2012-ல் சமூகத்தளத்தில் நடைபெற்ற பல நிகழ்வுகளில் பெரும் அதிர்வினை உருவாக்கிய சம்பவம் தர்மபுரியில் காதல் திருமணம் ஒன்றை காரணியாக்கி ஆதிக்க சாதியினர் தமது வன்மத்தை தீர்த்துக்கொள்வதற்காக 300 தலித் குடும்பங்களின் சொத்துக்களை சூரையாடி வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்த சம்பவம்தான்.
தர்மபுரி மாவட்டம் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யாவும் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும் தங்கள் சாதிகளை மறுத்து 2012 அக்டோபர் 2-ம் தேதி ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை காரணமாக்கி அடிமனதில் உரைந்து கிடந்த சாதிவெறியினை கிளப்பி அடியாட்களாக மாற்றி நத்தம் அண்ணாநகர் கொண்டம்பட்டி உள்ளிட்ட கிரமங்களைச் சேர்ந்த தலித் மக்களின் 300 வீடுகளை எரித்து பொருட்களை கொள்ளையடித்திருக்கிறார்கள்.
நடந்த கொடுமைகளை தமிழகமே கண்டு அதிர்ந்தது . ஊடகங்கள் கண்டித்து செய்திகளை வெளியிட்டது. ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டாவது முறையாக அம்பேத்கார் சுடர் ஒளியில் தமிழ்குடிதாங்கி எனும் முகமூடி விலக்கி வன்னியசாதி வெறியராக (அவரே பேட்டியில் சொன்னது) வெளியில் வந்தார் மருத்துவர் இராமதாஸ்.
நாடகத் திருமணங்கள் என்றார். மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்றார். காதல் மோசடியால் வன்னியப் பெண்கள் வாழ்க்கையை இழந்துள்ளார் என்றார். ஜுன்ஸ் பேண்ட் - கூலிங்கிளாஸ் சூ வாங்கிக் கொடுத்து வன்னியப் பெண்களை மயக்கிட விடுதலை சிறுத்தைகள் பயிற்ச்சி தருகிறார்கள் என மனநிலை சரியாக உள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத கதைகளாகச் சொல்லி தலித்துகள் மீது நடந்த கொடூர வன்கொடுமைகளுக்கு நியாயம் கற்பிக்க முயன்றதுடன் வன்கொடுமைச்சட்டத்தை எடுத்துவிட வேண்டும் என ஆவேசம் கொப்பளிக்க அணி திரட்டி வருகிறார்.
ஐயா தமிழ்குடிதாங்கி கவுண்டர் சமூக மக்களின் தன்னிகரில்லா தலைவர் தான் என தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்ட ஐயா மணிகண்டன் அவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பட்டியல் உள்ளதாக சொல்கிறார். ருகசியமாக ஆய்வு செய்ய வேண்டும் என்கிறார்கள். நாமும் கூட சொல்வோம். ஆதிக்க சாதியினை சேர்ந்த இளைஞர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வாழ்க்கையை இழந்த பெண்கள் ,தற்கொலை செய்துகொண்ட பெண்கள் திருமணமான பெண்களையும் கூட (இதற்கெல்லாம் இவர்கள் சாதி பார்ப்பதில்லை) வி;ட்டு வைக்காமல் கள்ளத் தொடர்பு கொண்டதால் இருந்த வாழ்க்கையை இழந்த பெண்கள் எத்தனை என அதையும் ஆய்வு செய்வதற்கு இவர்கள் தயாரானால் உண்மையிலேயே இவர்கள் நேர்மையானவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம். ஐயாக்களா நீங்கள் ரெடியா...? என்கிறார்கள் தலித் மக்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பரிணாம வளர்ச்சி பின்னோக்கி பயணித்து மீண்டும் வன்னியர் அமைப்பாவது ஏன்? எனும் கேள்வி ஒரு புறமும் அவர் எப்போதும் பாட்டாளிகளின் தலைவராக இருந்ததே இல்லையே என்கிற பதிலுமாக தமிழக அரசியல் குளத்தில் கல்லெறிந்து கலக்கிவிடப் பார்க்கிறார்கள்.
இப்படியான சாதிச் சதுரங்க விளையாட்டிற்கு என்ன காரணம் . ஆதாரம் ஏதுமின்றி தலித் மக்கள் மீதும் காதல் மீதும் இத்துணை ஆத்திரம் ஏன்? எல்லாம் அரசியல் தான். வருகிற பாராளுமன்ற தேர்தல் மருத்துவர் ராமதாசிற்கு ஏற்படுத்தியுள்ள பதட்டம் தான் என்கிறார்கள் மூத்த பத்திரிக்கையாளர்கள். தன்மகன் மீதான ஊழல் புகாரிலிருந்து மீளவும் பாட்டாளி மக்கள் கட்சி எனும் தனது கட்சியின் அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அவருக்கு.
தனது சொந்த சாதியான வன்னியர் சமூகம் தி.மு.க, அ.தி.மு.க ஆதரவாளர்களாக இருந்த நிலையில் அவர்களை வென்றெடுக்க தீவிர சாதி அரசியலை முன்னெடுத்தார். வுன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லையென மிரட்டி தி.மு.க அதிமுக என மாறி மாறி கூட்டணி சேர்ந்து ஆதாயம் பெற்றார். வடக்கு மாவட்டங்களே தனது கையில் என இருமாந்து இருந்தார். தனது ஆளைகைக்கு உட்பட்டதாய் சொல்லி வந்த பகுதியிலேயே முதல் அதிர்ச்சியை விஜயகாந்த வெற்றி பெற்று விதைத்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மருத்துவருக்கு பேரிடியாய் அமைந்ததால் அவர் இழந்த செல்வாக்கை பெற பெட்டியில் மடித்து வைத்திருந்த தனது பழைய சாதிக்காவலர் எனும்; சட்டையை அணிந்துள்ளார்.
அதற்கு நியாயம் கற்பிக்கவே தலித்துகள் மீதும் சாதி மறுப்பு திருமணங்கள் மீதும் வன்மம் வளர்ப்பதுடன் ஆதிக்க சாதியென்போரின் அடையாளமாய் சிலரையும் பிடித்து வைத்துக்கொண்டு சமூகப் பாதுகாப்பு இயக்கத்தை துவங்கி ஆள்திரட்டி வருகிறார்.
ஜுன்ஸ் பேண்ட் , கண்ணாடி, சூ வெல்லாம் தலித்துகள் மட்டும் அணியும் உடையல்ல என்பதும் காதல் திருமணங்களில் சில சமயம் ஏமாற்றப்படுவது ஆதிக்க சாதிப் பெண்கள் மட்டுமல்ல என்பதும் இவருடைய இந்த சாதி ஏமாற்று அரசியலை சுயசிந்தனையுள்ள எவரும் ஏற்கமாட்டார்கள் என்பதையும் அவர் அறிவார். எனவேதான் தீண்டாமையே தமிழகத்தில் இல்லையென்றும் , தீண்டாமை வழக்குகள் தவறாக புனையப்படுகிறது என்றும் பீரிட்டுக்கிளம்பினார்.தீண்டாமை-வன்கொடுமையினால் தலித் மக்கள் பாதிக்கப்படும் கொடுமை தினசரிகளில் தினம் தினம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மருத்துவரின் கருத்தினை எவர் ஏர்க்கமுடியும் . இவர் தொடர்ந்து சொல்லி வரும் ஜுன்ஸ் பேண்ட் கதைகள் தீண்டாமையின் ஒரு வடிவம் தான். தலித் கிராமங்களை சூரையாடியதுடன் தலித் மக்களுக்கு எதிராகவும் தீண்டாமை வன்கொடுமை சட்டங்களை எடுக்க வலியுறுத்தியும் ஆதிக்க சாதிப் படை திரட்டலும் வன்கொடுமையில் ஒரு பகுதிதானே... இதை மருத்துவர் ஐயாவுக்கு யார் சொல்வது.
மங்களக்குடி-நா.கலையரசன்.