Sunday, April 9, 2023

வழிப்பறி (சிறுகதை)

வழிப்பறி                     ( சிறுகதை)                        

மங்களக்குடி நா. கலையரசன்


மதிய நேரத்தில் ஏதோ வேறு வேலை இருப்பது போல சூரியன் மொத்த வெயிலையும் அந்த காலை நேரத்திலேயே கொட்டி தீர்த்தது வேக வேகமாக அந்த ரோட்டில் வியர்க்க  வியர்க்க நடந்து வந்தார் முத்துக்குமார் வயது 50 க்கு மேல் இருக்கும்மூசு..மூசு ன்னு மூச்சு விட்டபடி அந்த நகராட்சி அலுவலகம் அருகே வந்தார் சாலையிலேயே நின்று அலுவலகத்தை பார்த்தார் இளம்பச்சை நிறத்தில் இரண்டு மாடி கட்டிடம் அகன்று விரிந்து நின்றது  வியப்பை ஏற்படுத்தியது இந்த நகராட்சியில் ரெண்டு மாடியில் உட்கார்ந்து வேலை பார்க்கிற அளவுக்கு அப்படி என்னதான் வேலை பார்க்கிறார்களோ என்று முனங்கியபடி   அதன் பிரமாண்டமான வாசலை பார்த்தார் ஆங்காங்கே சில மோட்டர் பைக் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மங்களபுரம் நகராட்சி அலுவலகம் என்று எழுதப்பட்ட வாயிலுக்கு அருகே இரண்டு ஜீப்புகளும் வாசலை ஒட்டி நின்றது அவ்வப்போது ஒவ்வொருவராக பைக்கில் வந்து உள்ளே இறங்கி ஏதோ பர்சை மறந்து விட்டு வந்து விட்டவர்கள் போல அலுவலகத்திற்கு உள்ளே வேகமாக விரைந்தார்கள் இவர் அலுவலகத்தை வெறித்துப் பார்ப்பதை கண்ட நடுத்தர வயதுஜெயராஜ் "என்ன ஐயா ஆஃபீஸ முழுங்கிவிடாதீங்க" என கேலியாக கேட்டார் "ஆபீஸ்கள் எல்லாம் சேர்ந்துதானே நம்மள முழுங்கிட்டு இருக்கு" என இவரும் விளையாட்டாக பதில் சொன்ன  முத்துக்குமார் "தம்பி ஒரு பிரச்சனையா கமிஷனரை பாக்கணும் அதான் அவரு வந்துட்டாரான்னு பாக்கிறேன்" என்றதும் ஜெயராஜ் "அண்ணா எதுவும் வேலை ஆகணும்னா சுந்தரமூர்த்தி அண்ணன பாருங்க மனுகொடுக்கிறதா இருந்தா கமிஷனரை பாருங்க" என்றான் முத்துக்குமார் திரும்பி ஜெயராஜை பார்த்தார் நடுத்தர வயதினரான அவர் முத்துக்குமாரையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார் இருவரும் லேசாக சிரித்துக் கொண்டபடி அலுவலகத்திற்கு உள்ளே வந்தார்கள் வந்ததும் ஜெயராஜ் அலுவலகத்திற்கு உள்ளே சென்று விட்டான் முத்துக்குமார் வாசல் அருகே இருந்த ஒரு திண்ணையில் அமர்ந்து அலுவலகத்திற்கு உள்ளே வருபவர்களை எல்லாம் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் அலுவலகம் கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பானது பைக்கில் வந்து அலுவலகத்திற்கு உள்ளே செல்வதும் சிலர் அவசரமாக பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்வதுமாக இருந்தார்கள் அந்த நேரத்தில் தான் வெள்ளை பேண்ட் வெள்ளை சட்டை அணிந்த உயரத்திற்கேற்ற உருவத்தோடு பாதி கன்னத்தை மறைக்கும் மீசை நெற்றியில் சந்தனம் குங்குமம் கலந்த பொட்டு வைத்த அவர் உள்ளே வந்தார் அவரைக் கண்டதும் அந்த இடம் சற்று பதட்டமானது போல் இருந்தது ஒவ்வொருவரும் அவரிடம் சென்று வணக்கம் சொல்லி எதை எதையோ பேசினார்கள் சிலரோடு சிரித்தபடி பேசினார் சிலரிடம் கொஞ்சம் கடிந்து பேசினார் சிலரை சமாதானம் செய்வது போல் இருந்தது "அவர்தான் கமிஷனராக இருக்க வேண்டும் "என்று முத்துக்குமாருக்கு தோன்றியது அவருக்குள்ளும் ஒரு பரபரப்பு பற்றி கொண்டது தன் கையில் இருந்த கைப்பைக்குள் எழுதிக் கொண்டு வந்த மனுக்கள் இருக்கிறதா என்று பார்த்தபடி அலுவலகத்திற்கு உள்ளே வந்தார் வந்தவர் கமிஷனர் என்று எழுதப்பட்ட அரைக்கு முன் நின்று அலுவலகத்தை சுற்றி பார்த்தார் வரிசையாக போடப்பட்டிருந்த ஒவ்வொரு டேபிளிலும் கட்டு கட்டாக சில ஃபைல்கள் இருந்தது ஒவ்வொரு டேபிலிலும் ஒருவர் இருந்து வேலை செய்து  இருந்தார்கள் வெளியே நின்ற அவர் உள்ளே வந்தார் உள்ளே வந்ததும் முத்துக்குமார் நின்ற இடத்திற்கு அருகே  வேலை செய்து கொண்டிருந்த வரிடம்நின்று "என்னாச்சு அந்த மெடிக்கல் காரர் பிரச்சனை" என்று கேட்டதும் அவர் எழுந்து நின்று மரியாதையாக "முடிஞ்சிடுச்சு அண்ணே நேத்தே கமிஷனர் கிட்ட கையெழுத்து வாங்கி மெடிக்கல் காரர்கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்" என்றார் பவ்யமாக "சரி.. சரி.." என்றபடி அடுத்த டேபிள் அருகில் சென்றார் அவரிடம் ஏதோ பேசினார் அவர் பதிலுக்கு ஏதோ பேசினார் இப்படி ஒவ்வொரு டேபிள் அருகிலும் சென்று ஏதோ ஒன்றை கேட்க அவர்களும் பவ்யமாக பதில் சொன்னார்கள் ஒவ்வொருவரிடமும் பேசிவிட்டு கமிஷனர் என்று எழுதப்பட்ட பெயர் பலகை இருந்த அந்த அறைக்குள் அவர் சென்று விட்டார் சென்றதும் வேகமாக உள்ளே செல்ல முயன்ற முத்துக்குமாரை அலுவலக உதவியாளர் தடுத்து ,'எங்கய்யா போறீங்க" என்றதும்  "கமிஷனர்சாரை பாக்கணும் சார்" என்று மரியாதையோடு பதில் அளிக்க "கமிஷனர் வந்ததும் நானே சொல்றேன் அப்படி உட்காருங்க" என்று ஒரு பெஞ்சை காட்டினார் இவர் நம்மை ஏமாற்றுகிறார் இப்போது தானே கமிஷனர் உள்ளே சென்றார் என யோசித்தபடி வந்து அமர்ந்தவர் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் "சார் இப்ப உள்ள போனவர் கமிஷனர் தானே" என்றார் அதைக் கேட்டதும் அந்த டேபில் காரர் சிரித்து விட்டு "அவர் இல்லைங்க இவர் வேற" என சிரித்தார் வேறயா புரியாமல் முத்துக்குமார் கேட்க "வேரன்னா  வேற தான்" என்று அவர் சிரித்தார் முத்துக்குமாருக்கு ஒன்றும் புரியவில்லை "கண்ணுக்கு முன்னாடி போன மனுஷனையே இல்லைன்னு சொல்றாங்களே என்ன கொடுமை இது" என்று யோசித்தபடி இருக்க இவர் விசாரித்த டேபில் காரரிடம் இன்னொருவர் வந்து "மணிகண்டன் சார் இந்த பைலை கமிஷனர் வந்த உடனே ஞாபகமா கொடுத்திருங்க கொஞ்சம் வெளியில போயிட்டு வரேன்" என அவரிடம் கொடுத்தார் முத்துக்குமாருக்கு "கமிஷனர் வந்ததும் என்றால் அப்ப இன்னும் வரலைன்னு தானே அர்த்தம் அவர் வரவில்லையோ அப்போ அந்த ரூமுக்குள்ள போனது யாரு" குழப்பமாக இருந்தது "இவ்வளவு அதிகாரமாக இவ்வளவு கம்பீரமா உள்ள போனவரு கமிஷனர் இல்லாம வேற யாரு" என யோசித்தபடி மணிகண்டனிடம் "சார் கோச்சுக்காதீங்க இப்ப உள்ள போனவரு கமிஷனர் இல்ல அப்பன்னா இவர் என்ன ஆபிசர்"என்றதும் சிரித்தபடி மணிகண்டன் "அவர் கமிஷனர் இல்ல தான் ஆனால் இவர் அவருக்கு மேல" என்று சிரித்தான் "சார் எனக்கு புரியல" பாவமாக நின்று கேட்ட முத்துக்குமாரை பார்த்து சிரித்தபடி "அண்ணா இப்படி உட்காருங்க நீங்க லோக்கல் தானே" அவர் முகத்தையே பார்த்தான் "ஆமா தம்பி ஆனா இதுக்கு முன்னால அலுவலகங்களுக்கு பெருசா நான் வந்ததில்ல அப்பா  அவர் இல்லைனா என்  பையன் இப்பதான் முதல் முதலா நான் இந்த ஆபீஸ் குள்ள வரேன்" என்றவரைப் பார்த்து "அதான் உங்களுக்கு சுந்தரமூர்த்தி அண்ணனை தெரியல" என்றவாறு "சுந்தரமூர்த்தி அண்ணே நகராட்சியிலேயே முக்கியமான ஆளு அவர் நினைச்சா இந்த ஆபீஸ் குள்ள எதையும் செய்ய முடியும் கமிஷனரே பல நேரம் இவரு சொல்றது தான் கேட்பார்" என்றதும் "அப்படியா ..என்ன தம்பி சொல்றீங்க" ஆச்சரியமாக "ஆமா அண்ணே சொத்துவரி  தண்ணி வரின்னு எந்த வரியா இருந்தாலும் வரியை கூட்டவோ குறைக்கவோ அவர்நால முடியும் நீங்க வரியே கட்டாம விட்டுருந்திங்கன்னு வைங்க  அதுக்கு தண்டத்தொகையே இல்லாம திருப்பி அவரால ரெனிவல் பண்ணித் தர முடியும் அதே மாதிரி நகராட்சி சொத்த நீங்க பயன்படுத்தனும்னு சொன்னா அரசு உத்தரவு எதுவும் வேண்டியதில்லை அண்ணன் உத்தரவு இருந்தா போதும் அவர் உத்தரவு போட்டுட்டா கலெக்டர் கூட அதை மாற்ற முடியாது அந்த அளவுக்கு சக்தியானது"என்றதை கேட்கும் போதே அவருக்கு ஒரு படபடப்பாகிவிட்டது அவ்வளவு பெரிய ஆளா என்றபடி  அந்த அரை வாசலை திரும்பிப் பார்த்தார் பிறகு "அப்படி என்னதான் பதவியில் இருக்கிறார் தம்பி" என்றார் ஆச்சரியம் விலகாமல் மணிகண்டன் நோட்டில் எழுதிய படியே அவரை திரும்பி பார்க்காமல் "அவர்தான் கமிஷனர்  ஜீப் டிரைவர் "என்றதும் அலுவலகத்தில் இருந்தவர்களே திரும்பிப் பார்க்கிற அளவுக்கு சத்தமாக சிரித்து விட்டார் முத்துக்குமார் "ஏன் தம்பி உங்களுக்கு இன்னைக்கு காமெடிக்கு வேற ஆளு கிடைக்கலையா  என்னை வைத்து காமெடி பண்றீங்க கமிஷனர் ஜீப் டிரைவரை  ஜீப் மினிஸ்டர் ரேஞ்சுக்கு பேசுறீங்க" என்று சிரித்தவரின் சிரிப்பை அடக்குவது போல் கையைக் காட்டி விட்டு "அண்ணே நீங்க உலகம் தெரியாம இருக்கீங்க சுந்தரமூர்த்தி அண்ணனுக்கு உள்ள கமிஷனர் அடக்கம் அதைத்தான் நான் இவ்வளவு சுத்திச்சுத்தி சொன்னேன் நீங்க அதை புரிஞ்சுக்காம சிரிக்கிறீங்க கமிஷனர் கண்ட்ரோல்ல இந்த ஆபீஸ் இல்லண்ணே சுந்தரமூர்த்தி அண்ணன் கண்ட்ரோல்லதான் இருக்கு அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க" என்ற மணிகண்டனை அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருந்தார் முத்துக்குமார் 


ஆமா மணிகண்டன் சொல்வது உண்மைதான் சுந்தரமூர்த்தி வேலைக்கு சேர்ந்து ஆறு ஏழு வருடம் ஆகிவிட்டது ஆனால் முதல் ஒரு வருடம் மட்டுமே அவர் இங்கு யார் என்று தெரியாமலேயே வேலை செய்து வந்தார் அதன் பிறகு அவருடைய வேலை மாறிவிட்டது வருகிற கமிஷனர்களை ஒரு மாதம் கவனிப்பார் அந்த சனியன்களுக்கு என்னென்ன பலவீனம் இருக்கிறது என்பதை கண்டறிவார் பிறகு அந்த பழகீனங்கள் எதுவாக இருந்தாலும் அதை தீர்த்து வைக்க சர்வீஸ் பண்ணுவார்இப்படியாக கமிஷனர்களை தன் கைக்குள் கொண்டு வந்தவர் தான் சுந்தரமூர்த்தி அது மட்டுமல்ல அவர் உள்ளூர் காரரும் கூட உள்ளூர் என்பது மட்டுமல்ல அந்த நகராட்சியில் மிகுதியாக வாழக்கூடிய ஒரு சாதியின் பிரதிநிதி புதிதாக வருகிற கமிஷனர்களுக்கு யார் அரசியல்வாதி யார் பணக்காரர் யார் கிரிமினார்கள் என்று  விபரம் கூறி அலுவலகத்தின் வருவாய்க்கும் அவரின் வருவாய்க்கும் பாதையை ஏற்படுத்தி தந்தவர்  இதனால் வருகிறவர்களுக்கு இவரை ஆறே மாதத்திற்குள் பிடித்து விடும் பிறகு என்ன அவர் சொல்வது தான் அந்த அலுவலகத்தில் வேதம் இதை அறிந்து கொண்டு அலுவலக ஊழியர்களும் சுந்தரமூர்த்தி சொன்னால் கமிஷனரே சொன்னது போல அந்த வேலையை முடித்துக் கொடுப்பார்கள் வருகிற எல்லா அதிகாரிகளும் இப்படி இருந்து விட மாட்டார்கள் தான் ஆனாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை வரும் அதில்  சுந்தரமூர்த்தி உதவி தேவைப்படும் இப்படித்தான் இதற்கு முன்பு இருந்த ஒரு கமிஷனர் அதிகாலையிலேயேதுப்புரவு பணியாளர்களை அழைத்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை நகரத்தில் அகற்றப் போகிறேன் என புறப்பட்டு போனார் போனவர் நகரத்தில் வசதிக்காரரும் சாதி சங்க பிரமுகரும் அடிதடி நடத்துவதில் பெயர் போனவருமான பாண்டி வீரன் வீட்டுக்கு முன்னால நிழலுக்காக போடப்பட்டிருந்த கொட்டகையை பிரிக்கப் போக பாண்டி வீரன் வந்து தடுக்க அது கைகலப்பு வரை சென்று வாய் திமிராக பேசியகமிஷனரை பிடித்து அவரிடம் இருந்த மொபைல் புடுங்கிக் கொண்டு ஒரு அறையில் போட்டு அடைத்து விட்டு உடன்வந்த துப்புரவு பணியாளர்களிடம் "எவனாவது கமிஷனரை நான் அடைச்சு வச்சிருக்கேன்னு வெளியில் சொன்னா சொன்னவனை நாளைக்கு தூக்கிடுவேன் பேசாம உங்க வேலையை பாத்துட்டு போங்க" என்று அனுப்பி விட்டார் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் பயந்து நடுங்கிய போது அதில் ஒருவர் மட்டும் "என்ன இருந்தாலும் அவர் நம்ம அதிகாரிங்க அவர எப்படி ..இப்படி விட்டுட்டு போலாம்" என்றபடி அலுவலகத்திற்கு வந்து தகவல் சொல்லி அலுவலகத்தின் மூலமாக காவல்துறைக்கு புகார் போனது காவல் ஆய்வாளர் இவர்களை எல்லாம் சுற்றி நிற்க வைத்துக் கொண்டு "எந்த ஆதாரமும் இல்லாமல் என்னை எப்படி அந்த வீட்டுக்கு போக சொல்றீங்க அந்த வீட்ட பத்தி தெரியுமா உங்களுக்கு எனக்கு முன்னால இருந்த அதிகாரிகள் சில பேரு அந்த ரவுடிய வீட்டுல ஒளிச்சு வச்சிருக்கான் இந்த ரவுடிய வீட்டுல ஒளிச்சு வச்சிருக்கான்னு வந்த புகார்களை நம்பி போலீசு பல முறை இந்த வீட்டுக்கு போய் அவமானப்பட்டு இருக்கு நானே ஒரு முறை பாண்டி வீரன் வீட்ல இல்லைன்னு தெரிஞ்சு வீட்ல இருக்குற பெண்களை கொஞ்சம் மிரட்டினால் அந்த கஞ்சா வியாபாரியை வெளியே விட்ருவாகண்ணு  நானே போய் அந்த பெண்களை மிரட்ட அவங்க பாண்டி வீரனை விட தில்லாலங்கடி யா இருப்பாங்க போல அவங்கஎன் மேல கொடுத்த புகாரில என் வேலையை காப்பாத்திக்கிறது பெரும்பாடா போச்சு அதனால ஆதாரமில்லாமல் எங்களால அந்த வீட்டுக்கு வர முடியாது  அவரை அடிச்சதையோ அறையில வச்சு பூட்டி இருக்கிறதையோ பார்த்தது யாருன்னு ஆதாரம் இருந்தா சொல்லுங்க போவோம்" என்றதும் யாரும் வாயைத் திறக்க மறுத்தனர் எனவே காவல்துறை வர மறுத்தது அலுவலகத்தில் நடந்தவற்றை கவலையோடு பேசிக் கொண்டிருந்தபோது சுந்தரமூர்த்தி அங்கு வந்து சேர்ந்தார் நடந்த விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டு "பாண்டி வீரன்வீட்ல தான்னு கரெக்டா தெரியுமா" என்று சந்தேகத்தை தீர்த்துக் கொண்டு தனது சாதி சங்க தலைவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பாண்டி வீரன் வீட்டுக்கு சென்று பாண்டி வீரனோடுபேச்சு வார்த்தை நடத்தி கமிஷனரை மீட்டுக் கொண்டு வந்தது சுந்தரமூர்த்திதான் இந்தச் செய்தி புதிதாக வருகிற அத்தணை கமிஷனர்களுக்கும் கடத்தப்படுவதால் வருபவர்கள் அனைவரும் சுந்தரமூர்த்தியை மரியாதையோடு நடத்துவார்கள் ஒவ்வொரு கமிஷனர்களின் வாழ்க்கையில் இப்படியாக ஏற்படும் நெருக்கடிகளில் இருந்து அதிகாரத்தில் இருக்கும் தனது சாதிக்காரர்களாக இருக்கும் எம்எல்ஏக்கள்அமைச்சர்களை பயன்படுத்தி காப்பாற்றுகிற ஆபத்பாந்தவனாக சுந்தரமூர்த்தி இருப்பதால் எந்த கமிஷனர் வந்தாலும் சுந்தரமூர்த்தியின் பெயர் கொடி கட்டி பறந்தது அவனும் இன்னொரு கமிஷனர் ஆக வலம்  வந்து கொண்டிருக்கிறான்


முத்துக்குமாரின் முக அதிர்ச்சியை கண்டு ரசித்த மணிகண்டன் "நான் சொல்றது அத்தனையும் உண்மை நீங்க இங்க இருக்கிற ஒவ்வொருத்தர்டையும் விசாரிங்க நான் சொன்னதை அவங்க உண்மைன்னு ஒத்துக்குவாங்க" என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டிருந்த போது கமிஷனர் அவசரமாக வந்து அவரது அறைக்குள்ளே சென்றார் அவர் சென்ற சிறிது நேரத்தில் அலுவலக உதவியாளர் வந்து பெஞ்சில் காத்திருந்த முத்துக்குமாரிடம் "சார் நீங்க கமிஷனரை பார்க்கிறதா இருந்தா பாத்துருங்க "என்றார் முத்துக்குமாரோ "இல்லை ..இல்லை நான் சுந்தரமூர்த்தி தம்பியைத் தான் பார்க்கணும்" என்றபடி மணிகண்டனைப் பார்க்க மணிகண்டன் சிரித்துக்கொண்டே தம்சப் காட்டினான் முத்துக்குமாரும் சேர்ந்து சிரித்து விட்டு காத்திருக்க சிறிது நேரத்தில் கமிஷனர் அறையில் இருந்து சுந்தரமூர்த்தி வெளியே வந்தான் அவனை கண்டதும் பவ்யமாக அவனிடம் சென்று வணக்கம் சொல்லிவிட்டு மனுவை கொடுத்தார் சுந்தரமூர்த்தியோ "அண்ணா கமிஷனர் உள்ளே இருக்காரு" என்று வழிகாட்டினார் உடனே முத்துக்குமார் "இல்ல தம்பி நான் உங்கள பாக்க தான் வந்தேன் ரொம்ப நாளா  பக்கத்து வீட்டுக்காரன் அவன் வீட்டுக்கு பின்னால சாக்கடையை தேக்குறான் அந்த தண்ணி என் வீட்டுக்கு பின்னாடியும் வந்து தேங்குது அதுல கொசு ... ஈ ன்னு  ரொம்ப தொந்தரவா இருக்கு தம்பி அதுல இருந்து வர்ர நாத்தம் மூச்சு விட முடியல தம்பி நானும் பலமுறை இந்த ஆபீஸ்ல புகார் பண்ணிட்டேன் ஒரு பயனும்  இல்லை அதனால தான் நான் உங்களை பார்க்க வந்தேன் நீங்க தான் தம்பி அதை முடிச்சு தரணும்" என்று சொன்ன முத்துக்குமார் சுந்தரமூர்த்தி கையில் மனுவை திணித்தார் மனுவை படித்துப் பார்த்த சுந்தரமூர்த்தி "நான் பார்த்துக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க "என்று  அரசியல்வாதிக்குரிய பாங்கோடு கும்பிட்டு விட்டு விடை பெற்றான் முத்துக்குமாரும் ஒரு பெரும் நம்பிக்கையோடு மணிகண்டனிடம் சொல்லிவிட்டு கிளம்பினார் வழக்கம் போல சுந்தரமூர்த்தி ஒவ்வொருவரிடமும் கொடுத்த வேலைகளைப் பற்றி விசாரித்து விட்டு அலுவலகத்தின் வாயிலுக்கு வந்து அங்கு நின்ற சில அலுவலர்களுக்கு சில வேலைகளை கொடுத்துக் கொண்டிருந்தபோதே கமிஷனர் வெளியே வர சுந்தரமூர்த்தி வேகமாக வெளியே வந்து ஜிப்பை எடுத்தான் ஜீப் கமிஷனரோடு அலுவலகத்தை விட்டு வெளியே சென்றது...


மறுநாள் காலை வழக்கம் போல வெள்ளை பேண்டு வெள்ளை சட்டை முகம் மரைக்கும் மீசையை தேங்காய் எண்ணெய் தடவி பளபளப்பாகி கொண்டு நெற்றி நிறைய குங்குமத்தையும் சந்தனத்தையும் பூசிக்கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான் சுந்தரமூர்த்தி அலுவலகம் என்றும் இல்லாத வகையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது வழக்கம் போல தாமதமாக வரும் சில தூங்கு மூஞ்சிஅதிகாரிகள் கூட இன்று முன்பே வந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள் அப்போது ஒரு அதிகாரியை அழைத்து "என்ன அதிசயமா இருக்கு இவ்வளவு சீக்கிரம்  ஆபீஸ்க்கு வந்துட்டீங்க" என்று நக்கலாக சிரித்ததும் "பின்ன என்னசென்னையில் இருந்து இன்னைக்கு ஆபீசர் எல்லாம்வர்றாங்க இல்லையா  அதனால் தான்" அப்படின்னு சொன்னதும் "ஆபீஸரா என்ன டிபார்ட்மெண்ட் ஆபிஸர் "என்று கேட்க "அது தெரியல அண்ணே ஆனா இன்னைக்கு சென்னையிலிருந்து ஏதோ ஒரு ஆபீஸ் வருவதாக மட்டும் தெரியும்" என்றதும் சுந்தரமூர்த்திக்கு குழப்பம் ஆகிவிட்டது இப்படி ஏதாவது ஒன்று நடந்தால் முன்பே கமிஷனர் நமக்கு சொல்லி விடுவாரே என்று குழம்பிப் போனான் உடனடியாக கமிஷனருக்கு போன் செய்து "என்ன சார் விசேஷம் இன்னைக்கு ஏதோ ஆபீஸர் எல்லாம் வராங்கலாமே" என்று கேட்க "ஆமா மூர்த்தி உன்கிட்ட சொல்லலையா  சென்னையிலிருந்து சுகாதாரப் பணியாளர் வாரிய தலைவர்  வராரு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ரார் இன்னைக்கு காலையில நம்ம நகராட்சிக்கு வர்றார்" என்று கமிஷனர் கூர ஒரு பதட்டம் ஒட்டிக்கொண்டது சுந்தரமூர்த்திக்கு "அப்படியா சார் சரி நீங்க வரலீங்களா" என்றதும் "இல்ல மூர்த்தி நான் கிளம்பிட்டேன் நீ உடனே வா நானும் வந்துடறேன் போயிடுவோம் என்றார் உடனடியாக ஜீப்பை எடுத்துச் சென்று கமிஷனரை அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு விட்டு வேகமாக சென்று துப்புரவு பணியாளர்கள் பொருள்களை வைக்கும் அந்த அறைக்குள் நுழைந்தான் அங்கு இருந்த பீரோலை திறந்தான்அதற்குள் காக்கி பேண்டும் காக்கி சட்டையும் இருந்தது அதை எடுத்து தட்டினான் நீண்ட காலமாக போடப்படாததால் தூசி அடைந்து அந்த அறையை தூசி மாயமாக்கியது  சட்டையை நன்றாக உதறிவிட்டு அதை முகத்திற்கு நேராக வைத்து கடுப்பாக பார்த்தான்  இந்த சனியன போடாம இருக்கலாம்னு பார்த்தா ஏதாவது ஒரு சனியன்  சனியன் புடிச்சவன் வந்து இதை போட வச்சுர்ரானே என்று முனங்கியபடி பேண்ட் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான் அதற்குள் அலுவலக மீட்டிங் ஹாலில் சென்னை அதிகாரிக்காக காத்திருந்தார்கள் சிறிது நேரத்தில்  அந்த அதிகாரிகளும் வந்து சேர்ந்தார்கள் சுகாதாரப் பணியாளர்நல வாரியத்தின் தலைவர் சத்தியமூர்த்தி எல்லோருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு அமர்ந்தார்   எதிரே வரிசையாக தூய்மை பணியாளர்கள் அமர்ந்திருந்தார்கள்அவர்களை பார்த்து 'எல்லாரும் நல்லா இருக்கீங்களா "என்று சிரித்தார் பணி ஓய்வு பெறுகிற வயதுக்காரராக இருந்தார் ஆனாலும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பது தெரிந்தது முகம் முழுவதும் புன்னகை படர  விசாரித்தவுடன் அத்தனை பணியாளர்களும் புன்னகைத்த படி "நல்லா இருக்கோம் சார்" என்றனர் உடனே அலுவலக உதவியாளரை அழைத்து "ரிஜிஸ்டர் புக் கை கொஞ்சம் எடுத்து வர முடியுமா" என்றார் "இந்தா இருக்கு சார்" என்று பக்கத்தில் இருந்த டேபிளில் கிடந்த  ரிஜிஸ்டரை எடுத்து சத்தியமூர்த்தியிடம் கொடுத்தார்கள்  அதை பிரித்து யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சரி பார்த்து விட்டு "இதில் கையெழுத்து போட்டவங்க எல்லாரும் வந்து இருக்கீங்க தானே" என்றதும் எல்லோரும் "ஆமாம்" என்று கோரஸ்சாக பதில் சொன்னார்கள் "சரி  ஒவ்வொருத்தரா உங்கள் பெயர் நீங்க பார்க்கிற வேலையை பத்தி சொல்லுங்க நான் ரிஜிஸ்டர் ல சரி பார்த்துக்கிறேன்" என்றபடி ரிஜிஸ்டர் விரித்துப் பார்த்து அவர்களின் பதிலுக்கு காத்திருந்தார்  "ரெடி சொல்லுங்க" என்று சரி பார்க்க ஆரம்பித்தார் முதலில் "என் பெயர் மாடசாமி சார் நான் துப்புரவு பணியாளர்" என்றார் அடுத்து "நான் முனியசாமிங்க நானும் துப்புரவு பணியாள்தான்" "நான் மங்கம்மா துப்புரவுபணியாளர்" "நான் காளிமுத்து மேஸ்திரி சார் "என ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டே வரும்போது ஒவ்வொன்றையும் சரிபார்த்துக் கொண்டே அவர்கள் முகத்தையும் ஒரு முறை பார்த்துக் கொண்டார் அடுத்து என்றதும் "என் பேரு சுந்தரமூர்த்தி சார் நான் துப்புரவு பணியாளர்" என்றார் "அட அது நம்ம சுந்தரமூர்த்தி அண்ணே.. இப்படி எல்லோரும் பெயர் சொல்லி முடித்ததும் ரிஜிஸ்டரை மூடி வைத்துவிட்டு எல்லோரையும் பார்த்தபடி "ஏன் நான் இப்படி விசாரிக்கிறேன்னா எல்லா சமூகத்துவரும் துப்புரவு பணிக்கு வரலாம்னு அரசு சொன்ன பிறகு எல்லா சாதிக்காரர்களும் இந்த வேலைக்கு  வந்திருந்தாலும் அவங்க கொஞ்ச காலத்திலேயே அலுவலக உதவியாளராகவோ அல்லது  டிரைவராகவோ இப்படி வேறு பணியிலே இருக்கிறாங்கன்னு தொடர்ந்து புகார் வர்றதுனால அரசு தமிழ்நாடு முழுவதும் இந்த  ஆய்வை நடத்துறாங்க அப்படி யாரும் நம்ம நகராட்சியில தூய்மை பணியாளர் வேலைக்கு வந்துட்டு வேற வேலை பாக்கல இல்ல எல்லோரும் தூய்மை பணியை தானே செய்றாங்க" என்று எல்லோரையும் பார்த்தார் சத்தியமூர்த்தி  "ஆமா சார் எல்லாரும் துப்புரவு பணியில தான் இருக்கோம் என்றார்கள் ஆனால் அவர்கள் பார்வைகள் எல்லாம் சுந்தரமூர்த்தி மீதே இருந்தது.....