தான். அவர் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்தது உதடுகள் விரிந்து சிரிக்கும்போது கே ஆர் விஜயா வின் சிரிப்பின் தடம் தெரிந்தது ஏதோ புதிய சக்தி கிடைத்தது போல மகிழ்ச்சியும் துள்ளலும் ஆக வேகமாக நடந்தார் மகனை பெருமிதமாக பார்த்தபடி  
எங்கிருந்தோ காற்றில் அந்த பாடல்  மிதந்து வந்தது 

“தேக்கு மரம் உடலை தந்தது 

சின்ன யானை நடையை தந்தது

 பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது 

பொன் அல்லவோ நிறத்தைத் தந்தது” 

 ராஜேந்திரனின் மனதில் அழகம்மாள் சிரித்துக்கொண்டிருந்தாள்.......

No comments:

Post a Comment