Tuesday, February 2, 2016

தேவாலய தீண்டாமை








ஓரியூர் தேவாலய தீண்டாமை
தீயில் வெந்த புல்லூர் சார்லஸ்
இராமநாதபுரம மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தின் பின்புறம் 30.08.2015 அன்று திருவிழா தொடங்க கொடியேற்றப்பட்ட நிலையில் புல்லூரை சேர்ந்த தலித் கிறிஸ்தவர் சார்லஸ் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி இறந்து போனார். இந்த மர்மமான மரணம் குறித்து தலித் கிறித்தவ மக்கள் மத்தியில் பதற்றம் பற்றிக்கொண்டது. சார்லஸ் சாதாரணமான சராசரி மனிதரல்ல. சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்கள் மீது ஏவப்படும் தீண்டாமை கொடுமைகளை எதிர்த்தும் அதன்விளைவாய் ஒர்pயூர் தேவாலயத்திற்குள்ளும் இருந்த தீண்டாமை மற்றும்  குருமார்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றிற்கு எதிராகவும் போராடி வந்தவர்.
    இத்தகைய நடவடிக்கைகளால் தேவாலயத்தோடு முரண்பட்டிருந்த நிலையில் தான்; குருப்பட்ட மாணவர் மைக்கேல்ராஜ்-க்கு குருபட்டம் வழங்க மறுக்கும் சிவகங்கை மறைமாவட்ட நிர்வாகத்திற்கும் , தலித் கிறிஸ்த்தவ மக்களுக்குமான முரண்பாடு முற்றி போராட்டமாக வெடித்தது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த தலித் கிறிஸ்த்தவ மக்கள் கூட்டமைப்பில் இணைந்து போராடி வந்தவர் என்பதால் அவர் மரணம் அறிந்து  அதிர்ச்சியடைந்த மக்கள் ஓரியூரிலும் அவர் உடலை வைத்திருந்த இராமநாதபுரம் அரசுமருத்துவமனையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இந்த மரணத்திற்கான காரணம் அறிய முறையான விசாரணையை கோரினார்கள். திருச்சபையில்  தீண்டாமை நடவடிக்கைகளை எதிர்த்து போராடி வந்ததால் ஓரியூர் தேவாலய நிர்வாகத்திற்கும் இதில் தொடர்பிருக்கும் என மக்கள் நம்பியதால் ஆவேசமடைந்தார்கள். தாமே விசாரணை செய்வதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து முரண்டுபிடித்தது . எனவே 7.9.15 அன்று  அரசு மருத்துவமனையிலிருந்து சார்லஸ் உடலை எடுத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. சார்லஸ் அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டார்.
 இந்த நிலையில் மாவட்ட காவல்துறை உறுதிகொடுத்த நிலைக்கு மாறாக  ஸ்தல காவல்துறை அதிகாரிகள் தவறான தகவல்களை வெளியிட்டுவந்த நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தியாகி இமானுவேல் பேரவை, தலித் கிறிஸ்த்தவ மக்கள் கூட்டமைப்பு விடுதலை சிறுத்தைகள் புதிய தமிழகம் உள்ளிட்ட அமைப்புகள் கூடி சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி மனு கொடுத்தும் அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் சி.பி.சி.ஐ.டி விசாரணை கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி , தியாகி இமானுவேல் பேரவை சார்பில் வெள்ளயபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தீண்டாமை ஒழிப்புமுன்னணி  பொதுசெயலாளர் கே.சாமுவேல்ராஜ் , தியாகி இமானுவேல் பேரவை தலைவர் பூ.சந்திரபோஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட
 செயலாளர் வி.காசிநாததுரை , தாலுகா செயலாளர் கே.குணசேகரன்,  தலித் கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அருள்தாஸ், ஸ்டீபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர்  வான்தமிழ்இளம்பரிதி, செயலாளர் நா.கலையரசன் திருவாடானை தாலுகா ஒருங்கினைப்பாளர் பூபாலன் ஆகியோர் உரையாற்றினார்கள். இத்தனை போராட்டம், மரணம், பதட்டம் அனைத்தையும் கண்டு சிவகங்கை மறைமாவட்டம் பாவமன்னிப்பு பெற மறுக்கிறது. பேய்,பிசாசு,சாத்தான்கள் கோவில் , தர்கா, ஆலயங்கள் போன்றவற்றின் வாசலை தாண்டாது என சினிமாக்கள் சொல்வதுபோல தேவாலய வாசலுக்குள் நுழைந்து விசாரிக்க தயங்குகிறது அரசும், காவல்துறையும்.
         எனவே திருச்சபையால் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராகவும் , குருபட்ட மாணவர் மைக்கேல் ராஜ்-க்கு குருபட்டம் வழங்கவும் சார்லஸ் மர்ம மரணத்தை சி.பி.சி.ஐ.டி மூலம் விசாரணை நடத்துவதை உறுதிசெய்யவும் தலித் அமைப்புகளையும், ஜனநாய சக்திகளையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை தொடர வேண்டியுள்ளது.

                                   நா.கலையரசன்.